Search This Blog

2.7.09

உலக நாடுகள் - தூரப்பார்வை - லாட்வியா-லெபனான்

லாட்வியா

லாட்வியாவில் வாழ்ந்தவர் பால்டிக் இனத்தவர். பின்னர் இப்பகுதி ஜெர்மனி தளபதிகளின் கட்டுப் பாட்டில் வந்தது. அதன் பிறகு ரஷியர்கள் 200 ஆண்டுகளுக்கும் மேலாக லாட்வியாவில் ஆதிக்கம் செலுத்தினர். 1918 இல் ரஷியப் புரட்சிக்குப் பின் லாட்வியா விடுதலையை அறிவித்தது.

உள்நாட்டில் குழப்பங்களும் கிளர்ச்சிகளும் விளைவிக்கப்பட்டதன் விளைவாக, சோவியத் ஒன்றியத்துடன் அமைதி ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது. இரண்டாம் உலகப் போரில் 1941இல் ஜெர்மனி லாட்வியா மீது படையெடுத்துக் கைப்பற்றிக் கொண்டது. போருக்குப் பின் தொடர்ந்து சோவியத் யூனியனில் இடம் பெற்றிருந்தது.

1991இல் சோவியத் ஒன்றியம் உடைபட்ட பிறகு, லாட்வியா தன்னை சுதந்திர நாடாக அறிவித்துக் கொண்டது. நாட்டோ நாடுகளிலும், அய்ரோப்பிய ஒன்றியத்திலும் தன்னை இணைத்துக் கொண்டது.

எஸ்டோனியாவுக்கும் லிதுவேனியாவுக்கும் இடைப்பட்ட பால்டிக் கடல் ஓரத்தில் அமைந்த லாட்வியாவின் பரப்பு 64 ஆயிரத்து 589 சதுர கி.மீ. ஆகும். இந்நாட்டின் மக்கள் தொகை 23 லட்சம். கிறித்துவப் பிரிவுகளான லுத்தரன், ரோமன் கத்தோலிக்க, ரஷியப் பழமை வாதப் பிரிவுகளைச் சேர்ந்தவர்கள். இவர்களின் ஆட்சி மொழி லாட்வியாவை 58 விழுக்காடு மக்களும் ரஷிய மொழியை 38 விழுக்காடு மக்களும் பேசுகின்றனர். மக்கள் அனைவரும் கல்வியறிவு பெற்றவர்கள்.

நாட்டில் குடியரசுத் தலைவரும் பிரதமரும் உண்டு. 9 விழுக்காடு மக்கள் வேலை கிட்டாதோர்.

லெபனான்

லெபனான் நாட்டுக் கடலோரங்களில் போனீசியர்கள் பொது ஆண்டுக்கு 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே குடியேறி வாழ்ந்து வந்தனர் என்பது வரலாறு. பைப்லோஸ் என்பது அந்தக் கால நகரம் ஆகும். எகிப்து நாட்டுடன் தொடர்பு கொண்டிருந்த நாடு லெபனான். ஆனாலும் பொது ஆண்டுக்கு 14 நூற்றாண்டுகளுக்கு முன்பு எகிப்து தன் கட்டுப் பாட்டதிகாரத்தை இழந்துவிட்டது. இதனால் போனீசியப் பகுதிகளில் எல்லாம் நிறைய நகர அரசுகள் (city states) தோன்றத் தொடங்கின.

மத்திய தரைக் கடலின் கிழக்குக் கடற்கரைப் பகுதிகளில் போனீசியர்கள் நிறைய குடியேற்றப் பகுதிகளை அமைத்து வாழத் தொடங்கினர். இதன் காலம் பொது ஆண்டுக்கு 2000 ஆண்டுகள் முன்பு. இன்றைக்கு 4000 ஆண்டுகளுக்கு முன்பு, இம்மக்களை பொது ஆண்டுக்கு சுமார் 900 ஆண்டுகளுக்கு முன் அஸ்ஸிரியர்கள் மிரட்டத் தொடங்கினர். இரண்டாம் அஷுர்ன கிர்பால் என்னும் அரசன் மத்திய தரைக் கடல் பகுதிகளில் தாக்குதலை நடத்தி போனீசியர்களை வணங்கச் செய்தான். பாபிலோனிய மன்னனான நெபுகாத்நேசர் என்பான் டயர் நகரை முற்றுகையிட்டுத் தாக்குதல் தொடுத்த போது 13 ஆண்டுகள் போர் செய்து அதனை டயர் நகர் தடுத்தது. என்றாலும் இறுதியில் வீழ்ந்தது.

பொது ஆண்டுக்கு முன் 538 ஆம் ஆண்டில், போனீசியாவின் ஆட்சி, பாபிலோனியர்களிடமிருந்து பாரசீகர்களிடம் சென்றுவிட்டது. பாபிலோனியர்கள் பாரசீகர்களிடம் தோற்றுவிட்டனர். டயர் நகரை மகா அலெக்சாண்டர் முற்றுகையிட்டு எட்டு மாதங்கள் கடுமையாகப் போரிட்ட பின்னர்தான் பிடிக்க முடிந்தது. அந்நகர மக்கள், அக்கால வழக்கப்படி, அடிமைகளாக விற்கப்பட்டனர். டயர் நகரம் தன் சிறப்பை இழந்தது. அந்தப் பகுதியின் சிறப்பிடத்தை அலெக்சாண்டிரியா பிடித்துக் கொண்டது. போனீசியா ரோமப் பேரரசின் பகுதியான சிரியாவுடன் இணைக்கப்பட்டது.

11 ஆம் நூற்றாண்டில் லெபனான் சிலுவைப் போரில் ஈடுபட்டோரின் நாடாகிறது. அதன் வடபகுதி திரிபோலி நாட்டின் பகுதியாகவும் தென்பகுதி ஜெருசலம் அரசின் பகுதியாகவும் ஆகிவிட்டது. படிப்படியாக லெபனான் பிரான்சு நாட்டின் ஆதிக்கத்தில் சென்றது. முதல் உலகப் போரின் முடிவில், நேச நாடுகள் லெபனானைக் கைப்பற்றி பிரான்சின் ராணுவ நிருவாகத்தின் கீழ் வைத்தன. அன்றைய உலக நாடுகளின் அமைப்பு 1923 இல் லெபனானையும் சிரியாவையும் பிரான்சுக்கு அளித்தது. 1943 இல் லெபனான் நாட்டின் அரசுக்கு ஆட்சி மாற்றம் தர பிரான்சு சம்மதித்தது. 1-1-1944 முதல் அமலுக்கு வந்தது. உலக நாடுகள் மன்றத்தின் ஆணை வெளியிடப்பட்ட 22-11-1943 தான் லெபனானின் விடுதலை நாளாகக் கொண்டாடப்படுகிறது.

இசுரேல் நாட்டுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்ட பாலஸ்தீனம், லெபனான் நாட்டில் தளம் அமைத்துச் செயல்பட்டது. 1975 முதல் 1991 வரை உள்நாட்டுப் போர்கள் லெபனானை நிலை குலையச் செய்தன. 1982 ஜூன் மாதத்தில் லெபனான் நாட்டுக்கு எதிரான முழுமுனைப்பான தாக்குதலை இசுரேல் தொடர்ந்தது. 1986 ஜூலையில் அமைதிப் பேச்சு வார்த்தைகள் தொடங்கப்பட்டன. சிரியா நாடு பார்வையாளராக்கப்பட்டது. அது பெய்ரூட் நகரில் தங்கிப் பேச்சு வார்த்தைகளை நடத்தியது. சிரியாவின் ஆதரவுடன் லெபனான் அரசு, லெபனானின் தென் பகுதியை ராணுவப் பிடியிலிருந்து மீட்டது. அதன் தொடர்ச்சியாக நடைபெற்று வந்த உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது.

இசுரேலுக்கும் சிரியாவுக்கும் இடையிலான இந்நாடு 10 ஆயிரத்து 400 சதுர கி.மீ. பரப்பளவு மட்டுமே உள்ள நாடு. மக்கள் தொகை 39 லட்சம். முசுலிம் மதத்தின் பல பிரிவுகளைச் சேர்ந்தோர் 60 விழுக்காடு. கிறித்துவ மதத்தின் பல பிரிவுகளைச் சேர்ந்தோர் 39 விழுக்காடு உள்ளனர். கிறித்துவத்துக்கும் இசுலாத்துக்கும் நடைபெற்ற மதச் சண்டை சிலுவைப் போர் எனப்படும். இப்போரின் தளமாக 11 ஆம் நூற்றாண்டில் விளங்கிய லெபனான் நாட்டின் இரு பெரும் மதங்களாகவே அவை விளங்குகின்றன.

ஆட்சி மொழியாக அரபி உள்ளது. பிரெஞ்ச், இங்கிலீசு, அர்மீனிய மொழிகள் பேசப்படுகின்றன. 87 விழுக்காடு மக்கள் கல்வியறிவு பெற்றவர்கள். நாட்டுக்குக் குடியரசுத் தலைவரும் பிரதமரும் உள்ளனர். 28 விழுக்காடு மக்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ளனர். 18 விழுக்காடு மக்கள் வேலை கிட்டாதோர்.

உலகப் புகழ் பெற்ற கவிஞன் கலீல் ஜிப்ரான் லெபனான் நாட்டுக்காரர். நாடு உனக்கு என்ன செய்தது என்று கேட்காதே; நாட்டுக்கு நீ என்ன செய்தாய் என்று எண்ணிப் பார் என்ற சொற்களைத் தந்தவர் கலீல் ஜிப்ரான். (இச்சொற்களை மேற்கோள் காட்டிப் பேசினார் கென்னடி. அவரே சொன்னதாகப் பலபேர் நினைத்துக் கொண்டுள்ளனர்.)

லெபனான் நாட்டு விடுதலை வீரர்கள் பயன் படுத்திய முழக்கம் - இன்றில்லாவிட்டால், பின் எப்போது? நீ செய்யா விட்டால், பின் யார்? என்பது.

பல்லாயிரம் ஆண்டுகாலப் பெருமை பெற்ற நாடு தன் சிறப்புகளை இழக்கவில்லை என்பதை இவ்வாசகங்கள் நிலை நிறுத்திக் கொண்டே இருக்கும்..


----------------"விடுதலை" 2-7-2009

0 comments: