Search This Blog
4.7.09
பெட்ரோல், டீசல்விலை உயர்வு - பொதுத்துறை பங்குகள் விற்பனை - ஈழத் தமிழர்கள் இன்னல்
மாவட்டத் தலைநகரங்களில் திராவிடர் கழகம்
ஜூலை 10 இல் ஆர்ப்பாட்டம்
பெட்ரோல், டீசல்விலை உயர்வு - பொதுத்துறை பங்குகள் விற்பனை -
ஈழத் தமிழர்கள் இன்னல்
மூன்று முக்கிய பிரச்சினைகளை முன்னிறுத்தி ஜூலை 10 ஆம் தேதி மாவட்டத் தலைநகரங்களில் திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம் நடத்தும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் அறிவித்துள்ள அறிக்கை வருமாறு:
நாடாளுமன்றத் தொடர் கூட்டம் அதிலும் பட்ஜெட் தொடர் துவங்கு முன்பே, அவசர அவசரமாக, பெட்ரோல், டீசல் விலை லிட்டர் ஒன்றுக்கு முறையே ரூபாய் நான்கும், இரண்டும் ஆக உயர்த்தப்பட்டதை எதிர்த்து நேற்று (2_7_2009) நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மிகப் பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது!
முதல்கட்ட நடவடிக்கையே பாதகமானது!
பட்ஜெட் தொடருக்கு முன் இப்படி செய்தது அவசியம்தானா? ஏழை எளிய, விவசாயிகளின் ஆதரவோடு வெற்றி பெற்று மத்தியில் மீண்டும் அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஆட்சி அமைத்தபின், முதல் கட்ட நடவடிக்கைகளே மக்கள் நலனைப் பாதுகாப்பதாக இல்லையே!
பெட்ரோல், டீசல் விலை மிகமிகக் குறைந்த முந்தைய காலகட்டத்தில் அதற்கேற்ப இந்த அரசு விலைகளைக் குறைத்து சகாயம் செய்ய முன்வரவில்லை; ஆனால் வெளிச்-சந்தையில் விலை ஏறிவிட்டது என்ற காரணத்தைக் காட்டி இப்படி உயர்த்தி இருப்பது சரியா? விவசாயிகள் பெரிதும் டீசலைப் பயன்படுத்துகிறார்கள். சரக்கு லாரிகள் கட்டணம் உயரும்; காய்கறிகள் உள்பட பல அத்தியாவசியமான, ஏழை, விவசாய மக்கள் பயன்படுத்தும் பொருள்கள் விலையேறிட மேலும் இதுவே காரணமாக அமையக் கூடும்.
டி.ஆர். பாலு எழுப்பிய நியாயமான வினாக்கள்
இம்மாதிரி முடிவுகளை எடுக்குமுன்பு அய்க்கிய முற்போக்குக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்களை அழைத்துக் கலந்து ஆலோசித்துச் செய்யவேண்டியதுதான் முறையான ஏற்பாடு ஆகும்.
இதை தி.மு.க. நாடாளுமன்றக் கட்சித் தலைவர் டி.ஆர். பாலு அவர்கள், நேற்று மக்களவையில் பேசும்போது சுட்டிக்காட்டியதோடு, விவசாயிகளையும், ஏழை_எளிய மக்களையும் இது வெகுவாகப் பாதிக்கும் என்பதையும் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.
திரிணாமுல் காங்கிரசும் இதனை எதிர்த்துள்ளது!
ஆளும் கூட்டணிக் கட்சிகளைக்கூடக் கலந்து ஆலோசிக்காமல் அவசரக் கோலத்தில் அள்ளித் தெளிப்பது என்ற நிலைமை ஏன் உருவாகவேண்டும்?
இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பொருளாதார சர்வே அறிக்கையில் கூட,
நவரத்தினங்கள் என்று புகழப்பட்ட பொதுத்துறையில் இலாபம் ஈட்டி ஆண்டுக்கு ஆண்டு தவ-றாமல் இலாபம் தரக்கூடிய பொதுத்துறை நிறுவனங்களான நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் ; திருச்சியில் உள்ள பாரத மிகுமின் நிலையம் என்று அழைக்கப்டும் கனரக பாய்லர் தொழிற்சாலை (ஙிபிணிலி) போன்றவற்றில் 5 சதவிகிதம் முதல் 10 சத-விகிதம் பங்குகளை விற்பது. ரயில்வே மற்றும் பொதுத்துறை அரசு ஆதிக்கத்தை நீக்க (மறைமுக தனியார்மயமாக்க) என்று அறிவித்திருப்பது மிகவும் கொடுமையானது! லாபம் தரும் பொதுத்துறை நிறு-வனங்களை விற்பது, பொன்முட்டையிடும் வாத்தைக் கொல்வது போன்ற செயல் அல்லவா?
தனியார் மயம், தாராளமயம், உலகமயம் என்ற கொள்கையின் பாய்ச்சல் என்பதும், நேரு வகுத்த சோஷலிசத்திற்கே விடை கொடுத்தனுப்பும் முயற்சிகள் என்பதும் தெள்ளத்தெளிவாக விளங்குகிறது!
கண்களை விற்று சித்திரம் வாங்குதோ?
கேட்டால் ஏழைகளுக்கு உதவிட இத்தகைய முயற்சிகள் தேவையாம்!
கண்ணை விற்றுச் சித்திரம் வாங்கும், கைகொட்டி நகைக்கும் செயல் அல்லவா இது!
வெறும் காங்கிரஸ் கட்சியின் ஆட்சியாக இருப்பின் மற்றக் கட்சிகளைக் கலக்கவேண்டிய அவசியம் இல்லை என்று கூடச் சொல்லலாம். ஆனால் மத்தியில் நடைபெறுவது அய்க்கிய முற் போக்குக் கூட்டணி அரசு அல்லவா? அவர்களை அலட்சியப்படுத்துவது ஜனநாயக முறையாகுமா?
முதல்வர் கலைஞர் போன்ற பழுத்த அரசியல் அனுபவம் வாய்ந்தவர்களைக் கலந்து முடிவுகளை எடுக்கவேண்டாமா?
ஈழத் தமிழர்களின் அவல நிலை
ஈழத் தமிழர் வாழ்வுரிமைப் பிரச்சினையிலும், சீனா, பாகிஸ்தான், ஈரான், இஸ்ரேல், ஜப்பான், ரஷ்யா போன்ற நாடுகளின் ஆயுதங்கள் தங்களிடம் இருக்கின்றன என்ற தைரி-யத்தாலும், அவைகளில் சீனா போன்ற நாடுகள் இலங்கையையொட்டி தளங்களை அமைப்பதும் இந்திய நாட்டின் இறை-யாண்மைக்கும், பாதுகாப்புக்கும்கூட அச்சுறுத்தல் என்ற நிலையும்; அந்த தைரியத்தில் இந்தியாவின் அறிவுரைகளைக்கூட அலட்சியப்படுத்தும் போக்-கும் அங்கே இலங்கையில் துளிர் விடும் நிலையும் இருக்கிறது!
ஜூலை 10 இல் ஆர்ப்பாட்டம்! ஆர்ப்பாட்டம்!!
இவைகளை மய்யப்படுத்தி மத்திய அரசின் போக்கினைக் கண்டித்து வரும் 10.7.2009 அன்று தமிழ்நாடு முழுவதிலும் மாவட்டத் தலைநகரங்களில் (அரசு மாவட்டத் தலைநகர்களில்) திராவிடர் கழகம் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திடும். பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்பப் பெறவும், லாபத்தில் இயங்கும் அரசு பொது நிறுவனங்களின் பங்குகள் விற்பனை நிறுத்தப்படல் வேண்டும் என்று வலியுறுத்தியும், போர் முடிந்துவிட்டது; விடுதலைப்புலிகள் என்ற தீவிரவாதிகளை ஒழித்துக்கட்டி விட்டோம் என்று கூறும் சிங்கள இராஜபக்சே அரசு தமிழர்களை மிருகங்களை விடக் கேவலமாக பட்டி களில் ஆடு மாடுகளைப் போல் அடைத்து வைத்து, சொந்த வீடு வாசல்களுக்குக்கூட அனுமதிக்காமல் 3 லட்சம் தமிழர்களை நடத்தும் மனிதாபிமானமற்ற கொடுமைகளை எதிர்த்தும்தான் நடைபெற உள்ளது.
கலந்து கொள்ள வாரீர்!
இந்த மூன்று அம்சங்களை முன்னிறுத்தி கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும். இதனை ஆதரிக்கும் - ஒத்தக் கருத்து உள்ள தமிழர்கள் அனைவரும் கலந்துகொள்ள முன்வரவேண்டும் என்று கேட்டுக்கொள்-கிறேன்.
--------------------"விடுதலை" 3.7.2009
Labels:
வீரமணி
Subscribe to:
Post Comments (Atom)
1 comments:
இது நியாயமான விஷயம் தான். போராட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள்!
Post a Comment