Search This Blog
1.7.09
பார்ப்பனப் பெண்கள் கடவுளால் கற்பழிக்கப்பட்டதாகக் கதைகள் உண்டா?
வீரத்தாய்மார்களாக ஆக விரும்புங்கள்
தலைவரவர்களே! பெரியோர்களே! தோழர்களே!
சகோதரிகளே! நீங்கள் தற்போது தழுவி நிற்கும் இந்துமத வருணாசிரம தர்மப்படி நீங்கள் சூத்திரச்சிகள்; பார்ப்பனனின் தாசிகள் என்பவை முதலில் உணர்ந்து கொள்ளுங்கள். கடவுள்களுக்கும் நீங்கள்தாம் தாசிகள். எந்தக் கடவுளும் சூத்திரச்சிகளுடன்தான் லீலை செய்ததாகப் புராணக்கதைகள் கூறுகின்றனவே ஒழிய, எந்தக் கதையும் கடவுள் பார்ப்பனத்திகளோடு லீலை செய்ததாகக் கூறக் காணோம்.
கடவுள் அவதாரமெல்லாம் நம் பெண்களின் கற்பைத்தான் சோதித்ததாக கதைகளில் கூறப்-படுகிறதே ஒழிய - நம்மவரின பெண்களைத்தான் கையைப் பிடித்து இழுத்துக் கற்பழித்ததாகக் கூறப்படுகிறதே ஒழிய - எந்தக் கதையிலும் பார்ப்பனப் பெண்கள் கடவுளால் கற்பழிக்கப்பட்டதாகக் கூறப்படக் காணோம். அவ்வளவு இழிவுபடுத்திவிட்டார்கள் இந்த அன்னக் காவடிப் பார்ப்பனர்கள், நம்மை! இதை அறியாமல் நீங்கள் இன்னும் அவன் காலடியில் வீழ்ந்து காசு பணம் அழுது வருகிறீர்கள்.
இனி நீங்கள் ஒரு காசுகூட, எந்தப் பார்ப்பானுக்கும் அழக்கூடாது. உங்கள் வீட்டு நல்ல காரியங்களுக்கோ, கெட்ட காரியங்களுக்கோ அவனை ஒரு நாளும் அழைக்கக்கூடாது. நீங்கள் கோயிலுக்குப் போகக்கூடாது; போவதாய் இருந்தாலும் பார்ப்பான்தான் பூசை செய்ய வேண்டும் என்கின்ற கட்டுத்திட்டம் உள்ள கோயிலுக்கோ - இரண்டு பெண்டாட்டிகளைக் கட்டிக் கொண்டு, அதோடு ஒரு வைப்பாட்டியையும் வைத்திருக்கும் சாமிகளும் உள்ள கோயிலுக்கோ நீங்கள் கட்டாயம் போகக் கூடாது.
அப்படிப் போவதானால், போகும்போது ஒரு தடி எடுத்துக் கொண்டு போங்கள் - தேங்காய் வெற்றிலை பாக்குக்குப் பதிலாக! அந்தத் தடியால் அடித்துக் கேளுங்கள், அந்தச் சாமியை! நான் தடியால் அடிக்கிறேன்; நீ அழாமல் இருக்கிறாயே! உனக்கு உயிர் கிடையாது; நீ வெறும் குழவிக்கல் சாமி; அதனால்தான் நான் அடிப்பது உனக்குத் தெரியவில்லை. அப்படி இருக்க, உனக்கு ஏன் பெண்டாட்டி? அப்படித்தான் பெண்டாட்டி வேண்டுமென்றால், ஒரு பெண்டாட்டி போதாதா? இரண்டு பெண்டாட்டிகள் ஏன் உனக்கு? இரண்டு பெண்டாட்டிகள் தான் இருந்து தொலையட்டும் - ஒரு தடவை மட்டும் அவர்களைக் கலியாணம் செய்து கொண்டால் போதாதா? வருடா வருடம் ஏன் உனக்குக் கலியாணம் நடக்க வேண்டும்? அதுவும் போதாதென்று வைப்பாட்டிகள் வேறு வேண்டுமென்று கேட்கிறாயே! இது நியாயமா! இத்தனையும் வேண்டுமானால் வைத்துக் கொள்! அண்டங்களையெல்லாம் படைத்த உனக்கு நாங்கள் படி அளக்க வேண்டுமா? உனக்கு வேண்டியதை உன்னால் தேடிக் கொள்ள முடிய-வில்லையா? நீயா எங்களுக்குப் படியளக்கப் போகிறாய்? ஏன் சாமி, மவுனம் சாதிக்கிறீர்கள்? கல்லில்லையானால் - நீர் உண்மையில் கடவுளானால் - நாங்கள் தரும் பொருள் உனக்குச் சேர்வதில்லையானால் - உன் பேரால் எங்களைக் கொள்ளையடித்து வாழும் இந்த அன்னக் காவடிகளான பார்ப்பனர்களை ஏன் தண்டிக்கக் கூடாது? என்று தடியால் அடித்துக் கேளுங்கள். பதில் இல்லையானால், நாங்கள் கூறுவது போல் - அது வெறும் குழவிக் கல் என்பதை அறிந்து கொண்டு வீடு திரும்புங்கள். பிறகு உங்களை ஒரு வார்த்தை பேசுவார்களா உங்கள் கணவர்கள்?
தாய்மார்களே! நீங்கள் எதையும் பகுத்தறிந்து பார்க்க வேண்டும். கல்லே கடவுள் என்று நம்புவதை, பார்ப்பானைக் கடவுள் அவதாரம் என்று நம்பி அவனுக்கு அரிசி பருப்பு அழுவதையும் அறவே விட்டொழிக்க வேண்டும். சாணி, மூத்திரத்தைக் கலக்கிக் குடிப்பது மதம் அல்ல. மக்களுக்கு ஒழுக்கத்தைக் கற்பிப்பதுதான் மதம்;- மனிதனை மனிதனாக மதித்து நடத்துவதுதான் மதம் - என்பதை நீங்கள் உய்த்துணர வேண்டும். புராண சம்பந்தமான நாடகங்களுக்கோ, சினிமாக்களுக்கோ, புண்ணிய ஸ்தலங்களுக்கோ நீங்கள் கட்டாயம் போகக் கூடாது. இவையாவும் பார்ப்பனர்கள் உங்கள் காசைப் பறித்துச் சுகபோக வாழ்வு வாழ்வதற்கு வகுத்துக் கொண்ட வழிகள். நீங்களும் மேல்நாட்டுப் பெண்களைப் போல சகல உரிமைகளையும் பெற்று, இன்ப வாழ்வு வாழ வேண்டும். அதற்கு நீங்கள் ஆண்களைப் போல் படிக்க வேண்டும். உங்களுக்குச் சட்டத்தின் மூலம் பல உரிமைகள் - சொத்துரிமை, விவாகரத்து உரிமை ஆகிய உரிமைகள் வரக் காத்திருக்கின்றன. அவ்வுரிமைகளை அனுபவிக்க உங்களுக்குக் கல்வி அறிவு அவசியமாகும். நகைகளிலோ, சேலைகளிலோ உங்களுக்குள்ள பிரியத்தை ஒழித்து விடுங்கள்! இவற்றில் பிரியம் வைத்துக் கொண்டு இருப்பீர்களானால், ஜவுளிக் கடையிலும் நகைக் கடையிலும் சேலை விளம்பரத்திற்காக அவ்வப்போது வெவ்வேறு சேலை உடுத்தி வெவ்வேறு நகை மாட்டி வெளியே நிறுத்தி வைக்கும் வெறும் பொம்மைகள் போலத்தான் நீங்கள் ஆக வேண்டும்.
ஆகவே, அவ்விருப்பங்களை விட்டு, கல்வி அறிவில் விருப்பம் கொள்ளுங்கள். வீரத் தாய்மார்களாக ஆக விருப்பப்படுங்கள்! நீங்கள் மாறினால் உங்கள் கணவன்மார்களும் மற்ற ஆண்களும் மாற்றம் அடைவது வெகு சுலபம். ஆண்கள் உங்களைத்தான் பிறபோக்காளிகள் என்று உங்கள்மீது பழிசுமத்தி வருகிறார்கள்.அப்படிச் சொல்லுக்கு ஆளாகாதீர்கள். எதிர்காலத்தில் இவள் இன்னாருடைய மனைவி என்று அழைக்கப்பட மாட்டாது; இவர் இன்னாருடைய புருஷர் என்ற அழைக்கப்பட வேண்டும். அந்த நிலைக்கு உங்களைக் கொண்டுவர அனுதினமும் பாடுபட்டு வரும் திராவிடர் கழகத்தை நீங்கள் அனைவரும் ஆதரித்து வர வேண்டும்.
---------------- தந்தைபெரியார் அவர்கள் தூத்துக்குடி 8,9,5.1948-ல் சொற்பொழிவு -குடிஅரசு 5.6.1948
Labels:
பெரியார்
Subscribe to:
Post Comments (Atom)
1 comments:
அற்புதமான உரை, பல தலைமுறைகளை மாற்றும் ஒரு தலைவன் இப்படித்தான் பேசுவான், ஆனால் ஒரு சிறு தகவல் பிழை (அல்லது எனது புரிதலின் பிழையாகவும் இருக்கலாம்)
"பார்ப்பன பெண்களை கற்பழித்ததுண்டா?" என்று கேட்கிறார் , ராமாயணத்தில் அகலிகை ஒரு பார்ப்பன பெண்ணே, மேலும் அனுசுயா என்ற 'கற்புக்கரசியும்' பார்ப்பன பெண்ணே.
Post a Comment