Search This Blog

1.7.09

மூட நம்பிக்கையின் ஒட்டுமொத்தமான குத்தகைக்கு மறுபெயர்தான் கடவுள் நம்பிக்கை!


மூடவெறி!

மூட நம்பிக்கையின் ஒட்டுமொத்தமான குத்தகைக்கு மறுபெயர்தான் கடவுள் நம்பிக்கை! இந்த மூலவேரை முற்றிலும் நாசப்படுத்தாமல் அறிவின் ஆற்றலை வெளியில் கொண்டு வரவே முடியாது.

எல்லாம் அவன் செயல்; அவன் எழுதிய எழுத்தை யாரே மாற்றி எழுத முடியும்? ஆட்டுக்கும் வாலை ஆண்டவன் அளந்தே வைத்துள்ளான்; உடல் முழுவதும் எண்ணெய்யைத் தேய்த்துக் கொண்டு ஆற்று மணலில் உருண்டு புரண்டாலும் ஒட்டுகிற மண்தான் ஒட்டும் _ என்கிற பழமொழிகளும், நம்பிக்கைகளும், நடப்புகளும் உள்ள ஒரு நாட்டில் எள் மூக்கின் நுனி அளவுக்காவது தன்னம்பிக்கையோ சாதிக்கவேண்டும் என்ற வெறியோ ஏற்பட முடியுமா?
பக்தி என்பது ஒரு கட்டத்தில் வெறி என்னும் கொதி நிலைக்கு ஆளாகி, என்ன செய்கிறோம் என்று தெரியாமலேயே தடுமாறும் பைத்தியக்கார நிலையையும் பலரிடம் பார்க்க முடிகிறது.

மலத்தையே தின்னும் நிலைக்கு ஆளான ஒருவர் பரமஹம்சர் என்று போற்றப்படவில்லையா?
மாட்டு மூத்திரத்தையும், சாணியையும், பாலுடனும், தயிருடனும், வெண்ணெய்யுடனும் கலக்கி பஞ்சகவ்யம் என்று குடிக்கச் சொல்லவில்லையா?

அதற்குத் தட்சணை கொடுத்துப் பயபக்தியோடு பக்தர்கள் குடிப்பதில்லையா? மாட்டுச் சாணியைச் சுட்டுப் பொசுக்கி திருநீறு என்று நெற்றியில் பூசிக்கொள்வதில்லையா? முற்றிய நிலையில் அதனை வாயிலும் போட்டுக் கொள்வதில்லையா?


இதோ ஒரு செய்தி: நேற்று மாலை ஏட்டில் வெளிவந்தது. கடவுள் எப்படியும் காப்பாற்றுவாரா? திடீர் என்று அவனுக்குச் சந்தேகம். இரயில் வரும்போது குறுக்கே விழுவோம்! நிச்சயம் கடவுள் காப்பாற்றத்தான் செய்வார் என்ற விபரீதப் புத்தி அந்தப் பக்தனுக்கு.

கேரள மாநிலம் பெயர் அமின்தாஸ் (வயது 28) ஒரிசா மாநிலத்திற்குச் சென்ற நேரத்தில் இப்படி ஒரு விஷப் பரீட்சையில் ஈடுபட எண்ணினார். கட்டாக் இரயில் நிலையத்துக்கு வந்தார். எக்ஸ்பிரஸ் இரயில்ஒன்று வந்துகொண்டிருந்தது _ திடீரெனப் பாய்ந்தார். கால் துண்டாகித் தூக்கி எறியப்பட்டார். இரத்த வெள்ளத்தில் கிடந்தார். மருத்துவமனையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறார்.

கடவுள் காப்பாற்றா-விட்டாலும் மனிதாபிமானம் உள்ள மருத்துவர்கள் அந்த மூடப் பக்தனைக் காப்பாற்றிட முயற்சித்துக் கொண்டு இருக்கிறார்கள். சாய்பாபாவே கோவா சென்று குடலிறக்க நோய்க்கு அறுவை சிகிச்சை செய்துகொண்டார் என்பது இந்த அதிதீவிரப் பக்தர்க-ளுக்கெல்லாம் எங்கிருந்து தெரியப் போகிறது?

கடவுளை மறந்து மனிதனை நினைந்து நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. கடவுளை மற _ மனிதனை நினை என்னும் தந்தை பெரியார் அவர்களின் கருத்துதானே நிதர்சனம்! யதார்த்தம்!!

---------------- மயிலாடன் அவர்கள் 30-6-2009 "விடுதலை"யில் எழுதிய கட்டுரை

0 comments: