Search This Blog

20.8.11

நடிகர் எஸ்.வி.சேகர் என்னிடம் கேட்ட கேள்வி - கி.வீரமணி

ஜட்கா வண்டி குதிரையையும் ரேஸ் குதிரையையும் ஒன்றாக ஓட விடுவதுதான் சமவாய்ப்பா?

நாகை மாணவர் கழக இனஎழுச்சி மாநாட்டில் தமிழர் தலைவர் கேள்விக்கணை!

ஜட்கா வண்டி குதிரையையும், ரேஸ் குதிரையையும் ஓடவிடுவதுதான் சம வாய்ப்பா? என்று உச்சநீதிமன்ற நீதிபதி சுப்பராவ் கேட்ட கேள்வியை எடுத்து விளக்கிக்கூறினார் திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள்.


நாகையில் 13.8.2011 அன்று நடைபெற்ற திராவிடர் மாணவர் கழக இனஎழுச்சி மாநாட்டில் திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:

மூச்சுக்காற்று போல

மூச்சுக்காற்று போல, பிராணவாயு போல அது கிடைத்துக்கொண்டேயிருக்க வேண்டும். அதனு டைய விளைவுதான் 27 சதவிகித இட ஒதுக்கீடு. இப்பொழுது அந்த உணர்வு வந்துவிட்டதே. அந்த இடஒதுக்கீடு மத்திய அரசிலே வந்தது.

கல்வித்துறையிலே இடஒதுக்கீடு இன்னும் வரவில்லை. வேலை வாய்ப்புத் துறையில் வேலை வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.
முதல் சட்டத்திருத்தம் 1951லே வந்தது. அதன் மூலம்தான் வகுப்புவாரி உரிமைக்கு உயிரோட்டம் வந்தது. சமூகநீதி கிடைத்தது.

தமிழகத்தில் 69 சதவிகித இடஒதுக்கீடு

பிறகு பெரியாருடைய தொண்டர்கள் காலத் திலே அந்த வகுப்புவாரி உரிமை வளர்ந்து தமிழ் நாட்டு வரலாற்றிலே 69 சதவிகிதமாக ஆகிற்று என்று சொன்னால் அதை மீட்டுக்கொடுத்ததற்கு மூலாதாரமாக இருந்த இயக்கம் திராவிடர் கழகம் என்ற வரலாற்றை யாராலும் மறந்துவிட முடியாது.

பெரியாருடைய காலத்திலே வகுப்புரிமை

பெரியாருடைய காலத்திலே வகுப்புவாரி உரிமை கிடைத்தது. சமூகநீதி கிடைத்தது. பெரியாருடைய தொண்டர்கள் காலத்திலே அந்த வகுப்புவாரி உரிமை வளர்ந்து தமிழ்நாட்டு வரலாற்றில் 69 சதவிகிதமாக ஆகிற்று என்று சொன்னால் அதை மீட்டுக் கொடுப்பதற்கு மூலாதாரமாக இருந்த இயக்கம் திராவிடர் கழகம் என்ற வரலாற்றை யாராலும் மறந்துவிட முடியாது. (கைதட்டல்) மறைத்துவிட முடியாது.

ஆகவேதான் இன்றைக்கும் அதை செய்தவர் களைப் பாராட்டுகிறோம். எங்களைப் பொறுத்த வரையிலே அரசியல் பார்வை கிடையாது. எங்களைப் பொறுத்த வரையிலே இனநலப் பார்வை. எங்களைப் பொறுத்தவரையிலே பகுத் தறிவு சிந்தனை.


எங்களுக்கு விருப்பு-வெறுப்பு கிடையாது

விஞ்ஞானப் பார்வை உண்டு. அறிவியல் பார்வை உண்டு. எனவே விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற் பட்டு சொல்லுகிறோம். ஒரு விஞ்ஞானி எப்படி உண்மையைச் சொல்லுவாரோ அப்படிச் சொல்லும்பொழுது சில நேரங்களில் சில மனிதர்களுக்கு உண்மைகள் கசக்கின்றன.

சிலர் அதனால் எங்களை எதிரிகள் என்று கருதுகிறார்கள். நாங்கள் யாரையும் எதிரிகள் என்று கருதுவதில்லை. எனவேதான் இன்றைக்கு அடுத்த கட்ட நடவடிக்கை என்ன? மாணவர்கள் படிக்கிறார்கள்.

கல்வி நிறுவனங்கள் வளர்ந்திருக்கின்றன 500 பொறியியல் கல்லூரிகளுக்கு மேல் தமிழ்நாட்டில் வந்திருக்கிறது. 550 பாலிடெக் னிக்குகள் இருக்கின்றன. இவைகள் எல்லாம் ஒரு காலத்திலே நினைத்துப் பார்க்க முடியாது.

பெரியார் சொல்லுவார். தெலுங்கு மொழியில் அந்தக் காலத்தில் ஒரு பழமொழி உண்டாம். இச்சிபட்னவாடுக்கு எஞ்சினீயரிங் என்று

கொடுத்து வைத்திருந்தால்தான்!

அதாவது கொடுத்து வைத்திருந்தால்தான் எஞ்சினீயரிங் போக முடியும். இன்றைக்கு முத்தன் மகன் முனியன். குப்பன் மகன் சுப்பன். எல்லோரும் படித்து முன்னேறுகிறார்கள். இன்றைக்கு சிக்கா கோவில் இருக்கிறார். அமெரிக்காவில் இருக்கிறார். ஆஸ்திரேலியாவில் இருக்கிறார். இங்கிலாந்தில் இருக்கிறார் யார்? படித்து விட்ட கிராமத்தைச் சார்ந்த குப்பன் மகன் சுப்பன் இருக்கின்றான்.

குலக் கல்வித்திட்டம் தொடர்ந்திருந்தால்

அன்றைக்கு குலக் கல்வி தொடர்ந்திருந்தால் இன்றைக்கு குப்பன் போயிருக்க முடியுமா? எண்ணிப்பாருங்கள். அதற்கு பெரியார் நடத்திய போராட்டம் காமராஜரைக் கொண்டு வந்து உட்கார வைத்து சமூகநீதிக்கு உருவாக்கிய திருப்பம் அது வளருகிறது. வளருகிறது.

ஆட்சிகள் மாறலாம். ஆனால் யாரும் வகுப்புரிமையில் கை வைக்கக்கூடிய சூழ்நிலை தமிழ்நாட்டில் கிடையாது என்பதை இன்றைக்கு காட்டியிருக்கின்றோம்.

இன்றைக்கு 69 சதவிகித இடஒதுக்கீடு

இடஒதுக்கீடு 69 சதவிகிதம். மத்திய அரசிலே வேலைவாய்ப்பிலே 27 சதவிகித இடஒதுக்கீடு கல்வியிலே இடஒதுக்கீடு இல்லை. மத்தியிலும் கல்வியிலும் இடஒதுக்கீடு வரவேண்டும் என்று போராட்டம் இன்றைக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.


இதை எப்படித் தடுப்பது? இதை எப்படிக் குறைப்பது? என்று நினைக்கிறார்கள். மத்திய அரசோ வேலைவாய்ப்பில் 27 சதவிகித இடஒதுக்கீடு கொடுத்துவிட்டு அதை நடை முறைப்படுத்தாமல் இன்னொரு பக்கத்திலே ஆக்கிக்கொண்டிருக்கிறது. அதை எதிர்த்து களம் காணவேண்டிய பொறுப்பு. மாணவர்களுக்காக படித்தவர்களுக்காக ஒடுக்கப்பட்டவர்களுக்காக, தாழ்த்தப்பட்டவர்களுக்காக-சிறுபான்மை சமுதாயத்திற்காக போராட வேண்டிய கடமை திராவிடர் கழகத்தைச் சார்ந்தது.

அடுத்த தலைமுறையைப் பற்றி கவலைப்படக்கூடியவர்கள்

எனவே எங்களுக்கு பதவிக்காக என்று ஒரு போதும் நாங்கள் கேட்கமாட்டோம். நாங்கள் அடுத்த தேர்தலை பற்றி கவலைப்படுபவர்கள் அல்ல. அடுத்த தலைமுறைப் பற்றி கவலைப் படுபவர்கள். அதை ஆழமாக நன்றாக சிந்தித்து எண்ணிப் பார்க்க வேண்டும். எனவே மாணவ நண்பர்களே உங்களுடைய சிந்தனை எதிர்காலம். தந்தை பெரியார் அவர்கள் எப்படி அன்றைக்கு வகுப்புரிமைக்காக ஒரு போர்க்கொடி தூக்கினார் களோ, போர் பெரும்போர் என்று சொன்னார் களோ அதற்கு பொருள் இதுதான். அந்த பெரும்போர் பல களங்களிலே, சில களங்களிலே நாம் வெற்றி பெறுகிறோம். எதிரிகள் வெவ்வேறு ரூபத்தில் வருகிறார்கள். அதுவும் பார்ப்பனீயம் எடுக்கிற அவதாரம் இருக்கிறதே, தச அவதாரங்களைவிட மிக அதிகமான அவதாரங்களை எடுக்கிறது. ஆனால் எங்களை பொறுத்த வரையில் பெரியார் என்கிற கரு இருக்கிறதே அது எங்களுடைய அறிவைத் தெளிவுப்படுத்தியிருக்கிறது.

ஆகையால் எங்களை எந்தவகையிலும் ஏமாற்றிவிடமுடியாது. எங்களை வஞ்சித்துவிட முடியாது. எங்களை மயக்கியும் விட முடியாது. அதைத்தான் புரிந்துகொள்ள வேண்டும். இந்த மாநாட்டிலே தீர்மானம் போட்டிருக்கிறோமே.

தனியார் துறையிலும் இடஒதுக்கீடு தேவை

தனியார் துறையிலும் இடஒதுக்கீடு தேவை. திராவிடர் கழகத்தின் சமூகநீதிக்களத்திலே அடுத்த கட்டமாக, மிகப்பெரிய போராட்டமாக அதுதான் இருக்கும். தனியார் துறையிலும் இடஒதுக்கீட்டிற் காக போராட வேண்டியிருக்கிறது. ஏனென்று சொன்னால், அரசு துறைகள் எல்லாம் குறுகிக் கொண்டு வருகிறது. எல்லாம் தனியார் மயம், தாராள மயம், உலக மயம், என்று சொல்லக்கூடிய இருக்கிறது பாருங்கள். லிபரலைசேசன், பிரைட்டேசன், குளோபலைசேசன் என்று இருக்கிறது பாருங்கள். இந்த சேசன்கள் ஆதிசேசனைவிடக் கொடுமையானது. இதைவிட கொடுமை வேறெதும் கிடையாது. இவர்கள் எல்லாம், நமது பிள்ளைகள் பெற்றிருக்கிற உரிமைகளை அடக்குகிறார்கள்.

வங்கிகளில் இடம் கொடுக்க மறுக்கிறார்கள். அதைத் தனியார் மயம் என்று சொல்லுகின்றார்கள். அரசாங்கத்துறையில் மட்டும் 27 சதவிகிதம் கிடையாது. தனியார் துறையிலும் இடஒதுக்கீடு தேவை என்பதை மாநில மத்திய அரசுகள் செய்ய வேண்டும் என்கிற போராட்டத்தைத்தான் அடுத்து நாங்கள் நடத்துவதற்கு திட்டமிட்டிருக்கின்றோம்.

காரணம் இளைய தலைமுறையினருடைய எதிர்காலம் முக்கியம் என்று கருதுகிறவர்கள் நாங்கள். இளைய தலைமுறையினர் இன்றைக்கு கல்வி வாய்ப்பைப் பெற்றுக்கொண்டிருக்கிறார்கள். மடை திறந்த வெள்ளம் போல் வருகிறது. ஏன் தீவிரவாதியாகிறார்கள்?

ஆனால் அந்தக் கல்வியாளர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கவில்லையானால் அதனுடைய விளைவுதானே நக்சலைட்டாக மாறுகிறான். அதனுடைய விளைவுதானே அவன் நாட்டிலே தீவிரவாதியாக மாறுகிறான்.

தீவிரவாதத்தை தயவு செய்து சட்டம் ஒழுங்கு பிரச்சினை என்று பார்க்காதீர்கள். அது ஒரு சமுதாய ஒழுங்குப் பிரச்சினை. சமூகநீதியினுடைய எதிர் காலத்தைப் பொறுத்து பகுத்தறிவுக் கண் ணோட்டத்தோடு செய்யுங்கள். எல்லார்க்கும், எல்லாமும் தாராளமாகக் கிடைத்தால் எவனய்யா கிளர்ச்சி செய்வான்? எல்லோருக்கும் போதிய அளவுக்கு எல்லாம் கிடைத்துவிட்டால் யாரும் கொடிபிடிக்க மாட்டானே. சட்டம் ஒழுங்கு தானாகவே நன்றாக இருக்குமே.

இதை பெரியார் கண்ணாடி போட்டுப் பார்த்தால்தானே புரியும். ஆகவே இடஒதுக்கீடு சமூகநீதி என்பது யாரையோ பாதிக்கச் செய்வதுஅல்ல. பார்ப்பனர்களுக்கு இடஒதுக்கீடு கொடுக்கக் கூடாது என்பது எங்களுடைய கொள்கையா? முன்னேறிய ஜாதிக்காரருக்குக் கொடுக்கக் கூடாது என்பது எங்களுடைய கொள்கையா இல்லையே.

நடிகர் எஸ்.வி.சேகர் சந்தித்து கேள்வி கேட்டார்

இன்னொரு செய்தியை சொல்லுகிறேன். மயிலாப்பூரைச் சார்ந்த நடிகர் எஸ்.வி.சேகர் அந்த. நண்பர் திடீரென்று என்னை வந்து பார்த்தார். சில மாதங்களுக்கு முன்னாலே அடிக்கடி இடையில் வருவார். ஊருக்குப் போகும்பொழுது இடையில் எங்காவது சந்திப்பார். சங்கராச்சாரிதான் எனக்கு வழிகாட்டி என்று சொல்லக்கூடியவர்.

இன்னமும் கூட அவர் உறுதியாக இருக்கிறார். அதில் நமக்கு ஒன்றும் மாறுபட்ட கருத்தில்லை. அவர் ஒரு நாள் திடீரென்று பெரியார் திடலுக்கு வந்துவிட்டார். பெரியார் திடல் யார் வந்தாலும் வரவேற்க வேண்டிய இடம்தான். அவர் வந்துவிட்டார். அதற்காக அவமரியாதை செய்ய மாட்டோம். கொச்சைப்படுத்த மாட்டோம்.

கலைஞர் கேட்கச் சொன்னார்

அவர் வந்தவுடனே என்னிடம் சொன்னார். அய்யா கலைஞர் அவர்களைப் போய் பார்த்து விட்டு வந்தேன். எங்களுக்கும் இடஒதுக்கீடு கொடுங்கள் என்று ஒரு மனு கொடுத்துவிட்டு வந்திருக்கிறேன். அவர் சொன்னார். நீங்கள் வீரமணியைப் பார்த்து விளக்கமாகச் சொல்லுங்கள். அவர்தான் உங்களுக்கு செய்யக் கூடிய வாய்ப்பு, நிறைய இருக்கும் என்று சொன்னதாகச் சொன்னார்.
இதற்காகத்தான் உங்களை சந்திக்க வந்திருக்கிறேன் என்று சொன்னார். அப்படிங்களா ரொம்பவே மகிழ்ச்சி கட்டாயமாக உங்களுக்கு இடஒதுக்கீடு கொடுக்க வேண்டும் என்பதில் எங்களுக்கு மாறுபட்ட கருத்தே இல்லை என்று சொன்னேன். மூன்று

சதவிகித விகிதாச்சாரம்

இன்னொன்று தெரியுமா உங்களுக்கு வரலாற்றை உங்களுக்கு சொல்லவேண்டும். என்ன வென்றால் உங்களுடைய பார்ப்பனர்களுடைய விகிதாச்சாரம் இருக்கிறது பாருங்கள். அந்த முன்று சதவிகித விகிதாச்சாரம் இருக்கிறதே அந்த விகிதாச்சாரம் கட்டாயம் உங்களுக்குக் கொடுத்தே ஆகவேண்டும்.

உடனே அவருடைய முகம் சுருங்கியது. இல்லிங்க சார் நாங்கள் ஏழு சதவிகிதம் இருக்கிறோம் சார் என்றார். மூன்று சதவிகிமோ அல்லது ஏழு சதவிகிமோ சென்சஸ் எடுத்துப் பார்த்து உங்களுக்குரிய சதவிகிதம் போக மீதியை மற்றவர்களுக்கு கொடுத்துவிட வேண்டும் இதுதான் ரொம்ப மிக முக்கியம் என்று சொன்னேன். இன்னொரு வரலாறு உங்களுக்கு தெரியவேண்டும். சமூகநீதி வரலாற்றைத் தெரிந்துகொள்ள வேண்டும்.

கம்யூனல் ஜி.ஓ.வை கொண்டு வந்தவர் பெரியார்

பெரியார் கருத்துப்படி கம்யூனல் ஜீ.ஓ.வை கொண்டு வந்தவர் பெரியார். அந்த காலகட்டத்தில் நூற்றில் எவ்வளவு உங்களுக்கு இடஒதுக்கீடு இருந்தது தெரியுமா? 16 சதவிகிதம். இந்த மாதிரி தாராளமாக இடம் கொடுத்து வேறு யாரும் கிடையாது. 16 சதவிகிதம் கொடுத்தார் முத்தையா முதலியார். 1928-லிருந்து 1951 வரையிலே 16 சதவிகிதத்திற்கு பார்ப்பனர்களாகிய நீங்களே அனுபவித்துக்கொண்டு வந்தீர்கள்.

எஸ்.வி.சேகர் அப்படியே ஷாக்காகிப் போனார். அவருக்கு இந்த வரலாறெல்லாம் தெரியாது. இதை எதிர்த்து நீங்கள்தானய்யா நீதிமன்றத்திற்குப் போய் இடஒதுக்கீடு செல்லாது என்று சொன்னீர்கள்.

அல்லாடி கிருஷ்ணசாமி வாதாடினார்

நீங்கள்தானே தலையில் மண்ணைவாரிப் போட்டுக்கொண்டீர்கள். முற்படுத்தப்பட்ட வர்களுக்கு பிற்படுத்தப்பட்டவர்களுக்கு எல்லோருக்கும் பிரித்து பிரித்துக்கொடுத்தார்கள். அதனால் தான் வகுப்புவாரி உரிமை என்று அழைக்கப் பட்டது. கம்யூனல் ஜி.ஓ. என்று அதற்குப் பெயர்.

அல்லாடி கிருஷ்ணசாமி டில்லியிலே அரசியல் சட்டத்தை தயார் பண்ணிவிட்டு இடஒதுக்கீடே செல்லாது என்று இங்கு வந்து வாதாடினார். என்று வரலாற்றைச் சொன்னவுடன் நான் ரொம்பத் தெரிந்து கொண்டேன். உங்களிடம் என்று சொன்னார். நாளைக்கும் சொல்லுகிறோம். வகுப்புவாரி உரிமைப்படி அவரவர்களுக்கு அவர்களுடைய விகிதாச்சாரப்படி இடஒதுக்கீடு கொடுக்க வேண்டும்என்பதுதான் எங்களுடைய நிலைப்பாடு. ஒரு வீட்டில் அண்ணன் தம்பி இருக்கின்றோம். இன்னின்னாருக்கு இன்ன இடம் என்று சொல்லி விட்டால் சண்டை எதற்கு வரப்போகிறது? என்றும் வராதே.

சகோதரத்துவம்-சமத்துவம்

இதுதானே சமூகநீதி. ஆகவே இந்த இயக்கத்தைப் பொறுத்தவரையிலே சகோதரத்துவம்-சமத்துவம் இவை எல்லாம் வரவேண்டும். நாம் இப்படி சொன்னவுடனே தகுதி திறமை போய்விடுகிறது என்று சொல்லுகிறார்கள்.

உச்சநீதிமன்ற நீதிபதி மிக அழகாகச் சொன்னார்

உச்சநீதிமன்றத்தில் சுப்பாராவ் என்ற நீதிபதி ரொம்ப அழகாகச் சொன்னார். என்னய்யா தகுதி, திறமை குறைந்து போய் விடுகிறது என்று சொல்லுகின்றீர்கள். ஒரு விசயம் சொல்லுகிறேன் என்று சொல்லிவிட்டு ஒரு உதாரணம் சொன்னார். சமவாய்ப்பு என்று சொன்னால் என்ன தெரியுமா? இரண்டு குதிரைகளையும், பந்தயத்தில் ஓட விடுகிறோம். இரண்டு குதிரையும் ரேஸ் குதிரையாக இருந்தால் சம வாய்ப்பு. ஒன்று ஜட்கா வண்டி குதிரையும், இன்னொரு ரேஸ் குதிரையாகவும் பந்தயத்தில் விட்டால் அது சமவாய்ப்பா? இரண்டு பேருக்கும் வாய்ப்புக் கொடுத்திருக்கிறோம் என்றால் அதை ஒத்துக் கொள்ள முடியுமா? என்று கேட்டார்.

ஜட்கா வண்டிக் குதிரையை, ரேஸ் குதிரை அளவுக்கு மாற்ற வேண்டும் என்றால் அந்த குதிரைக்கு சலுகை காட்ட வேண்டும். ஆகவே தனியார் துறையில் இடஒதுக்கீடு சமூகநீதி இவை அத்தனையும் வரவேண்டும்.
இந்தியா-இலங்கைக்கு ஆதரவாக இருக்கக்கூடாது

அது மட்டுமல்ல நண்பர்களே! ஈழத்தமிழர் களுடைய வாழ்வுரிமைக்காக இந்த இயக்கம். போராட்டக் களத்திலே நிச்சயமாக நிற்கும். அமெரிக்கா போன்ற நாடுகளிலே அய்க்கிய நாடுகளிலே போர்க்குற்றவாளியாக இருக்கின்ற ராஜபக்சேவுக்கு தண்டனை கிடைக்கும்படி ஒரு தீர்ப்பு ஏற்பட வேண்டும்.

இந்திய அரசு இலங்கை அரசுக்கு ஆதரவாக இருக்கக்கூடாது. 16ஆம் தேதி தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு அவர்கள் கொடுத்த தீர்மானத்திலே மத்திய அரசு ஒரு புதிய அணுகு முறையை கட்சி வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு காணவேண்டும் என்று கூறிக்கொண்டு அடுத்த முறை உங்களை சந்திக்கின்றேன். மாணவச் செல்வங்களே உங்களுக்கு நன்றி.
சிறப்பாக ஏற்பாடு செய்த நாகைத் தோழர் களுக்கும், மற்றும் அனைவருக்கும், மழைக்கும் நன்றி.
-இவ்வாறு தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

---------------”விடுதலை” 20-8-2011

0 comments: