Search This Blog

29.8.11

தூக்குத் தண்டனையை ரத்து செய்க! தி. க. மாநாட்டில் தீர்மானம்

Align Left

அகில இந்திய நுழைவுத் தேர்வு கூடவே கூடாது!
செப்டம்பர் 25இல் சென்னையில் கழகத்தின் சார்பில் கல்வியை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வரக்கோரும் மாநாடு!
தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டை மாற்றி
சித்திரை முதல் நாளாக சட்டமியற்றியிருப்பதற்குக் கண்டனம்!
திருத்தணி மாநாட்டில் தீரமிக்க தீர்மானங்கள்

தூக்குத் தண்டனையை ரத்து செய்ய வேண்டும்; தை முதல் நாளாம் தமிழ்ப் புத்தாண்டை சித்திரை முதல் நாளாக மாற்றிய தமிழக அரசுக்குக் கண்டனம் உள்பட பல முக்கிய தீர்மானங்கள் திருத்தணியில் நேற்று (28.8.2011) நடைபெற்ற திராவிடர் கழக மண்டல மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

தீர்மானம்: 1

நாகப்பட்டினம் திராவிடர் கழக மாணவர் எழுச்சி மாநாட்டுத் தீர்மானங்களுக்கு வரவேற்பு

முன்மொழிவோர்: அ. அர்ஜுன், காஞ்சி மாவட்ட மாணவரணி தலைவர்

(அ) கடந்த ஆகஸ்டு 13 ஆம் தேதி நாகப்பட்டினம் திராவிடர் கழக மாணவர் எழுச்சி மாநாட்டில் நிறைவேற் றப்பட்ட தீர்மானங்களை இம்மாநாடு வரவேற்றுச் செயல்படுத்துவது என்று தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம்: 2

சித்திரை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு என்னும் தமிழக அரசின் சட்டத்திற்குக் கண்டனம்!

முன்மொழிவோர்: அருண்குமார், காஞ்சி மாவட்ட மாணவரணி செயலாளர்

தமிழ் அறிஞர்கள் மற்றும் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா போன்ற தலைவர்களால் வற்புறுத்தப்பட்ட, தை முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு என்கிற வகையில் தி.மு.க. ஆட்சிக் காலத்தில் 2008 ஆம் ஆண்டு ஒரு மனதாக நிறைவேற்றப்பட்ட சட்டத்தை ரத்து செய்து, சித்திரை முதல்நாள்தான் தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கம் என்று புதியதாக சட்டம் இயற்றிய அ.இ.அ.தி.மு.க. அரசின் தமிழின விரோத முடிவுக்கு இம்மாநாடு தனது கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.

பிரபவ தொடங்கி, அட்சய என்பதில் முடிவு பெறும் 60 ஆண்டுகளின் பெயர்களில் ஒன்று கூட தமிழில் இல்லாத நிலையில், அவற்றைத் தமிழ் ஆண்டுகள் என்று ஏற்றுக் கொள்வதும், நாரதன் என்ற ஆண் கடவுளுக்கும், கிருஷ்ணன் என்ற ஆண் கடவுளுக்கும் பிறந்தவைதான் இந்த தமிழ் ஆண்டுகள் என்று கூறுவதும் அறிவுக்குப் பொருத்தமற்ற ஆபாசமானதும் - தமிழர்கள் மீது தொடுக்கப்பட்ட ஆரியப் பண்பாட்டுப் படையெடுப்பின் அடையாளமுமாகவே இருப்பவை என்றும் இம்மாநாடு திட்டவட்டமாக தெரிவிக்கிறது.

நீண்ட வரலாறு படைத்த, தொன்மை மிகுந்த தமிழர் மீதும், தமிழின் மீதும் தொடுக்கப்பட்ட இந்த ஆரியப் பண்பாட்டுப் போரில், உண்மை நிலையை நாடு தழுவிய அளவில் பிரச்சாரம் செய்து, தமிழர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவது என்றும், வரும் செப்டம்பர் 11 அன்று மாலை திருச்சிராப் பள்ளியில் கூட இருக்கும் திராவிடர் கழக பொதுக் குழுவில் ஆலோசித்து, அடுத்த கட்ட நடவடிக்கைகளை அறிவிப்பது என்றும் இம்மாநாடு தீர்மானிக்கிறது.

தீர்மானம்: 3

(அ) அகில இந்திய அளவில் நுழைவுத் தேர்வுக்கு எதிர்ப்பு

முன்மொழிவோர்: சி. பிரேமா B.Tech., IT
கலைக் கல்லூரிகளில் (Arts College) இளங்கலைப் பட்டம் தொடங்கி, தொழிற் கல்லூரிகள்வரை நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என்று மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில் சிபல் அவர்கள் தெரிவித்திருப்பதற்கு இம்மாநாடு தனது கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.

தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மை மக்கள் மற்றும் கிராமப்புற மக்களை மிகக் கடுமையாகப் பாதிப்புக்கு ஆளாக்கும் இந்த வெகுமக்கள் விரோத - சமூக நீதி விரோதத் திட்டத்தை, முயற்சியை உடனே கைவிடவேண்டும் என்று இம்மாநாடு வலியுறுத்துகிறது.

இதில் ஒத்தக் கருத்துடைய அமைப்பு களை ஒருங்கிணைத்து, அகில இந்திய அளவில் போராடி முறியடிப்பது என்றும் தீர்மானிக்கப்படுகிறது.

(3) (ஆ) கல்வியைப் பொதுப் பட்டியலில் இருந்து மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வலியுறுத்தல்

முன்மொழிவோர்: ந, குணாளன், திருவள்ளூர் மாவட்ட மாணவரணி தலைவர்

கல்வி பொதுப் பட்டியலில் இருப்பதால் தான் மத்திய அரசு இது போன்ற முடிவுகளை அகில இந்திய அளவில் எடுப்பதற்குக் காரணமாக, உதவியாக இருப்பதால், கல்வியை மாநிலப் பட்டிய லில் மீண்டும் கொண்டு வரவேண்டும் என்பதை வற்புறுத்தும் வகையில், வரும் செப்டம்பர் 25 அன்று சென்னையில், திராவிடர் கழகத்தின் சார்பில் நடத்த இருக்கும் மாநாட்டுக்குக் கல்வியாளர் களை அழைத்துச் சிறப்பாக நடத்துவது என்று தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம்: 4

தமிழ்நாடு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குப் பாராட்டு

முன்மொழிவோர்: தமிழ்மணி, திருத்தணி நகர செயலாளர்

ஈழத் தமிழர் பிரச்சினை தொடர்பாக தி.மு.க. நாடாளுமன்றக் குழுத் தலைவர் மானமிகு டி.ஆர்.பாலு அவர்கள் மக்களவை யில் கொண்டு வந்த முன்மொழிவை ஆதரித்து, கட்சிகளுக்கு அப்பாற்பட்ட முறையில். தமிழ்நாட்டைச் சேர்ந்த காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் இரு அவைகளிலும் ஒன்று சேர்ந்து குரல் கொடுத்ததற்கும், கருத்துக்களை வலிமையாக எடுத்துச் சொன்னதற்கும் இம்மாநாடு மனந்திறந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள் கிறது.

தமிழகத்தின் அடிப்படையான உரிமைகள், வளர்ச்சித் திட்டங்கள் ஆகியவைகளுக்காக இதே முறையில கட்சிகளைக் கடந்து ஒருமித்த முறையில் குரல் கொடுக்க வேண்டும் என்றும், அதன் காரணமாக தமிழ் நாட்டுக்குப் பேருதவி செய்ய முடியும் என்றும் இம்மாநாடு தெரிவித்துக் கொள்கிறது.

தீர்மானம்: 5

ஈழத் தமிழர்கள் மற்றும் தமிழக மீனவர்கள் பிரச்சினை

முன்மொழிவோர்: து. சுரேசு,
அரக்கோணம் மாவட்ட இளைஞரணி தலைவர்

நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைத்துக் கட்சி உறுப்பினர் களும், ஈழத் தமிழர்கள் கொடூரமாகக் கொன்றொழிக்கப்பட்டது, வாழும் ஈழத் தமிழர்கள் தொடர்ந்து தொல்லைகளுக்கு ஆளாவது குறித்தும், தமிழக மீனவர்கள் சிங்களக் கடற்படையினரால் தொடர்ந்து தாக்கப்படுவது குறித்தும் எழுப்பிய பிரச்சினைகளுக்கும், கேள்விகளுக்கும் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் அளித்த பதில் திருப்தியற்றதாக உள்ளது என்று தமிழ்நாடு நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர் என்பதிலிருந்து, மத்திய அரசு ஈழத் தமிழர்கள் மற்றும் தமிழக மீனவர்கள் பிரச்னையில் தொடர்ந்து அலட்சியம் காட்டி வருகிறது என்பது வெளிப்படை யாகவே தெரிகிறது.

மத்திய அரசு இதில் நியாயமான முடிவை எடுத்துச் செயல்படும் வரையில், அனைத்துக் கட்சி தமிழக உறுப்பினர்கள் தொடர்ந்து போராட வேண்டும் என்றும், இதில் ஒத்தக் கருத்துள்ள மற்ற பிற மாநில உறுப்பினர்களையும் இணைத்துக் கொள் வதற்கான முயற்சியில் ஈடுபடவேண்டும் என்றும் இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம்: 6

தூக்குத் தண்டனையை ரத்து செய்க!

முன்மொழிவோர்: கி. எழில்,
திருவள்ளூர் மாவட்ட இளைஞரணி தலைவர்

தூக்குத் தண்டனை என்பது மனித உரிமைக்கும், மனிதநேயத்துக்கும் எதி ரானது என்பதால், இந்தச் சட்டத்தை உடனே ரத்து செய்ய வேண்டும் என்று மத்திய அரசை இம்மாநாடு வலியுறுத் துகிறது.

குறிப்பாக, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கு என்ற பெயரில் பேரறிவாளன், சின்ன சாந்தன், முருகன் ஆகியோர்க்கு அளிக்கப்பட்டுள்ள தூக்குத் தண்டனையை ரத்து செய்தும், ஏற்கெ னவே 20 ஆண்டுகளுக்கும் மேலாக அவர்கள் சிறையில் இருந்த காரணத்தால், அதனையே கூட தண்டனையாகக் கணக்கில் கொண்டு அம் மூவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்றும் மத்திய அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.

தமிழ்நாடு அரசு இதில் தலையிட்டால், தூக்குத் தண்டனை ரத்து செய்யப்பட சட்ட ரீதியாக அதிக வாய்ப்பு இருப்பதால், முதல் அமைச்சர் மனித நேயத்துடன் இந்தப் பிரச்சினையை அணுகி, உரிய முயற்சிகளை எடுக்குமாறும் இம்மாநாடு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களைக் கேட்டுக் கொள்கிறது

------------------------- "விடுதலை” 29-8-2011

8 comments:

தமிழ் ஓவியா said...

முதல் அமைச்சருக்குத் தமிழர் தலைவரின் வேண்டுகோள் அறிக்கை


சட்டமன்றத்தின் இன்றைய தீர்மானத்திற்கு முன்பே காலையில் எழுதப்பட்ட அறிக்கை இது!
வாதப் பிரதிவாதங்களுக்கான நேரமல்ல இது!

மனிதநேயத்தை, கருணை உள்ளத்தைக் காட்ட வேண்டிய காலம்!
மூவர் தூக்குத் தண்டனை ரத்து செய்யக்கோரி
சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றலாம்

உலகத் தமிழர் முதல் உள்ளூர் தமிழர்கள் வரை எதிர்பார்க்கும் உணர்வு இது!
மக்கள் மன்றத்தின் உணர்வை சட்டமன்றம் பிரதிபலிக்க வேண்டும்

பேரறிவாளன் உள்ளிட்ட மூவரின் தூக்குத் தண்டனையை ரத்து செய்யக்கோரி தமிழ்நாடு சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கையை உலகத் தமிழர்கள் முதல் உள்ளூர் தமிழர்கள் உள்ளிட்ட அனைவரின் சார்பாக முதல் அமைச்சரிடம் கேட்டுக் கொள்ளும் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை அளிக்கப்பட்டு கடந்த 20 ஆண்டுகளாக சிறையில் வதியும் இளைஞர்கள் பேரறிவாளன், சின்னசாந்தன், முருகன் ஆகியோரின் தூக்குத் தண்டனையை ரத்து செய்து அவர்களைக் காப்பாற்ற வேண்டும் என்ற உணர்வு, நாடு முழுவதும் உள்ள மக்கள் உணர்வாக - வெள்ளப் பிரவாகமாக பெருக்கெடுத்தோடும் நிலையில், நாட்டில் உள்ள அனைத்துக் கட்சிகள் (காங்கிரஸார் தவிர) இம்மூவர் உயிரைக் காப்பாற்ற தமிழ்நாடு முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்கள் முன்வர வேண்டும்; கருணை காட்டிட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து வருகிறார்கள்.

முதல் அமைச்சரின் அறிக்கை

நேற்று இதுசம்பந்தமாக தமிழக சட்டப் பேரவையில் விதி 110 (விவாதம் செய்ய இயலாது என்ற விதி)இன் கீழ் அறிவித்த ஓர் அறிக்கையில்,

...எனவே பேரறிவாளன் உள்ளிட்ட மூன்று நபர்களின் கருணை மனு மேதகு குடிஅரசுத் தலைவர் அவர்களால் நிராகரிக்கப்பட்ட நிலையில், இதனை மாற்றுவதற்கு எந்தவித ஆதிகாரமும் மாநில முதல் அமைச்சர் என்ற முறையில் எனக்கு இல்லை என்பதை வலியுறுத்தித் தெரிவிக்க விரும்புகிறேன் என்று தமிழக முதல் அமைச்சர் தெரிவித்திருப்பது, மிகுந்த ஏமாற்றத்தையும் மன வேதனையையும் உலகமெங்கும் வாழும் கோடானு கோடி தமிழர்கள் உள்ளத்தில் ஏற்படுத்துவதாக இருக்கிறது.

1991 (5.3.1991)இல் மத்திய உள்துறை அமைச்சரகம் தெரிவித்த கடிதம் என்ற ஒரு கருத்துரை,

19.4.2000-த்தில் தி.மு.க. அமைச்சரவை முடிவு என்பது போன்ற சிலவற்றைச் சுட்டிக் காட்டி, தனது இயலாமையை நமது முதல் அமைச்சர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

வேண்டியது கருணை உள்ளம் - மனிதநேயம்!

மிக்க வணக்கத்துடன் நமது முதல் அமைச்சர் அவர்களுக்கு நாம் தெரிவித்துக் கொள்ள விரும்புவ தெல்லாம்; மூன்று உயிர்கள் இன்னும் சில நாள்கள் தான் என்று ஊசலாடும் நிலையில், முன்னால் வந்து நிற்க வேண்டியது முதலமைச்சரின் கருணை உள்ளமும் மனிதநேயமும் தானே தவிர, வாதத் திறமையோ, அரசியல் சட்டம்பற்றிய பல்வேறு அம்சங்களின் விளக்கமோ அல்ல.

வீதிகளில் திரளும் மாணவர்கள், மாணவிகள், இளைஞர்கள், கண்ணீரும் கம்பலையுமாக அழுது புலம்பி, (காஞ்சியில் செங்கொடி என்ற தீக்குளித்த பெண்ணின் தியாகம்போல்) பலவற்றில் ஈடுபடும் உணர்ச்சியின் உச்சத்திற்குச் சென்றுள்ள ஒரு மனிதாபிமான பிரச் சினையில், பரஸ்பர குற்றச்சாட்டுகளை - அரசியல் களமாக்கிக் கூறுவதைவிட மிக முக்கியம் எந்த வகையிலாவது உதவிட வழிவகை உள்ளதா என்பதை ஆராய்வதும், அப்படி ஆராய்ந்து முயற்சி எடுப்போருக்கு உறுதுணையாக இருப்பதும்தான்!

முதல்வரிடம் கோரிக்கை விடுப்பவர்கள் எவரும் அவரையோ, அவரது அரசையோ தர்ம சங்கடத்திற்கு உள்ளாக்கும் நோக்கத்தோடு செய்யவில்லை. இயற்கை யாக எழும் மனிதாபிமானக் காரணத்தாலும், துணிச் சலுடன் முடிவு எடுக்கும் திறன் முதல்வரிடத்தில் பல நேரங்களில் உண்டு என்ற நம்பும் எண்ணத்தாலும்தான்!

விதி 161 என்ன கூறுகிறது?

நெருப்புப் பற்றி எரியும்போது முதலில் செய்ய வேண்டிய பணி, அதனை எப்படியெல்லாம் எல்லோரும் ஒத்த நிலையில் முனைந்து அணைத்து, பாதிக்கப்படுவோரைக் காப்பாற்ற வேண்டும் என்ற சிந்தனை, செயலுக்குமே முன்னுரிமை தர வேண்டும் என்பதே!

இந்திய அரசியல் சட்டப்படி 161 விதியின்படி, மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளதா, இல்லையா என்பது சட்ட வியாக்யானத்தையும், அவரவர் தரும் விளக்கத்தையும் பொறுத்தது ஆகும்.

அதே விதியில் உள்ள கட்டளைபற்றி நமது முதல் அமைச்சர் அவர்கள் தாக்கல் செய்த அந்த அறிக்கையில்,

....இருப்பினும் சூழ்நிலைகள் மாறுபட்டிருந்தாலோ அல்லது புதியதாக ஏதாவது ஆதாரம் இருந்தாலோ, மரண தண்டனை பெற்ற நபரோ அல்லது அவர் சார்பாக வேறு ஒருவரோ குடிஅரசுத் தலைவருக்கு சமர்ப்பிக்கலாம்... என்பதே கதவுகள் முழுவதுமாக சட்டப்படி - 161 விதியின் படி மூடப்படவில்லை என்பதை வெளிச்சம் காட்டி விளக்குவதாக உள்ளது.
------ ----தொடரும்

தமிழ் ஓவியா said...

காஷ்மீர் முதல் கன்னியாகுமரிவரை இந்தியா ஒரே நாடு, ஒருமைப்பாடு ஓங்குக என்று முழங்கிடும் நிலையில், டில்லி நாடாளுமன்றத்தைத் தாக்கியவர்களுள் ஒருவரான தீவிரவாதி அப்சல்குருவுக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றினால் காஷ்மீரமேபற்றி எரியும் என்று கூறும் ஆட்சித் தலைவர்களே கூறிடும் நிலை அங்கே!

இங்கேயோ கருணைக்குக் கசிந்துருகினாலும் கிட்டாத நிலை!

நெல்லிக்காய் மூட்டை தமிழர்கள் நிலை கண்டு வெட்கப்படுவதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும்?

தீர்மானத்தின்மூலம் தமிழ்நாட்டு மக்களின் உணர்வு வெளியாகும்

மாநில அரசு, நல்வாய்ப்பாக தமிழ்நாடு சட்டப் பேரவை நடைபெற்றுக் கொண்டுள்ள நிலையில், அதில் ஒரு மனிதநேயம் பொங்கும் பரிந்துரை வேண்டுகோள் தீர்மானமாக கொணர்ந்து, நிறைவேற்றிட வேண்டும் என்பது (சில வாரங்களுக்குமுன் இலங்கை அரசின்மீது பொருளாதாரத் தடை ஏற்படுத்த போட்ட தீர்மானம் போல) தமிழ் மக்களின், (ஒரு சில தனி மரங்களைத் தவிர) ஒட்டு மொத்த உணர்வாகும். அத்தகைய தீர்மானம் இந்தப் பிரச்சினையில் உதவிகரமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு மாகும். மனிதநேயத்தின் உச்சத்திற்கும் செல்லும்வாய்ப் பும் ஏற்படுமே. இன்னமும் காலந் தாழ்ந்துவிடவில்லை.

மாறிய சூழ்நிலைகள் பல உள்ளன என்பதை அத் தீர்மானத்திலேயே சுட்டிக்காட்டலாமே!

தடா சட்டத்தின் மூலம் தீர்ப்பு!

1. தடா சட்டத்தின்படி பெறப்பட்ட வாக்குமூலங்களின் அடிப்படையில்தான் தீர்ப்பு கூறப்பட்டுள்ளது. பொதுவான குற்றவியல் நெறிமுறைக்கே தலை கீழானதடாவில் அம்மூவருக்கும் தூக்குத் தண்டனை தரப்பட் டுள்ள நிலையில், அத்தடா சட்டம் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையே ஒரு மாறிய சூழ்நிலைதானே!

2. ராஜீவ் காந்தி கொலை வழக்கு சம்பந்த விசாரணை இன்னும் தொடரும்போது, மேலும் புதிய ஆதாரமோ, குற்றவாளிகளோ கிடைக்கக் கூடிய வாய்ப்பும் உள்ளது என்றும் சுட்டிக் காட்டப்படலாமே!

மக்கள் மன்றத்தின் உணர்வை சட்டமன்றம் பிரதிபலிக்கலாமே!

எனவே மக்கள் மன்றம் இதில் காட்டும் உணர்வை - சட்டமன்றம் காட்டுவது மக்களாட்சியில் தவறல்ல; தேவையும்கூட
சென்னை உயர்நீதிமன்றம் அதன் கடமையைச் செய்ய முன்வரும் நிலையில், மனிதநேயம் சட்டவிதிகளை யும் தாண்டியது என்ற காட்ட வேண்டிய அரிய வாய்ப்பு இன்னமும் தமிழக அரசுக்கு குறிப்பாக நமது முதல்வ ருக்கு உண்டு. அதை அவர்கள் பயன்படுத்தி, புதிய முன்மாதிரியை ஏற்படுத்தலாம்.

அரசமைப்புச் சட்டத்தில் நூறு திருத்தங்கள் வரவில்லையா?

விதிகளும், சட்டங்களும், மரபுகளும் மக்களுக்காகத் தானே தவிர, விதிகளுக்காக, சட்டங்களுக்காக மக்கள் என்ற நிலை கிடையாது என்பதை அறியாதவரல்லவே முதல் அமைச்சர் அவர்கள்.

மாற்றப்பட முடியாத விதிகள் என்றால் இந்திய அரசியல் சட்டத்திற்கு இதுவரை 100 திருத்தங்கள் வந்திருக்க முடியாதே!

முதல் அமைச்சருக்கு வேண்டுகோள்!

எனவே மீண்டும் மனிதநேய மலர்ச்சியைக் காட்ட வேண்டிய மகத்தான கடமையைச் செய்ய வேண்டுமென முதல் அமைச்சர் அவர்களை, உலகத் தமிழர்கள் முதல் உள்ளூர் மக்கள் வரை அனைவர் சார்பாக கேட்டுக் கொள்கிறோம்!

கி. வீரமணி தலைவர் திராவிடர் கழகம்

வரவேற்கிறோம்! வரவேற்கிறோம்!! நன்றி கூறுகிறோம்!

மேலே காணப்படும் அறிக்கை இன்று காலை 8 மணிக்கு ஏற்கெனவே எழுதப்பட்டது. பேரறிவாளன், சின்னசாந்தன், முருகன் ஆகியோரின் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும் என்று குடியரசு தலைவருக்கு வேண்டுகோள் விடுத்து தமிழ்நாடு சட்டப் பேரவையில் இன்று காலை 11 மணிக்கு தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதை வரவேற்கிறோம்! வரவேற்கிறோம்!! தமிழக முதல்வருக்கு நன்றி கூறுகிறோம்.

- கி. வீரமணி ”விடுதலை” 30-8-2011

தமிழ் ஓவியா said...

சென்னை உயர்நீதிமன்றம் ஆணை

ராஜீவ் கொலை வழக்குத் தொடர்பாகக் குற்றஞ் சாட்டப்பட்டு, தூக்குத் தண்டனை விதிக்கப் பெற்று - வரும் செப்டம்பர் 9ஆம் தேதி தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், அதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட மனுவின்மீது நீதிபதிகள் நாகப்பன், சத்திய நாராயணன் ஆகியோர் தூக்குத் தண்டனை நிறைவேற்ற 8 வார காலம் தடை விதித்துத் தீர்ப்பு இன்று கூறினார்கள்.

மூத்த வழக்கறிஞர்கள் ராம்ஜெத்மலானி, மோசித் சவுத்ரி, காலின் கான்சாலிஸ் ஆகியோர் குற்றஞ் சாட்டப்பட்டவர்கள் சார்பில் ஆஜரானார்கள்.
--”விடுதலை” 30-8-2011

தமிழ் ஓவியா said...

சட்டமன்றத்தில் இன்று தூக்குத்தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்கக் கோரும் சட்டமன்ற தீர்மானம்


தமிழ்நாடு முதல மைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் இன்று காலை (30.8.2011) சட்டமன்றப் பேரவை யில், சுதேந்திரராஜா என் கிற சாந்தன், சிறீஹரன் என்கிற முருகன் மற்றும் பேரறிவாளன் என்கிற அறிவு ஆகியோரின் கருணை மனுக்களை மறுபரிசீலனை செய்து, மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றியமைக்குமாறு மேதகு இந்தியக் குடியரசுத் தலைவரை வலியுறுத்தும் தீர்மானத் தினை முன்மொழிந்து ஆற்றிய உரை:

பேரவைத் தலைவர் அவர்களே,

இந்திய அரசமைப் புச் சட்டத்தின் பிரிவுக் கூறு 72இல் தனக்குள்ள அதிகாரத்தினை பயன் படுத்தி, திருவாளர்கள் சுதேந்திரராஜா என்கிற சாந்தன், ஸ்ரீஹரன் என்கிற முருகன் மற்றும் பேரறிவாளன் என்கிற அறிவு ஆகியோரின் கருணை மனுக்களை மேதகு குடியரசுத் தலை வர் நிராகரித்ததை யடுத்து எழுந்த சூழ்நிலை குறித்தும், இந்தப் பிரச் சினையில், தமிழ்நாடு முதலமைச்சர் என்ற முறையில் சட்டப்படி எனக்குள்ள அதிகாரம் குறித்தும், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி 110-இன் கீழ் ஓர் அறிக்கையினை இந்த மாமன்றத்தில் நேற்று நான் அளித்தேன்.

அந்த அறிக்கையில், திருவாளர்கள் சுதேந்திர ராஜா என்கிற சாந்தன், ஸ்ரீஹரன் என்கிற முரு கன் மற்றும் பேரறிவா ளன் என்கிற அறிவு ஆகியோரின் கருணை மனுக்களை முதலமைச் சராகிய நானோ, தமிழ் நாடு அரசோ, மாநில ஆளுநரோ மீண்டும் பரிசீலனை செய்ய முடியாது என்பதை தெளிவு பட நான் கூறியிருந்தேன்.

மத்திய அரசு இந்திய அரசமைப் புச் சட்ட பிரிவுக்கூறு 257(1)-இன் படி, கருணை மனு இந்திய அரசமைப்புச் சட்டப் பிரிவுக்கூறு 72-இன்படி, குடியரசுத் தலைவரால் நிராகரிக் கப்பட்ட பின், அதே பிரச்சினையை மாநில ஆளுநர் இந்திய அரச மைப்புச் சட்டப் பிரிவுக் கூறு 161-இன் படி எடுத் துக் கொள்ள முடியாது என்றும், மீண்டும் குடி யரசுத் தலைவர் தான் கருணை மனுவை மறுபரி சீலனை செய்ய இயலும் என்றும் உத்தரவிட்டதை சுட்டிக் காட் டினேன்.

இந்தச் சூழ்நிலையில், மேற்படி மூவருக்கும் தூக்கு தண்டனை விரை வில் நிறைவேற்றப்பட்டு விடும் என்று தமிழக மக்கள் வருத்தம் அடைந்துள் ளனர். பல்வேறு அரசியல் கட்சிகளும் மேற்படி மூவரின் தூக்கு தண்ட னையை ரத்து செய்வதற்கான நடவடிக் கைகள் எடுக்கப்பட வேண்டும் என வேண்டுகோள் விடுத்து வருகின்றன. எனக்கும் இது குறித்து கோரிக்கைகள் வந்துள்ளன.

எனவே, தமிழர்களின் உணர்வுக்கு மதிப்பளிக்கும் வகையில், தமிழக அரசின் சார்பில் பின்வரும் தீர்மா னத்தை நான் முன்மொழிகிறேன்.

தீர்மானம்

"தமிழக மக்களின் உணர்வு களுக்கும், தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளின் கருத்துகளுக் கும் மதிப்பளிக்கும் வகையில், திருவாளர்கள் சுதேந்திரராஜா என்கிற சாந்தன், ஸ்ரீஹரன் என்கிற முருகன் மற்றும் பேரறிவாளன் என்கிற அறிவு ஆகியோரின் கருணை மனுக்களை மறுபரிசீலனை செய்து அவர்களின் மரண தண்டனையை ஆயுள் தண்ட னையாக குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மேதகு இந்தியக் குடி யரசுத் தலைவரை தமிழ்நாடு சட்ட மன்றப் பேரவை வலியுறுத்திக் கேட் டுக் கொள்கிறது."

தமிழக மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் வகையில், என்னால் முன்மொழியப்பட்ட தீர்மானத்தை ஒரு மனதாக நிறைவேற்றித் தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டு அமைகிறேன். தீர்மானம் ஒரு மனதாக நிறை வேற்றப்பட்டது.

முன்னதாக இத்தீர்மானத்தை வரவேற்று பண்ருட்டி ராமச்சந்திரன் (தேமுதிக), சவுந்தரராஜன் (சி.பி.எம்.), ஆறுமுகம் (சி.பி.அய்), கதிரவன் (பார்வடு பிளாக்), டாக்டர் கிருஷ்ண சாமி (புதிய தமிழகம்), ஜவஹர்லுல்லா (மு.மு.க.), தனியரசு (கொங்கு இளைஞர் பேரவை), செ.கு.தமிழரசன் (இ.கு.க.) ஆகியோர் பேசினர்.
----------”விடுதலை” 30-8-2011

தமிழ் ஓவியா said...

வேண்டாம் தற்கொலை!

பேரறிவாளன் உள்ளிட்ட மூவர் உயிரின் நிலை என்ன? அவர்களின் உயிர்கள் மீட்கப்பட்டு விடக் கூடாதா? என்று உலகத் தமிழர்கள் அத்தனைப் பேரும் உறக்கமின்றித் தத்தளித்துக் கொண்டிருக்கும் ஒரு காலகட்டத்தில் இந்தக் காரணத்துக்காக இன்னொரு செங்கொடி என்ற தமிழச்சி தீக்குளித்துத் தன் உயிரைப் போக்கிக் கொண்டார் என்பது வெந்தப் புண்ணில் எரியும் தீக்குச்சியைச் சொருகியது போல் இருக்கிறது. இது தேவைதானா? இந்தச் செயலால் விளையப் போவது என்ன? எல்லோருக்கும் - உணர்வு இருக்கிறது. தற்கொலை செய்து கொள்ளாதவர்கள் எல்லாம் உணர்வற்றவர்கள் என்று பொருளாகாது.

ஒரு போராட்டக் களத்தில் உயிர் தருவது என்பது வேறு - அது உன்னதமானது வரலாறும் மெச்சக்குரியதாகும். அதே நேரத்தில் ஒரு களத்தில் நம் உயிரை நாமே மாய்த்துக் கொள்வது எப்படி உன்னதமானதாக இருக்க முடியும்?

போராட வேண்டிய நேரத்தில் உயிரைப் போக்கிக் கொள்வதால் எதிரிக்குத் தான் பலம் சேர்க்கும்.

இந்த முறையே கூடாது என்று பொதுவாக தலைவர்கள் கோரிக்கை வைக்கிறார்கள் என்றாலும், இது போதுமானதல்ல; மிக அழுத்தமாகக் கூற வேண்டும்; திருப்பித் திருப்பி கூற வேண்டும். அறிக்கைகளாக வெளியிட வேண்டும்.

தற்கொலை செய்து கொண்டவர்களை வீரர்களாகவும், வீராங்கனைகளாகவும் காட்டிப் பெரிதுபடுத்தும்போது, விளம்பரப்படுத்தும்பொழுது, மற்றவர்கள் மத்தியிலும் வேறு வகையான உணர்ச்சிகள் தூண்டப்படுவதற்குக் காரணமாக இருந்து விடக் கூடாதல்லவா!

இதுபோன்ற கூட்டங்களில் இரங்கல் உரையாற்றும் போதுகூட, இதனை மிக அழுத்தமாக வெளிப்படுத்த வேண்டும்.

சாகச் செய்வானை சாகச் செய்யாமல் சாகின்றாய் தமிழா என்று புரட்சிக் கவிஞர் சொன்ன வரிகளை நினைவுபடுத்திக் கொள்வது நல்லது.

உண்ணாவிரதம் இருந்து தற்கொலை செய்வதாக மிரட்டுவதையேகூட தந்தை பெரியார் ஏற்றுக் கொண்டவர் அல்லர்.

காந்தியார் அத்தகு உண்ணாவிரதம் மேற் கொண்டபோதுகூட அதனை சண்டித்தனம் என்று கண்டித்தவர் தந்தை பெரியார்.

நம்மீது பரிதாபத்தை உண்டாக்கி உரிமைகளைக் கேட்பது கூடாது - அது ஒரு வகையான யாசகம் ஆகும்.

தந்தை பெரியார் அந்தக் கால கட்டத்தில் எச்சரித்தது - சரியாகப் போய் விட்டது என்பதை இப்பொழுது அரங்கேறும் உண்ணாவிரதங்களைப் பார்க்கும் பொழுது தெளிவாகிறதே!

எந்தப் போராட்டம் என்றாலும் வெளிப்படையாக அறிவித்து, தடை வந்தாலும் அதனைமீறி நடத்திக் காட்டி, அதற்குரிய தண்டனையை இன்முகத்தோடு எதிர் கொள்வதுதான் உண்மையான வீரமாகும்.

எந்தவித உரிமைகளைப் பெறுவதாக இருந்தாலும் அதற்குரிய கஷ்ட நஷ்டம் என்னும் விலை கொடுத்தாக வேண்டும் என்பதுதான் சரியான அணுகுமுறையும், நாணயமான செயல்முறையுமாகும்.

போராட்டக் காலங்களில் தந்தை பெரியார் வெளியிடும் அறிக்கைகளைப் பார்த்தால் அதன் வீரியமும், விவேகமும் விளங்கும்.

வீணாக உணர்ச்சி வயப்பட்டு, பின் விளைவு களைப் பற்றிக் கவலைப்படாமல் மேற்கொள்ளும் எந்தச் செயலும் எதிர் விளைவைத்தான் ஏற்படுத்தும் - ஏமாற்றத்தைக் காண்பதுதான் மிச்சமாகும்.

முத்துக்குமரனோடு முடிந்து போகும் என்று நினைத்தது நடக்கவில்லை; இப்பொழுது செங்கொடியும் அந்தப் பாதையைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு விட்டார். இதாவது கடைசியாக இருக் கட்டும் என்று தலைவர்களும், ஊடகங்களும் உரக்கக் கூறட்டும்! சப்தம் போடட்டும்!

உயிர் என்பது விலை மதிக்கப்பட முடியாதது; அது மலிவாகப் போய் விடக் கூடாது; வெறும் உணர்ச்சி வயம் என்று பலகீனத்திற்குப் பலியாகி விடக் கூடாது.

தன்னைத்தானே மாய்த்துக் கொண்டவர்களின் கல்வெட்டில் - தற்கொலை செய்து கொள்ளாதே மனிதா! என்ற வாசகங்கள் பொறிக்கப்படட்டும்!

திருத்தணியில் நடைபெற்ற காஞ்சி மண்டல திராவிடர் கழக மாநாட்டில்கூட தமிழர் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் தமிழினப் பெரு மக்களுக்கு இந்த வேண்டுகோளை முன் வைத் துள்ளார் - தலைவர்களும் பின்பற்றுவார்களாக!
---”விடுதலை” தலையங்கம் 30-8-2011

தமிழ் ஓவியா said...

மரணத்தைவிட கொடுமையானது மரணத்தை ஒவ்வொரு நாளும் எதிர்ப்பதாகும். இந்தத் தூக்குத் தண்டனையில்கூட நளினுக்குத் தூக்குத் தண்டனையை மாற்றி ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டதே - வரவேற்கிறோம். அதே அளவுகோல், அதே அணுகுமுறை இந்த மூவர்கள் பேரிலும் காட்டலாமே என்பதுதான் நமது வேண்டுகோள்.

சட்டத்தில் பாலியல் பார்த்துத் தீர்ப்பு என்பது கிடை யாதே! அதே சட்டப்படி பேரறிவாளன், சின்னசாந்தன், முருகன் ஆகியோர் விஷயத்திலும் நடந்து கொள்ளலாமே என்பதுதான் நமது அன்பான வேண்டுகோள்.

காஞ்சிபுரத்திலே இது தொடர்பாக ஒரு பெண் தீக்குளித்து மாண்டார் என்ற தகவல் இப்பொழுது கிடைத்தது. இத்தகைய முயற்சிகளில் யாரும் இறங்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம். தற்கொலை களால் இவற்றிற்குப் பரிகாரம் காண முடியாது. உரிய முறைகளில் போராடி வெற்றி பெற வேண்டும் என்று குறிப்பிட்டார்.
----வீரமணி -”விடுதலை” 30-8-2011

தமிழ் ஓவியா said...

தினமலரின் எரிச்சல்!


தமிழ்நாடு சட்டப்பேரவையில் தூக்குத் தண்டனையை ரத்து செய்து ஆயுள் தண்டனையாக மாற்றவேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதுகுறித்து பக்கவாத்தியம் பகுதியில் டவுட் தனபாலை விட்டுப் பேச வைத் திருக்கிறது தினமலர் பார்ப்பன ஏடு!

இதே மாதிரி எல்லா கொலை, கற்பழிப்பு வழக்குக் கைதிகளையும் விட்டுடணும்... அப்போதான், தமிழக மக்களின் உணர்வு களுக்கு முழுமையா மதிப்பளிச்சதா அர்த்தமாகும்... என்று கிண்டலடித்து உள்ளது.

என்னதான் அ.தி.மு.க.வை இந்தக் கூட்டம் விழுந்து விழுந்து ஆதரித்தாலும், தமிழுணர்வு என்ற பிரச்சினைவரும் போது தங்களின் பார்ப்பன அடையாளத்தைக் காட்டிக் கொண்டு விடுகிறார்கள் பார்த்தீர் களா?

ஆயிரக்கணக்கான மக்களைக் கொன் றொழித்ததற்கும், தமிழ்ப் பெண்களைக் கற்பழித்துக் கொடுமை நடைபெற்றதற்கும் காரணமான ராஜபக்சேவுக்கு டில்லியில் சிவப்புக் கம்பள வரவேற்பு கொடுக்கும் போது, எங்கே போனது இந்தப் புத்தி?

சங்கர மடத்தின் அடுக்களையில் ஒளிந்துகொண்டிருந்ததோ!

அல்லது ராஜபக்சேயின் பங்களாவில் பங்கா இழுத்துக் கொண்டிருந்ததோ!
--”விடுதலை” 31-8-2011

தமிழ் ஓவியா said...

அடுத்து என்ன?


பேரறிவாளன், சின்னசாந்தன், முருகன் ஆகியோர் மீதான தூக்குத்தண்டனை தொடர்பாக நேற்று நடைபெற்ற நிகழ்வுகள் - ஒரு திருப்பு முனையாகவும், கொஞ்சம் நிம்மதி அளிப்பதாகவும் அமைந்திருந்தன.

8 வார காலம் தூக்குத் தண்டனைக்கு இடைக்காலத் தடையை சென்னை உயர்நீதிமன்றம் அளித்ததன்மூலம் ஒரு இறுக்கமான நிலையிலிருந்து மக்கள் கொஞ்சம் விடுபட்டுள்ளனர் என்பதில் அய்யமில்லை.

இது ஒரு தற்காலிக நிலைதான்; நிரந்தரமான நிலை என்பது - மூவர்மீது நிலுவையில் உள்ள தூக்குத் தண்டனையை ரத்து செய்வதற்கான முயற்சிகளில் வெற்றி பெறுவதுதான்.

இந்த வழக்கில் ஏற்கெனவே தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு பிறகு ஆயுள் தண்டனையாகக் குறைக்கப் பட்டுள்ள நளினிக்குக் காட்டப்பட்ட அதே சலுகை இந்த மூவர் விஷயத்திலும் காட்டப்படவேண்டும் என்பதுதான் அனைவரின் ஒட்டுமொத்த வேண்டுகோளாகும்.

தீர்ப்பில் ஆண் - பெண் என்ற பாலியல் வேறுபாடுக்கு இடம் இல்லை என்பதுதான் சட்டத்தின் நிலை என்பதால், இந்தத் திசையில் அழுத்தத்தைக் கொடுப்பதுதான் சரியானதாக இருக்கும்.

ஏற்கெனவே 20 ஆண்டுகளுக்குமேல் தண்டனையை இவர்கள் அனுபவித்துவிட்டதால் நளினி உள்பட நால்வரையும் விடுதலை செய்வதுதான் நியாயமானதாக இருக்க முடியும்.

இப்பொழுது தற்காலிகமாக கிடைத்திருக்கும் வெற்றி எந்த ஒரு கட்சியின் தனிப்பட்ட வெற்றி என்று கூற முடியாது. ஒட்டுமொத்தமான இனவுணர்வும், மனித நேயமும், நியாயவுணர்வும் வெடித்துக் கிளம்பியிருக் கின்றன. திட்டமிட்ட ஏற்பாடுகள் (டீசபயளைந) ஏதுமின்றி அவரவர்களுக்கும் ஏற்பட்டுள்ள இயல்பான உணர்வுகள் தான் தமிழ்நாட்டில் பெரும் கொந்தளிப்பினை உருவாக்கிற்று.

இதன் விளைவாகக் கிடைத்துள்ள தற்காலிக வெற்றியை முழு வெற்றியாக மலர்விக்க தொய்வின்றி மக்கள் போராட்டத்தை எடுத்துச் செல்லவேண்டியது மிகவும் அவசியமாகும்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நேற்றைய தினம் ஒருமித்த முறையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தூக்குத்தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்கவேண்டும் என்று அந்தத் தீர்மானம் கூறுகிறது.

தமிழ்நாட்டின் முக்கிய எதிர்க்கட்சியான தி.மு.க.வின் தலைவர் கலைஞர் அவர்களும் அதனை வழிமொழிகின்ற வகையிலே, மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத் துள்ளார். தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றவேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

பொதுவாக அனைத்துத் தரப்பினரின் கருத்தும் இதுதான். இப்பொழுது நாடாளுமன்றம் நடைபெற்றுக் கொண்டிருப்பதால், தமிழ்நாட்டு மக்களின் இந்த நிலையை முன்வைத்து, அனைத்துத் தரப்பினரின் ஆதரவையும், அனுதாபத்தையும் ஒன்று திரட்டி, நல்லதோர் முடிவினை எட்டுவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

தி.மு.க. நாடாளுமன்றக் குழுவின் தலைவர் திரு. டி.ஆர். பாலு அவர்கள் ஈழத் தமிழர் பிரச்சினை தொடர்பான முன்மொழிவின் மீது ஒன்று திரண்டு தமிழ்நாட்டு உறுப்பினர்கள் குரல் கொடுத்ததுபோலவே, இந்தப் பிரச்சினையிலும் நடந்துகொண்டால், நல்லது நடக்கும், நல்ல விளைவை ஏற்படுத்தும் என்பதில் அய்யமில்லை.

சென்னை உயர்நீதிமன்ற அமர்வு கொடுத்திருக்கும் எட்டு வார காலம் இடைக்காலத் தடை என்கிற வாய்ப்பை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.

இப்பொழுது பந்து மத்திய அரசின் உள்துறையிடம் உள்ளது. ஒரு தீர்ப்பை முன்வைத்து. இதுவரை இந்த அளவு மக்கள் எழுச்சியை, கொந்தளிப்பைக் காட்டிய தில்லை என்பது வெளிப்படை!

இதனை மத்திய அரசு புரிந்துகொள்ளவேண்டும் - உளவுத் துறை மூலமும் மத்திய அரசின் காதுகளுக்கு எட்டியிருக்கும். அதன் அடிப்படையிலும், ஒரு மாநில அரசே ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றியுள்ளதால், அதன் முக்கியத்துவத்தையும் புரிந்துகொண்டு மத்திய அரசு செயல்படவேண்டும்; உள்துறை அமைச்சர் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர் என்பதால் - வேறு உணர்வுகளுக்கு இடம் கொடுக்காமல், வெகுமக்களின் உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுத்து, மூவர்மீதான தூக்குத் தண்டனையை ரத்து செய்து, ஏற்கெனவே அனுபவித்த தண்டனையை ஆயுள் தண்டனையாகக் கருதி, நளினி உள்பட நால் வரையும் விடுதலை செய்யவேண்டுமாய்க் கேட்டுக் கொள்கிறோம்.

எல்லா மன்றங்களையும்விட மக்கள் மன்றமே வலிமையானது. அதைக் கவனத்தில் கொள்ளவும் வலியுறுத்துகிறோம்.
---”விடுதலை” 31-8-2011