Search This Blog
2.7.09
தமிழக சட்டமன்றத்தின் குரலை இந்திய அரசு உணருமா?
தமிழ்நாடு சட்டப்பேரவையின் வரலாற்றில் நேற்று ஒரு முக்கிய நாளாகும் (1.7.2009).
ஈழத் தமிழர்ப் பிரச்சினைமீது கொண்டுவரப்பட்ட சிறப்புக் கவன ஈர்ப்புத் தீர்மானத்தின்மீது அனைத்துத் தரப்பு உறுப்பினர்களும் வீணான அரசியல் சர்ச்சைகளை எழுப்பாமல் பாதிக்கப்பட்டுள்ள ஈழத் தமிழர்களை முன்னிறுத்திக் கருத்துகளைக் கூறியது வரவேற்கத்தக்கதாகும்.
மக்களால் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகள் நாட்டு நலன் தொடர்பாக விவாதங்களை நடத்தியும், புள்ளி விவரங்களை எடுத்து வைத்தும் கடமையாற்றக் கடமைப்பட்டவர்கள். அப்படி செய்வதன் மூலமாகத்தான் மக்கள் பிரதிநிதிகள் என்கிற மரியாதைக்குரியவர்களாகவும் மதிக்கப்படுவார்கள்.
பிரச்சினைகளை எடுத்து வைப்பதற்கு முன்பே முழக்கம் போடுவதும், தொட்டதற்கெல்லாம் வெளிநடப்புச் செய்வதும் எல்லாம் மக்கள் வரிப் பணத்தை விரயப்படுத்துவதாகவே கருதப்படும்.
மிக முக்கியமான நாட்டுப் பிரச்சினைகளில்கூட அரசியல் புகுந்து குட்டிச்சுவராக்குவது நாட்டு நலனைப் பின்னுக்குத் தள்ளும் சோகமாகும்.
ஈழத் தமிழர்ப் பிரச்சினையில் எதிர்க்கட்சிகள் ஒற்றுமையாக இருந்து ஒத்துழைப்புக் கொடுத்தால் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வாய்ப்புண்டு என்று முதலமைச்சர் கலைஞர் அவர்கள் வேண்டுகோள் விடுத்தார்.
சில நாள்கள் கழிந்த நிலையில், சிறப்புக் கவன ஈர்ப்பு என்ற தன்மையில் அத்தகையதோர் சூழ்நிலை அரும்பியது அகமலர்ச்சியைத் தருகிறது. இந்த நிலை தொடராதா என்றும் ஏங்குகிறது.
எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் ஈழத் தமிழர்களுக்கு இழைக்கப்படும் அவதியை எடுத்து வைத்துள்ளனர்.
போர் முடிந்துவிட்டது என்று ராஜபக்சே சொன்னாலும், போருக்குப் பின் அமைதி அங்கு தவழவில்லையே! விடுதலைப்புலிகளுடன் தான் போரே தவிர, ஈழத் தமிழர்கள் மீதல்ல என்று இலங்கை அதிபர் ராஜபக்சே சொன்னதில் வாய்மை இருக்குமேயானால், போர் முடிந்த பிறகு, அங்குள்ள ஈழத் தமிழர்கள் வாழ்வுரிமை, வாழ்வாதாரம் உறுதிப்படும் பணிகளில் அரசு ஈடுபட்டிருக்கவேண்டும்.
அங்கிருந்து வெளிவரும் தகவல்கள் மிச்ச சொச்சம் இருக்கும் தமிழர்களை ஒட்டுமொத்தமாக முடித்துவிட்டுதான், இலங்கை என்பது சிங்களம் என்ற ஒரே இனத்திற்கான நாடு என்று அறிவிக்கும் காலகட்டம் வரை, அவர் ஓயமாட்டார் என்று தெரிகிறது.
போரினால் பாதிக்கப்பட்டு ஊனமுற்றுக் கிடக்கும் அந்த மக்களுக்கு மருத்துவ வசதியில்லை; உண்ண உணவு இல்லை; குடிநீர் இல்லை; கழிப்பறை வசதிகள்கூட இல்லை என்று தமிழ்நாடு சட்டப்பேரவை உறுப்பினர்கள் கட்சிகளை மறந்து கூறியிருக்கின்றனரே அவற்றை அலட்சியப்படுத்த முடியுமா?
இளைஞர்கள் முகாம்களிலிருந்து தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனரே அந்த இளைஞர்கள் எங்கு கொண்டு செல்லப்படுகிறார்கள் என்பது திகிலான கேள்வியாக எழுந்து நிற்கிறது.
இன்னும் கால் நூற்றாண்டுக்குத் தமிழின இளைஞர்கள் என்ற நிலை இருக்கக் கூடாது என்று இலங்கைப் பாசிச அரசு முடிவு கட்டிவிட்டதோ என்று நினைக்கத் தோன்றுகிறது.
போரின்போதும் சரி, போருக்குப் பிறகும் சரி, உலக நாடுகள், அய்.நா. மன்றம் தம் கடமையைச் செய்யத் தவறிவிட்டன என்பது மாபெரும் வெட்கக்கேடாகும்.
இலங்கை அரசு நிவாரணப் பணிகளை சரிவர செய்யவில்லை என்று இந்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் வெளிப்படையாகக் குற்றம்சாற்றும் நிலைதான் அங்கு நிலவுகிறது!
இப்பொழுது இந்தக் குற்றச்சாற்றை முன்வைக்கும் இந்திய அரசு உரிய நேரத்தில் தன் கடமையைச் செய்திருக்கிறதா என்ற கேள்விக்கு காலாகாலத்திற்கும் பதில் சொல்ல முடியாத பழி சூழ்ந்த நிலைதான்.
இந்திய அரசும் நம் குரலுக்கு ஏற்ப தனது குரலை உயர்த்தவில்லை என்பதையும் சுட்டிக்காட்டத் தவறவில்லை தமிழக முதலமைச்சர்.
வன்னி முகாமில் உறவினர்களைப் பார்க்க முயன்ற தமிழர்கள் இருவர் நேற்று சுட்டுக் கொல்லப்பட்டனர் என்கிற செய்தி எதைக் காட்டுகிறது?
லட்சக்கணக்கான தமிழர்களின் உயிரைக் குடித்தும் சிங்களப் பேரினவாத அரசின் கொடும் யானைப்பசி தீரவில்லை என்பதுதானே இதன் பொருள்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் கட்சிக்கு அப்பால் நின்று வெளிப்பட்ட குரலின் வெப்பத்தை இந்திய அரசு உணருமா? உரிய செயல்பாடுகளில் இறங்குமா? என்பதுதான் இப்பொழுது எழுந்து நிற்கும் வினாவாகும்.
------------------"விடுதலை"தலையங்கம் 2-7-2009
Labels:
திராவிடர் இயக்கம்
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
ஆ.ராஜா நீதிபதி மேட்டர்ல மாட்டிக்கிட்டார். வேற வழி இல்லை தமிழினத் தலைவருக்கு, எதையாவது சொல்லி மக்களை திசை திருப்பனும். திராவிடர் கழகமும் ஜால்ரா போட்டு தானே ஆகனும்!
//
தமிழ்நாடு சட்டப்பேரவையில் கட்சிக்கு அப்பால் நின்று வெளிப்பட்ட குரலின் வெப்பத்தை இந்திய அரசு உணருமா? உரிய செயல்பாடுகளில் இறங்குமா? என்பதுதான் இப்பொழுது எழுந்து நிற்கும் வினாவாகும்.
//
இது தான் இன்னும் வினா என்றால், நீங்கள் ஒட்டு மொத்த தமிழர்களை ஏமாற்ற முயல்கிறீர்கள் என்பது தான் உண்மை..
இந்திய அரசு, ஈழத்தமிழர் தொடர்பான தமிழகத்தின், தமிழ்நாட்டு மக்களின், தமிழ்நாடு அரசின் எந்த கோரிக்கையையும் ஏற்கவில்லை...இல்லை ஏற்றார்கள் என்று நீங்கள் சொன்னால், உங்களின் இந்த கட்டுரையே ஏமாற்று!
ஆக, இப்பொழுது நிற்கும் வினா இதுவல்ல...இதையும் இந்திய இனவெறி அரசு ஏற்காத போது, தமிழக சட்டசபை அடுத்து என்ன செய்யும் என்பதே! இன்னும் இருநூறு வருடம் கழித்து ஏதேனும் வாரிசு ஆட்சி செய்யும் போது, இருநூறு வருடங்கள் முன்பே தீர்மானம் இயற்றியவர்கள் நாங்கள் என்று அறிக்கை விட மட்டுமே பயன்படுமா??
கொன்றவனிடமே நீதி கேட்கும் கேவலம் இங்கு மட்டும் தான் நடைபெறும்...ஆனாலும், நடக்கட்டும்...
என்னைக்கு தான் உணர்ந்திருக்கிறது . நமக்கு தேவை பிள்ளைகளுக்கு பெரபில்லைகளுக்கும் பதவி . எவன் செத்த எனக்கென்னா . நீதிபதிய மிரட்டினமா வழக்கிலிருந்து தப்பித்தொமா , பிரதமரை மிரட்டினோமா மூன்று கேபினெட் பதவி கிடைத்ததா என்பதை பார்க்க வேண்டும் .
திராவிடர் கழக தலைவருக்கு பெரியார் திராவிடர் கழகத்திற்கு கருணாநிதி எதிரியாக இருந்தால் போதும் இவரு ஜால்ரா அடிப்பாரு .
போருக்கு முன்னரே நிறைவேற்றிய தீர்மானமே குப்பையில இருக்கு ஏசி அறையில உட்கார்ந்து நேரம் போக்குரத எல்லாம் பெருசா எடுக்க கூடாது
Blogger அது சரி said...
//இது தான் இன்னும் வினா என்றால், நீங்கள் ஒட்டு மொத்த தமிழர்களை ஏமாற்ற முயல்கிறீர்கள் என்பது தான் உண்மை..//
ஒட்டுமொத்த தமிழர்கள் என்பது யார்? இலங்கையில் உள்ள ஒட்டுமொத்தமா? இல்லை தமிழகமா? இல்லை உலகம் முழுவதுமா?
சரி இலங்கைத் தமிழர்கள் முற்றிலும் ஒன்றுபட்டு ஆதரிக்கிறார்களா? யாருக்காக ஆதரவு தெரிவிக்கிறார்கள்? எல்லா விஷயத்திலும்? ஒரேயொரு இயக்கத்திற்கா? போராடிய அத்துணை இயக்கத்திற்குமா? இலங்கையில் உள்ள எல்லா சமயத்தமிழர்களும் ஒன்று சேர்ந்து ஆதரிக்கிறார்களா?
அப்படி ஒரு இயக்கத்தை மட்டும் இலங்கைத் தமிழர்கள் ஆதரித்திருந்தால் இலங்கைத் தேர்தலை இலங்கைத் தமிழர்கள் ஒட்டுமொத்தமாக புறக்கணித்திருப்பார்களே? ஏன் புறக்கணிக்கவில்லை...?
அப்புறம் எப்படி ஒட்டுமொத்த தமிழர்கள் என்று வரும்...எங்கு வேண்டுமோ? அங்கேயே கால் சதவீத ஆதரவுக்கூட இல்லையே!
எங்களுக்காகத் தான் நீங்க வாழணும் நீங்க செத்தா என்ன? இருந்தா? என்ன? திராவிடம் பற்றி பேசினால் என்ன? தீண்டாமையை பற்றி கவலை என்ன?
எத்தனை விவசாயிகள் தற்கொலை புரிந்தால் என்ன?
குறிப்பிட்ட மிக மிக குறைந்த சதவீதமான எங்களை பற்றி மட்டுமே கவலைப்படவேண்டும். அதுவும் நீங்க எதை பத்தியும் கவலைப்படாத பொழுது.
Post a Comment