டவுட் தனபாலு: கேட்டா சட்ட வல்லுனருங்கிறீங்க... இனமானத் தலைவருங் கிறீங்க... ஆனா, சமச்சீர் கல்வியை ரத்து செஞ்சு சட்டம் கொண்டு வந்தாங்களா; ஒத்தி வைச்சு சட்டம் கொண்டு வந்தாங்களான்னுகூட தெரியாம இருக்கீங்க... தீர்ப்பு வந்ததும், ஏதோ அறிக்கை விட்டா கணும்னு கிளம்பிட்டீங்க போல...! (தினமலர் 10-8-2011)
தினமலர்என்கிற வாஸ்கோடகாமா புதிய கண்டுபிடிப்பைக் கண்டு பிடித்துட்டாருங்கோ!
தி.மு.க. அரசு தயாரித்த சமச்சீர் கல்வியே கூடாது; அது அவசர கதியில் தப்பும் தவறுமாகக் தயாரிக்கப் பட்டது என்பதுதானே அ.தி.மு.க. அரசின் நிலைப் பாடு?
அதனைத்தானே திரா விடர் கழகத் தலைவர் சுட்டிக் காட்டினார். அ.தி.மு.க. அரசின் குற்றச்சாற்றை குப்பைக் கூடையில் தூக்கி எறிந்து தி.மு.க. அரசு கொண்டு வந்த சமச்சீர் கல்வித் திட் டத்தை 10 நாட்களுக்குள் செயல்படுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் ஓங்கிக் குட்டிவிட்டதே!
பாண்டிய மன்னன் மண் சுமந்த கூலி (சிவபிரான்) யின் முதுகில் அடித்த சாட்டையடி உலகில் உள்ள அனைத்து உயிர்களின் முதுகுகளிலும் சுளீர் என்று உறைத்தது என்று கூறும் புராணத்தை நம்பும் தினமலர் கூட்டத்தின் பூணூல் முதுகுகளிலும், உச்சநீதிமன்றம் கொடுத்த சாட்டையடி சுளீர் என்று வலித்திருக்கிறது போலும்! அந்த வலியின் உளறல் தான் தினமலரின் டவுட் தனபாலு எழுத்தில் நன்னாவே பஷ்டமா தெரியுது.
பரிதாபம், அவர்கள் என்ன செய்வார்கள்?
பாப்பார வீட்டுப் பெண்ணையும், சேரிவீட்டுப் பையனையும் ஒரே பாடத்தை படிக்கச் சொல்லி விட்டாரே இந்த சூனா மானா கருணாநிதி!
மறைமுகமான நமது குலக்கல்வித் திட்ட யுக்தியைச் சந்தி சிரிக்க வைத்துவிட்டாரே - இந்தக் கருஞ்சட்டைத் தலைவர் வீரமணி என்ற ஆத்திரத்தில் அக்கிரகார ஏடு அக்னி சட்டியில் விழுந்த விட்டில் பூச்சியாகத் துடியாய்த் துடிக்கிறது!
என்னதான் மூடி மறைத்தாலும் அப்பப்ப தன் குல தர்ம புத்தியை வெளிப் படுத்திக் கொண்டுதான் இருக்கிறது தினமலர் வகையறாக்கள்.
இதனைத் தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டும். அவ்வளவுதான்!
திராவிடர் கழகத் தலைவர் வீரமணி எப்படிப்பட்ட சட்ட வல்லுநர் என்பதை முதல் அமைச்சர் அம்மையாரைக் கேட்டுத் தெரிந்து கொள்ளலாமே! தமிழ்நாடு சட்டம் 45 (1994) 31-சி பிரிவின்கீழ் எப்படி வந்தது என்பது ஊருக் கும் உலகத்துக்கும் தெரியுமே! தினமலர் போன்ற உத்திராட்சப் பூனைகளுக்கு மட்டும் தெரியவே தெரியாது!
தம் கண்களை மூடிக் கொண்டு அய்யய்யோ பூலோகம் இருண்டுவிட் டது என்று கீச் மூச்! என்று கத்துகிறது தினமலராகிய கருவாட்டுப் பூனை.
--------------------"விடுதலை” 10-8-2011
2 comments:
புதுப் பாடம் படிப்பது மாணவர்கள் மட்டுமல்ல!
நூறு நாள்களுக்குப் பிறகு ஒரு வழியாக சமச்சீர் கல்விப் பாடத் திட்டம் தமிழ்நாட்டில் முதல் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை செயல்படுத்தப்படும் விடிவெள்ளி முளைத்திருக்கிறது.
இதனைத் தொடக்கத்திலேயே செய்திருந்தால் நூறு நாள் கல்வி மாணவர்களுக்குப் பாதித்திருக்காது. அரசாங்கத்திற்கும் தேவையில்லாத கெட்ட பெயரும் வந்து சேர்ந்திருக்காது.
இந்த அரசுக்குக் கூட இருந்து கீதா ரகசியம் ஓதும் சோ ராமசாமி, குருமூர்த்தி போன்ற பார்ப்பனர்களுக்கும், நாட்டு மக்களுக்கும் என்ன சம்பந்தம்?
பார்ப்பனர்களின் உலகம்தான் அவாளின் உலகம். அதன் நன்மை - தீமைகளை மட்டும் மய்யங் கொண்டு சிந்திக்கக் கூடியவர்கள்; அதன் பொருள் பெரும்பான் மையான தமிழ்நாட்டு மக்களின் நலனுக்குக் கேடான வற்றை மட்டும்தான் சேகரித்துக் கொடுப்பார்கள்.
இந்தச் சமச்சீர் கல்வித் திட்டத்தில் கையைச் சுட்டுக் கொண்ட பிறகாவது தமிழ்நாடு அரசு புத்திகொள் முதல் பெறும் என்று நம்புவோமாக - எதிர்பார்ப்போமாக!
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கல்வியில் கை வைக்கும் எந்த அரசும் வெகு ஜன விரோத அரசாகவே கணிக்கப்படும்.
கடந்த கால வரலாறு இதைத்தான் கற்பிக்கிறது - 1937இல் ஆட்சிக்கு வந்த ஆச்சாரியார் ராஜாஜி இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட கிராமப் பள்ளிகளை இழுத்து மூடினார்; தேவையில்லாமல் இந்தியைப் புகுத்தினார் - முழு அளவு ஆட்சிக் காலத்தைத் தொடர முடியவில்லை.
1952இல் மீண்டும் அதே ஆச்சாரியார் ஆட்சிக்கு வந்தார், 6000 கிராமப் பள்ளிகளை இழுத்து மூடினார். அரை நேரம் படித்தால் போதும் என்றார், அரை நேரம் அப்பன் தொழிலை செய்ய வேண்டும் என்ற நவீன குலக் கல்வித் திட்டத்தைக் கொண்டு வந்தார். கடும் எதிர்ப்புக் காரணமாக இரண்டே ஆண்டு காலத்தில் ஆட்சியை விட்டு அகன்று நடையைக் கட்டினார்.
1979இல் எம்.ஜி.ஆர். அவர்கள் பிற்படுத்தப்பட் டோருக்கு ஆண்டு வருமானம் 9000 ரூபாய் என்று வரம்பு கட்டி, அதைத் தாண்டிய பிற்படுத்தப்பட்டோருக்குக் கல்வி வேலைகளில் இடஒதுக்கீடு கிடையாது என்றார். அதன் விளைவு 1980 சனவரியில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 39 தொகுதி களில் 37 இடங்களில் பெருத்த தோல்வியைச் சந்தித்தார்.
இந்த வரலாற்றின் போக்கை நமது முதல் அமைச்சரும் புரிந்து கொண்டிருந்தால் இந்தத் தவறினைச் செய்திருக்க மாட்டார். இனி இதுபோன்ற விஷப் பரீட்சையில் ஈடுபட மாட்டார் என்றே கருதுகிறோம்.
இதில் மிக முக்கியமாகப் பார்ப்பன ஊடகங்கள் நடந்து கொண்ட விதத்தை நமது தமிழர்கள் குறிப்பாக தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மை மக்கள் புரிந்து கொண்டாக வேண்டும்.
சமச்சீர் கல்வி என்பது சமத் தாழ்வு கல்வி என்ற சொற்களால் தொடர்ந்து பார்ப்பனர் சங்கத்தின் அதிகாரப் பூர்வமற்ற தலைவரான திருவாளர் சோ ராமசாமி துக்ளக் ஏட்டில் எழுதி வந்தாரே - அதனைக் கொஞ்சம் கவனிக்க வேண்டும்.
எல்லோருக்கும் சமமான கல்வி என்பது சமச்சீர் கல்வி; எல்லோருக்கும் சமமான கல்வி இருக்கக் கூடாது என்பது பார்ப்பனர்கள் கூறும் சமத்தாழ்வு கல்வி என்பதாகும்.
----தொடரும்
தொடர்ச்சி...
அவர்கள் பல தலைமுறைகளாகப் படித்து ஒரு கட்டத்தைத் தாண்டி மேலே சென்று விட்டார்களாம். இந்தச் சமச்சீர் கல்வி மூலம் மேலே உயரே சென்ற அவர்களை இவர்கள் நிலைக்குத் தாழ கொண்டு வந்து படிக்கச் செய்கிறார்களாம் - சமத்தாழ்வு கல்வி முறை என்று பார்ப்பனர்கள் சொல்லுவதன் உட்பொருள் இதுதான்.
அரசுப் பள்ளி, மெட்ரிக் பள்ளி, ஓரியண்டல் பள்ளி, ஆங்கிலோ இந்தியன் பள்ளி என்று தனித்தனி கல்வி முறை இருந்தால் அது ஒரு குழப்பமான நிலையைத் தான் உண்டாக்கும்.
அரசுப் பள்ளியில் 5ஆம் வகுப்புப் படிக்கும் மாணவனும், மெட்ரிக்கில் 5ஆம் வகுப்பு படிக்கும் மாணவனும் சம நிலையில் இருப்பான் என்று சொல்ல முடியாது. இது சமூகத்தில் ஏற்ற - தாழ்வு என்ற பிளவை ஏற்படுத்தத்தான் வழி வகுக்கும்.
+2 தேர்வு முடிந்து விரும்பும் கல்வியைப் படிக்கச் செல்லும்பொழுது பல இடர்ப்பாடுகளை சந்திக்க வேண்டிய அவசியம் ஏற்படும்.
சமச்சீர் கல்வி முறையில் மாநில அளவிலோ அகில இந்திய அளவிலோ நுழைவுத் தேர்வுகளை நடந்த வேண்டிய அவசியம் இருக்கவே இருக்காது.
சமச்சீரான கல்வி இல்லாததால் +2 மதிப்பெண்களை வைத்து தகுதியை நிர்ணயிக்கக் கூடாது என்று சொல்லி வந்தவர்கள், சமச்சீர் கல்வி அமல்படுத்தப்படும் நிலையில் அந்தப் பல்லவியை இனிமேல் பாட முடியாது.
இந்த வகையில் கடந்த தி.மு.க. ஆட்சியில் அறிமுகப்படுத்தப்பட்ட சமச்சீர் கல்வி இந்தியத் துணைக் கண்டத்துக்கே வழிகாட்டக் கூடியதாகும்.
இந்தப் பிரச்சனையில் அரசுக்குக் கிடைத்தது தோல்வி என்று எண்ணாமல் இதன்மூலம் மாணவர்கள் புதிய பாடத்தைப் படிப்பது போலவே, புதிய பாடத்தைக் கற்றுக் கொள்ளும் வாய்ப்புக் கிடத்ததாக அரசும் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதே நமது வேண்டுகோள்!
ஆம், புதிய பாடம் மாணவர்களுக்கு மட்டுமல்ல, அரசுக்கும்தான்!
---"விடுதலை” தலையங்கம் 10-8-2011
Post a Comment