எங்களை யாரும் அதிகார அடக்குமுறை மூலம் அடக்கிவிட முடியாது நாகை இன எழுச்சி மாநாட்டில் தமிழர் தலைவர் சமூகநீதி முழக்கம்
எங்களை யாரும் அதிகார அடக்குமுறையின் மூலம் அடக்கிவிட முடியாது என்று திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் கூறி விளக்கவுரையாற்றினார்.
நாகையில் 13.8.2011 அன்று நடைபெற்ற திராவிடர் மாணவர் கழக இனஎழுச்சி மாநாட்டில் திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரை வருமாறு:
மிகுந்த எழுச்சிக்கும், மகிழ்ச்சிக்கும் இடையிலே இந்த மாநாடு இன்றைக்குச் சிறப்பாக நடை பெற்றுக்கொண்டிருக்கிறது. உங்களை எல்லாம் சந்திக்கக்கூடிய அரிய வாய்ப்பினை உருவாக்கி மாநாடு இவ்வளவு சிறப்பாக நடத்திய அத்துணை குடும்பங்களுக்கும் எனது அன்பான நன்றியை, வணக்கத்தை, மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
பொதுவாக இங்கே ஒவ்வொருவரையும் அழைக்க வேண்டுமென்றுதான் நினைத்தேன். ஆனால் இப்பொழுது இருக்கின்ற அறிகுறிகள் மழை வருமோ என்ற அச்சத்தை உருவாக்கி யிருக்கிறது. எனவே என்னுடைய உரையை அதற்கேற்ப அமைக்க வேண்டும் என்கிற காரணத்தினாலே நிர்பந்தத்தினாலே நான் உரையாற்றத் தொடங்கி யிருக்கின்றேன்.
நம்முடைய குடும்பத்தவர் என்று சொல்லும் பொழுது, திராவிடர் கழகம் மட்டுமல்ல, திராவிடர் இயக்கத்தையும் சார்ந்ததுதான் என்பதை இந்த நேரத்திலே சொல்லி அனைவருக்கும் சிறப்பான நன்றியை, வணக்கத்தை மீண்டும் தெரிவித்து என்னுடைய உரையை நான் துவக்குகிறேன்.
இங்கே பேசிய பொறுப்பாளர்கள் எனக்கு முன்னாலே பேசும்பொழுது சொன்னார்கள். இந்த நாகை எத்தனையோ வரலாற்றைப் படைத்திருக்கிறது என்று. என்னுடைய சிந்தனை ஏறத்தாழ 68 ஆண்டுகளுக்கு முன்னாலே செல்லுகிறது.
நான் 11 வயது சிறுவனாக இருந்தபொழுது அறிவுஆசான் தலைவர் தந்தைபெரியார் அவர் களுடைய 66ஆவது ஆண்டு பிறந்தநாள் விழா நிகழ்ச்சிக்கு இங்கு அழைக்கப்பட்டு இதே அவுரித்திடலிலேதான் இந்த ஊரிலேதான் முதன் முறையாக நான் பேசக்கூடிய வாய்ப்பு 1944இல் தோழர் ஆர்.வி.கோபால் அவர்களாலே வழங்கப் பட்டது.
பழையத் தோழர்களுக்குத் தெரியும். ராயல் சோடா பேக்டரி என்பது இப்பொழுதெல்லாம் நாங்கள் மற்ற இடங்களிலே தங்குகின்றோம்.
அருமை நண்பர்களே! மழை பெய்தாலும் என்னுடைய உரை நிற்காது தொடரும் என்பதை முதற்கண் நான் தெரிவித்துக்கொள்கிறேன்.
பி.கே.விஜயராகவலு அவர்கள் அந்தக் காலத்திலே திராவிடர் இயக்கத்திற்குக் கிடைத்த குறைந்த எண்ணிக்கையுள்ள பார்ப்பனரல்லாத தன்மான வழக்குரைஞர் இதே வெளிப்பாளையம் பகுதியைச் சார்ந்தவர்தான். இங்குள்ள பல தோழர்களுக்குத் தெரியும். மூத்தவர்களுக்கு-முதியவர்களுக்குத் தெரியும். அதே போல நம்முடைய இயக்கத்தின் வாரிசுகளாக இருக்கக்கூடியவர்கள் கழகத்தை, இயக்கத்தை கட்டிக்காத்தவர்கள்.
திராவிட தேநீர் விடுதியை நடத்தியவர் நம்முடைய ஆறுமுகம் அவர்கள். மிகுந்த இன உணர்ச்சியோடு நடந்துகொள்ளக்கூடியவர்கள். அவர்களுடைய துணைவியர் சீனியம்மாள் இவர்கள் எல்லாம் போராட்டத்திலே ஈடுபட்டு கைதாகி வந்தவர்கள். இதுபோல ஏராளமான தோழர்களைச் சொல்ல முடியும். நாகை என்று சொன்னால் தந்தை பெரியார் அவர்கள் நாகை என்.பி.காளியப்பன் அவர்களையும், நாகை மணி அவர்களையும்தான் சுட்டிக்காட்டுவார்கள். மாயூரம் நடராஜன் அவர்கள் எப்படித் தந்தை பெரியார் அவர்களில் ஒருவரோ அது போல நாகை மணி அவர்கள் பெரியார் அவர்களுக்கு மெய்க்காவலர்களாக இருந்தவர்கள்.
அதுபோலத் தொடர்ந்து வரிசையாக சொல்லிக் கொண்டே வந்தால் ஏராளமானவர்களைச் சொல்லலாம்.
கீவளூர் பகுதியிலே திராவிடர் விவசாய சங்கத்தை ஒவ்வொரு கிராமத்திலும் வளர்த்த பாவா என்று அழைக்கப்படக்கூடிய நவநீதகிருஷ்ணன் அவர்கள் ஆனாலும் சரி, சிக்கல் அய்யா நாகப்பா அவர்கள் ஆனாலும் சரி, அதுபோல நாகூர் சின்னத்தம்பி அவர்கள் ஆனாலும் சரி, அதுபோல வேளாங்கன்னி முத்தையா அவர்கள் ஆனாலும் சரி, இப்படி ஒரு நீண்ட பட்டியலையே எங்களாலே தர முடியும்.
அதுபோல வி.பி.கே.காயாகம் ஆறுமுகம் போன்றவர்கள் என்ற ஒரு நீண்ட பட்டியலுண்டு. நாகை என்று சொன்னால் அது திராவிடர் இயக்கத்தினுடைய தொட்டில் என்று கருதக்கூடிய காரணத்தால்தான் முதன்முதல் கலைத்துறையில் புரட்சி உருவாவதற்கு ஆர்.வி.கோபால் எடுத்த முயற்சினாலே நாகை நடிகர் கழகம் கலைத் துறையில் சமுதாய புரட்சிக்கு வித்திட்ட இடம் இந்த நாகைதான்.
எனவே இந்த நாகைக்கு ஒரு பெரிய வரலாற்றுப் பின்னணி உண்டு. மற்ற செய்திகளையும் உங்களுக்கு எடுத்துச் சொன்னார்கள்.
குலக்கல்வி திட்டத்தை ஒழிப்பதற்கு இந்த நாகை அடித்தளமாக இருந்தது. சமச்சீர் கல்வி திட்டத் திற்கு நல்ல வாய்ப்பாக உச்சநீதிமன்றம் ஒரு அருமையான தீர்ப்பைக் கொடுத்து செயல்பட மனமில்லாதவர்களை செயல்பட வைத்தே தீரவேண்டும் என்ற அளவுக்கு வைத்து மக்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து கிளர்ச்சிப் பாதைக்குப் போகாமல் அவர்களுடைய கடமையை உணர்த்த தடம் புரள இருந்த அரசை கொஞ்சம் தடத்திற்குக் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது. உச்சநீதிமன்றம் என்று சொன்னால் நம்முடைய வேலையையும் அது குறைத்திருக்கிறது. அது சரியான பாதையில் செல்லும்படியாக செய்திருக்கிறது என்ற அளவிலே மிகப்பெரியதொரு வாய்ப்பாக அது அமைந் திருக்கிறது.
மாணவ நண்பர்களுக்குத் தெரிய வேண்டும். இந்த இயக்கம் எப்படிப்பட்ட இயக்கம். அறிவு ஆசான் தலைவர் தந்தை பெரியார் அவர்கள் சொல்லுவார்கள். அதுவும் மாணவர்களுக்கு, இளைஞர்களுக்கு.
அய்யா அவர்கள் 95 ஆண்டுகாலம் வாழ்ந்திருக்கிறார்கள் என்று சொன்னால் அவர்களே எழுதிய குடிஅரசு தொகுதிகளில் சொல்லியிருக்கிறார்கள்.
மாணவர்கள்தான் என்னை வாழ வைக்கிறார்கள் என்ற வார்த்தையை அய்யா அவர்கள் சொல்லியிருக்கிறார்கள். ஆம்! மாணவர்கள்தான் அவர்களையும் வாழவைத்து அவர்களது கொள்கையையும் வாழ வைக்கிறார்கள். ஏன் இன்னமும் எங்களைப் போன்றவர்களைக் கூட தலைவர்கள் அல்ல நாங்கள் இன்னமும் பெரியாரின் மாணவர்கள். என்றென்றைக்கும் நாங்கள் எல்லாம் பெரியாரின் மாணவர்கள்.
யாரெல்லாம் பகுத்தறிவு சிந்தனையைத் தருகிறார்களோ! யாரெல்லாம் சுயமரியாதை உணர்வுகளைத் தருகிறார்களோ! அவர்கள்தான் நம் இனத்திற்கு வழிகாட்டிகள்.
தந்தை பெரியார் அவர்கள் சொல்லுகிறார்கள். 1939லே அருப்புக்கோட்டையிலே இராமநாதபுரம் ஜில்லா மாநாடு நடத்தப்பட்டது. அந்த மாநாட்டிலே அய்யா அவர்கள் சொல்லுகிறார்கள்.
திராவிடர் கழகத்தினுடைய இலட்சியங்களைப் பற்றிச் சொல்லுகிறார்கள். நமது இலட்சியங்கள் எப்போதும் வாலிபத்தோடு உள்ளவை. இலட் சியங்கள் எப்போதும் வயதானவைகளாக ஆகாது என்று சொல்லுகிறார். வயதில், அறிவில் முதியார் வாய்ம்மைப் போருக்கு என்றும் இளையார்
உயர் எண்ணங்கள் மலரும் சோலை என்று புரட்சிக் கவிஞர் அவர்கள் தந்தை பெரியார் அவர்களைப் பற்றிச் சொன்னார்களே, அதுபோல அந்த வாலிப முறுக்கு எங்கேயிருக்கிறதென்றால் நமது இயக்கத்தில்தான் இருக்கிறது.
மாணவர்களே! இளைஞர்களே! புது வரவுகளே! இந்த மாநாட்டிற்கு வந்து திரும்பிச் செல்லுகின்ற நேரத்தில் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய செய்தி, தந்தை பெரியாரின் அறிவுரை-பெரியார் அவர்களின் புரட்சிகரமான சிந்தனை என்ன வென்றால் நமது இலட்சியங்கள் பெரிதும் வாலிபம் நிறைந்தவை.
தள்ளாடும் கொள்கை அல்ல. தள்ளாடும் கொள்கைக்கு நாம் வந்துவிடவில்லை.
தந்தை பெரியார் சொல்லுகிறார். நாம் நடத்துவது பெரும் போர். சாமானிய போர் அல்ல. வீழ்ந்த திராவிடத்தைத் தூக்கி நிறுத்துவதற்காக நாம் நமது உரிமைகளைப் பெறுவதற்காக, பாழாய்ப் போன பார்ப்பன பண்பாட்டுப் படை எடுப்பி லிருந்து இந்த இனத்தைக் காப்பாற்றுவதற்காக களத்திலே நின்று ஆற்றவேண்டிய மகத்தான பணியிருக்கிறதே. நம்முடைய பணி அது சாதாரண பணி அல்ல. பெரும் போர். அய்யா அவர்களே சொல்லுகிறார்கள்.
1939லே தந்தை பெரியார் சொன்னது இன்றைக்கு 2011-லும் அந்தப் போர் தொடருகிறது. இடையில் எத்தனையோ சண்டைகள் நடந்தன. அந்த சண்டைகளில் வெற்றிகளும் கிடைத்தன.
சண்டைகள் என்பதிலே ஆங்கிலேத்தில் விளக்கம் சொல்ல வேண்டுமானால் போர் என்பது றுயச என்ற சொல்லுக்குச் சமம்.
நாம் எத்தனையோ சண்டைகளில் வெற்றி பெற்றிருக்கலாம். ஆனால் போரிலே வெற்றிபெற வேண்டியதுதான் நமது இறுதிக்கடமை. அந்தப் போர் தொடர்ந்துகொண்டிருக்கும். பண்பாட்டுப் போர்
அந்தப் போர் பண்பாட்டுப் போர். பெரியாரின் பெரும்படை, பெரியாரின் போர்முறை எப்படிப் பட்டது என்று சொல்லும்பொழுது சொன்னார்கள். மற்றவர்களுடைய போர் முறைக்கும், பெரியாரின் போர் முறைக்கும் ஒரு தனித்த வேறுபாடு உண்டு. மற்றவர்களுடைய போர் முறை கண்ணுக்குத் தெரிந்த எதிரிகளோடு மட்டும்தான் போராடக் கூடிய நிலை உண்டு. ஆனால் பெரியாரின் போர் முறை இருக்கிறதே அது கண்ணுக்குத் தெரியாத எதிரிகள் மறைந்தி ருந்தாலும் அதனையும் தாக்கக்கூடிய ஏவுகணையைப் போன்றது என்று சொன்னார்கள்.
எனவேதான் தந்தை பெரியாருடைய கொள்கை எல்லா இடங்களுக்கும் பாய்கிறது. அதைத்தான் தளபதி அழகிரிசாமி அன்றைக்குச் சொன்னார். இளைஞர்களே! அழகிரி பேசக்கூடிய அந்தக் கருத்து உங்களுக்கு கேட்க வாய்ப்பிருக்காது. பார்க்க வாய்ப்பிருக்காது. ஆனால் அவருடைய உரையை, அவருடைய கருத்தை நீங்கள் மனதிலே பதிய வைத்துக்கொள்ள வேண்டும். அன்றைக்கு அவர்கள் மேடைகளிலே முழங்கியது.
என்றைக்கும் பாடங்களாக இளம் உள்ளங்களிலே போர்க்களத்திலே நிற்கக்கூடிய போராட்ட வீரர்களாக இருக்கக்கூடிய , மாணவச் சிங்கங்களே, புலிக்குட்டிகளே, புலிப்போத்துகளே, உங்களுடைய நெஞ்சங்களிலே அப்படியே பதிய வைத்துக் கொள்ளக்கூடிய செய்தி உண்டு.
ஈட்டி எட்டிய வரையில் பாயும். பணம் பாதாளம் வரையிலே பாயும். ஆனால் எங்கள் பெரியாரின் கொள்கை இருக்கிறதே அது அண்ட பிண்ட சராசரங்கள் அத்தனையிலும் பாய்ந்து அதற்கு அப்பாலும் பாயும். (கைதட்டல்). இதை அழகிரி அவர்கள் அவருக்கே உரிய நடையோடு எடுத்துச்சொன்னது.
ஆகவேதான் தந்தை பெரியார் சொல்லுகிறார். நாம் நடத்துவது பெரும் போர். இதிலே கொதிக்கும் இரத்தம் (அய்யா அவர்கள் பயன்படுத்திய சொற்கள் சாதாரணமான சொற்கள் அல்ல அலங்கார சொற்கள் அல்ல. அழகுக்கு இருப்பது இல்ல. வெறும் ஆவேச சொற்கள் அல்ல. இதை ஆழமாகச் சொல்லுகிறார்கள்.)
கொள்கையில் பற்று எத்துணை எதிர்ப்புக்கும் அஞ்சா நெஞ்சங்கள் படைத்த வாலிப சிங்கங்கள் தேவை. இந்த வாலிப சிங்கங்கள் தேவை என்றால் இதோ இந்த நாகையிலே வாலிப சிங்கங்கள் திரண்டிருக்கின்றன. இதற்குப் பஞ்சமில்லை என்று காட்டக்கூடிய அளவிற்கு குருதிக்கொடையை மட்டும்தான் நாங்கள் தருவோம் என்பது அல்ல. இது ஒரு ஒத்திகை.
நாங்கள் சிந்துகின்ற குருதி இருக்கிறதே அது வெட்டித்தனமாக கலவரத்திற்கு சிந்தக்கூடிய குருதியாக ஆகாது ஒருபோதும். பகுத்தறிவுவாதிகள்-கொள்கைவாதிகள்- இலட்சியவாதிகள் என்ற காரணத்தினாலே நாங்கள் குருதியைக் கொடுத்தால் ஒன்று அது உயிர்காக்கும் அல்லது எங்கள் குருதியை நாங்கள் இழந்தால் அது எங்கள் கொள்கையைக் காக்கும் அல்லது இலட்சியங்களை வாழவைக்கும் என்று காட்டுவதற்காகத்தான். இந்த மாநாட்டிலே ஒரு சிறப்பு. குருதிக்கொடையையும் அளித்திருக்கின்றார்கள்.
குருதிக்கொடை மட்டுமல்ல. இதோ நிற்கின்ற இந்த இளைஞர் பட்டாளம், மாணவப் பட்டாளம் காலை முதல் கலையாமல் இருக்கின்ற பட்டாளம், கட்டுப்பாட்டுக்குப் பெயர்போன கருஞ் சட்டைப் பட்டாளம், தியாகத்திற்காக தங்களைத் தாங்களே அழித்துக்கொள்கின்ற மெழுகு வத்திகளைப் போன்ற அந்த பட்டாளம், எந்த தியாகத்தையும், தன்னல மறுப்பையும் செய்யத் தயாராக இருக்கின்ற பட்டாளம்.
குருதிக்கொடையை மட்டுமல்ல. நண்பர்களே இன எதிரிகள் தெரிந்து கொள்ள கடமைப் பட்டிருக்கின்றார்கள். அவர்களுக்கு எச்சரிக்கை யோடு சொல்லுகிறோம். எங்களை அதிகார அடக்குமுறையின் மூலம் அடக்கிவிட முடியாது. எங்களைத் தாறுமாறான தப்புப் பிரச்சாரம், விஷமப் பிரச்சாரம், கொச்சைப் பிரச்சாரத்தின் மூலம் ஓய்வுகொள்ள வைக்க முடியாது. அவை எல்லாம் எங்கள் வயலிலே வீசுகின்ற உரங்கள்.
எங்கள் பயிருக்கு நீங்கள் இடுகின்ற உரங்கள் என்பதை நினைக்கக்கூடிய நெஞ்சுரம் மிக்க வீரர்கள், எங்கள் படையிலே, பட்டாளத்திலே பாசறையிலே இருக்கக் கூடியவர்கள்.
0 comments:
Post a Comment