Search This Blog

31.7.09

பெரியார் பிறந்திருக்காவிட்டால் ....?


பெரியார் பிறந்திருக்காவிட்டால் நாம் படித்திருக்க முடியுமா? அல்லது பதவிக்குத்தான் சென்றிருக்க முடியுமா?

கண்ணுகுடி மேற்கு பொதுக்கூட்டத்தில் தமிழர் தலைவர் பேச்சு


பெரியார் பிறந்திருக்காவிட்டால் நாம் படித்திருக்க முடியுமா? அல்லது பதவிக்குத்தான் போயிருக்க முடியுமா? என்று திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் கேள்வி எழுப்பி பதிலளித்தார்.

உரத்தநாடு வட்டம் கண்ணுகுடி மேற்கில் 18.7.2009அன்று நடைபெற்ற தந்தை பெரியார் சிலை திறப்பு விழாவில் திராவிடர் கழக தலைவர், தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரை வருமாறு:

பெரியாருக்கு எடுத்த நன்றித் திருவிழா

நம்முடைய செயலவைத் தலைவர் குறிப்பிட்டதைப் போல இந்த விழா அறிவு ஆசான் தலைவர் தந்தை பெரியார் அவர்களுக்கு இந்த கண்ணுகுடி மேற்கில் சிலை எடுத்த விழா இருக்கிறதே அது இவ்வூர் மக்கள் கட்சிக் கண்ணோட்டம், ஜாதி, மதக்கண்ணோட்டம் எத்தகைய பண்பு நெறியினுடைய உச்சத்திற்குச் சென்று, நன்றி காட்டக் கூடிய அளவிற்குத் தந்தை பெரியாருக்கு ஒரு நன்றித் திருவிழாவாக இந்தத் திருவிழாவை அமைத்திருக்கிறார்கள் என்று நினைக்கின்ற நேரத்திலே நான் மிகுந்த மகிழ்ச்சியும், பெருமையும் அவடைவதோடு அவர்களைப் பாராட்டவும் செய்கிறேன்.

இதிலே கலந்துகொள்வதிலே எங்களுக்கெல்லாம் மகிழ்ச்சி, எனக்கு மகிழ்ச்சி, மனிதநேயருக்கு மகிழ்ச்சி, காந்தி அவர்களுக்கு மகிழ்ச்சி, செயலவைத் தலைவர் அவர்களுக்கு மகிழ்ச்சி, பதிவாளர் அவர்களுக்கு இப்படி எல்லோருக்கும் மகிழ்ச்சி இருந்தாலும் என்னைப் பொறுத்தவரையிலே, நான் அதிகமான அளவிற்கு இந்த நிகழ்விலே மகிழ்ச்சி அடையக்கூடிய ஒன்று, ஒரு பேறு என்று கருதக்கூடிய ஒன்று.

ஜாதி ஒழிப்பிற்காக 48 பேர் மறைந்தார்கள் ஜாதி ஒழிப்புப் போரிலே இந்த பகுதியிலே 48 தியாக சீலர்கள் மறைந்தும் மறையாமல் நம் நெஞ்சங்களிலே இன்றைக்கும் அவர்கள் நிறைந்திருக்கக் கூடியவர்களாக இருக்கக் கூடியவர்கள்.

48 பேர் இன்றைக்கு இல்லை என்றாலும் அவர்களுடைய பிரதிநிதிகளைப் போல, இரண்டு போராட்ட வீரர்கள், அன்றைக்கு இளைஞர்களாக இருந்தவர்கள் இன்றைக்கு முதியவர்களாக இருந்து இங்கே வந்து அவர்களுக்கு நான் சிறப்புச் செய்தது அது எனக்குக் கிடைத்த பேறு என்று நினைத்து அதைத்தான் நான் மிகப்பெரிய பெருமையாகக் கருதுகிறேன்.

அவர்கள் செய்த தியாகம் தான்

ஏனென்றால், அவர்களுடைய தியாகம்தான் எங்களை எல்லாம் இந்த மேடையிலே நிறுத்தியிருக்கிறது. அவர்கள் எதையும் கருதவில்லை. அவர்கள் மனு போடவில்லை. அவர்கள் புகழுக்கோ, பதவிக்கோ அல்லது வேறு எந்த ஒரு வாய்ப்புக்கோ நினைக்காமல் பல சங்கடங்களை அனுபவித்தவர்கள்.

பட்டுக்கோட்டை இராமசாமி மணல் மேடு வெள்ளைச்சாமி

அதிலும் இங்கிருந்து சென்றவர்கள் எல்லாம் திருச்சி சிறையிலே அன்றைக்கு அவதிப்பட்ட நிலை இன்றைக்கும் நினைவிலே நிற்கிறது. பட்டுக்கோட்டை ராமசாமி, மணல்மேடு வெள்ளைச்சாமி இவர்களைப் போன்றவர்கள், மூவாயிரம் பேருக்கு மேலாக அரசியல் சட்டத்தை எரித்து ஜாதி ஒழிப்பு போராட்டத்திற்கு அவர்கள் சென்றிருக்கின்றார்கள்.

ஆனால், இன்றைக்கு எதை நினைத்து அவர்கள் மகிழ வேண்டும் என்று சொன்னால், எந்த லட்சியத்திற்காக தந்தை பெரியார் அவர்களுடைய ஆணையை ஏற்று எதையும் கருதாது அவர்கள் சிறைக்குச்சென்றார்களோ, அந்தப் பெரியாரின் லட்சியம் நம்முடைய முதல்வர் கலைஞர் அவர்களுடைய அய்ந்தாவது முறையின் பொற்கால ஆட்சியிலே, முழுமையாக நிறைவேற்றப்பட்டது. ஜாதி ஒழிப்பிற்காகத்தான் இவர்கள் சிறைக்குச் சென்றார்கள். இன்றைக்கு நடைமுறையிலே, சட்டப் பூர்வமாக ஜாதியை ஒழிப்பதற்காக அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர்தான் என்ற அந்த சட்டத்தை நிறைவேற்றியதன் மூலமாக இன்றைக்குத் தெளிவாக அதை உறுதிப்படுத்தியிருக்கின்றார்கள். எனவே, நம்முடைய சூத்திரப்பட்டம் இழிபட்டம் நிலைத்திருக்க முடியாத அளவிற்கு அது அழிக்கப்பட்டிருக்கிறது.

கொஞ்சம் பாக்கியிருக்கிறது

இன்னும்அது முழுமையான வடிவம் பெறுவதிலே கொஞ்சம் பாக்கியிருக்கிறது. அது நீதிமன்-றங்களாலே தடை என்று சொல்லக்கூடிய அளவிற்கு தடை கூட அல்ல, கொஞ்சம் குறுக்கே நிற்கிறது அவ்வளவு தான். ஆனால், அவர்கள் எந்த லட்சியத்திற்காக தியாகம் செய்தார்களோ, தங்கள் வாழ்வை இழந்தார்களோ எதையும் அவர்கள் பெறவில்லை இன்னமும்.

அப்படிப்பட்டவர்களுக்கு ஒரு லட்சியத்தை அவர்கள் பெற்றதிலே, மிகப்பெரிய மனநிறைவு கொண்டிருக்கின்றார்கள் என்பதும் தந்தை பெரியார் அவர்கள் எந்த லட்சியத்தை எடுத்து நம்முன்னாலே வைத்தார்களோ, அந்த லட்சியம் என்றைக்கும் தோற்றுப்போகாது.

நிச்சயமாக வெற்றி பெற்றே தீரும் என்கிற அளவுக்கு இன்றைக்கு நாடு தழுவிய அளவிலே போராட்டம் வெற்றி அடைந்து கொண்டுவருவதைப் பார்க்கின்றோம். அருமை நண்பர்களே! நானே பலமுறை இந்தப் பகுதிக்கு வந்திருக்கிறேன், பேசியிருக்கிறேன். ஒரு முறை அய்யா அவர்களுடைய மறைவுக்குப் பிறகு கூட அன்னை மணியம்மையாரும் நானும் இங்கே வந்து இங்குள்ள பள்ளி கட்டடத் திறப்பு விழா நிகழ்ச்சியிலே கலந்து கொண்டோம்.

தண்டராம்பட்டு பகுதியாக இருந்தாலும் கண்ணுகுடி பகுதியாக இருந்தாலும் ஏராளமான இயக்கத் தோழர்கள் நிறைய வந்த பகுதி இந்தப் பகுதி எனவே, இந்தப் பகுதியிலே உங்களை எல்லாம் சந்திக்க வேண்டும் என்பதற்காகத்தான் பல்வேறு பணிகள் இருந்த நேரத்திலே கூட, நெருக்கடியாக இருந்த நேரத்திலும் இந்தச் சிறப்பான முறையிலே உங்களை சந்திக்கின்றேன்.

இந்தக் கிராமத்தில் பெரியார் படிப்பகம்

அந்த அளவுக்கு ஊர்ப் பொதுமக்கள் பெருமனதோடு நீங்கள் சிறப்பாக ஒத்துழைத்து நல்ல அளவிற்கு அய்யா அவர்களுக்குச் சிறப்பு செய்திருக்கின்றீர்கள்.

அதுமட்டுமல்ல, நல்ல இடத்திலே ஒரு நல்ல படிப்பகத்தை, அறிஞர் அண்ணா அவர்களுடைய நூற்றாண்டு விழாவை நினைவூட்டக் கூடிய அளவிற்கு, தந்தை பெரியார் படிப்பகத்தை அமைத்திருக்கின்றீர்கள்.

இதைவிடச் சிறந்த ஒரு வாய்ப்பு கிராமத்திற்கு வேறு இருக்க முடியாது. கிராமங்கள், நகரங்கள் என்ற பேதமே இருக்கக் கூடாது என்று சொன்னவர் தந்தை பெரியார்.

இராணுவத்திற்குச் சென்ற பல பேர்

எப்படி மேல் ஜாதி, கீழ்ஜாதி என்று இருக்கக் கூடாதோ, அதே போன்று உயர்ந்த ஜாதி, தாழ்ந்த ஜாதி என்று இல்லாமல் எல்லோரும் சமம் என்று இருக்க வேண்டுமோ அதே போன்றுதான் நகரம் என்று சொன்னால் ஏதோ மேல்தட்டு; கிராமம் என்று சொன்னால் கீழ்த்தட்டு என்று இல்லாமல் எல்லோரும் ஒன்றாக இருக்க வேண்டும். சமப்படுத்தப்பட வேண்டும், சமச்சீராக அமைய வேண்டும் என்று சொன்னவர் தந்தை பெரியார் அவர்கள். அதன் காரணமாகத்தான் இன்றைக்கு இந்தப் பகுதியிலிருந்து ஏராளமான தோழர்கள், இளைஞர்கள் கல்வி கற்றிருக்கின்றார்கள். எனக்குத் தெரியும். இந்தப் பகுதியிலிருந்து இராணு-வத்திற்குச் சென்றவர்கள் பல பேர் உண்டு. ஆகவே, அப்படிப்பட்ட நிலையிலே அந்த இராணுவத்திற்கும் சென்றார்கள் பெரியாரின் கட்டுப்பாடு மிக்க கருஞ்சட்டை ராணுவத்திலும் தம்மை இணைத்துக்கொண்டார்கள். அப்படிப்பட்ட ஓர் அருமையான பகுதியிலே அய்யா அவர்களுக்கு சிலை திறந்து வைத்திருப்பது, படிப்பகங்களை இங்கே ஏற்பாடு செய்தது, அது போலவே என்னுடைய நூலை அவர்களுடைய அன்பினாலே வெளியிட்டு இங்கே சிறப்புச் செய்தது எல்லாவற்றிற்கும் அனைவருக்கும் நான் நன்றி செலுத்தக் கடமைப்பட்டி-ருக்-கின்றேன்; நன்றி செலுத்துகின்றேன்.

பெரியார் பிறந்திருக்காவிட்டால்

அருமை நண்பர்களே! ஒரு கண நேரம் நீங்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். தந்தை பெரியார் பிறந்திருக்காவிட்டால், இந்தக் கேள்வியை மட்டும் நீங்கள் ஒவ்வொருவரும் கேட்க வேண்டும். நீங்கள் எந்த அமைப்பைச் சாந்தவராக இருந்தாலும் சாராதவராக இருந்தாலும் அந்த ஒரே ஒரு கேள்வியை மட்டும் கேட்டுப் பாருங்கள். அதை மட்டும் மனதிலே எண்ணிப்பாருங்கள்.

நம்முடைய நிலை எப்படியிருக்கும் என்று பார்த்தால், முழங்காலுக்குக் கீழே நம்முடைய வேட்டி தொங்காது. மேலே துண்டு போட்டு நடக்கக் கூடிய வாய்ப்பும் நாம் பெற்றிருக்க மாட்டோம். தெருக்களிலே நாய் போகலாம், பன்றி போகலாம், கழுதை போகலாம். ஆனால், ஆறறிவு படைத்த மனிதன் அவன் கீழ்ஜாதியாக இருந்தான் இருக்கிறான் என்கின்ற காரணத்திற்காக தெருவிலே நடமாடக் கூடாது என்று சொல்லியிருந்த நாட்டிலே, இன்றைக்கு எல்லோரும் சமம் என்று சொல்லக்கூடிய அளவிற்கு ஜாதி ஒழிந்த ஒரு சமுதாயத்தை அய்யா அவர்கள் உருவாக்கிக் காட்டியிருப்பதனுடைய விளைவாகத்தான் இன்றைக்கு நாமெல்லாம் தலை நிமிர்ந்து நிற்கின்றோம்.

பெரியார் தொண்டின் சிறப்பென்ன?

அய்யா அவர்கள் மட்டும் பாடுபட்டிருக்காவிட்டால் நம்முடைய மனிதநேயர் அவர்கள் சுட்டிக்காட்டியதைப் போல, நம்மவர்கள் எல்லாம் மிகப்பெரிய பதவிக்குப் போயிருக்க முடியுமா?

இந்தமேடையிலே வழக்குரைஞர்கள் அமந்திருக்கின்றோம். அதே போல பேராசிரியர் அமர்ந்திருக்கிறார்.

இந்த மேடையைப் பார்த்தாலே பெரியார் தொண்டுக்கு என்ன அடையாளம் என்பதைத் தெரிந்து கொள்ளலாம். நீங்கள் சமுதாயத்தைப் பார்க்க வேண்டும்.

மேடையைப் பாருங்கள். பெரியார் பிறந்திருக்காவிட்டால் எங்கள் பையிலே பேனா இருக்குமா? தோளிலே துண்டு இருக்குமா? இவ்வளவு வெள்ளை சள்ளையாக நாங்கள் உடுத்திக்கொண்டிருக்க முடியுமா? அதற்கு மாறாக கையிலே கோல்தான் இருக்கும் ஆடு மாடு ஓட்டக் கூடிய கோல் தான் கையிலே இருக்குமே தவிர பேனா இருந்திருக்க முடியாது.

ஏனென்றால், அதை தலைவிதி என்று ஏற்றுக்கொண்டிருக்கிற மக்களாகத்தான் காலம் காலமாக நம்பி கொண்டிருக்கின்ற அடிமை மக்களாகத்தான் ஆக்கப்பட்டிருந்தோம்.

அவைகளை எல்லாம் மாற்றிய பெருமை அதோ சிலையாக நிற்கிறாரே அந்த சீலர் சுயமரியாதை வீரர் புரட்சி வீரர் தந்தை பெரியார் அவர்களைச் சாரும்.

அன்றைக்குப் பார்ப்பன முதலைகள்

அய்யா அவர்கள் தான் கேட்டார்கள், ஏன் நம்மவர்கள் படிக்கக் கூடாது? கல்வி நீரோடை நாடெல்லாம் பாய வேண்டும் என்று சொன்னார்கள். பாயவிடாத அளவிற்குப் பார்ப்பன முதலைகள் அந்த நீரோடையிலே இருந்து குழந்தைகளை இறக்கவிடாத அளவுக்கு அல்லது இறங்க முடியாத அளவிற்கு தடுத்துக்கொண்டிருந்த காலக்கட்டத்தை எல்லாம் மாற்றி, அனைவருக்கும் கல்வி என்று ஆக்கினார்கள்.

இன்றைக்குத் திரும்பிப் பாருங்கள். தமிழ்நாட்டிலே எங்கு பார்த்தாலும் மேல் நிலைப்பள்ளிகள், எங்கு பார்த்தாலும் உயர்நிலைப் பள்ளிகள், எங்கு பார்த்தாலும் மெட்ரிகுலேசன் பள்ளிகள். எங்கு பார்த்தாலும் பாலிடெக்னிக்குகள், எங்கு பார்த்தாலும் கல்லூரிகள், எங்கு பார்த்தாலும் பொறியியல் கல்லூரிகள். இந்த ஆண்டு மட்டுமே தமிழ்நாட்டிலே உருவாகியிருக்கின்ற எஞ்சினியரிங் கல்லூரிகள் 420. பாலிடெக்னிக்குகள் 400க்கு மேல்.

தந்தை பெரியார் தன்னுடைய தோளிலே சுமந்தார்

இவைகளை எல்லாம் நம்மவர்கள் நினைத்துப் பார்க்க முடியாது. அக்கிரகாரத்திற்கோ படிப்பு சொந்தம் என்று இருந்தது. ஆசிரியர்கள் என்று சொன்னால் பார்ப்பனர்கள் தான் வரமுடியும் என்ற அளவிலே இருந்தது, அதோடு இன்றைக்கு அது மாற்றப்பட்டது. உங்களுக்குத் தெரியும். தந்தை பெரியார் அவர்கள் நம்மைப் படிக்க வைத்தது மட்டுமல்ல, உத்தியோகத்திற்குப் போவதற்கு அவர்கள் தோள்கொடுத்தார்கள். தன்னுடைய தோளிலே தமிழனை ஏற்றி அதற்காக அவ்வளவு சங்கடங்களைப் பெற்றார்கள் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். அதிகமாகப் போக வேண்டிய அவசியமில்லை. சுருக்கமான நேரத்திலே சொல்லுகிறேன். உங்களுக்குத் தெரிந்த பகுதி, கண்ணந்தங்குடி ஒரத்தநாடு பெரியார் நாடு என்று சொல்லக் கூடிய இந்த பகுதிதான் கண்ணந்தங்குடி. அந்த கண்ணந்தங்குடியிலே இருந்து படித்து படிப்படியாக உத்தியோகத்திற்குச் சென்றவர்தான் ஆர்.எஸ்.மலை-யப்பன்அவர்கள்.

திருச்சி கலெக்டர் மலையப்பன்

அந்த மலையப்பன் அவர்கள் காமராஜர் ஆட்சிக் காலத்திலே திருச்சி கலெக்டராக வந்தார். அவருடைய திறமை, ஆற்றல், உழைப்பு, திராவிடர் இயக்கத்தின் படிக்கட்டு இவை எல்லாம் கிடைத்த காரணத்தால் தான் அவர்கள் வந்தார்கள். ஆனால், அவர்களை மேலே விட்டால் இன்னும் மேல் பதவிக்கு வந்து விடுவார்கள். பார்ப்பனர்களே அமர்ந்திருக்கக் கூடிய அரசாங்கத்தினுடைய செயலாளர் போன்ற பதவிக்கு வந்து விடுவார்கள் என்று கருதிய காரணத்தால் தான் அவர் போட்ட ஓர் உத்தரவு பலபேருக்குத் தெரியாது.

----------------தொடரும்......"விடுதலை"30-7-2009

1 comments:

Anonymous said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
செய்திவளையம் குழுவிநர்