Search This Blog
2.7.09
யாரைப் பார்த்தாலும் புலிகள் தான்...!
இலங்கைக்கு எம்பிக்கள் குழுவை அனுப்புக
மத்திய அரசுக்கு தமிழர் தலைவர் எச்சரிக்கை
மத்திய அரசு உடனடியாக தமிழக எம்.பி. குழுக்களை இலங்கைக்கு அனுப்பி இலங்கையில் தமிழர்களின் நிலையைக் கண்டறிய வேண்டும். இல்லையென்றால் அதற்குரிய விலையை கொடுக்க வேண்டியிருக்கும் என்று மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்து தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.
திருச்சியில் 23.6.2009 அன்று ஈழத்தமிழர் வாழ்வுரிமை மீட்பு இயக்கத்தின் சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரை வருமாறு:
ராஜபக்சேவே அதை ஒப்புக்கொண்டிருக்கிறான். என்ன அடையாளம்? தமிழர்களை வெளியே விடமாட்டோம் என்று சொன்னால் என்ன அர்த்தம்? பிரபாகரன் அங்கே வாழ்கிறார். ஆகவே நாளைக்கு என்ன வேண்டுமானாலும் வரும்? என்று அவர்கள் அஞ்சுகிறார்கள்.
யாரைப் பார்த்தாலும் புலிகள் தான்...!
சிலருக்கு கனவிலே பிரபாகரன் வருகிறார். தூக்க மில்லாமல் செய்கிறார். எனவே யாரைப் பார்த்தாலும் சிங்களர்களுக்குப் புலிகளாகத்தான் தெரிவார்கள். ஆகவே சிங்கள இராணுவக்காரன் 80 வயது பெரியவரையும் கிழப்புலியாகவே பார்க்கின்றான். எனவே தாய்மார்களை எல்லாம் பிரித்து வைத்திருக்கிறார்கள். இந்த ஒரு ஆதாரம் போதும். அதற்கு மேலே வேறு எந்த ஆதாரமும் தேவையில்லை.
நாங்கள் சொன்னவுடனே முதலமைச்சர் கலைஞர் அவர்கள் ஒரு கடிதம் எழுதினார். மத்திய அமைச்சரையும், மாநில அமைச்சரையும் அனுப்பி வெளியுறவுத்-துறை அமைச்சரை சந்திக்க வைத்து வணங்காமண் கப்பலை மேற்பார்வையிட்டு, அந்த கப்பலில் உள்ள உணவுப் பொருள்கள் மருந்துப் பொருள்கள். தமிழ் மக்களுக்குப் பயன்பட வேண்டும் என்று கேட்டிருக்கிறார்.
மத்திய அரசு அலட்சியப்படுத்துவதா?
ஆறரை கோடி தமிழர்களின் முதல்வர் ஒரு கோரிக்கை வைத்தால் அதிலும் தமிழர்களைப் பற்றிய கோரிக்கை வைத்தால் நீங்கள் அதை அலட்சியப்படுத்தலாமா?
டெல்லி அலட்சியப்படுத்தலாமா? நாங்கள் இந்தப் பிரச்சினையை வைத்து மிகப்பெரிய கிளர்ச்சியை நடத்துவதற்கு யோசித்துக் கொண்டிருக்கின்றோம் (கைதட்டல்)
டெல்லியினுடைய பதில் வரட்டும். இங்கே இலங்கைத் தூதரகம் இருக்கிறது. அங்கே எங்களுடைய தமிழர்கள் செத்துக்கொண்டிருக்கின்றார்கள்.
காட்டிக்கொடுத்தவனுக் கெல்லாம் பதவி உயர்வு
தமிழனை காட்டிக்கொடுத்தவனுக்கெல்லாம் ராஜபக்சே பதவி உயர்வு கொடுத்துக் கொண்டி-ருக்கின்றான். நடப்பது நடக்கட்டும். ஆனால் இந்த நாட்டு மக்களுடைய பிரதிநிதியாக இருக்கக் கூடிய தமிழர்களின் தலைவர் கேட்கிறார்.
மத்திய அரசு மனித நேயத்தோடு நடந்துகொள்ள வேண்டாமா? இலங்கை மனித உரிமை மீறலுக்காக அய்.நா. மனித உரிமைக் கமிஷனிலே தீர்மானம் கொண்டு வருகின்றார்கள். இந்தியா அதில் கலந்து கொண்டது. இந்தியா இலங்கைக்கு ஆதரவாக செயல்படக்கூடாது என்று தமிழக மக்களின் சார்பிலே முதல்வர் கடிதம் எழுதினாரே, அப்பொழுதும் மத்திய அரசு அலட்சியப்படுத்தியது.
அதற்கு உரிய விலை கொடுக்க வேண்டியிருக்கும். அவர் சளைக்கவில்லை. அது போலவே இன்னொரு கடிதத்தை அனுப்பினார்.
பொது வாழ்க்கையிலே மானம் பார்க்க வேண்டிய அவசியமில்லை. குடிசெய்வார்க் கில்லை பருவம் மடிசெய்து மானங் கருதக் கெடும்
என்ற திருக்குறள் பெரியாருக்குப் பிடித்த திருக்குறள். அந்த அடிப்படையிலே மானத்தைப் பற்றி கவலைப்படவில்லை. தன்னுடைய பெருமையைப் பற்றிக் கூட கவலைப்படவில்லை. இரண்டாவது அமைச்சரையே அனுப்பியிருக்கின்றார்கள்.
எஞ்சியுள்ள தமிழர்களின் வாழ்வுரிமை என்ன?
என்ன பதில்? மனித நேயத்திற்கு சரியான பதில் வேண்டாமா? ஆகவே மிகத் தெளிவாக ஒரு நல்ல சூழலை உருவாக்க வேண்டும்.
போர் முடிவுற்று விடுதலைப் புலிகளை முற்றாக ஒழித்து விட்டோம் என்று சிங்கள அரசு சொல்லுகிறது. அங்கு எஞ்சியுள்ள தமிழர்களின் வாழ்வுரிமை என்ன என்பதை எடுத்துச் சொல்ல வேண்டும்.
ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்தாயிற்று. பிறகு அங்குள்ள தமிழர்கள் வீடுகளுக்குத் திரும்ப வேண்டாமா? தாய், தந்தையர்களை சகோதர, சகோதரிகளைப் பார்க்க வேண்டாமா? யார் மிஞ்சியிருக்கிறார்கள் என்று தெரிய வேண்டாமா? எந்த நாட்டிலே சொந்த நாட்டு மக்கள் மீது குண்டு போட்டிருக்கின்றான்?
தீவிரவாதம் என்ற பெயரைச் சொல்லி தமிழினத்தை அழிக்கின்றான். சொந்த நாட்டு மக்களை அந்த நாட்டிலே சிங்களன் அகதியாக வைத்திருக்கின்றான்.
எந்த நடுநிலையாளர்களையும் பத்திரிகையாளர்களையும், சிங்கள அரசு அனுமதிப்பதில்லை. போர் முடிந்த பிற்பாடு, தமிழர்களுக்கு மறுவாழ்வு தர வேண்டுமென்று பணமெல்லாம் கொடுக்கின்றீர்கள். இந்திய அரசு உதவி செய்தால் காலியாக இருக்கக்கூடிய சிங்கள கஜானாவுக்கு வலிமை ஏற்படுமே தவிர, அது வறுமையிலே இருக்கக் கூடிய தமிழனுக்குப் போய்ச் சேராது.
தொல்.திருமாவளவன், கனிமொழி
ஆகவே என்ன செய்ய வேண்டும்? தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைத்துக் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழு ஒன்று சகோதரர் திருமாவளவனைப் போன்றவர்கள், அது போல கனிமொழியைப் போன்றவர்கள், அது போல அனைத்துக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை மத்திய அரசு அனுப்பவேண்டும்.
அவர்கள் இலங்கையில் தமிழ்ப் பகுதிகளில் உள்ள முகாம்களைப் போய்ப் பார்க்க வேண்டும். சாவின் விளிம்பில் அன்றாடம் செத்துக்கொண்டிருக்கின்ற தமிழர்களையாவது காப்பாற்ற வேண்டும்.
அதுதான் மிக முக்கியமானது.இது வெறும் உணர்ச்சி பூர்வமான கூட்டமல்ல. அறிவு பூர்வமாகவே நாம் சொல்லுகின்றோம். அது மட்டுமல்ல ஏற்கெனவே சுப.வீ அவர்கள் சொன்னார்கள் அல்லவா?
சிறிமாவோ பண்டார நாயகா, சாஸ்திரி ஒப்பந்தத்தின் போது எத்தனை லட்சம் மக்கள் state less அண்ணா அவர்கள் சொன்னபடி vote less. அவர்கள் குடியுரிமை இழந்தவர்களாக, வாக்குரிமை இழந்தவர்களாக இருந்தார்கள் என்று சொல்லும் பொழுது அன்றைக்கும் அந்தத் தமிழர்களைக் காப்பாற்றித் திருப்பி எடுத்த பெருமை நம்முடைய முதல்வர் கலைஞர் அவர்களையே சாரும். இரண்டு லட்சம் தமிழர்களுக்கு குடியுரிமை இல்லை. இவர்கள் இந்தியாவுக்கும் சொந்தமில்லை. இலங்கைக்கும் சொந்தமில்லை. அந்தத் தமிழர்களை எல்லாம் வரவழைத்து நீலகிரியிலே (tan tea) இரண்டு லட்சம் தமிழர்களை குடியமர்த்தி அவர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி அந்தத் தமிழர்கள் இன்னமும் நன்றி உணர்ச்-சியோடு இருக்கக்கூடிய தமிழர்களாக இருக்கின்றார்கள்.
இங்குள்ள அகதிகளை அனுப்பக்கூடாது
அடுத்த படியாக நாம் செய்ய வேண்டியது என்ன? தமிழ்நாட்டிலே அகதிகள் முகாமிலே இருக்கக்கூடிய தமிழர்களுக்கு நல்ல வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். அவர்கள் விரும்புகிற வரையிலே அவர்களை நாம் கட்டாயமாகத் திருப்பி அனுப்பக்கூடாது.
அய்யா நாங்கள் அங்கு போய் இனிமேல் சாவதற்குத் தயாராக இல்லை. எங்களுடைய நாடு பூர்வீகம் தமிழ் மண்தான். எங்களுடைய தாயகம் இதுதான். எனவே நாங்கள் இங்கேயே இருக்-கிறோம் என்று அந்தத் தமிழர்கள் விரும்பினால் பழையவர்களுக்குக் கொடுத்ததைப் போல இங்கே குடியுரிமை கொடுக்க வேண்டும் என்பதை நாம் வலியுறுத்த வேண்டும்.
எனவே எஞ்சியிருக்கின்ற தமிழினமாவது காப்பாற்றப்பட்டாக வேண்டும். அவர்களுக்கு வாழ்வுரிமை மீண்டும் வரவேண்டும்.
ஆயுதப்பயிற்சி கொடுக்கச் செய்தவர் இந்திராகாந்தி
இந்திராகாந்தி தெளிவு உள்ள ஒரு ராஜதந்திரியாக அவர் திகழ்ந்தார். அவர்கள் தான் ஆயுதங்களைக் கொடுத்து இந்த இளைஞர்களுக்கு ஆயுதப் பயிற்சி வழங்கினார்.
ஈழத்தமிழர் இளைஞர்களுக்கு ஆயுதப் பயிற்சிக் கொடுத்தது யார்? இந்திய அரசு. இந்திராகாந்தி ஆயுதப் பயிற்சி கொடுத்தார். எதற்காக? அவர் ஒன்றும் புரியாமல் கொடுக்க-வில்லை. அமெரிக்க ஏகாதிபத்தியம் டிக்கோ கார்ஷியா போன்ற பகுதிகளுக்கு, திரிகோணமலை துறை முகத்திற்குப் பக்கத்திலே இராணுவ தளம் அமைக்க வந்த நேரத்தில் அமெரிக்கா அங்கே இராணுவதளத்தை அமைத்து விட்டால் அதன் மூலம் இந்தியாவினுடைய பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிடும் என்று அவர்கள் நினைத்த காரணத்தால் மிகவும் ராஜதந்திரத்தோடு, தெளிந்த அரசியல் அணுகுமுறையோடு, செய்தார்.
அதற்கு சரியான அணை போடுவது என்ன வழி என்றால் தமிழர்கள் எப்பொழுதும் நமக்கு சாதகமாக இருப்பார்கள் என்ற உணர்வோடு அந்த இளைஞர்களுக்கு ஆயுதப் பயிற்சியை வழங்கச் செய்தார்.
அது மட்டுமல்ல இலங்கையிலே இனப்படுகொலை நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
தமிழனின் மாமிசம் கிடைக்கும்
தமிழனின் மாமிசம் இங்கே கிடைக்கும் என்று இலங்கையிலே தமிழனின் உடலை வெட்டி கசாப்புக்கடையிலே தொங்க விட்டிருந்தான். அப்பொழுது எல்லோரும் துடித்தார்கள். அந்த நேரத்திலே ஒரு தமிழனை ஜி.பார்த்தசாரதி என்பவரை இலங்கைக்கு அனுப்பினார்கள். தனியே ஒரு முறை அனுப்பினார். அன்றைய வெளியுறவுத்துறை அமைச்சர் நரசிம்மராவுடன் சேர்ந்து இன்னொரு முறை அனுப்பினார் இந்திரா காந்தி.
பார்த்தசாரதி வந்ததை இலங்கை அரசாங்கத்தினர் விரும்பவில்லை. ஏனென்றால் இலங்கையில் நடந்ததை கடுமையாகச் சுட்டிக்காட்டி கண்டித்தார். இந்தக் கூட்டத்தின் வாயிலாகச் சொல்லுகின்றேன். ஈழத்தமிழர்களுடைய வாழ்வுரிமை மீட்கப்படுமானால் முதலில் இந்தப் பிரச்சினையைப் பற்றி பேசக்கூடியவன். தமிழ் தெரிந்த அதிகாரியாக அனுப்பப்பட வேண்டும்.
தமிழர் அதிகாரிகள் அங்கு போக வேண்டும். அது போல இலங்கையிலே யார் தூதுவராக இருந்தால் பயனளிக்கும் என்பதைப் பார்க்க வேண்டும்.
டாக்டர் சுப்பராயன் அவர்கள் சென்றார். இந்த தொகுதியில் ரங்கராஜன் குமாரமங்கலம் இருந்தாரே அவருடைய தாத்தா. ஜஸ்டிஸ் கட்சியின் ஆதரவிலே அவர்கள் முதலமைச்சராக இருந்த பொழுதுதான் கம்யூனல் ஜீ.ஓ. முத்தையா முதலியார் அவர்களாலே கொண்டுவரப்பட்டது.
அந்த டாக்டர் சுப்பராயன் அவர்கள் மோகன் குமாரமங்கலத்தினுடைய தந்தையார் அவர்கள் காங்கிரசிலே இருந்தபொழுது அவர்தான் ஒருமுறை இலங்கைத் தூதுவராக தமிழர் இருந்திருக்கிறார் என்ற வரலாறு உண்டு. அதற்குப் பிறகு தமிழர்களே செல்லவில்லை.
தமிழர்கள் தான் தூதுவராக இருக்க வேண்டும்
எனவே இலங்கை மட்டுமல்ல, அது மலேசியாவாக இருக்கட்டும், அல்லது வேறு நாடாக இருக்கட்டும் எங்கெல்லாம் தமிழர்கள் அதிகம் வாழுகிறார்களோ, அங்கெல்லாம் தமிழர்களைத் தூதுவர்களாக நியமிக்க வேண்டும் என்பதை நாம் வலியுறுத்த வேண்டும். அதன் மூலம் தான் தமிழன் நியாயத்தோடு அணுகக் கூடிய வாய்ப்பு ஏற்படும்.
எனவே ஈழத்தமிழர் வாழ்வுரிமைப் பாதுகாப்பு என்பது வெறும் உணர்ச்சி பூர்வமான கூட்டமாக இதை நடத்துவது மட்டுமல்ல. அதற்கு அடுத்த படியாக எதைச் செய்து பாதுகாப்பது? இந்த நேரத்தில்தான் இளைஞர்கள்! தமிழர்கள்! இரண்டைத் தெளிவாக மனதிலே வைத்துக்-கொள்ளுங்கள்.
முதலில் நம்மிடம் போர் நிறுத்தம் வரட்டும்
ஒன்று, கலைஞர் ஆட்சியின் மூலமாகத்தான் நாம் எதையும் சாதிக்க முடியுமே தவிர, கலைஞரை ஆட்சியில் இருந்து கீழே வாருங்கள் என்று சொல்லிவிட்டால் வெறும் பொதுக்கூட்ட மேடையாகத்தான் இருக்க முடியுமே தவிர, அதற்குப் பயன்பட முடியாது.
எனவே இதை விமர்சிப்பவர்களுக்கு உள்நோக்கம் உண்டு. எங்களுக்கு எப்பொழுதும் பொது நோக்கம் தான் உண்டு. இன நலம் நோக்கம் தான் உண்டு.
இரண்டாவது நமக்குள்ளே பேதமிருக்கக் கூடாது. அங்கே போர் நிறுத்தம் தேவை. போர் நிறுத்தம் தேவை என்றெல்லாம் சொல்லிக்கொண்டிருந்தோமே அந்த போர் நிறுத்தம் முதலில் தமிழ்நாட்டுத் தலைவர்களுக்கு வரட்டும்.
பொதுப் பிரச்சினைகளிலே அரசியலைக் கொண்டு வந்து நுழைக்காதீர்கள்.
ஏன் கர்நாடகத்துக்-காரன் ஒற்றுமையாக இருந்து நமத்குத் தண்ணீர் தர மறுக்கின்றான்? ஏன் கர்நாடகத்திலே இத்தனை ஆண்டு காலமாக கட்டிவைக்கப்பட்ட திருவள்ளுவர் சிலையைத் திறக்க முடியவில்லை? நமக்கு வெட்கமாக இல்லையா? அந்த முதலமைச்சர் இங்கே வந்து சனீஸ்வர பகவானையும் தரிசித்துவிட்டுப் போகிறார்.
பெங்களூர் திருவள்ளுவர் சிலை நிலை
தில்லை நடராஜனைப் பார்க்கிறார். தில்லை நடராஜனைப் பார்ப்பதை விட திருமாவளவனைப் பார்த்திருந்தால் எவ்வளவோ பயனுள்ளதாக இருந்திருக்கும். இவரும் சிதம்பரத்தினுடைய பிரதிநிதிதான் (கைதட்டல்).
ஆனால் அப்படிப்பட்ட ஒரு நிலையிலே, கர்நாடகத்திலே திருவள்ளுவர் சிலையைக் கட்டி வைத்திருக்கின்றார்கள்.
இன்னும் கேட்டால் சர்வேஸ்வரர் சிலையைக் கூட நாங்கள் வைக்கின்றோம் என்று நமது முதல்வர் ஒரு தீர்ப்பு சொன்னபிற்பாடு கூட இன்னமும் கர்நாடகத்திலே வைக்கப்பட்ட வள்ளுவர் சிலையைத் திறக்க முடியவில்லை. அது மட்டுமல்ல.
ப.சிதம்பரம் முன்பு கலைஞர் சொன்னார்.
டெல்லியிலே நடைபெற்ற தமிழ்ச்சங்க நிகழ்ச்சியிலே நம்முடைய முதல்வர் கலைஞர் அவர்கள் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தை வைத்துக்கொண்டு பேசினார்கள். எதற்காக இதைச் சொல்கிறோம் என்றால் இதற்கு என்ன காரணம்?
பாலாற்றில் அணை கட்டுகிறேன் என்று பக்கத்து மாநிலத்துக்காரன் தைரியமாக வருகிறான் இதற்கு என்ன காரணம்? முல்லை பெரியாறு அணையின் உயரத்தை உயர்த்தக் கூடாது. என்று சொல்லுகின்றான் இதற்கு என்ன காரணம்? தமிழர்கள் பொதுப்பிரச்சினையிலே அனைவரும் ஒன்று சேர்ந்து நிற்காதது தான் இதற்குக் காரணம். எங்கும் அரசியல் எதிலும் அரசியல் பார்வை என்றிருக்கின்ற அந்த அணுகுமுறை தமிழர்களிடையே, தமிழ் நாட்டுத் தலைவர்களிடையே முற்றிலும் மாற வேண்டும்.
ஒன்றுபட்டு வாருங்கள்
மற்ற தேர்தல் நேரத்திலே எதிரெதிர் அணியிலே இருக்கலாம். ஆனால் பொதுப் பிரச்சினை என்று வரும்பொழுது தமிழ்நாட்டின் நலனைப் பார்க்க வேண்டாமா? காவிரிப் பிரச்சினையா? முல்லை பெரியாறு அணைப் பிரச்சினையா? அது போல பாலாற்றின் குறுக்கே அணைகட்டும் பிரச்சினையா? பெங்களூரிலே திருவள்ளுவர் சிலை திறக்கக் கூடிய பிரச்சினையா? அது போல ஈழத்தமிழர்களுடைய பிரச்சினையா? உலகத் தமிழர்களுடைய வாழ்வுரிமைப் பிரச்சினையா?
இது போல எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் தயவு செய்து தமிழ்நாட்டுத் தலைவர்களே, நீங்கள் தனித்தனியே அணி பிரிந்து நிற்காதீர்கள்; ஓரணியிலே நில்லுங்கள்.
கலைஞரைத் தமிழ் நாட்டு முதல்வராகப் பாருங்கள். கலைஞரைப் போல ஒரு மூத்த ஞானி நமக்குக் கிடைக்க மாட்டார் எளிதில். அதை நன்றாக நினைவிலே வைத்துக்கொள்ளுங்கள்.
கலைஞர் நம்மினத்தைச் சார்ந்தவர்
அவருடைய இரத்தம் கொதிக்கும். அவருடைய மனம் துடிக்கும். காரணம் அவரின் மனமும், நம் இனமும் ஒன்று (கைதட்டல்). எனவே அதை மறந்து விடாதீர்கள்.
இந்த இனம் இல்லாதவர்கள் மனமில்லாதவர்களாகத் தான் இருப்பார்கள். மனம் உள்ளவர்கள் போல பேசினால் அரிதாரம் பூசியவர் பேசுகின்ற வசனம் போல் இருக்கும். வேடம் முடிந்தவுடனே அவர்கள் அரிதாரத்தைக் கலைத்துவிடுவார்கள். இப்பொழுது கலைத்து விட்டு கொட நாட்டிற்கு மலையேறி விட்டார்.
ஆகவே தான் சொல்கிறோம், ஏமாந்து விடாதீர்கள் என்று. ஏமாறுகிறவர்கள் இருக்கிற வரையிலே ஏமாற்றுகின்றவர்கள் இருப்பார்கள்.
நமக்கு எதிரி ராஜபக்சே
தமிழ்நாட்டுத தலைவர்களே! எனதருமைச் சகோதரர்களே! என்றைக்கிருந்தாலும் நாம் கடைசியிலே ஒரு மேடையில் நிற்க வேண்டியவர்கள். காரணம், கருமத்துக்குரியவர்கள்தான் நாம் கடைசிவரையிலே நிற்போம். எனவே தான் அருள் கூர்ந்து இனத்தைப் பிளவு படுத்தாதீர்கள்.
இந்த இனத்திற்கு எதிரி யார்? நண்பர் யார் என்று சொல்லும் பொழுது உண்மையான எதிரி சிங்கள ராஜபக்சேதான்.
கட்டுவோம்
ஈழத்தமிழர்களுக்கு வாழ்வுரிமை அளிக்கக் கூடாது என்று சொல்பவர்கள் அல்லது ஊடகமாக இருந்தாலும் அவர்கள் தான் தமிழினத்திற்கு எதிரிகள். அதே போல அது உளவுத் துறையாக இருந்தாலும், அல்லது வேறு ஆட்சித் துறையிலே இருந்தாலும் அவர்கள் யார் என்று காட்டி எல்லோரும் ஓர் குரல், எல்லோரும் ஓர் நிறை, எல்லோரும் ஓர் அணி என்று காட்டுங்கள். பிறகு தமிழர்கள் வெற்றிபெறுகிறார்களா இல்லையா? என்பதை ஓராண்டு காலத்தில் காட்டுவோம்.
அந்த இயக்கத்தைக் கட்டுவோம் என்று கூறி முடித்துக்கொள்கின்றேன்.
இவ்வாறு தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.
