Search This Blog

1.7.09

பெரியாரும் -கட்டாயத் திருமணப் பதிவும்


கட்டாயத் திருமணப் பதிவு
வரவேற்கத்தக்கதே!


திருமணத்தை கட்டாயம் பதிவு செய்யவேண்டும் என்ற சட்டம் தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படவிருப்பது வரவேற்கத்தக்கதாகும். உச்சநீதிமன்றம் கூறிய ஒரு தீர்ப்பின் அடிப்படையில் தமிழ்நாடு அரசு இத்தகைய சட்டத்தை நிறைவேற்றிட உள்ளது.

பல இனங்கள், மொழிகள், மதங்கள், பண்பாடுகள், மத நம்பிக்கையற்றவர்கள் வாழும் ஒரு துணைக் கண்டத்தில் திருமணம் என்ற வாழ்வின் முக்கியமான நிகழ்வை சட்ட ரீதியாகப் பதிவு செய்யும் முறை என்பது மிகவும் அவசியமாகும்.

இந்தச் சட்டம் மதப் பிரச்சினைகளில் தலையிடுகிறது என்று கூக்குரலிட முடியாது. மதப்படி, பழக்கவழக்கப்படி திருமணங்களை நடத்திக் கொண்டாலும், சட்டப்படி சம்பந்தப்பட்ட பகுதிகளில் உள்ள பதிவாளர் அலுவலகங்களில் பதிவு செய்துகொள்ளவேண்டும் என்பதுதான் சட்டத்தின் நிலை.

இதன்மூலம் குழந்தைகள் திருமணம் தடுத்து நிறுத்தப்படக் கூடிய நல்ல விளைவு ஏற்படுகிறது.

வட மாநிலங்களில் குறிப்பாக ராஜஸ்தானில் குழந்-தைகள் திருமணம் என்பது சர்வ சாதாரணமாகும். தமிழ்நாட்டில்கூட தீட்சிதர்கள் குடியிருக்கும் சிதம்பரத்தில் குழந்தைகள் திருமணம் நடந்துகொண்டுதான் உள்ளன.

இந்தச் சட்டத்தின்மூலம் இந்தக் கொடுமை தடுக்கப்படுவது நல்ல அம்சமாகும். இப்பொழுதுகூட வெளிநாடுகளுக்குச் செல்லக் கூடியவர்களுக்கு பதிவு செய்யப்பட்ட திருமண ஆவணம் கட்டாயம் தேவைப்படுகிறது.

இந்த நிலை கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து திருமணம் என்ற பெயரால் ஆயிரக்கணக்கான ரூபாய்களைச் செலவு செய்வதும், காலத்தையும், உழைப்பையும் வீணாக்குவதும் ஒழிக்கப்பட்டு, பலவகையிலும் சிக்கனமான இந்தத் திருமணப் பதிவு முறை மட்டுமே போதுமானது என்கிற நிலை ஏற்பட்டால் அது மிகவும் வரவேற்கத்தக்கதாகும்.

திருமணத்தைப்பற்றி தந்தை பெரியார் சொல்லும்போது, வயது அடைந்த ஆண் பெண் இருவரும் இணைந்து வாழ்வது இயல்பானது; தத்தம் துணையை அவரவர்களே தேர்ந்தெடுத்துக் கொண்டுவிடலாம்; மூன்றாவது மனிதனுக்கே அங்கு வேலையில்லை.

இந்த நிலையில், இதற்கென்று ஒரு விழா தேவையா?

தந்தை பெரியார் கூறுகிறார்:

சுயமரியாதைத் திருமணத்தில் சிக்கனம் மிகவும் கண்டிப்புடன் பின்பற்றப்படவேண்டும். இம்மாதிரி திருமணங்களில் மக்களின் சராசரி வரும்படியில் ஒரு 10 நாள் அல்லது 15 நாள் வரும்படிக்குமேல் செலவு செய்ய அனுமதிக்கவே கூடாது; நான் ஒரு நிமிஷம் அரசனாய் இருந்தாலும் முதல் முதல் இம்மாதிரியான பொருள் விரயத்தை தடுக்கவே தூக்குத் தண்டனை நிபந்தனையுடன் சட்டம் செய்வேன். இம்மாதிரியான பொருள் நஷ்டம்தான் இன்று இந்தியாவுக்குப் பிடித்த பெரும் பிணி என்று சொல்லுவேன் (காஞ்சிபுரத்தில் ஏகாம்பரம் _ மனோன்மணி வாழ்க்கை ஒப்பந்த விழாவில் ஆற்றிய உரையிலிருந்து, 23.4.1943).

திருமணப் பதிவு செய்யப்படவேண்டும் வேறு முறைகள் தேவையில்லை என்ற நிலை உறுதி செய்யப்பட்டுவிட்டால், நடப்புக்கு வந்துவிட்டால் தனி மனிதனுக்கும், சமூகத்துக்கும், நாட்டுக்கும்கூட எவ்வளவோ இலாபகரமானது.

திருமணம் பதிவு செய்யப்படவேண்டும் என்ற கருத்தை இன்றைக்கு 50 ஆண்டுகளுக்கு முன்பே தந்தை பெரியார் கூறியிருக்கிறார்:

பிறப்பையும், மரணத்தையும் பதிவு செய்வது போல, எல்லாத் திருமணங்களையும் அந்தந்த நகர சபையிலும், கிராம அதிகாரியிடமும் கட்டாயமாகப் பதிவு செய்துகொள்ளவேண்டும். தவறினால் கடுந் தண்டனை என்றோ, அத்திருமணம் செல்லாது என்றோ ஏன் சட்டமியற்றக் கூடாது? இப்படி செய்து விட்டால் பிறப்புக்கும் இறப்புக்கும் புள்ளிவிவரம் கிடைப்பதுபோல் திருமணத்துக்கும் சரியான புள்ளி விவரம் கிடைக்குமே.

பத்திரப்பதிவு அதிகாரிகள், நகர சபை ஆணை யாளர்கள் (சப்-ரெஜிஸ்ட்ரார்), கிராம அதிகாரிகள், கூட்டுறவுத் துறை இன்ஸ்பெக்டர்கள் ஆகியோர் களுக்குப் பதிவு செய்யும் அதிகாரம் வழங்கப்பட வேண்டும் (விடுதலை, 2.9.1959) என்று 50 ஆண்டுகளுக்கு முன்பே தொலைநோக்காளர் தந்தை பெரியார் கூறியிருக்கிறார். இவ்வளவு காலம் தாழ்ந்தாவது உச்சநீதிமன்றத்திற்குத் தோன்றியிருக்கிறதே அதற்காக மகிழலாம்; உடனடியாக அந்தப் பரிந்துரையை சட்டமாக்கிய, தன்மான இயக்க வழிவந்த மானமிகு கலைஞர் அவர்களின் தலைமையிலான தி.மு.க. அரசுக்குப் பாராட்டுகள்.

----------------"விடுதலை"தலையங்கம் 1-7-2009

0 comments: