Search This Blog
31.7.09
ஜாதி மாறி, மதம் மாறி திருமணம் செய்பவர்களைக் கொலை செய்யும் கொடுமை
உ.பி. கொடூரம்!
உத்தரப்பிரதேசம் மீரட் அருகில் உள்ள ஒரு கிராமத்தில் இளைஞர் ஒருவரும், முசுலிம் பெண்ணும் காதலித்தனர் என்பதற்காகக் கொல்லப்பட்டுள்ளனர். குடும்பத்தின் கவுரவத்தைக் காப்பாற்றுவதற்காகக் கொன்றதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து நாடாளுமன்றத்தில் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் அவர்கள் கூறியதாவது:
இதுபோன்று பெண்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் வன்கொடுமைகளை நமக்கு நாமே ஏற்படுத்திக் கொள்ளும் அவமானமாகவே கருதவேண்டும்.
குடும்பக் கவுரவத்தை காப்பாற்றுவதற்காக பெண்கள் கொல்லப்படுவதை அடையாளம் காணுவதோ, அவற்றை வகைப்படுத்துவதோ கடினமான செயல். இந்தக் குற்றத்தைத் தடுப்பதற்கு தனிப்பட்ட சட்டம் ஏதும் இல்லை. இந்தியத் தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின்மூலம்தான் இதுபோன்ற குற்றங்களை அணுகுகிறோம்.
எனினும், குடும்பக் கவுரவத்தைக் காப்பாற்றுகிறோம் என்ற பெயரில் பெண்களுக்கு எதிராக வன்கொடுமை அதிகரித்துவரும் விஷயத்தில் மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
உத்தரப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் கல்வியறிவும், விழிப்புணர்வும் மிகவும் பின்தங்கி உள்ளன. மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தக் கூடிய அமைப்புகளும் அங்குக் கிடையாது. கான்ஷிராம் அவர்கள் ஒரு முயற்சியை மேற்கொண்டார். தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் போன்ற சமூக சீர்திருத்தவாதிகளின் கருத்துகளைப் பரப்பவேண்டும் என்று எண்ணினார்.
உத்தரப்பிரதேசத்தின் தலைநகரான லக்னோவில் அரசு சார்பாகவே மூன்று நாள்கள் பெரியார் மேளாவை நடத்தச் செய்தார் (1995). அப்பொழுதும் முதலமைச்சர் செல்வி மாயாவதிதான்.
கான்ஷிராம் அவர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில், அவர் எண்ணியது நிறைவேற்றப்படாத நிலைதான் ஏற்பட்டது. அவரது மரணத்திற்குப் பிறகு, எந்த நோக்கத்துக்காக பகுஜன் சமாஜ் கட்சி தோற்றுவிக்கப்பட்டதோ, அந்த நோக்கத்தையும் குழிதோண்டிப் புதைத்து பச்சைப் பதவிப் பித்துக்காக சித்தாந்தங்களைப் பலி கொடுத்துவிட்டார் மயாவதி. அந்த வகையில் சாதாரண அரசியல்வாதி என்று தனக்குத்தானே நிரூபணம் செய்துகொண்டு விட்டார்.
பெருமக்கள் பட்டியலிலிருந்து தந்தை பெரியார் அவர்களையே நீக்கி விட்டார் என்றால், இதற்குமேல் எதைச் சொல்லவேண்டும்?
சரியான சட்டங்கள் இல்லை என்று உள்துறை அமைச்சர் குறைபட்டுக் கொண்டார். தவறு நடக்கிறது என்று தெரிந்த நிலையில், அதனைக் களைய எந்த வகையில் சட்டம் இயற்றலாம், நிருவாகத்தை நடத்தலாம் என்று தீர்மானிப்பதுதான் உள்துறை அமைச்சரின் கடமையாகும். அதிகாரம் இல்லாத மற்றவர்களோடு சேர்ந்துகொண்டு அவரும் ஒப்பாரி வைப்பதில் அர்த்தமில்லை.
இந்தியத் தண்டனைச் சட்டத்தைக் கொண்டே குற்றவாளிகளைத் தண்டிக்கலாம் என்றால், அதனைக் கறாராகக் கடைபிடிக்கவேண்டியதுதானே!
உத்தரப்பிரதேசத்தைப் பொறுத்தவரை இப்பொழுது ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் பகுஜன் சமாஜ் கட்சியும் சரி, முன் ஆட்சிப் பொறுப்பில் இருந்துவரும் பாரதீய ஜனதா கட்சியும் சரி பிற்போக்குத்தனமான சிந்தனை உடையவைகளே!
முலாயம்சிங்கின் சமாஜ்வாடி கட்சிக்கும் சரி, காங்கிரசு கட்சிக்கும் சரி, சமுதாயச் சழக்குகளைச் சரி செய்வதில் சரியான பார்வை அங்கு ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. சனாதனவாதம் பேசும் பார்ப்பனர்கள் உ.பி.யில் கணிசமான எண்ணிக்கையில் இருக்கின்றனர்.
அண்மையில் சூதாட்டம் ஒன்றில் தன் மனைவியை வைத்துப் பகடையாடினான் என்ற ஒரு செய்தி கூட இதே உத்தரப்பிரதேசத்திலிருந்துதான் வெளிவந்தது.
சாமியார்களும், மவுடீகவாதிகளும் பெரும் எண்ணிக்கையில் நடமாடும் பூமி அது. ராமர் ஜென்மபூமி என்று சொல்லப்படுவதும், கும்பமேளா நடை-பெறுவதும் எல்லாம் கூட அங்குதான்.
கல்வி வளத்தைப் பெருக்கி, பாடத் திட்டத்தின்மூலம் சீர்திருத்த எண்ணங்களைப் புகட்டி புதிய தலைமுறையை வளர்த்தெடுக்கும் பொறுப்பு அங்கு தேவைப்படுகிறது.
சூத்ரா போன்ற அமைப்பு அங்கு அண்மையில் தோன்றியுள்ளது. தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் கருத்துகளைத் தாங்கியவர்கள் அவர்கள். அவர்களின் பணிகள் மேலோங்கவேண்டும். படித்தவர்கள் கல்லூரிப் பேராசிரியர்கள், எழுத்தாளர்கள், ஊடகத் துறையைச் சேர்ந்தவர்கள் அமைப்பினை உருவாக்கி ஜாதி, தீண்டாமை, பெண்ணடிமைக்கு எதிரான எண்ணங்களை மேலோங்கச் செய்யவேண்டும்.
நடைமுறை குற்றவியல் சட்டங்களையும் சரியாகப் பயன்படுத்தி குற்றவாளிகள் கடுமையாகத் தண்டிக்கப்படவேண்டும். அப்பொழுதுதான் ஜாதி மாறி, மதம் மாறி திருமணம் செய்பவர்களைக் கொலை செய்யும் கொடுமைக்கு ஒரு முடிவு ஏற்பட முடியும்.
-----------------------"விடுதலை"தலையங்கம் -307-2009
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
கொன்றகளை கொல்ல கூடாது
அவர்களை திருத்தி தாம் செய்தது தவறு
என்று உணர வைக்க வேண்டும்
தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
Post a Comment