--------------"விடுதலை" 2-7-2009
Labels:
வீரமணி
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
But Karunanithy is siding with Rajabaksey. He asked Eelam Tamils to forget your Eelam Dream. Eelam is not possible.You are wrong Karunanithy is for his family well being.He is not a world leader for Tamils. He lost that very long ago. Do not ask us to support selfish brute Karunanithy
மானமிகு ஆசிரியர் அவர்களே, எண்ணிலடங்கா மனித உயிர்கள் இந்தியா கொடுத்த ஆயுதத்தாலும், பயிற்சியாலும்,படை கொடுத்து உதவியதாலும் தான் ஏற்பட்டது. அதற்கு கலைஞ்சர் உதவினார் என்பது என்பது சிறு பிள்ளைகளும் அறியும்.தாங்களும்,பேரா.சுப.வீ யும், திருமாவும் இப்படி வலிந்து வலிந்து முட்டு கொடுப்பது வேதனையாக இருக்கிறது. திராவிடர் கழகம் தாய் அமைப்பு என்கிற தகுதியை இழந்து விட்டதோ? என்கிற எண்ணம் மேலிடுகிறது. நடக்கிற செயல்களை அனைத்தும் ராஜபக்சே வை காப்பற்றி விடுகிற முயற்சியாகவே படுகிறது.
//பொற்கோ said...
மானமிகு ஆசிரியர் அவர்களே, எண்ணிலடங்கா மனித உயிர்கள் இந்தியா கொடுத்த ஆயுதத்தாலும், பயிற்சியாலும்,படை கொடுத்து உதவியதாலும் தான் ஏற்பட்டது. அதற்கு கலைஞ்சர் உதவினார் என்பது என்பது சிறு பிள்ளைகளும் அறியும்.தாங்களும்,பேரா.சுப.வீ யும், திருமாவும் இப்படி வலிந்து வலிந்து முட்டு கொடுப்பது வேதனையாக இருக்கிறது. திராவிடர் கழகம் தாய் அமைப்பு என்கிற தகுதியை இழந்து விட்டதோ? என்கிற எண்ணம் மேலிடுகிறது. நடக்கிற செயல்களை அனைத்தும் ராஜபக்சே வை காப்பற்றி விடுகிற முயற்சியாகவே படுகிறது.
July 3, 2009 5:20 AM //
ஒரு நாட்டுக்கு இன்னொரு நாடு ஆயுத உதவியை செய்ததால் தான் தமிழர்கள் உயிர்கள் பலியாயின..என்பது உண்மையாக இருப்பினும்....அதை அந்த அரசாங்கத்தில் பங்குபெற்றிருந்த தமிழர் அமைப்புகள் தடுக்காமல் விட்டது ஏன்? அங்குள்ள ஆட்சிக்கு ஒட்டளித்த தமிழர்கள் தடுக்காமல் விட்டது ஏன்?
ஆட்சி அதிகாரத்திலேயே தமிழர் அமைப்புகள் இடம் பெற்றிருக்கும் பொழுது...இன்னொரு நாட்டில் வந்து அதுவும் ஒரு மாநிலத்தில் உள்ள அராசங்கத்தை எப்படி குற்றம் சொல்ல முடிகிறது?
அப்படி என்றால் இந்த குரல்கள் எந்த இயக்கத்தின் சார்பாக வைக்கப்படுகின்றன. இந்த குரல்களையெல்லாம் ஒட்டுமொத்த இலங்கைத் தமிழ் மக்களின் குரல்களாக இங்குள்ள தமிழ் மக்கள் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?
ஒட்டு மொத்த குரல்கள் என்றிருந்தால், ஆட்சியை புறக்கணிக்காமல் நீடித்திருப்பதின் மர்மம் என்ன?
அப்ப, அங்குள்ள மற்ற தமிழ் இயக்கங்களுக்கே இது பிடிக்கவில்லை...தமிழர்களுக்கு எதிரான அமைப்புகள் தான் அங்கு இருந்தன, என்பது தானே உண்மை. அந்த ஒற்றுமையின்மை தானே இவ்வளவுக்கும் காரணம்.
இதற்கு முன் இயக்கங்கள் இதே நாட்டில் தான் ஒற்றுமையுடன் ஆயதப் பயிற்சி பெற்றன...ஆனால் அதே இயக்கங்கள் ஒன்றொடு ஒன்று முட்டி மோதிக்கொண்டு சகோதர யுத்தத்தினால், ஓரேயொரு இயக்கத்தினரின் 984 தமிழ் போராளிகள், மற்றும் தலைவர்கள் உயிர்கள் நிராயுதபாணிகளாக இருந்தபொழுதே இன்னொரு இயக்கத்தினரால் பலியாயினவே! அது எதனால்....? அவர்கள் குடும்ங்கள் இதையெல்லாம் வாழ்த்தியிருக்குமா?
இந்த படுகொலைகள் யார்? சொல்லி நடந்தேறின. இதற்குப் பெயர் தான் ஈழப் போராட்டமா?
அந்த பலிகள் மக்களின் ஆதரவுடன் நடத்தப்பட்டதாக இருந்தால், மக்கள் பேரெழுச்சி பெற்றிருக்க வேண்டுமே? ஏன்? அங்கே மக்கள் பேரெழுச்சி கொள்ளவில்லை. தேர்தலை முற்றிலும் புறக்கணிக்கவில்லை.
மாறாக மக்கள் தடுத்தும் அந்த பலிகள் நிறைவேற்றப்பட்டனவே...(எல்லாம் தேசிய ஆவணச் சுவடிகள் இணையதளத்தில் ஆதாரங்களுடன் வைக்கப்பட்டுள்ளன. )
அந்த 984 தமிழ் உயிர்களின் தமிழ் குடும்பங்கள் வாழ்த்துமா?
தமிழர்கள் பலிகள் பற்றி கவலைப்படுவர்கள் பாரபட்சமாக கவலைப்படுவது ஏன்? ஒட்டுமொத்தமாகத்தானே கவலைப்பட்டிருக்க வேண்டும்.
நான் யாரை வேண்டுமென்றாலும் போட்டுத்தள்ளுவேன், யாரும் கேள்வி கேட்க கூடாது. எனக்கு பிடிக்காத தமிழர்களை எல்லாம் டப் டிப் என்று போட்டுத் தள்ளுவேன். தலைவர்களை ஒரே போடாக போடுவேன்.
மற்றவர்கள் போட்டுத்தள்ளினால் மட்டும் தான் உயிர்ப்பலி என்று கூக்குரலிடுவேன். அது மட்டுமே தமிழர் படுகொலையாக கணக்கில் எடுத்து கொள்ளவேண்டும். இது என்ன முரண்பாடு.
சரி இதெல்லாம் எங்கள் (இலங்கை....) விருப்பம் என்றால் ஏன்? இங்கிருப்பவர்களை (மக்களை) துணைக்கு அழைக்கவேண்டும்.
அங்கேயே மக்கள் ஆதரவுடன் செய்திருக்கலாமே...ஆதரவு இல்லை என்பது தானே நிதர்சனம். அங்கேயே ஆதரவு இல்லாத பொழுது இங்கு உள்ள மக்களை எதற்கு தொந்தரவு செய்கிறீர்கள்?
இங்குள்ள மக்கள் திட்டங்களை எல்லாம் குறை சொல்லிகிறீர்களே!...உங்களுக்கும் இங்கு வாழ்கின்றவர்கள் பிரச்சினைக்கும் என்ன சம்பந்தம்? சம்பந்தம் இல்லை என்பது போல் தானே செயல்பாடுகள் அனைத்தும் உள்ளன. உங்களுடைய எதிர் குற்றசாட்டுகள் அனைத்தும் இந்த அடிப்படையிலேயே உள்ளன.
நீங்கள் எக்கேடு கெட்டுப் போங்கள்? எங்களை மட்டும் கவனி! அதுவும் அங்குள்ள மக்கள் ஆதரவு அளிக்கவில்லை என்றாலும் பரவாயில்லை....
இங்கு வாழ்பவர்கள் அதிகமா? இந்த கூக்குரல்கள் அதிகமா?
இங்குள்ளவர்கள் அங்குள்ளவர்களை தொந்தரவு செய்கிறார்களா? இல்லையே....!
குற்றசாட்டுகளை வைப்பதற்கு முன் இங்கு சென்று பார்த்துவிட்டு வைக்கவும்....
தமிழ் தேசிய ஆவணச் சுவடி...ஆல்பிரட் முதல் முதல் காமினி வரை
Post a Comment