Search This Blog

7.8.11

நட்பு நாளும் - பகுத்தறிவுவாதிகளும்


இன்று உலக நட்பு நாள். ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் முதல் ஞாயிறன்று 1919 ஆம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகின்றது.

காதலர் தினம் கொண் டாடப்படுவதில்லையா அதுபோல!

பகுத்தறிவுவாதிகள் - கருஞ்சட்டையினர் ஒருவரைக் குறிப்பிட்டு எனது உறவுக்காரர், சொந்தக்காரர்! என்று குறிப்பிடுவதைக் கூடத் தவிர்ப்பார்கள்.

காரணம், அப்படிக் கூறுவதில் ஜாதி ஒட்டிக் கொண்டு இருக்கிறது. நட்பு - தோழமை என்பதுதான் உயர்ந்தது - மனிதத் தன்மை வாய்ந்தது.

ஒருவரை ஒருவர் பார்க்காமலேயே வடக்கிருந்து உயிர் நீத்த நட்பு சான் றாண்மை மிக்க தமிழ்ப் புலவர் பிசிராந்தையார். தமது நண்பரான அரசன் கோப்பெருஞ்சோழன் உயிர்நீத்தான் என்பதைக் கேட்ட மாத்திரத்திலேயே ஓர் நிலையை மேற்கொண்ட சங்கப்புலவன் அவன்.

அத்தகு தமிழ்நாட்டில் நட்பைக் குழிதோண்டிப் புதைத்த பார்ப்பனீயத்தின் வருணாசிரம நச்சுக் கள்ளிகள் முளைக்க ஆரம்பித்தன.

அதன் காரணமாகவே ஒருவரை ஒருவர் சந்திக்கும்பொழுதுகூடத் தொட்டுக் கொள்வதைத் தவிர்த்து கைகுலுக்கச் செய்யாமல் தூர நின்றே கும்பிட்டு விலகிச் செல்லும் கொடுமை இங்கு வேரிட்டு விட்டது!

பெயருக்குப்பின் ஜாதி வாலை ஒட்ட வைத்து பிளவுக்கும், பேதத்துக்கும் ராஜ பாட்டை வகுக்கப்பட்டது.

ஒரு ஈழவர், நம்பூதிரி பார்ப்பனர்களிலிருந்து இவ்வளவு தூரம் விலகி நிற்க வேண்டும் என்ற நிலையெல்லாம் வந்தது. நீதி மன்றத்தில் ஒரு ஈழவர் வர வேண்டிய அவசியம் ஏற்பட்டால் நீதிமன்றத்திற்கு வெளியே நிறுத்தப்பட்டு, நீதிபதிக்கும், அந்த ஈழவர் தோழருக்கும் இடையே ஒருவர் தகவல் பரிமாறும் பயித்தியக்காரத்தனங்கள் மதத்தின் பெயரால் நடை பெற்றதுண்டு.

வட்டமேஜை மாநாட்டில் பங்கேற்கச் சென்ற இரட்டை மலை சீனிவாசன், இங்கி லாந்து மன்னன் கைகுலுக்க வந்தபோது நீட்டிய தன் கையை இழுத்துக் கொண் டார்.

காரணம் கேட்டபோது இந்தியாவில் இந்து மதத்தத்துவப்படி நாங்களெல் லாம் தீண்டத்தகாதவர்கள்; உயர்ந்த ஜாதிக்காரர்கள் எங்களைத் தீண்டக் கூடாது! என்று, உலகம் அறியும் வண்ணம் இந்தியாவில் நிலவும் தீண்டாமைத் தொழுநோயைத் தக்க தருணத்தில் வெளிச்சத்துக்குக் கொண்டு வந்து பதிவும் செய்தார்.

நட்பு நாளை அனுசரிக்கும் இந்நாளில் இந்தியாவில் நிலவும் தீண்டாமை - அதன் கருப்பையான ஜாதி இவற்றிற்குச் சவக்குழி வெட்ட சூளுரைப்போம்!

ஜாதியைத் தாங்கிப் பிடிக்கும் கடவுள், மதம், சாத்திரக் குப்பைகளுக்குத் தீ மூட்ட தீர்மானிப்போம்! வாழ்க பெரியார்!

----------------- மயிலாடன் அவர்கள் 7-8-2011 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

0 comments: