Search This Blog

30.8.11

நான் வெறும் இராமசாமி - பகவான் இராமசாமி ஆகிவிடுவேனே! -பெரியார் விளக்கம்


கடவுள், மதம் முளைத்ததே பார்ப்பான் வந்த பிறகுதானே?


தேவர்கள் என்றால் பார்ப்பனர்கள்; அசுரர்கள் என்றால் நாம் - தமிழர்கள்! நமக்கும் அவர்களுக்கும் பெரிய போராட்டம் அந்தக் காலத்திலேயே நடந்திருக்கிறது! அப்படி நடைபெற்ற போராட்டத்தை எல்லாம் ஒரு கதையாக எழுதியிருக்கிறார்கள்.

பார்ப்பான் உயர்ந்தவன். அவன் கடவுளுக்குச் சமமானவன். பார்ப்பான் நம்மைத் தொடமாட்டான். நம் வீட்டில் சோறு திங்க மாட்டான். நம்மைக் கண்டால் ஒதுங்கியே போவான். அதுபோலவே கடவுள்களும். எந்தச் சாமியை எடுத்துக் கொண்டாலும் அந்தக் கல்லுக்குப் பூணூல் இருக்கும். அதை நாம் தொடக்கூடாது. அதன் அருகிலும் போகக் கூடாது. நம் வீட்டுச் சோற்றையும் அது தின்னாது. அவர்கள் எல்லாரும் உயர்ந்த ஜாதியாகக் கருதப்பட்டும், நாம் எல்லாரும் தாழ்ந்த ஜாதியாகக் கருதும்படி எழுதப்பட்ட ஆதாரங்கள் பல உண்டு. இதன் காரணத்தினாலேயே பார்ப்பான் உயர்ந்த உத்தியோகத்தில் இருக்கவும், நாம் தாழ்ந்த வேலையில் இருக்கும்படியான ஓர் அமைப்பு ஏற்பட்டிருக்கிறது.

இன்று அரசியலில் இருக்கிற பெரிய உத்தியோகஸ்தர்கள் பார்ப்பான் இடத்தில் கைவைத்தால் எதிரியை ஒழித்துக்கட்டி விடுவார்கள். எங்கு வேலை போய்விடுமோ என்று பயந்து திராவிட அதிகாரிகள் அவன் சொல்வதை எல்லாம் கேட்டு நடக்கிறதை நாம் கண்ணாரக் காண்கிறபோது, அந்தக் காலத்தில் இந்தப் பார்ப்பனர்களுடைய ஆணவம் எவ்வளவு உயரத்தில் இருந்திருக்கும் என்பதை எண்ணிப் பார்த்தால் புரியும். இவற்றையெல்லாம் எதிர்த்து நிற்பது நம்முடைய திராவிடர் கழகம் ஒன்றுதான்.

இந்நாட்டிலே இருக்கிற கழகம் - கட்சிகள் எல்லாம் பார்ப்பானுக்கு ஆதரவாக இருக்கிற சாதனங்கள். கம்யூனிஸ்டுகளைத்தான் எடுத்துக் கொண்டு பாருங்கள். சோஷியலிஸ்டு இந்தக் கண்ணீர்த்துளி (தி.மு.க.) சுதந்திரக்கட்சி எதை எடுத்துக் கொண்டாலும் எல்லாம் பார்ப்பானுக்கு அடிமைப்பட்டுக் கிடக்கும் கட்சிகள்தானே? காங்கிரஸ் கட்சி அப்போதும் சரி, இப்போதும் சரி, எப்போதும் பார்ப்பானுக்கு அடிமை. அதை நீக்கிப் பார்த்தால் பார்ப்பானை எதிர்க்கிற கட்சி எது? வீராதிவீரன், சூராதிசூரன்கள் எங்கே? நாங்கள்தான், "ஏன் பார்ப்பான் மணியடிக்க வேண்டும்? ஏன் அவன் மட்டும் கல்லைக் கழுவ வேண்டும்?" என்று கேட்கிறோம். எங்களைத் தவிர - கேட்பதற்கு மக்கள் இருந்தாலும் துணிந்து சொல்லுவதற்குக் கூட ஆள் இல்லையே!

நம்முடைய நோக்கமெல்லாம் (திராவிட) மக்களும் இருக்கிற இழிவை - கேடுகளை ஒழிப்பதற்காகவே இருக்கிறோம். நாங்கள் ஒழிந்தால் உங்களுக்கு நாதி இல்லை. எங்களுடைய கழகத்தில் இருப்பவர்களில் ஒருவர்கூட கழகத்தை நம்பி வாழ்பவர்கள் அல்ல. பதவிக்குப்போக வேண்டும் என்கின்ற ஆசை உடையவர்களும் அல்ல. யாரும் சர்க்கார் (அரசும்) பதவியைக்கூட எட்டிப் பார்க்காதவர்கள். அது மட்டுமல்ல. உடலிலே நாமம் - பட்டை எதுவும் போட்டுக் கொள்ளாதவர்கள்.

அரசமைப்புச் சட்டம், மனுதர்ம சாஸ்திரம், கீதை, இராமாயணம் போன்றவற்றை நாங்கள் தான் நடுத்தெவில் போட்டுக் கொளுத்தினோம், கொளுத்தப்பட்டவை மீது எங்களுக்கு ஆத்திரம் இல்லை. அவைகள் மூலம் நமக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள கொடுமையான நிலையினால் மூலம் நமக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள கொடுமையான நிலையினால் தான் அப்படிச் செய்ய வேண்டிய நிலைமை ஏற்படுகிறது.

ஒருவனுக்கு நோய் இருக்கிறது, அது ஆப்பரேஷன் (அறுவை சிகிச்சை) செய்தால்தான் முடியும் என்று தெரிந்துபின் யோக்கியமான வைத்தியனாக இருந்தால் என்ன செய்ய வேண்டும்? அறுத்துக் கட்டுப் போடுவான். அதை விட்டு விட்டுப் பற்றுப் போட்டால் குணமாகுமா?
தமிழனுடைய சமுதாயத்தில் ஜாதி, மதம் என்கிற சீழ் பல இடங்களில் புரை ஓடிக் கொண்டிருக்கிறது. இதைக் குணப்படுத்த வேண்டுமானால் ஒரே வழி மதம் ஒழியவேண்டும்! அதற்கு ஆதாரமான சாஸ்திர, புராணம் ஒழிய வேண்டும். இதற்கு எப்படிப் பரிகாரம் செய்ய வேண்டுமென்று கேட்டால், "எல்லாவற்றையும் சேர்த்து நெருப்பு வைத்துக் கொளுத்து" என்றுதானே நல்ல வைத்தியன் சொல்லுவான்? இல்லை; அவையெல்லாம் அப்படியே இருக்கட்டும், மேலே பற்றுப் போட்டுக் குணப்படுத்தி விடலாம் என்று கூறுவது சுத்தப்பொய். இதை ஒழிக்காமல் நாம் முன்னுக்கு வர முடியவே முடியாது.

நமக்குக் கடவுள் ஏற்பட்டதே சரித்திரப்படி மூவாயிரம் ஆண்டுகள்தான். பார்ப்பான் இங்கு வருவதற்கு முன்பு நம் நாட்டிலே கடவுள்கள் இல்லை. விஷ்ணு, பிரம்மா என்று ஒன்றும் இல்லை. இந்தப் பிள்ளையார் வந்ததும் 1200 ஆண்டுகளாகத்தான். மூவாயிரம் ஆண்டுகட்கு முன்பு மனிதன் எப்படி இருந்தான் என்பது நமக்குத் தெரியாது. நூறு ஆண்டுகளுக்கு முன்பாக இருந்த நம்முடைய பெரியவர்கள் எப்படிக் காட்டுமிராண்டியாக வாழ்ந்தார்கள் என்பது நமக்குத் தெரியும். அந்த வாழ்வுக்கு எப்படி இருந்தார்கள்? நெருப்பு உண்டாகச் சக்கிமுக்கிக் கல் இருந்தது! இன்று நாம் ஒரு பொத்தானை அழுத்தி வெளிச்சம் பார்க்கிறோம். 100 ஆண்டு மாறுதல் இது என்றால், மூவர்யிரம் ஆண்டுகளுக்கு முன்பு நம்முடைய நிலைமை எத்தகையதாய் இருந்திருக்க வேண்டும் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்?

ஓடியாடி வேலை செய்யும் நமக்கு இரண்டு கை, ஒரு தலை நம்முடைய கடவுளுக்கோ பத்துத் தலை! இருபது கை! அதற்குக் கல்யாணம் - கருமாதி என்றால் அந்தக் காலத்து காட்டுமிராண்டித்தனத்துக்கும் - இப்போது உள்ள நிலைக்கும் ஏதாவது மாற்றம் இருக்கிறதா? எல்லாச் சாதனங்களும் நம்மை அந்தக் காட்டுமிராண்டிக் காலநிலைக்கு அழைத்துச் செல்வதாகத்தானே இருக்கின்றன? இதை மாற்றியமைக்க வேண்டாமா?

கிறிஸ்து ஒரு கடவுளை உண்டாக்கினார். அது எப்படி இருக்கிறது? பார்ப்பானுக்குப் பிறகு ஏற்பட்டதுதானே அது? அதற்குப் பின்பு முகம்மது நபி ஒரு கடவுளை உண்டாக்கினார். அது எப்படி இருக்கிறது? மனிதத் தன்மைக்கேற்ப அந்தக் கடவுள்கள் இருக்கின்றன. உனக்கு (இந்துவுக்கு) அப்படி இல்லையே!

சிவன் - பார்வதி - பிள்ளையார் இவைகளுக்கு என்ன வாகனம்? மாடு - சிங்கம் - மூஞ்சுறு. இவை எல்லாம் வெள்ளைக்காரன் நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவை. ஈஜிப்ட் (எகிப்து) நாட்டின் கடவுள் கதைகளைப் படித்துப் பார்த்தால் அங்கு மாட்டுமேல், சிங்கத்துமேல், கழுகுமேல் இன்னும் நாய் முகம், கழுகு முகம் போன்ற கடவுள்கள் இருந்திருக்கின்றன. அவற்றையெல்லாம் காப்பியடித்து (நகல் எடுத்து) அங்கே இருந்த கடவுள்களை எல்லாம் இங்கே கொண்டுவந்து புகுத்தி மனிதனுடைய அறிவு வளர்ச்சியைக் கெடுத்து இருக்கிறார்கள்!

இவற்றை எல்லாம் நம்பவேண்டும். பகுத்தறிவைக் கொண்டு சிந்தித்தால் பாபம்! நம்பாவிட்டால் நடகத்துக்குப் போகவேண்டும். அங்கே இப்படிக் கொடுமைகள் இருக்கும் என்று கூறிப் பயப்படும்படியான நிலைமையை உண்டாக்கி விட்டார்கள் இந்தப் பார்ப்பனர்கள்.

மனிதனுடைய அறிவைக் கொண்டு சிந்தித்தால் எங்கு ஆபத்து வந்துவிடுமோ? அதனால் தன் சமுதாயமும் பிழைப்பும் போய் விடுமோ என்ற எண்ணத்தில் பார்ப்பனர்கள் பூசை நேரம், நிஷ்டை முதலியவைகளில் மனிதனுடைய கவனத்தை அதில் செலுத்தும்படிச் செய்து அடிமையாக ஆக்கிக் கொண்டார்கள். நாமும் (திராவிடரும்) அவன் சொன்னதையெல்லாம் தோள் மீது தாங்கிக் கொண்டு அவனுக்கு அடிமையாக ஆடிக் கொண்டிருக்கிறோம்.

நமக்கு இந்தக் கடவுள்களல் ஆகவேண்டிய காரியம ஒன்றுமில்லை. இவற்றை எல்லாம் சொல்கிற எனக்கும் இதனால் எவ்விதப் பயனும் இல்லை. நினைத்தால் நாளை நான் பகவான் ஆகிவிட முடியும்! "எனக்கு ஜாதியில் நம்பிக்கை உண்டு; நான் ”சூத்திரன்” என்பதை ஒப்புக் கொள்ளுகிறேன்" என்று இதை மட்டும் சொன்னால் போதுமே! இவைகளை ஒத்துக் கொண்டதால் தானே காந்தி மகாத்மாவானார்? இன்று நான் வெறும் இராமசாமி - அதையே நானும் சொன்னால் பகவான் இராமசாமி ஆகிவிடுவேனே! - ஆகவே எனக்கு என் சொந்தத்திற்கு ஆகவேண்டியது ஒன்றுமில்லையே!

இந்த நாட்டு மக்கள் அனைவரும் காட்டுமிராண்டிகளாக இருப்பதைப் பார்த்துத்தான் - இவற்றைப் போக்குவதற்கு என்ன பரிகாரம் என்பதைத் தேடிப் பிடித்து அதற்காக நாங்கள் வாழ்நாள் முழுவதையும் செலவழித்துக் கொண்டு இருக்கிறோம். இது சரியா? தப்பா? என்பதை நீங்கள் நன்றாகச் சிந்தித்துப் பார்த்து உங்களால் ஆன ஆதரவைக் கொடுங்கள்.


- ------------------- 25-09-1960 அன்று ஈரோட்டில் பெரியார் ஈ.வெ.ரா சொற்பொழிவு ”விடுதலை” 29-09-1960



0 comments: