Search This Blog

2.7.09

உலக நாடுகள் - தூரப்பார்வை - குவைத்-கிர்கிஸ்தான்-லாவோஸ்


குவைத்

நனிசிறந்த நாகரிகம் குவைத் பகுதியில் பொது ஆண்டுக்கு மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சிறந்து விளங்கியதாகக் கருதப்படுகிறது. தற்கால வரலாறு அந்நாட்டைப் பொறுத்த மட்டில் 18ஆம் நூற்றாண்டில் இருந்துதான் தொடங்குகிறது. அரபியர்கள் அந்தக் காலகட்டத்தில்தான் அந்தப் பகுதிக்குள் நுழைந்து குடியேறத் தொடங்கினர். மீன் பிடித்தலிலும் முத்துக் குளிப்பதிலும் ஈடுபட்டு வணிகத்தில் ஈடுபட்டனர். 1756இல் அல்சபா எனும் குழு இனம் வலிமையானதாக வந்தது. அவர்களே ஆட்சியாளர்களாகக் கருதப்பட்டனர்.

1899இல் குவைத்தைக் காப்பாற்றும் பொறுப்பை பிரிட்டன் ஏற்றுக் கொண்டது. 1937இல் குவைத்தில் மிகுந்த எண்ணெய் வளம் இருப்பது கண்டறியப்பட்டது. இரண்டாம் உலகப் போருக்குப் பின், அபரிமிதமான எண்ணெய் செல்வத்துடன் நாடு வளர்ச்சி அடையத் தொடங்கியது. 1961 ஜூன் 19 இல் குவைத் விடுதலை அடைந்தது.

1980இல் நடந்த ஈரான்-ஈராக் போரில், ஈராக்குக்கு குவைத் ஆதரவு அளித்தது. ஆனாலும் 1990 ஜூலையில் எண்ணெய் உற்பத்தி நாடுகளின் அமைப்பில் குவைத் மீது ஈராக் புகார் கூறியது. ஈராக்குக்குச் சொந்தமான எண்ணெய்க் கிணறுகளில் குவைத் எண்ணெயைத் திருடி எடுப்பதாகவும் அதனைத் தடுக்க ராணுவ நடவடிக்கைகளை எடுக்கப் போவதாகவும் ஈராக் கூறியது. ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ஈராக் படையினர் குவைத் மீது படையெடுத்துப் போரிட்டு குவைத்தைத் தம் நாட்டுடன் இணைத்துக் கொண்டனர். 1991 பிப்ரவரியில் அய்.நா. ஆதரவுடன் அமெரிக்கப் படைகள் ஈராக்குக்கு எதிராகப் படையெடுத்து குவைத் நகரை அடைந்தன. ஈராக்கியப் படைகள் பின்வாங்கிச் சென்றன. செல்லும் வழியில் 742 எண்ணெய்க் கிணறுகளுக்குத் தீ வைத்துவிட்டது. மொத்தமே 1080 கிணறுகள் நாட்டில் இருந்தன. அவற்றின் கச்சா எண்ணெய் கடலிலும் பாலை நிலத்திலும் வழிந்தோடச் செய்தன. 1993இல் அய்.நா. தலையீட்டில் ஈராக்குக்கும் குவைத்துக்கும் புதிய எல்லைக் கோடு நிர்ணயிக்கப்பட்டது.

ஈராக்குக்கும் சவூதி அரேபியாவுக்கும் இடைப்பட்ட நாடான குவைத் 17 ஆயிரத்து 820 சதுர கி.மீ. பரப்புள்ளது. 25 லட்சம் மக்கள் தொகை கொண்டது. 85 விழுக்காட்டினர் முசுலிம்கள். இவர்களில் 70 விழுக்காட்டினர் சன்னி பிரிவிலும் 30 விழுக்காட்டினர் ஷியா பிரிவிலும் உள்ளனர்.

ஆட்சி மொழியாக அரபி உள்ளது. 84 விழுக்காடு மக்கள் கல்வியறிவு பெற்றவர்கள்.
குடிக்கோனாட்சி முறை நிலவும் நாடு. அரசர்கள் அதிபர்கள். ஆட்சித் தலைவராக பிரதமர் உண்டு. இவர்களும் மன்னர் வம்சமான ஷேக் பிரிவினர்தான். இங்கேயும் வேலை கிட்டாதவர்கள் 2 விழுக்காட்டுக்கு மேல் உள்ளனர். 3 ஆண்களுக்கு இரண்டு பெண்கள் வீதம் உள்ளனர். பெண்கள் தட்டுப்பாடு இருந்தாலும் அவர்களுக்குக் கட்டுப்பாடுகள்அதிகம்.

************************************************************************************

கிர்கிஸ்தான்

எட்டாம் நூற்றாண்டில், மத்திய ஆசியாவின் பெரும் பகுதியை அரபியர்கள் கைப்பற்றினர். அதில் இன்றைய கிர்கிஸ்தானும் அடக்கம். அரபியர்கள் இந்நாட்டில் இசுலாத்தைப் பரப்பினர். 1485 இல் நாடு முழுவதும் கிர்கி இன மக்கள்குடியேறி வாழ்ந்ததால், நாட்டின் பெயரும் கிர்கிஸ்தான் என்று ஆகியது.

1758இல் சீன மஞ்சு வமிசத்தினர் ஒய்ரட் மங்கோலியர்களை வென்று அடக்கிய பின், கிர்கிஸ் இனத்தவர் சீன நாட்டின் செல்வாக்கு மிகுந்த இனமாக ஆயினர். 19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் உஸ்பெக் அரசின் பிடியில் சென்றது.1876இல் கொகன்ட் அரசை வென்றதால் கிர்கிஸ்தான் ரஷியப் பேரரசில் சென்றது. கிர்கிசியா என்ற பெயரில் இருந்தது.
1926இல் கிர்கிஸ் தன்னாட்சிப் பகுதி சோவியத் ஒன்றியத்தின் ஒரு நாடானது. 1991இல் கிர்கிசியா எனும் பெயர் கிர்கிஸ்தான் என மாற்றப்பட்டது. சோவியத் ஒன்றியத்திலிருந்து விடுதலை பெற்றது.

சீனாவுக்கு மேற்கே அமைந்துள்ள இந்நாட்டின் பரப்பளவு ஒரு லட்சத்து98 ஆயிரத்து 500 சதுர கி.மீ. ஆகும். இதன் மக்கள் தொகை 52 லட்சத்திற்கு மேல். இவர்களில் 75 விழுக்காடு முசுலிம்கள். ரஷியப் பழமை வாதிகள் 20 விழுக்காடு. ஆட்சி மொழி கிர்கிஸ் மொழி. ரஷிய மொழியும் ஆட்சி மொழியாக உள்ளது. 99 விழுக்காட்டினர் கல்வியறிவு பெற்றவர்.
குடியரசுத் தலைவரும் பிரதமரும் உள்ள நாடு. 40 விழுக்காடு மக்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளனர். 18 விழுக்காடு மக்களுக்கு வேலை கிட்டவில்லை.

*******************************************************************************

லாவோஸ்

எட்டாம் நூற்றாண்டில் சீனர்கள் தங்கள் நாட்டின் தென்பகுதியிலிருந்து லாவோஸ் நாட்டுக்கு இடம் பெயர்ந்தனர். 14ஆம் நூற்றாண்டில் லாவோன் அரசு எனத்தக்க வகையில் லான்ஜாங் பேரரசு உருவானது. 1893 இல் பிரான்சு நாட்டினர் பாதுகாக்கப்படும் பகுதி என்றானது. பிறகு இந்தோ சீனாவுடன் இணைக்கப்பட்டு விட்டது. 1945இல் இந்தோசீனாவை ஆட்சி செய்யத் தொடங்கிய ஜப்பானியரின் காலத்தில் 1945 ஏப்ரலில் லாவோசின் விடுதலை பிரகடனப்படுத்தப்பட்டது.

வடவியத்நாமுக்கு எதிராகப் போர் நடத்திய அமெரிக்கா வான்வழி குண்டு வீசி லாவோசைத் தாக்கியது. அதற்குச் சொல்லப்பட்ட காரணம், வடவியத்நாமியருக்கு புகலிடம் தருகிறது என்பது. இரண்டாம் உலகப் போரின் போது வீசப்பட்ட குண்டுகளை விடக்கூடுதலான குண்டுகளை லாவோஸ் மீது அமெரிக்கா வீசியது என்கிறது வரலாற்றுப் புள்ளி விவரங்கள்.
1973 இல் போர் நிறுத்த ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டு லாவோஸ் இரண்டு நாடுகளாக்கப் பட்டது. கம்யூ-னிஸ்ட்களின் ஆதிக்கத்தில் ஒன்றும் அரசரை ஆதரித்-தோர் பக்கம் ஒன்றுமாகப் பிரிக்கப் பட்டது. 1975இல் லாவோ மக்கள் முன்னணியை அமைத்த பத்தெட் லாவோ ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றினார்.

தாய்லாந்துக்கு வடகிழக்கே, வியத்நாமுக்குத் தெற்கே அமைந்துள்ள தென் கிழக்கு ஆசிய நாடான லாவோசின் பரப்பளவு 2 லட்சத்து 36 ஆயிரத்து 800 சதுர. கி.மீ. ஆகும். இந்நாட்டில் 64 லட்சம் மக்கள் வாழ்கின்றனர். இவர்களில் 60 விழுக்காட்டினர் பவுத்த மதத்தினர். இயற்கைப் பொருள் அனைத்திலும் ஆண்டவன் உண்டு எனும் பிரிவினர் 40 விழுக்காடு உள்ளனர்.

லாவோ மொழி ஆட்சி மொழி. ஆங்கிலம், பிரெஞ்சு மொழிகள் பேசப்படுகின்றன. மக்களில் 66 விழுக்காடு மட்டுமே படிப்பறிவு உள்ளவர்கள். 19-7-1949 இல் விடுதலை பெற்ற லாவோஸ் ஒரு கம்யூனிஸ்ட் நாடு. குடியரசுத் தலைவரும் பிரதமரும் உள்ளனர்.
34 விழுக்காட்டினர் வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ளனர். 2 விழுக்காடு மக்கள்வேலை கிட்டாதோர்.

ரயில் பாதை வசதியே இல்லாத நாடு. அதனாலேயே வளர்ச்சி குறைவு. தனியார் துறையை ஊக்குவிக்கும் கம்யூனிஸ்ட் அரசு, தொழில் துறையில் கட்டுப்பாடுகளைத் தளர்த்தினாலும் உள்கட்டுமானக் குறைவினால் எதிர்பார்த்த வளர்ச்சி இல்லை.

-------------------"விடுதலை"2-7-2009

0 comments: