Search This Blog

31.8.11

இஸ்லாம் மார்க்கத்தில் பாப்பார முஸ்லீம், பற முஸ்லீம், நாயுடு முஸ்லீம், நாடார் முஸ்லீம் என இருக்கின்றதா?


முகமதுநபி பிறந்தநாள் கொண்டாட்டம்

சகோதரர்களே!

இன்று இங்கு கூட்டப்பட்டிருக்கும் ஒரு மதசம்பந்தமான இந்த முக்கியக் கொண்டாட்டத்திற்கு என்னைத் தலைமை வகிக்க அழைத்ததை உண்மையிலேயே நான் ஒரு பெருமையாய்க் கருதுகின்றேன்.

ஏனெனில், என்னைப்பற்றி எல்லா மத பக்தர்களும் சொல்லும் குறைகள் உலகம் அறிந்ததேயாகும். அதாவது நான் மதங்களைக் குற்றம் சொல்லுகின்றவன் என்றும், மதமே கூடாதென்று சொல்லுகின்றவன் என்பதோடு மாத்திரமல்லாமல் கடவுளைப் பற்றியே கூடத் தகறாரு சொல்லுகின்றவன் என்றும் சொல்லப்படுகின்றவனாவேன். அப்படிப்பட்ட என்னை, உலகத்திலுள்ள மற்ற மதக்காரர்களை எல்லாம் விட அதிகமான மதபக்தி கொண்டவர்கள் என்று சொல்லப்படு கின்ற இஸ்லாம் மார்க்கத்தை அனுசரிக்கின்றவர்கள் என்பவர்களாகிய நீங்கள் கூப்பிட்டிருப்பது மிகவும் அதிசயமென்று சொல்லப்பட வேண்டும் அல்லவா? நீங்கள் என்னைக் கூப்பிட்டது போல் இந்துக்கள் என்று சொல்லிக் கொள்ளுகின்றவர்கள் அவர்கள் மதசம்பந்தமான ஒரு நாயன்மாரோ, ஆழ்வாரோ பிறந்த நாள், செத்த நாள் “திருநக்ஷத்திரம்” என்று சொல்லப் படும் “விஷேச நாள்” கொண்டாட்டத்திற்கு ஒரு முஸ்லீமையோ, ஒரு கிறிஸ்துவனையோ சுலபத்தில் கூப்பிட்டு விடமாட்டார்கள். அது மாத்திர மல்லாமல் அவர்கள் பக்கத்தில் நீங்கள் இருக்கவும் சம்மதிக்க மாட்டார்கள். உங்களைத் தொட்டுவிட்டால் மறுபடியும் குளிக்காமல் அங்கு போக மாட்டார்கள். அவ்வளவு தூரம் போவானேன்; என்னையே கூப்பிட மாட் டார்கள். மற்றும் எந்த நாயன்மாருக்கும், எந்த ஆழ்வாருக்கும் குரு பூசை யும், திருநக்ஷத்திரமும் நடத்துகின்றார்களோ அவர்கள் ஜாதியாரையே கூப்பிடவோ, பக்கத்தில் வைத்து சாப்பிடவோ, தொடவோ சம்மதிக்க மாட்டார்கள். ஏனெனில், அந்தப்படி தொடாமலும், பக்கத்தில் வைத்துச் சாப்பிடாமலும் இருந்து கொண்டு, மற்றவர்களை வெறுப்பாகவும், இழிவாகவும் கருதுவதுமேதான் அவர்களது மதம் (இந்துமதம்) என்று கருதிக் கொண்டிருக்கின்றார்கள். இப்படிப்பட்டவர்கள் தான் அநேகமாய் என்னை மதத் துரோகி என்று அழைப்பதாக நான் அறிந்து வருகின்றேன்.

பொதுவாகவே உலகத்தில் அநேகமான மக்களுக்கு “மதம்” பிரதானமென்று கற்பிக்கப்பட்டிருக்கின்றதே தவிர மதம் என்றால் என்ன? அது எதற்கு? என்கின்ற அறிவே மதபக்தர்கள்-மதத்திற்காக பிராணனைக் கொடுக்க இருக்கின்றவர்கள் என்பவர்களிலுங்கூட ஆயிரத்தில் ஒருவருக்கும் தெரியாதென்றே நான் தைரியமாய்ச் சொல்லுவேன். என்னைப் பற்றியே மதஞானமில்லாத மக்கள் பலவிதமாகப் பேசுவதையும், எழுது வதையும் நான் கேட்டுக் கொண்டும், பார்த்துக் கொண்டும்தான் வரு கின்றேன்.

அதாவது பௌத்த மதத்தைப் பற்றியும், இஸ்லாம் மதத்தைப் பற்றியும் அவற்றில் காணப்படும் ஏதாவது விஷயங்களைப்பற்றியும் பேசும்போது “மதமே தப்பானது, மதமே கூடாது என்று சொல்லுகின்ற சுயமரியாதைக்காரன் எப்படி இந்த மதங்களைப் பற்றி மாத்திரம் பேசலாம்?” என்பதாகச் சொல்லுகின்றார்கள். இப்படிப்பட்ட இவர்களை ஒருவித தெளிவற்றவர்களும், ஆத்திரத்தால் அறிவிழந்தவர்களும் என்று சொல்லு வதைவிட வேறு ஒன்றும் சொல்ல முடிவதில்லை. மதத்தைப் பற்றி நான் பேச ஆரம்பித்த காலத்திலேயே நான் நன்றாய் விளக்கிவிட்டே பேசுகின்றேனேயொழிய பேசிவிட்ட பிறகு தத்துவார்த்தம் சொல்ல வருவதில்லை.

அதாவது ‘மதம் என்பது மனிதனின் உலக வாழ்க்கையின் நடப் பிற்கு ஒரு வழிகாட்டியானக் கொள்கைகளைக் கொண்டது. அது நம்மைப் போன்ற ஒரு மனிதனால் ஏற்படுத்தப்பட்டது. அது கால தேசவர்த்தமானப் படி மக்கள் சௌகரியத்திற்காக திருத்தியமைக்கக்கூடிய உரிமையுள்ளது. மனிதனுடைய அறிவுக்கும், ஆராய்ச்சிக்கும் இடம் தரக்கூடியது’ என்று சொல்லுகின்ற மதத்தைப் பற்றி நான் எப்போதும் அது கூடவே கூடாது என்று சொன்னதே கிடையாது. அந்தப் பொருளின்மீது இருப்பதாக ஒப்புக் கொள்ளுகின்ற மதங்களிடம் எனக்கு அதிகத் தகாறாரே கிடையாது.

அப்படிப்பட்ட மதம் என்பது வேண்டியதேதான். அதாவது ஒரு பொதுசங்கமோ, ஒரு வாசகசாலையோ, ஒரு வியாபாரச் சங்கமோ, ஒரு வக்கீல் சங்கமோ, ஒரு விளையாட்டுச் சங்கமோ, ஒரு சீட்டாட்ட சபையோ என்பதாக ஒரு ஸ்தாபனமிருந்தால் அந்த ஸ்தாபனத்திற்குச் சில விதிகள் இருக்க வேண்டியது அவசியமேயாகும். அந்த விதி அந்த ஸ்தாபன மக்கள் நன்மைக்கும், ஸ்தாபனம் சரிவர நடந்தேறுவதற்கும் அனுகூலமானதாகவும், அந்த ஸ்தாபனக்காரர்களால் ஏற்பட்டதாகவும் இருக்க வேண்டும் என்பது போலவே கூடி வாழ நினைக்கும் மனிதனின் உலக வாழ்க்கை நலத்திற்கும் ஏதாவது விதிகள் வேண்டும் என்பதில் குற்றமில்லை. அவ்விதிகளுக்குப் பெயர், கொள்கை என்றாலும், திட்டம் என்றாலும், மதமென்றாலும் மார்க்கமென்றாலும் ஒன்றேதான்.

நமது நாட்டில் பல பாஷைகள் வந்து கலந்து விட்டதால் கொள்கைகளுக்கு மதமென்றும், சமயமென்றும், மார்க்கம் என்றும் சொல்லப்படு கின்றது என்பதாகப் பண்டிதர்கள் சொல்லுகின்றார்கள். ஆதலால் அந்த அளவில் நான் எந்த மதத்துடனும் தகறாருக்கு வரக்கூடியவனல்ல. இதில் ஒன்றும் ஒளிமறைவோ, தத்துவார்த்தமோ இல்லை. வெளிப்படையாகவே சொல்லுகின்றேன்.

ஆனால் ‘மதம் மனிதனுடைய ஆத்மார்த்தத்திற்கு ஏற்பட்டது. அது கடவுளுக்கும், மனிதனுக்கும் உள்ள சம்பந்தத்தை விளக்குவது - கடவுளைக் காண்பதற்கும் அடைவதற்கும் ஒரு சாதனமாயிருப்பது-அதை உண்டாக் கினது கடவுள், அல்லது கடவுள் அவதாரம், அல்லது கடவுள் தன்மை, அல்லது கடவுள் மகன் அல்லது மனிதத் தன்மைக்குமேற்பட்ட ஒரு தெய்வீகத்தன்மை -அதில் என்ன சொல்லியிருந்தாலும் அது மனிதனுக்குப் புரியாவிட்டாலும் அது பயன்படாவிட்டாலும் மனிதனால் பின்பற்ற முடியாவிட்டாலும் அதை மனிதன் ஒப்புக் கொண்டுதான் தீரவேண்டும். அதன் பேரால் ஏற்பட்ட நூல்கள் சாஸ்திரங்கள் என்பவைகளை எல்லாம் நம்பித்தானாக வேண்டும்- தனக்கு விளங்காததை யெல்லாம் நம்பித்தானாக வேண்டும்-அதில் ஒரு விஷயத்தைக் கூட நழுவவிடக்கூடாது-மாற்றவும் கூடாது-புதிய மாதிரி சௌகரியத்திற்குத் தகுந்தபடி எதையும் சேர்த்துக் கொள்ளவும் கூடாது’ என்பது போன்ற ‘நீதியையும், நிபந்தனைகளையும் கட்டளைகளையும் கொண்டதுதான் மதம்’ என்று சொல்லப்படுமெதையும் நான் என்னைப் பொறுத்தவரை சிறிதும் ஒப்புக்கொள்ளாதவன் என்பதோடு அப்படிப்பட்ட மதம் மனித சமூகத்தின் வளர்ச்சிக்கும், சுதந்திரத்திற்கும், முற்போக்கிற்கும், சுயமரியாதைக்கும் விரோதமானது என்று சொல்லுவ தோடு கூட மனித சமூக நன்மையை உத்தேசித்து அவை அழிக்கப்பட வேண்டியது அவசியமென்றும் கருதுகின்றேன். அன்றியும் நான் எந்த மதம் என்பதைப் பற்றிப் பேசும் போதும் இந்த விஷயங்களுக்கு மாறாக நான் எப்போதும் பேசினதே கிடையாது. நான் பௌத்த மதத்தைப் பற்றியும், இஸ்லாம் மதத்தைப் பற்றியும், இந்து மதத்தைப் பற்றியும் பேசும் போதெல்லாம் இந்த முடிவின் பேரிலேயே பேசுகின்றேன். இந்த உண்மைப் படியுள்ள தாரதம்மியங்களைப் பற்றிதான் ஒரு மதத்திற்கும் மற்ற மதத்திற்கும் உள்ள வித்தியாசங்களைப் பற்றியும் பேசுகின்றேன். இந்த உண்மையின் பேரில்தான் எந்தமதத் தலைவர்களைப் பற்றியும் நான் பேசுகின்றேன்.

திரு.முகமது நபியவர்களையும் மற்றபடி யார் எப்படி நினைத்துக் கொண்டாலும் நான் அவரை ஒரு மனிதர் என்றும் மனிதரைப் போலவே தாயும் தகப்பனும் (ஆணும் பெண்ணும்) கூடிக் கருத்தரித்து பிறந்த பிள்ளையென்றும் கருதிதான் அவரால் செய்யப்பட்டதாகச் சொல்லும் விஷயங்களில் அநேகத்தை நான் புகழ்கின்றேன். அதற்காகவே அவரையும் பாராட்டுகிறேன். அப்படிச் சொல்லப்படுபவைகளே அந்த மார்க்கத்திற்கு ஒரு பெருமை என்றும் நினைக்கின்றேன். பௌத்தரும் அப்படித்தான். ஆனால் மற்ற மதக்காரர்களோ தங்கள் மதத்தலைவரை ஒரு மனிதர் என்று சொன்னாலே கோபித்துக் கொள்ளுகின்றார்கள்.

கழுதையினுடையவோ, குதிரையினுடையவோ, நாயினுடையவோ வயிற்றிலிருந்து தோன்றினார் என்றாலும் ஒப்புக்கொள்வார்கள். மனிதனுக் கும் மனுஷிக்கும் (கலந்து) பிறந்தது என்றால் அதில் கௌரவமில்லை என்றே கருதுவார்கள். மனிதத்தன்மைக்கும் மனிதன் அறிவிற்கும் மேற் பட்டதாக மக்களுக்குப் புரியாத ஏதாவது ஒன்றைச் சொல்லாமல் ஒரு மதத்தை நிர்ணயிக்க அநேக மக்கள் சம்மதிப்பதேயில்லை.

இஸ்லாம் இந்து வித்தியாசம்

நிற்க, நான் இந்து மதத்தைப் பற்றியோ இஸ்லாம் மதத்தைப்பற்றியோ பேசுவது என்பதில் இரண்டு மதத்தினுடையவும் ஆதாரங்களை ஆராய்ச்சி செய்து பேசுவதாக யாரும் கருதிவிடாதீர்கள். அந்த வேலையை ஒரு பரீக்ஷை மாணவனுக்குக் கொடுத்துவிடுங்கள். அதில் என்ன இருக்கின்றது என்பதில் எனக்குக் கவலையில்லை. ஆனால் நான் பேசுவது என்பது இரண்டு மதத்தைச் சேர்ந்ததாகச் சொல்லிக் கொள்ளும் பெரும்பான்மை யான மக்களிடை இருந்து வரும் பிரத்தியட்சக் கொள்கைகள் சம்பந்தமானக் காரியங்களையும் அதனால் அவரவர்கள் பிரத்தியட்சத்தில் அடைந்து வரும் பலன்களையும் பற்றித் தான் பேசுகின்றேன்.

பொதுவாகவே மதத்தின் தன்மையை இதிலிருந்துதான் நிர்ணயிக்க வேண்டுமே யொழிய ஏட்டில் என்ன இருக்கின்றது என்று பார்ப்பதில் பயனில்லை. அது போலவே அந்தந்த மதக்காரர்கள் போட்டுக் கொள்ளும் வேஷமே தான் மதம் என்றாலும் அதிலும் பயனில்லை.

அந்தந்த மதங்களில் மக்கள் எப்படி நடந்து கொள்ளுகிறார்கள்? மக்கள் எப்படி நடத்தப் படுகின்றார்கள்? அதனால் அந்த சமூகம் என்ன பலனடைந்திருக்கின்றது? என்பது போன்றவைகள்தான் மதத்தின் மேன்மையை அளக்கும் கருவியாகும். அப்படிப் பார்ப்போமேயானால் அநேக விஷயங்களில் இந்து மதத்தைவிட (கொள்கைகளைவிட) இஸ்லாம் மதமே (கொள்கைகளே) மேன்மையான தென்பதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். இஸ்லாமானவர்களிடத்தில் இந்துக்களிடம் இல்லாத பல நல்ல கொள்கைகள் இருக்கின்றன. அதனால் இந்து மதத்தில் இல்லாத மேன்மை இஸ்லாம் மதத்தில் இருப்பதாகத்தான் கருதவேண்டும். அதாவது இஸ்லாம் மக்களிடத்தில் தங்களுக்குள் சமத்துவம், சகோதரத்துவம் ஒற்றுமை அன்பு முதலிய குணங்கள் இருக்கின்றன. வீரம் இருக்கின்றது. வீரம் என்றால் இலக்ஷியத்திற்கு உயிரைவிடத் துணிவது என்பதுதான். இஸ்லாம் மதத்தில் ஜாதி உயர்வு - தாழ்வு இல்லை அவர்களுக்குள் தீண்டாதவன் இல்லை. கிட்ட இருந்து சாப்பிடக்கூடாதவன் இல்லை. அவர்களது தெருவில் நடக்கக் கூடாத மனிதன் குளத்தில் இறங்கக்கூடாத மனிதன் கோவிலுக்குள் புகக் கூடாத மனிதன் இல்லை. இதை யோக்கியமான இந்துக்கள் ஒப்புக்கொண்டு தான் ஆகவேண்டும்.

இஸ்லாம் மார்க்கக் கடவுளுக்கு ரூபம் கற்பித்து வணங்குவதில்லை. அதற்குப் பெண்டு பிள்ளை வைப்பாட்டி கற்பிப்பதுமில்லை. அதற்குப் பூஜை நைவேத்தியம் உற்சவம் நகை துணிமணி முதலியவற்றிற்குக் கோடிக் கணக்கான பணங்களைச் செலவு செய்வதில்லை. மற்றும் அவர்களது பெண்களுக்கு சொத்துரிமை கல்யாண ரத்து விதவைமணம் ஆகியவை களும் உண்டு. அவர்களுக்குள் அன்பையும், வீரத்தையும் பார்த்து நாம் அவர்களை முறடர்கள் என்கின்றோம். அதுபோலவே இந்துக்களுக்குள் ஒருவருக்கொருவர் உள்ள துவேஷத்தையும் பயங்காளித்தனத்தையும் நாம் பார்த்து அவற்றை நாம் சாதுத்தன்மை என்று சொல்லிக்கொள்ளுகிறோம். ஒரு கிராமத்தில் ஒரு இஸ்லாமானவனை ஒரு இந்து அடித்தால் 100 இஸ்லா மானவர்கள் வந்து விழுந்து விடுகின்றார்கள். இதைத்தான் நாம் முறட்டுத் தனம் என்கின்றோம். ஒரு இந்துவை ஒரு இஸ்லாமானவன் அடித்தால் மற்ற இந்துக்கள் “அவன் யாரோ அடிபடுகிறான், நமக்கென்ன கவலை” யென்று சொல்லி சும்மா இருந்து விடுகிறார்கள். இல்லாவிட்டால் அடிக்குப் பயந்து கொள்ளுகிறார்கள். இதைத்தான் சாதுத்தனம் என்று பெருமை பேசிக் கொள்ளுகிறோம். அன்பும் சகோதரத்தன்மையும் இந்துவிடம் எங்கிருக் கின்றது? “ஆடு கோழி தின்னாதே” என்று சொல்லுவதில் மாத்திரம் இருக் கின்றது. மக்களை இழிவாய்க் கருதுவது பிறவியின் பேரால் தாழ்த்தி இம்சிப் பது கொடுமைப்படுத்துவது ஆகிய காரியங்களைச் செய்து கொண்டிருப்ப வன்தான் “அன்பு! அன்பு!! ஜீவகாருண்யம்!!!” என்று பேசுகிறான். அன்பின் உண்மையை அறியவே இல்லை. இஸ்லாம் கொள்கையில் வேறு எங்கு எப்படி இருந்தாலும் சமூக வாழ்விலும், ‘ஆண்டவன்’ முன்னிலை என்பதி லும் மனிதனை மனிதனாய்க் கருதப்படுகின்றது.

இந்துக் கொள்கையில் வேறு எங்கு ஒற்றுமையாய் இருந்தாலும் சமூக வாழ்விலும் ‘கடவுள்’ முன்னிலை என்பதிலும் மனிதனை மிருகத்தைவிட, மலத்தை வாயில் கௌவிக்கொண்டு சொல்லும் மிருகத்தை விடக் கேவல மாய் மதிக்கப்படுகின்றது. இதை நாம் பிரத்தியக்ஷத்தில் காண்கின்றோம். இதைத் தான் அன்புமதம் சமத்துவமதம் என்று இந்துக்கள் தைரியமாய்ச் சொல்லுகின்றார்கள்.

மதத் தத்துவ நூலை-வேதம் என்பதை இஸ்லாம் மார்க்கம் செருப்புத் தைக்கிற சக்கிலியும் மலம் அள்ளும் தோட்டியும் படித்தாக வேண்டும், பார்த்தாக வேண்டும், கேட்டாக வேண்டும் என்று சொல்லி கற்றுக் கொடுப் பதையும் பார்க்கின்றோம். இந்துமார்க்க வேதம் என்பதை ஒரே ஒரு சிறுகூட்டம் தவிர (பார்ப்பனன் தவிர) மற்றயாவரும் அவன் பிரபுவானாலும் சரி ஏழையானாலும் சரி யோக்கியனானாலும் சரிஅயோக்கியனானாலும் சரி ஒருவனுமே பார்க்கவும் கேட்கவும் படிக்கவும் கூடாது என்று இன்னும் நிர்பந்தப்படுத்தி அந்தப்படியே இன்றும் நடந்து வருகின்றது. இதைத்தான் சமத்துவ நோக்கம் கொண்ட மதம் என்று இந்துக்கள் இன்றும் இன்னமும் சொல்லுகின்றார்கள். ‘மொண்டி முடம், கூன் குருடு ஆகியவர்களுக்கே உதவி செய்’ என்று இஸ்லாம் மதம் பிரத்தியக்ஷத்தில் சொல்லுகின்றது. ‘சோம்பேரிகளுக்கே - ஊரார் உழைப்பில் உண்டு களிப்பவர்க்கே உதவி செய்’என்று இந்துக்களின் கொள்கை பிரத்தியக்ஷத்தில் சொல்லுகின்றது.

இஸ்லாம் கொள்கை மக்களை ஒன்று சேர்க்கின்றது. இந்தியாவில் கொஞ்சகாலத்திற்கு முன் ஒரு கோடியை விட குறைந்த எண்ணிக்கையுள்ள முஸ்லீம்கள் இன்று 8 கோடி மக்களாய் சேர்ந்து இருக்கின்றார்கள். இன்றும் யாவரையும் எப்படிப்பட்ட இழிவானவர் என்று இந்து மார்க்கத்தாரால் கருதப்பட்டவர்களையும் தனக்குள் சேர்த்துக் கொள்ள கையைநீட்டுகின்றது. இந்துக்களின் கொள்கை எப்படிப்பட்ட மேலானவன் என்று மதிக்கப்பட்ட வனையும் உள்ளே விட மறுத்து வாசல்படியில் காவல்காக்கின்றது. தன்ன வனையும் வெளியில் பிடித்துத் தள்ளுகின்றது.

கள் குடியைப் பற்றி வாய்த் தப்பட்டை அடிக்காத இஸ்லாம் கொள்கை முஸ்லீம்களில் 100க்கு 99 பேர்களை குடியிலிருந்து விலக்கி யிருக்கின்றது. குடிக்கக் கூடாதென்று சதா வாயில் தப்பட்டை அடித்துக் கொண்டு ஓட்டு வேண்டியபோது கள்ளுக்கடையில் நின்று மறியல் செய்யும் இந்து கொள்கையானது இந்துக்களில் 100க்கு 51 பேர்களுக்கு மேல் குடிகாரர்களாகச் செய்திருப்பதோடு இந்து கடவுளுக்கும் குடி வகைகள் வைத்து கோயில்களில் பெரிய பெரிய ஜாதியார் என்பவர்களால் நைவேத்தியம் செய்து பிரசாதமாய் சாப்பிடப்படுகின்றது.

இஸ்லாம் கொள்கையை வலியுறுத்துகின்ற காரணத்தாலேயே இஸ்லாமியர்கள் அதிகமாயுள்ள நாடுகள் இஸ்லாம் அரசர்களால் ஆளப்படு கின்றன. இந்து கொள்கையை வலியுறுத்துகின்ற காரணத்தாலேயே இந்துக்கள் அதிகமாகியுள்ள நாட்டை ‘அன்னியர்கள்’ஆளுகின்றார்கள்.

இந்தப்படியாக வெளிப்படையாய்த் தெரியும் கொள்கைகளாலேயே இந்துக் கொள்கைகளை விட இஸ்லாம் கொள்கைகள் எவ்வளவோ மேன்மையான பலன் கொடுத்திருப்பதை யாரும் மறுக்க முடியாது. இந்தப் படி நான் சொல்லுவதற்காக கோபிக்கும் சகோதரர்கள் முதலில் நான் சொல்லுவது உண்மையா? அல்லது அடியோடு பொய்யா? என்று பார்த்துப் பிறகு பேசுங்கள். பிறகு ‘கொள்கைக்காக உயிரை விடுங்கள்’.

ஏன் சொல்லுகிறேன்

ஆதிதிராவிடர்களை நான் ‘இஸ்லாம் கொள்கையைத் தழுவுங்கள்’ என்று சொன்னதற்காக அநேகம் பேர் என் மீது கோபித்துக் கொண்டார்கள். அவர்களைப் பற்றி நான் கோபித்துக் கொள்ளவில்லை. அவர்களுக்குச் சொந்த அறிவுமில்லை, சொல்வதையும் கிரகிக்க சக்தியுமில்லை. சிலருக்குத் தங்கள் மேன்மை போய்விடுமே, தங்களுக்கு அடிமைகள் இல்லாமல் போய்விடுமே என்கின்ற சுயநல எண்ணம் என்றே நான் கருதிவிட்டேன். ஏனெனில் ‘மோட்சம் அடைவதற்காக’ வென்று நான் ஆதிதிராவிடர்களை இஸ்லாம் கொள்கைகளைத் தழுவுங்கள் என்று சொல்லவில்லை, அல்லது ‘ஆத்மார்த்தத்திற்கோ’ ‘கடவுளை அறிவதற்கோ’ நான் அப்படிச் சொல்ல வில்லை. ஆதி திராவிடர்களின் தீண்டாமையைப் போக்குவதற்கு சட்டம் செய்வது, சத்தியாக்கிரஹம் செய்வது முதலியவை போலவே இஸ்லாம் கொள்கையைத் தழுவுவது என்பதும் ஒரு வழி என்றே சொன்னேன். இனியும் சொல்லுகின்றேன்.

சட்டம் செய்வது கஷ்டம். செய்தாலும் அமுலில் வருவதும் கஷ்டம். சத்தியாக்கிரஹம் செய்வதும் கஷ்டம். செய்தாலும் வெற்றி பெறுவதும் சந்தே கம். இவற்றால் துன்பமும், தோல்வியும் கிடைத்தாலும் கிடைக்கலாம். ஆனால் ஆதிதிராவிடர்களுக்கு இஸ்லாம்கொள்கையை ஏற்றுக் கொண் டேன் என்று சொல்வதில் என்ன கஷ்டம்? அதில் தோல்வியோ துன்பமோ ஏதாவது உண்டா? அல்லது அன்னியருக்கு ஏதாவது கஷ்டம் உண்டா? அவன் ஆஸ்தீகனாய் இருந்தால் என்ன? நாஸ்தீகனாய் இருந்தால் என்ன? உண்மை இஸ்லாம் ஆனால் என்ன? பொய் இஸ்லாம் ஆனாலென்ன? யாருக்கும் எவ்வித கஷ்டமும் இல்லாமல், வேண்டுமானால் எந்தவித மன மாறுதல் கூட இல்லாமல் தன்னுடைய இழிவையும் கஷ்டத்தையும் விலக்கிக் கொள்ள ஆசையும் அவசரமும்பட்ட ஒரு மனிதன்தான் மாலை 5-00 மணிக்கு இஸ்லாம் கொள்கையை ஏற்றுக் கொண்டதாய்ச் சொல்லி 5-30மணிக்கு ‘தீண்டாதவன்’ என்கின்ற இழிவிலிருந்து மீண்டு தெருவில் நடக்க உரிமை பெற்று மனிதனாவதில் ஏன் மற்றவர்கள் ஆnக்ஷபிக்க வேண்டும்? என்பது எனக்கு விளங்கவில்லை. கேவலம் வயிற்றுச் சோற்றுக் காக 100க்கு 90 மக்கள் என்னென்னமோ அவரவர்களாலேயே இழிவான குற்றமான காரியம் என்று சொல்லப்படுவதை எல்லாம் செய்கின்றார்கள். அப்படி இருக்க இதில் என்ன இழிவோ குற்றமோ இருக்கின்றது என்று கேட்கின்றேன். உலகில் மதங்கள் அடியோடு ஒழிக்கப்படும் போது இஸ்லாம் மதமும் ஒழியும். அதுபோது இந்த ஆதிதிராவிடர்கள் ஏற்றுக் கொண்டதும் ஒழிந்துபோகுமே தவிர அது மாத்திரம் நிலைத்து விடாது. அதற்காக அதிகக் கஷ்டமும் இல்லை. ஆகையால் எது எப்படியானாலும் தீண்டாமை ஒழிய வேண்டுமென்றால் தீண்டாதார் எனப்படுபவர்கள் இஸ்லாம் கொள்கையைத் தழுவ வேண்டியது என்பது ஒரு வழியேயாகும்.

ஏன் கிறிஸ்து மதத்தைத் தழுவக்கூடாது? ஆரிய சமாஜத்தைத் தழுவக் கூடாது? என்று கேட்கலாம். கிறிஸ்துமதக் கொள்கைகள் புஸ்தகத் தில் எப்படியிருக்கின்றது என்பது பற்றி நான் சொல்லவரவில்லை. பிரத்தி யட்சத்தில் பறக்கிறிஸ்துவன், பார்ப்பாரக்கிறிஸ்துவன், வேளாளக் கிறிஸ்து வன், நாயுடு கிறிஸ்துவன், கைக்கோளக் கிறிஸ்துவன், நாடார் கிறிஸ்துவன் என்பதாகத் தமிழ்நாடு முழுவதும் இருப்பதைப் பார்த்து வருகின்றேன். இஸ்லாம் மார்க்கத்தில் பாப்பார முஸ்லீம், பற முஸ்லீம், நாயுடு முஸ்லீம், நாடார் முஸ்லீம் என இருக்கின்றதா? என்று கேட்கிறேன்.

இங்குள்ள கிறிஸ்துவ சகோதாரர்கள் கோபித்துக் கொள்ளக்கூடாது. வேண்டுமானால் வெட்கப்படுங்கள் என்று வணக்கமாக தெரிவித்துக் கொள் கிறேன். ஆரியசமாஜம் என்பதும் ஒரு வேஷமேதான். அதுவும் பயன் அளிக்கவில்லை.

உதாரணமாக வைக்கம் சத்தியாக்கிரகத்தில் ஆரிய சமாஜத் தீயர் களையும், கிறிஸ்துவப் புலையர்களையும் தெருவில் நடக்கவிடவில்லை. இஸ்லாமானவன் தாராளமாய் விடப்பட்டான். பாலக்காட்டிலும் அப்படியே நடந்தது. ஒரு நாள் பாலக்காட்டில் ஒரு செர்மன் என்கிற இழிவுபடுத்தப்பட்ட ஜாதியிலிருந்த தீண்டாதவன் ஒருவன் இஸ்லாமாகி தடுக்கப்பட்டத் தெரு வழியாகப் போனான். அப்போது அவனை ஜவுளிக் கடைப் பார்ப்பனரும் வெற்றிலைக் கடை நாயரும் தெருவுக்கு வந்து நின்று பார்த்தார்கள். உடனே அங்கு இங்கிருந்த ஒரு மாப்பிள்ளை (இஸ்லாமானவன்) “எந்தடா? பன்னிக் கூத்தச்சி மகனே, அவனெ நோக்குன்னு” என்று கேட்டான். அதாவது “என் னடா? பன்றி தேவடியா மகனே! அவனைப் பார்க்கிறாய்” என்று கேட்டான். செர்மனாயிருந்த இஸ்லாம் சிரித்துக் கொண்டே போனான். பார்ப்பனனும் நாயரும் தலைகுனிந்து கொண்டார்கள். இது பிரத்தியட்சத்தில் நடந்த சம்பவம் - சந்தேகமில்லாமல் இனியும் நடக்கக் கூடிய சம்பவம்.

ஆகவே இஸ்லாம் மார்க்கம் செய்கின்ற நன்மை இந்து மார்க்கம் செய்வதைவிட அதிகமா? இல்லையா? என்று பாருங்கள்.

ஆனால் நான் இஸ்லாம் சமூகக் கொள்கைகள் முழுவதையும் ஒப்புக் கொண்டதாகவோ அவைகள் எல்லாம் சுயமரியாதைக் கொள்கைகள் என்று சொல்லுவதாகவோ யாருந் தீர்மானித்து விடாதீர்கள். அதிலும் பல விரோதமான கொள்கைகளைப் பார்க்கிறேன். இந்து மார்க்கத்தில் எதை எதை குருட்டு நம்பிக்கை மூடப்பழக்கம் பாமரத்தன்மை என்கின்றோமோ அவைபோன்ற சில நடவடிக்கை இஸ்லாம் சமூகத்திலும் பலர் செய்து வருவதைப் பார்க்கின்றோம். சமாது வணக்கம் பூஜை நைவேத்தியம் முதலியவைகள் இஸ்லாம் சமூகத்திலும் இருக்கின்றன. மாரியம்மன் கொண்டாட்டம் போல் இஸ்லாம் சமூகத்திலும் அல்லாசாமி பண்டிகை நடக்கின்றது. மற்றும் நாகூர் முதலிய ‘ஸ்தல விசேஷங்களும்’ சந்தனக்கூடு தீமிதி முதலிய உற்சவங் களும் நடைபெறுகின்றன. இவைகள் குர்ஆனில் இருக்கின்றதா? இல்லையா? என்பது கேள்வியல்ல. சமூகத்தில் பிரத்தியட் சத்தில் நடக்கின்றதா? இல்லையா? என்பது தான் கேள்வி. ஒரு சமயம் களை முளைத்தது போல் புதிதாக தோன்றினவையாகவுமிருக்கலாம். சாவகாச தோஷத்தால் ஏற்பட்ட வைகளாகவும் இருக்கலாம். ஆனால் இவை கள் ஒழிக்கப்பட்ட பின்பு தான் எந்த சமூகமும் தங்களிடம் மூடக் கொள்கை கள் இல்லை என்று பெருமை பேசிக்கொள்ள முடியும். ஆனால் ஒரு விசேஷம், சென்ற வருஷம் ஈரோடு அல்லாசாமி பண்டிகையைப் பற்றி ஈரோடு கூட்டத்தில் நான் கண்டித்துப் பேசினேன். எனது ஈரோடு முஸ்லீம் சகோதரர்கள் அதற்கு சிறிதும் கோபித்துக் கொள்ளாமல் வெட்கப் பட்டார்கள். அதன் பயன் இந்த வருஷம் அடியோடு அந்தப்பண்டிகை அங்கு நின்றுவிட்டது எனக்கு மிக சந்தோஷம். கோபித்துக் கொண்டி ருந்தால் இந்த வருடமும் நடத்தியிருப்பார்கள். ஆனால் இந்து மார்க்கத் திலோ என்னுடைய ஆதிக்கத்தில் இருப்பதுபோல பிரத்தி யாருக்கு காணப்பட்ட சில உற்சவங்களை நிறுத்த ஏற்பாடு செய்தேன். கடைசியாக அது இந்த இரண்டு வருடமாய் என்னால் நடத்தப்படுவதாகக் காணப் பட்டு வந்ததைவிட பலமடங்கு மேலாக நடத்தப்பட்டுவிட்டது. இந்தக் கூட்டத்தார் தான் தங்களை மேலான மதக்காரர் என்றும் தேசீயவாதிகள் என்றும் பகுத்தறிவுக்காரர்கள் என்றும் சொல்லிக் கொள்ளுகின்றார்கள். அதோடு மாத்திரமல்லாமல் எம்மீது கோபித்துக் கொண்டு பாமர மக்களைத் தூண்டி விட்டு வையும்படியும் ‘சாபம்’ கொடுக்கும்படியும் செய்தார்கள். இதன் பயனாகவே இந்தத் தமிழ்நாட்டில் எனக்கு ஒரு பஞ்சாயத்து கோர்ட்டு மெம்பர் தேர்தலுக்குக்கூட ஓட்டு கிடைக்காது. அது எப்படியோ போகட்டும். உலகமெல்லாம் ஒரு கொள்கையின் கீழ்வர வேண்டுமானால் இஸ்லாம் கொள்கையும் இணங்கிவரத் தயாராயிருக்க வேண்டும். உலகம் சீர்திருத்தத்திற்கு அடிமைப்பட்டது என்பதை மறந்து விடாதீர்கள். மனித சமூகம் அடையவேண்டிய சீர்திருத்தம் இன்னமும் எவ்வளவோ இருக்கின்றது என்பது உறுதி.

மனிதன் காலதேசவர்த்தமானத்திற்கு கட்டுப்பட்டவனாவான். மனிதனது மார்க்கமோ கொள்கையோ கூட அதில் பட்டதேயாகும். ஏனென்றால் மார்க்கம் என்பது மனிதன் வாழ்க்கைக்கு வழிகாட்டி என்ப தைக் கொண்டு சொல்லுகின்றேன். வழி என்பது அடிக்கடி மாறக்கூடியதே யாகும். கால்நடை வழி, ஆடு, கழுதை, குதிரை மூலம் செல்லும் வழி, கட்டை வண்டி வழி, மோட்டார் வழி, ரயில் வழி, ஓடம் கப்பல் வழி, கடைசியாக ஆகாய விமானவழி ஆகிய ஒவ்வொரு காலத்திற்கு தகுந்ததுபோல் வழி திருத்தப் படவேண்டும். அதுபோலவே மனித வாழ்க்கை வழியும் காலத்தின் கோலமாய் தேசத்தின் தன்மையாய் சந்தர்ப்பத்தின் அவசியமாய் மாறியே ஆகவேண்டும் என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும். மாறுதலுக்கு இடம்கொடுக்கும் என்கின்ற மார்க்கமே சரியான மார்க்கம்.

உதாரணமாக இஸ்லாம் மார்க்கத்தை எடுத்துக் கொண்டாலும், துருக்கி இஸ்லாம் சமூகத்தின் நடவடிக்கையும், ஆப்கானிஸ்தான் சமூக நடவடிக்கையும், இந்தியா இஸ்லாம் சமூக நடவடிக்கையும் ஒன்று என்று சொல்லிவிட முடியாது. இந்தியாவிலேயே ஈரோட்டுக்கும், தஞ்சைக்கும், சாத்தான் குளத்திற்குமே அனேக வித்தியாசம் காணப்படுகின்றது. இவைகள் மூன்றும் ஒன்றுபடும்போது யாராவது இருவரோ அல்லது மூன்றுபேரும் ஆளுக்குக் கொஞ்சமோ தங்கள் பழக்க வழக்கங்களை நம்பிக்கைகளை மாற்றிக் கொள்ளத்தான் வேண்டும். நான் சொல்லும் மாற்றமெல்லாம் முக்கியமாய் நடை உடை பாவனையைப் பொருத்ததேயாகும். மனமாற்றத் தைப் பற்றி இப்போது சொல்ல வரவில்லை. அவை அவரவர்கள் சொந்த சொத்து. மற்றவர்களுக்குத் துன்பமோ தொல்லையோ இல்லாத வழியில் எவ்வித அபிப்பிராயத்தையும் கொள்ள யாருக்கும் உரிமையுண்டு. அறிவு பெருக்கமும் அதனால் மனமாறுதலும் சுபாவமேயாகும்.

ஆகவே சகோதரர்களே! நான் சொன்னவை எனது சொந்த அபிப்பிராயம். என் சொந்த அனுபவ வாயிலாகக் கண்டது என்பவைகள் என்று தெரிவித்துக் கொள்ளுகிறேன். ஆதலால் இதையே முழு உண்மையென்று கருதி விடாமல் உங்கள் அறிவு அநுபவம் ஆகியவைகளைக் கொண்டு முடிவுபெற்று உங்கள் இஷ்டப்படி நடக்க உரிமையுடையவர்கள் என்பதை மறந்து விடாதீர்கள்.

--------------28.07.1931 ஆம் நாள் சாத்தான்குளத்தில் ( திருநெல்வேலி மாவட்டம் ) நடைபெற்ற முகமதுநபி பிறந்தநாள் கொண்டாட்டத்தில் தலைமையேற்று ஆற்றிய உரை. குடி அரசு - சொற்பொழிவு - 02.08.1931

0 comments: