Search This Blog

18.8.11

கிருஷ்ணனைப்பற்றி பாடுதில் ஆன்மீகத்துக்கு இடம் ஏது?


சென்னையில் ஸ்ரீ தியாக பிரம்மகானசபாவின் இரண்டாவது ஜெயந்தி வெற்றி விழா இம்மாதம் 15ஆம் தேதி தொடங்கி 29ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

விழாவைத் தொடங்கி வைத்து தினமலர் வெளி யீட்டாளர் திருவாளர் ஆர். லட்சுமிபதி பேசியுள்ளார்.

இசையைப் பற்றி சாங்கோ பாங்கமாக பேசிய அய்யர்வாளுக்குத் தமிழிசை மூவேந்தர்களான முத்துத்தாண்ட வர், அருணாசலக் கவிராயர், மாரி முத்தா பிள்ளை பற்றி ஒரு வார்த்தையில்லை. அவாள் எல்லாம் நீஷப் பாஷை யான தமிழில் பாடிய சூத்ரவாளாச்சே. பிராமணாள் வாயால் அவாளை உச்சரிக்க லாமோ! உச்சரித்தால் நாக்கு அல்லவா தீட்டாகி விடும்; அதற்குப் பிறகு நாக்கைப் பிடுங்கிட முடியுமோ! அதனால்தான் சமத்தா அவாளைப் பற்றி வாய் திறக்கவில்லை!

கருநாடக இசையைப் பற்றிச் சொல்லும்போது மனதிற்கு அமைதி தருவதுடன், ஆன்மீக உணர்வையும் வளர்க்கும் என்று ஒரு போடு போட்டாரே பார்க்கலாம்; அதுதானே அவாளுக்கு அவசியம் - அதைச் சொல்லாமல் இருந்தால் எப்படி? சொல்ல வேண்டிய இடத்தில் அழுத்தமாகவே சொல்லிப் போட்டார்.

அவாள் சொன்ன அந்த மன அமைதி, ஆன்மீகம் எப்படிப்பட்டது என்பதை நாம் சொன்னால் சரி வருமா?

அவாள் ஆத்துக்காரரை விட்டுச் சொன்னா தானே பேஷாயிருக்கும். அதுவும் சங்கீத சீசனில் விமர்சகர் சுப்பு என்ன சொன்னார் என்பதுதானே அதி முக்கியம்.

அவர் சொன்னா சரியாகத்தானே இருக்கும். இதோ சுப்பு சொல்கிறார் - கேட்போமா?

நமக்குள்ள இருப்பது போலி ஆசாரம். புனிதம் இல்லைன்னு தடை பண்ணி வச்சிருக்கோம். ஆன்மீகம் என்பதை நம்மைப் போல தப்பாப் புரிந்து கொண்டவர்கள் யாரு மில்லை! நேத்து மாலை முழுவதும் உனக்காகக் காத்துக் கொண்டிருந்தேன். நீ ஏன் வரவில்லை? என் தாபம் தாங்கல்லே! இப்படி ஒரு பாட்டு தெலுங்கில் இருக்கு. அர்த்தம் தெரிஞ்சா தடை போட்டு டுவாங்க.

க்ஷேத்திரக்ஞர் பாட்டு ஒண்ணு இருக்கு! கிருஷ்ணா! இப்ப வந்திருக்கிற... போ... போயிடு.. போ.. போயிடு.. அப்புறம் வா என் புருஷன் வர நேரமிது! என்று - யாராவது அர்த்தம் தெரிஞ்சு ஆடறாங்களா?

அஷ்டபதி ஒண்ணு இருக்கு. தலைவி சொல்றா.. தாபம் அதிகமாயிட்டது. அவனைப் போய் இழுத்துக் கொண்டு வாடி! என்கிறாள். தோழி போயிட்டு லேட்டா வரா. ஏன் தலை எல்லாம் கலைஞ்சியிருக்கு?ன்னு தலைவி தோழிக்கிட்ட கேட்கிறாள். காத்துல கலைஞ்சி போயிட்டுதுன்னு புதில் சொல்றா.

ஜிவாத்மாவை அடைய தாபத்துல துடிக்கிறது என்பதெல்லாம் மழுப்பலாகத்தான் தோன்றது (தினமலர் 16.12.2003) என்று பிரபல இசை விமர் சகர் சுப்புடு எழுதியிருக்கா.

தினமலர் வெளியீட் டாளர் திருவாளர் லட்சுமி பதிக்கு, தினமலரிலிருந்து அதுவும் அவாள் சொன்னதை எடுத்துக்காட்டினா தானே திவ்யமாக இருக்கும். கருநாடக இசையைக் கேட்டால் மனதுக்கு அமைதி தருகிறது என்று பேசியிருக்கிறாரே தின மலர் பதிப்பாளர் - அமைதி தரும் லட்சணம் இது தானா?

விரகதாபம் எடுத்து நிற்கிறது - அவனை இழுத்து வா என்பதில் ஆகாகா... எப்படிப்பட்ட அமைதி - ஆன்மீகம் வெள்ளமாக வழுக்கி ஓடுது.

அவாளின் கருநாடக இசை என்றால் பெரும்பாலும் பக்திப் பரவசப் பாடல்கள் தானே, அதிலும் காதல் லீலைகளுக் கென்றே பிறந்திருக்கிற அந்தக் கில்லாடி கிருஷ்ணனைப் பற்றி தானே!

அந்தக் கிருஷ்ண பகவானைப் பற்றி சக்ர வர்த்தி ராஜகோபாலாச் சாரியார் (ராஜாஜி) சொல்லுவதுதான் படு ஜோர்!

வியாசர் விருந்து என்ற தலைப்பிலும், சக்ரவர்த்தித் திருமகன் என்ற தலைப்பிலும் மகாபாரதத்தையும், ராமாயணத்தையும் கல்கியில் தொடராக ராஜாஜி எழுதி வந்தது அன்பர்களுக்குத் தெரியும். அதன் பின்னர் பாகவ தத்தை எளிய தமிழில் எழுதலாமே என்று சதா சிவம் தமது யோசனையை ராஜாஜியிடம் வெளியிட் டார். அதற்கு ராஜாஜி கூறிய பதில் சிந்திக்க வைப்பதாகும். சதாசிவம் எனக்குப் பாகவதத்தை எழுதுவதில் நாட்டமில்லை. அதில் பகவானின் லீலை களும், அற்புதங்களும் மிகுதியாக உள்ளன.

ராமாயணம், மகாபாரதம் போன்று தர்மத்துக்கும் அதர்மத்துக்கும் இடையில் நடைபெறும் போராட்டங்களாக அமையவில்லை. மனிதனுக்கு தார்மீக நெறி களில் ஆர்வமும், நம்பிக்கையும் இந்த இதிகாசங்கள் ஊட்டுவது போல பாக வதத்தில் நான் காண வில்லை

(கல்கி 4.10.2009 பக்கம் 72)

ராமாயணம்பற்றியும், மகாபாரதம் பற்றியும் ஆச்சாரியார் கூறுவதிலும் நமக்குக் கருத்து வேறு பாடு உண்டு; அது ஒரு புறம் இருக்கட்டும்.

பாகவதம் பாகவதம் என்று கண்மணிகளில் ஒத்தி கதை அளக்கிறார் களே. அதன் யோக்கி யதையே அய்யங்காரான ஆச்சாரியாரே விண்டு உரைத்து விட்டார். அதற்கு மேல் அப்பீல் ஏது?

அந்தக் கிருஷ்ண பகவானைப் பற்றிதானே கருநாடக இசை என்று கூறி உருகி உருகிப் பாடு கிறார்கள் - இரசிக்கி றார்கள்.

ராஜாஜி சொல்லுவது உண்மையென்றால் கிருஷ்ணனைப்பற்றி பாடுதில் ஆன்மீகத்துக்கு இடம் ஏது? பகவானின் லீலைகள் ஓவராக இருக்கிறதாம்.

கறுப்புச் சட்டைக்காரன் சொன்னால் கடு கடுப்பு - அதையே ஆச் சாரியார் சொன்னால் கதகதப்போ!

-------------------"விடுதலை”18-8-2011

0 comments: