Search This Blog

18.7.09

மனிதனில் எதற்கு மேல்ஜாதி... கீழ்ஜாதி?


தோழர்களே! இந்த நாட்டிலே மனித சமூதாயத்துக்கு மூன்று பெரிய கேடுகள்! மக்கள் நன்மை தீமை உணர இவற்றை ஒழித்தாக வேண்டும்.

முதலாவதாக மேல்ஜாதி.... கீழ்ஜாதி; ஒருவன் பார்ப்பான், கடவுளுக்குச் சமமானவன்! அவன் சாமி! பிராமணன் என அழைக்கப்பட வேண்டும். அவன் கடவுள் இனம்! சாமிக்கும் பூணூல்! அவனுக்கும் பூணூல்! அவன் உயர்ந்தவன், நாம் தாழ்ந்தவர்கள்.

மனிதனில் எதற்கு மேல்ஜாதி... கீழ்ஜாதி? இந்தக் கொடுமை இந்த நாட்டைத் தவிர உலகில் வேறு எந்த நாட்டிலுமில்லையே!

மேல்ஜாதி என்பது பாடுடாத சோம்பேறி வாழ்வுக்கு ஏற்பட்டது. கீழ்ஜாதி அந்தச் சோம்பேறிக்கு ஆகப் பாடுபடும் ஜாதி. பாடுபட்டதைச் சோம்பேறிகள் அனுபவிக்க விட்டுவிட்டது.

இரண்டாவதாகப் பணக்காரன், ஏழை. இது எதற்காக? பணக்காரன் - ஊரார் உழைப்பை அனுபவித்து பணம் சேர்த்துக் கொள்ளையடிப்பவன்! ஏழை பாடுபட்டுப் பணக்காரனிடம் கொடுத்துவிட்டுக் கஷ்டப்படுபவன்; ஏன் இப்படி? அவசியமென்ன? பணக்காரன் மக்களுக்காக என்ன பாடுபடுகிறான்? ஏழை என்ன பாடுபடவில்லை?

மூன்றாவதாக - ஆண் எஜமானன்! பெண் அடிமை! இராஜாவின் வீட்டிலும் இராணியானாலும் சரி பெண் அடிமைதான்! சில நிர்பந்தம், அடக்குமுறை ஆண்களுக்குத்தான் சவுகரியம் அளிக்கின்றன. மிருகங்களில் கூட இருக்கலாம். அவைகளுக்குப் புத்தி இல்லை. மனிதனில் ஆண் எசமான்; பெண் அடிமை; இந்த வேறுபாடு தேவையில்லாதது. அக்கிரமமானதுங்கூட; பொருத்தமற்றது. இயற்கைக்கு விரோதமானது.

இங்கு மூன்று பேர் மேல் ஜாதி; 97-பேர் கீழ்ச்ஜாதி! அதுபோல பணக்காரன் மூன்று பேர்; ஏழை 97-பேர்; ஏன் இந்த வேறுபாடு? சிந்தித்தால் கிடைக்கும் காரணம். இந்த மூன்று தன்மைகளுக்கும், சிறுபான்மையினர் பெரும்பான்மையானவர்களைக் கஷ்டப்படுத்துகிறார்கள்.

காரணம் 1-கடவுள்; 2-மதம் - சாஸ்திரம்; 3-அரசாங்கம்.

கடவுள் பெயரால் ஏன் மேல் ஜாதி கீழ்ஜாதி என்றால் மதம் சாஸ்திரம் அப்படி. மதம் சாஸ்திரம் பாதுகாப்புக்கு அரசாங்கம் உள்ளது. ஆகவே இந்த மூன்று கேடுகளும் ஒழியவேண்டுமா? வேண்டாமா? இந்த மூன்றில் கடுகத்தனை வேர் இருக்கும் வரை நாம் கஷ்டப்பட வேண்டியதுதான். யார் இதைப் பற்றியெல்லாம் நினைக்கிறார்கள் திராவிடர் கழகத்தைத் தவிர?


--------------------தந்தைபெரியார் - "விடுதலை" 7-1-1959

2 comments:

Unknown said...

//கடவுள் பெயரால் ஏன் மேல் ஜாதி கீழ்ஜாதி என்றால் மதம் சாஸ்திரம் அப்படி. மதம் சாஸ்திரம் பாதுகாப்புக்கு அரசாங்கம் உள்ளது. ஆகவே இந்த மூன்று கேடுகளும் ஒழியவேண்டுமா? //

yes

தமிழ் ஓவியா said...

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி