Search This Blog

6.8.11

திராவிட இயக்கத்தை அழிக்க நினைப்பவர்கள் விரைந்து ஏமாந்து போவார்கள்!


வெற்றி தோல்விகளால் திராவிட இயக்கத்தை யாராவது அழிக்க நினைத் தால் அவர்கள்தான் ஏமாந்து போவார்கள் என்று திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி கூறினார்.


27.7.2011 அன்று தஞ்சை மாவட்டம் வலங்கைமானில் திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரை வருமாறு:


எழுச்சியோடு முப்பெரும் விழா


மிக எழுச்சியோடு நடைபெறுகிறது இந்த முப்பெரும் விழா. விடுதலை சந்தா வழங்கும் விழா, பெரியார் பெருந்தொண்டர்களுக்கு விருது வழங்கும் விழா, தத்துவ முத்துக்கள் நூல் வெளி யீட்டு விழா ஆகிய மூன்று பெரும் விழாக்களை உள்ளடக்கி இந்த நிகழ்ச்சி இங்கே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.


பெரியார் பன்னாட்டு மய்ய இயக்குநர்களில் ஒருவரான நம்முடைய அமெரிக்க பேராசிரியர் டாக்டர் இலக்குவன்தமிழ் அவர்கள், தத்துவ முத்துக்கள் நூலை வெளியிட்டு மிக அருமையான சொற்பொழிவினை நிகழ்த்தினார்.


விடுதலை அறிவாயுதம்


விடுதலை நாளேடு என்பது அறிவு ஆசான் தலைவர் தந்தை பெரியார் அவர்கள் நமக்குத் தந்திருக்கின்ற மிகப்பெரிய அறிவு ஆயுதம் என்கின்ற காரணத்தினாலே அந்த அறிவாயுதத்தினுடைய வீச்சு பலபேரை அச்சுறுத்துகிறது என்கின்ற காரணத்தினாலே இது அதிகமான பேர்களுக்குப் போய்ச்சேரக்கூடாது.


விடுதலை நூலகங்களில் தடை செய்யப்பட்டாலும் கூட....!


நூலகங்களிலே விடுதலை ஏடு தடை செய்யப் பட்டாலும், நூல்களால் தடை செய்யப்பட்டாலும், நூல்-அகங்கள் என்று ஒரு ஆட்சி அமைந்தால் அது எப்படியிருக்கும் என்பதற்கு அடையாளமாக அது தடைசெய்யப்பட்டிருந்தாலும் கூட, தெளிவாக ஒன்றை சுட்டிக்காட்ட வேண்டும்.


நம் மக்களுடைய பேராதரவு இருக்கின்ற காரணத்தினாலே இது இன்னும் பல மடங்கு பெருகுமே தவிர, இந்த விடுதலை ஏட்டைத் தடை செய்ய யாராலும் முடியாது! (கைதட்டல்).


33 நாடுகளில் விடுதலை படிக்கின்றனர்


ஏனென்றால் விடுதலை இன்றைக்கு ஒரு சிறப்பைப் பெற்றிருக்கின்றது. உலகத்தில் 33 நாடுகளில் இருக்கின்ற பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் ஒரே நேரத்திலே மாலையிலே கணினி வாயிலாக இருக்கக்கூடிய இணையத்தின் மூலமாக விடுதலையைப் படிக்கிறார்கள்.


இன்னும் கேட்டால் தமிழ்நாட்டில் இருக்கிற தமிழர்கள் விடுதலையை அடுத்த நாள்தான் படிக்கிறார்கள். ஆனால் வெளிநாட்டிலே இருக் கின்ற தமிழர்கள் உடனடியாகப் படிக்கிறார்கள். எனவே இந்த செய்தியை கேட்கும் பொழுது நமக்கு வியப்பாக இருக்கும். அவ்வளவு பெரிய அளவுக்கு வாய்ப்புகள் வளர்ந்திருக்கின்றன. அட, பைத்தியக்காரர்களே!


எனவே இந்த அறிவு யுகத்தில் போய் எந்தக் கருத்தையும் தடை செய்துவிடலாம் என்று நினைத்தால் அதைவிட பைத்தியக்காரத்தனம் வேறு கிடையவே கிடையாது(கைதட்டல்).


தடுக்கத் தடுக்க, அடிக்க அடிக்க எழும் பந்து போல, தடுக்கத் தடுக்க விடுதலையினுடைய வளர்ச்சி மேலும் அதிகரிக்கும். நீண்ட நாள்களுக்குப் பிறகு இந்த ஊர் பொதுக்கூட்டத்திற்கு வந்தி ருக்கிறேன். இந்தக் கூட்டத்திற்கு நிறைய தாய் மார்கள் வந்திருப்பதைப் பார்த்து பெருமை யடைகிறேன் (கைதட்டல்).


நிறைய தாய்மார்கள் வந்திருக்கிறார்கள்


சகோதரிகள் இங்கே புத்தகங்களை வாங்கி னார்கள். தாய்மார்கள் இந்த நிகழ்ச்சிக்கு வந்தி ருக்கிறார்கள். தாய்மார்கள் கறுப்புடை அணிந்து வந்தார்கள் என்று சொன்னால், இந்த இயக்கம் எவ்வளவு வலிமையான இயக்கம், சமுதாயப் புரட்சி இயக்கம் என்பதை மிக அருமையாகக் காட்டக் கூடிய வாய்ப்பைப் பெற்றிருக்கிறோம்.


அதுமட்டுமல்ல, நண்பர்களே, இதிலே ரொம்ப பெருமையான ஒரு செய்தி என்னவென்று சொன்னால் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி ஏற்பட்டது. மன நிறைவு ஏற்பட்டது.


நீண்ட நாள்களுக்குப் பிறகு வந்திருக்கிறேன்


நீண்ட நாள்களுக்குப் பிறகு நான் இங்கு வந்திருக்கின்றேன். நீங்கள் ஆயிரக்கணக்கிலே குழுமியிருக்கின்றீர்கள். மகிழ்ச்சி. அதைவிட மிக அன்போடு வரவேற்றார்கள். சிறப்பான மகிழ்ச்சி.


விடுதலை ஏட்டிற்கு சந்தா கொடுத்தீர்கள், மகிழ்ச்சி. அதுபோலவே நீங்கள் சிறப்பாக புத்தகங் களைத் தயாரித்து தொகுத்தளித்திருக்கிறீர்கள். டாக்டர் போன்றவர்கள் அதற்கு ஆதரவு காட்டியிருக்கின்றார்கள். நமது அருமைக்கும், பாராட்டு தலுக்குமுரிய டாக்டர் போன்ற பல நண்பர்கள் இங்கே கட்சிக்கு அப்பாற்பட்டு சிறப்பாக உதவி செய்திருக்கிறார்கள்.


பெரியார் ஆணையை ஏற்று சிறை சென்ற...


வழக்குரைஞர் அமர்சிங் சொன்னார்கள். இதெல்லாம் பெருமைதான், மகிழ்ச்சிதான் என்று சொன்னாலும், அதை எல்லாம் தாண்டி, எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை, உற்சாகத்தை தரக்கூடிய பணியினை எனக்குத் தந்திருக்கின்றீர்கள். முது பெரும் பெரியார் பெருந்தொண்டர்களாக எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்னாலே ஜாதி ஒழிப்பிற்காக தந்தை பெரியாருடைய ஆணையை தலைமேல் ஏற்று கட்டளையாகக் கருதி சிறைச் சாலைக்குச் சென்று திரும்பிய நம்முடைய பெரியார் பெருந்தொண்டர்களுக்கு விருது வழங்கி பாராட்டு செய்கின்ற வாய்ப்பை எனக்குத் தந்திருக்கின்றீர்களே, அதுதான் எனக்கு மிகப்பெரிய எல்லையற்ற மகிழ்ச்சியைத் தந்து கொண்டிருக்கிற ஒரு நிகழ்ச்சியாகும்.


இயக்க வளர்ச்சிக்குப் பாடுபட்டவர்கள் யார்? யார்?


எந்த ஊருக்குப் போனாலும் அந்த ஊருக் குள்ளே வேன் நுழைகின்றபொழுது அந்த ஊரிலே இருந்து இயக்க வளர்ச்சிக்காக பாடுபட்ட அத்துணைத் தோழர்களையும் நினைவூட்டிவிட்டுத் தான் அந்த ஊருக்குள்ளே நான் நுழைவேன். ஏனென்றால் இந்த இயக்கத்திலே தன்னுடைய வாழ்வையே ஒப்படைத்திருக்கிறோம் என்று சொல்லக்கூடிய அளவிலே ஏறத்தாழ 65 ஆண்டு கால பொது வாழ்க்கை, அதற்கு மேலே இருக்கின்ற வாய்ப்பைப் பெறுகின்றபொழுது, ஒவ்வொரு ஊருக்கு வருகிற பொழுதும், பழைய தோழர்களை நினைக்காமல் வரமுடியாது.


இங்கே வருகிறபொழுது ஏ.எஸ்.கணபதி அவர் களை நினைத்துக்கொண்டே வந்தேன்- அவர்கள் எவ்வளவு சிறப்பாகப் பணியாற்றுவார்கள் என்று. பல ஊர்களுக்குச் சென்று நாடகங்களைப் போட்டு அதன்மூலம் சங்கடங்களை அனுபவித்த அந்த நேரத்திலேகூட அவர்கள் எத்தனையோ சோதனைகளை எல்லாம், வேதனைகளை எல்லாம் தாங்கியவர் மறைந்த வலங்கை ஏ.எஸ்.கணபதி அவர்கள். அவர்கள் கடைசி வரையில் உடல்நலம் குறைவாக இருந்த நேரத்தில்கூட பாடுபட்டார்கள். இயக்கத்திலே உறுதியாக இருந்தார்கள்.


பாசமுள்ள கொள்கை குடும்பம்


நம்முடைய இயக்கம் அத்தகைய தோழர்களை மறக்காது என்பதற்கு அடையாளமாகத்தான் இங்கே இந்த அரங்கத்திற்கே ஏ.எஸ்.கணபதி நினைவு அரங்கம் என்று பெயர் சூட்டியி ருக்கின்றார்கள். நம்முடைய தோழர்கள் என்று சொன்னால் இந்த இயக்கம் எப்படிப்பட்ட ஒரு பாசமுள்ள கொள்கை குடும்பம் என்பதை நீங்கள் எல்லோரும் நன்றாகத் தெரிந்துகொள்ளவேண்டும்.


வலங்கை விசு என்றால்....


அதுபோலவே புதுச்சேரியில் இன்றைக்கு திராவிடர் கழகம் வலிமையாக கால் ஊன்றி நிற்கிறதென்றால் நமது இயக்கத் தோழர்கள்தான் அதற்குக் காரணம். எத்தனையோ சோதனை களுக்கிடையிலே புதுவையிலே வலங்கை கலை மணி என்று சொல்லக்கூடிய அளவிற்கு அழைக் கப்பட்டவர். வலங்கைமானிலே அவர்கள் சிறப்பாக பணியாற்றக்கூடிய வாய்ப்பைப் பெற்றார்கள். எனவே இந்த ஊர் இப்படி பல கொள்கைரீதியான தோழர்களைத் தந்திருக்கிறது.


அதுபோலவே நம்முடைய வலங்கை விசு அவர்கள். அவர் ஒரு அரசாங்க ஊழியராக இருந்தாலும் கொள்கையிலே தீவிர உணர்வு கொண்டவர். பல நாடகங்களின் மூலம் அவர்கள் எவ்வளவு அற்புதமான பணிகளைச் செய்தார் என்பது புதிதாக வரக்கூடிய இளைஞர்களுக்குத் தெரியாது.


பழைய தோழர்களுக்குத்தான் தெரியும்! பழைய தோழர்களுக்குத் தெரியும்-வலங்கை விசு கொள்கையிலே எவ்வளவு உறுதியாக இருந்தார் என்பது. அவர் எங்கு சென்றாலும், எவ்வளவு பணி மாறுதல்களைப் பெற்றாலும்கூட நாடகங்கள் மூலமாக, கொள்கைப் பிரச்சாரத்தின் மூலமாக அவர் ரொம்பத் தீவிரமாக இருப்பார்கள்.


இப்படி எண்ணற்ற தோழர்களைப்பற்றி எடுத்துச்சொல்லாம். அதுபோலவே நம்முடைய தில்லை சிகாமணி அவர்கள். கோவிந்தகுடி தோழர்கள் நிறைய பேர் இங்கே வந்திருக்கிறார்கள்.


அவர்கள் யார் யாரென்றால்...


தில்லை சிகாமணி, தட்சிணாமூர்த்தி, தங்கமணி, ஜெயபால், மாசிலாமணி, கலியாணசுந்தரம், அதே போல நார்த்தங்குடி தோழர்கள்-ரெங்கசாமி, லோகாம்பாள், புலவர் நத்தம் கணேசன், சந்திர சேகரபுரம் துரை, டாக்டர் அகஸ்தியநாதன், சிலுவை முத்துவிடயன், குப்பசமுத்திரம் பக்கிரிசாமி, ஜான்சன் விடயன், குப்பசமுத்திரம் குழந்தை, கோவிந்தகுடி கோவிந்தராஜன், பெரியார் நகர் அய்யனான், விடயல் கருப்பூர் அருள்தாஸ், பெரியார் நகர் மூங்கிலான், விருப்பாட்சிபுரம் கோவிந்தன், சுந்தரம்மாள், கோவிந்தகுடி தனபாக்கியம், முனியம்மாள் என்று ஒரு பெரிய பட்டியலே உண்டு.


நான் என்றும் மறப்பதில்லை


நான் தோழர்களை மறப்பதில்லை என்பதற்கு அடையாளமாகத்தான் இவர்கள் எல்லாம் வந்தபொழுது நான் சொன்னேன், ஒருவர் உங்களோடு வரக்கூடியவர் இல்லை. அவர்தான் ஆசிரியர் தோழர் ஜம்பு அவர்கள். உடனே என்னை உற்சாகப்படுத்துகின்ற வகையிலே உங்களுக்கு நினைவாற்றல் சரியாக இருக்கிறது, நன்றாக ஞாபகம் இருக்கிறது என்று சொன்னார்கள்.


அங்கங்களை மறந்துவிட முடியுமா?


நம்முடைய அங்கங்களை நாமே மறந்து விடுவோமா? இதுதான் நம்முடைய கை. இதுதான் நம்முடைய இதயம். இதுதான் நம்முடைய மூளை. இதுதான் எனது இரத்த ஓட்டம் என்று எப்படி நாம் மறக்க முடியாதோ அது போலத்தான் எங்களைப் பொறுத்தவரையிலே ஒரு கருப்புச் சட்டைக்காரன். இன்னொரு கருப்புச்சட்டைக் காரனை அப்படித்தான் கருதுவார்களே தவிர, வேறு எங்களுக்கு எந்தவிதமான கைமாறோ, பிரதிபலனோ கிடையாது.


ஆயிரம் சோதனைகள் வந்தாலும்...


அதனால்தான் ஆயிரமாயிரம் சோதனைகள் வந்தால் கூட, இந்த இயக்கம் அவற்றை சாதனை களாக மாற்றிக்கொண்டிருக்கக் கூடிய ஓர் அற்புதமான இயக்கமாக இருக்கிறது.


எதிர்பார்த்தார்களா?


இந்த இயக்கத்திற்கு வரக்கூடிய தோழர்கள், என்னோடு வரக்கூடிய தோழர்கள் எதை எதிர் பார்த்து வந்திருக்கிறார்கள்? இப்படி ஒரு விருது கிடைக்கும் என்று எதிர்பார்த்தார்களா? எனவே இவ்வளவு சிறப்பான ஓர் இயக்கம் எதற்காக? யாருக்காகப் பாடுபடுகிறது? அருமை இளைஞர்களே! தோழர்களே, புதிய தலை முறையினரே நீங்கள் தயவுசெய்து சிந்தித்துப் பாருங்கள்.


பெரியார் பிறந்திருக்காவிட்டால்...!


தந்தை பெரியார் பிறந்திருக்காவிட்டால், இந்த இயக்கம் தோன்றியிருக்காவிட்டால் என்ற ஒரு கேள்வியைக் கேட்டுக்கொண்டு நினைத்துப் பாருங்கள். இன்றைக்குப் பெரும்பாலோர் சிமெண்ட் சாலையிலே பயணம் பண்ணிக் கொண்டிருக்கின்றார்கள். அந்தப் பாதை பயணம் செய்வதற்கு ரொம்ப லாவகமாக இருக்கிறது.

எனவே அவர்களுக்கு கல்லும், முள்ளும் கரடுமுரடாக இருந்த பாதை இதற்கு முன்னாலே எப்படி இருந்தது என்று தெரியாது.


உழைப்பால் கட்டப்பட்ட மேடை


இத்தனை தோழர்களை பாராட்டுவதிலே நான் எல்லையற்ற மகிழ்ச்சி அடைகிறேன் என்று சொல்லுவதற்குக் காரணம், இந்த மேடை அவர்களால் கட்டப்பட்ட மேடை. அவர் களுடைய உழைப்பால் கட்டப்பட்ட கொள்கை மேடை. (பலத்த கைதட்டல்). அதனால்தான் எங்களைப் போன்றவர்கள் நின்றுகொண்டி ருக்கின்றோம்.


ஆகவே அது எங்களுடைய பலம் என்று நாங்கள் நினைக்கவில்லை. அவர்களுடைய கைம்மாறு கருதா தொண்டு. பலன் கருதாமல், மானம் பாராது, நன்றி பாராட்டாத பெரியார் பின்னாலே வந்தவர்கள் அந்த இலக்கணப்படி இருக்கக்கூடிய ஓர் அற்புதமான வாய்ப்பைப் பெற்றவர்கள். அவர்களுடைய தொண்டுக் கெல்லாம் தலைவணங்கி இன்னமும் நீங்கள் வாழவேண்டும்.


கருப்புச்சட்டைக்காரன் மறைந்தால்


உங்களால் இயல்பாக இருக்க முடியவில்லை. உடல் நலக்குறைவு இருக்கிறது என்றெல்லாம் கருதினால்கூட, நாங்கள் அதைப்பற்றிக் கவலைப் படாமல் நீங்கள் நீண்டநாள் வாழவேண்டும் என்று கருதுபவர்கள்.

ஒரு கருப்புச்சட்டைக்காரன் மறைந்தால் அதை ஈடு செய்வதற்கு எளிதில் முடியாது. ஒரு விஞ்ஞானி மறைந்தால் அதற்கு ஈடு கொடுக்க முடியாது. ஏனென்றால் அவ்வளவு பக்குவப்பட்டவர்கள் கருப்புச்சட்டைக்காரர்கள், திராவிடர் கழகத்துக்காரர்கள், பெரியார் பெருந்தொண் டர்கள், திராவிட இயக்கத் தோழர்கள்.

பதவி-விளம்பரத்தை எதிர்பார்த்தா...!


எனவே தான் அவர்கள் வெறும் பதவியை நோக்கி இருக்கக்கூடியவர்கள் அல்லர்; அவர்கள் வெறும் விளம்பரத்தை விரும்பியவர்கள் அல்லர். அல்லது இந்த இயக்கத்தில் இருந்தால் என்ன லாபம் கிடைக்கும் என்று கருதி இருக்கக்கூடியவர்கள் அல்லர். ஆகவேதான் எத்தனை சோதனைகள் வந்தாலும், எவ்வளவு வேதனைகள் வந்தாலும் அதை ஒரு கட்டுப்பாடாக நினைக்கக் கூடியவர் களாக இருப்பார்கள்.


தோழர் கோவிந்தன் அவர்கள் ஒன்றியத் தலைவராகப் பொறுப்பேற்றவுடனே இவ்வளவு நாளாக இல்லாத உற்சாகத்தைக் காட்டி, எல்லோ ரையும் அரவணைத்து வலங்கை ஒன்றியம் என்று சொன்னால் அது ஒரு பலமான இயக்கக்கோட்டை என்று காட்டக்கூடிய அளவிற்கு அவர்கள் உழைத்திருக்கிறார்கள் என்றால் அவர்களைப் பற்றி எனக்குத் தெரியும். அவர்களைப் புகழும் பொழுது எனக்கு மகிழ்ச்சி.


தொண்டி போன்ற பகுதிகளில்....


என்ன காரணம் என்றால் நம்புதாரை என்கிற ஊரில் அவர் பகுத்தறிவாளர் கழகத்தை நடத்தியவர். அதுவும் தொண்டி போன்ற பகுதியைப் பார்த்தவர். அங்கு ஊரே இருக்காது. ஆனால் அவருக்குத் தெரிந்த ஒரு நண்பர் இருப்பார்.

ஒரு மேஜை, ஒரு நாற்காலி வாங்கிக்கொண்டு போவார். திராவிடமணி இங்கே இருக்கிறார் பார்த்தேன். திராவிடமணி, சமரசம் போன்றோர் எங்களை அழைத்துச் செல்வார்கள். நாங்கள் தொண்டிக்குப் போய் நிற்போம். அந்தக் காலத்தில் துறைமுகம் இருந்த பகுதி அது.


தொண்டு சரியாக இருக்கும் தொண்டி சரியாக இருந்ததா?


எங்களுடைய தொண்டு சரியாக இருக்கும். ஆனால் தொண்டி அப்பொழுது சரியாக இருந்ததா என்று எங்களுக்குத் தெரியவில்லை. யாரோ ஒரு இஸ்லாமிய நண்பர். யாரோ ஒருவருடைய ஆதரவு இருந்தால் போதும். ஆமாம் சரிதான். நானே என்னுடைய நினைவை கொஞ்சம் பரிசோதித்துக் கொண்டு பார்க்கின்றேன்.


திராவிடக் கிளை உருவாகிய இடம்
முகச்சவரக் கடை


எங்களைப் பொறுத்த வரையில் தங்குவதற்கு மாளிகையாக இருக்க வேண்டும் என்கிற அவசியமில்லை. சாதாரண முகச்சவரக் கடையாக இருந்தாலும் பரவாயில்லை. அங்கே நாங்கள் நன்றாகப் படுத்துத் தூங்குவோம். அங்கு நல்ல சாப்பாடு வாங்கிக்கொடுப்பார்கள். முகச்சவர கடைகளில்தான் திராவிடர் கழக கிளைகளே ஆரம்பமானது. ஆகவே அந்தஸ்து, தகுதி, பெருமை இவற்றைப் பார்த்து வளர்ந்து வளரக்கூடிய இயக்கமல்ல.

அழிக்க முடியாது!


எனவே, இந்த இயக்கத்தை வெற்றித் தோல்விகளால் அழித்துவிடலாம் என்று யாராவது கருதினால் ஊடகங்களுக்கும் சேர்த்துச் சொல்லுகிறோம். அவர்கள் விரைவில் ஏமாறுவார்கள் (கைதட்டல்). என்பதை தெளிவுபடுத்துகிறோம். திராவிடர் கழகம் மட்டுமல்ல, திராவிட முன் னேற்றக் கழகத் தோழர்களும் உற்சாகத்தோடும், மகிழ்ச்சியோடும் குழுமியிருக்கின்றார்கள்.


கொள்கைப் பயணம்


ஏனென்றால் கொள்கைப் பயணத்தில் தோல்வி கிடையாது. அதுமட்டுமல்ல, பயணங்கள், முடிவ தில்லை. கொள்கையைப் பொறுத்தவரையில், இலட்சியத்தைப் பொறுத்தவரையில் அது நடந்து கொண்டிருக்கும். சில நேரங்களில் சுமையைத் தூக்கி வைக்காமல் கொஞ்சம் இறக்கி வைத்து அப்புறம் ஏற்றினால் இன்னும் கொஞ்சம் பயணம் அதிகமாக, வசதியாகச் செல்லும்.
அதுமட்டுமல்ல. ரொம்ப நேரம் இனிப்பே சாப்பிட்டுக்கொண்டிருந்தால், ரொம்ப பேருக்கு அந்த இனிப்பினுடைய பெருமை தெரியாது. காரத்தைப் பற்றித் தெரியாது. பிரியாணியே சாப்பிட்டுக்கொண்டிருந்தால் சாப்பாட்டைப் பற்றித் தெரியாது.


இதுவாவது கிடைத்ததே....!


கொஞ்சம் பிரியாணியை நிறுத்தி நல்ல சாப்பாடு சாப்பிட வேண்டும் என்று நினைத்தபொழுது, களி உருண்டையை விட மொத்த உருண்டை கிடைத் தால் அதற்கப்புறம் இதுவாவது கிடைத்ததே, போதும் என்று நினைக்கின்றபொழுதுதான் பெரியாருடைய சிறப்புத் தெரியவரும்.

---------------(தொடரும்) 4-8-2011

எல்லோருக்கும் எல்லாமும் என்பது சமச்சீர் கல்வி

உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்ட ஒன்றாயிற்றே!

வலங்கையில் தமிழர் தலைவர் விளக்கம்

எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்க வேண்டும் என்று சொல் லுவது சமச்சீர் கல்வி. சமச்சீர் கல்வியை உயர் நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் ஏற்றுக்கொண்ட ஒன்றாயிற்றே. அதை ஏற்க இந்த அரசுக்கு என்ன தயக்கம்? என்று கேள்வி எழுப்பினார் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள்.

27.7.2011 அன்று தஞ்சை மாவட்டம் வலங்கை மானில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:

வெளிநாட்டில் ஒழுங்காக செய்கிறார்கள்

தாய்மார்களுக்குச் சொல்லுகிறேன். ஆண்கள் சமைக்கிறார்கள் என்று நினைக்காதீர்கள். நீங்கள் சமைத்துப் போட்டால்தான் எல்லாமே. தண்ணீர் வேண்டுமானால் கூட நாங்கள் எடுத்து வைத்து பழக்கமில்லை இந்த நாட்டில். வெளிநாட்டில் அதை ஒழுங்காக செய்கிறார்கள்.

எல்லாவற்றுக்கும் உங்களைத்தான் கூப் பிடுவோம். உங்களைத்தான் கோபித்துக்கொள் வோம். சில பேர் எதற்கெடுத்தாலும் குறை சொல்லுவார்கள். சாப்பாட்டில் உப்பு கொஞ்சம் குறைந்திருக்கும். வீட்டில் தாய்மார் போட்ட உப்பு கரையாமல் கூட இருக்கும். இன்னொரு பக்கம் கரைந்திருக்கும். அதற்கு ஆண்கள் ஒரே ரகளை செய்வார்கள். பல பேரை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அந்த அம்மா குழந் தையை வளர்த்துக்கொண்டு பள்ளிக்கூடம் அனுப்புகிறவரை பார்த்துக்கொண்டு பணிவிடை செய்துகொண்டிருப்பார்.


இவ்வளவும் தாய்மார்கள் செய்து கொண்டி ருக்கிறார்கள் என்கிற கவலை ஆண்களுக்கு இருக்கிறது.

எஜமானத்துவம்...

எஜமானத்துவம் என்று நினைக்கின்ற ஆண்கள் அதை செய்வார்கள். நான் நம்முடைய கழக சகோதரிகளை, தாய்மார்களைப் பார்த்து அவர்களிடம் சொல்வேன். உங்களுடைய சாப்பாடு-உங்களுடைய பெருமை அத்துணையும் தெரிந்து கெள்ள வேண்டுமானால் நாங்கள்அறிவிக்கின்ற போராட்டத்திற்கு நீங்கள் முதலில் வந்துவிடுங்கள்.

தாய்மார்கள் சிறைக்கு வரவேண்டும்

ஒரு மாதம், பதினைந்து நாள்கள் நீங்கள் சிறைச்சாலைக்கு வாருங்கள். அப்பொழுதுதான் உங்களுக்கு ஓய்வு. அங்கு ஒரு வேளையும் செய்யத் தேவையில்லை. வேளா வேளைக்கு சாப்பாடு போட்டுவிடுவார்கள். நீங்கள் சமைக்காத உணவு சிறைக்கு வந்த அப்பொழுதுதான் கிடைக்கும். அப்பொழுதுதான் உங்களுடைய சாப்பாட்டின் பெருமை என்ன? நீங்கள் செய்வது என்ன என்பது தெளிவாகத் தெரியும். ஆண்களுக்கும் அப்பொழுது தான் தெரியும். நமக்கு சாதாரண சோறு வடிக்க முடியவில்லையே. சாதாரண ரசம் வைக்க முடிய வில்லையே.

வடித்த சோற்றை ஒழுங்காக எடுத்துப்போடத் தெரியவில்லையே நமக்கு என்று சொல்லக்கூடிய மிகப்பெரிய வாய்ப்பாக வேடிக்கையாக எண்ணிப் பார்க்கக் கூடிய சந்தர்ப்பம் ஆண்களுக்குக் கிடைக்கும்.

அதே போலத்தான் அரசியலிலும் இந்த நிகழ்வு. தொடர்ந்து நன்றாக சமைத்து சாப்பாடு போட்டுக்கொண்டிருந்தால் எல்லோருக்கும் கோபம் வரும். சாதாரண விசயத்திற்குக் கூட.

மக்களுக்கு அப்படி ஒரு கோபம்

சிலபேருக்கு, மக்களுக்கு அப்படி ஒரு கோபம் வந்திருக்கிறது. அந்த கோபத்தினுடைய விளைவு தான் இந்த அரசியலுடைய நிலைப்பாடு.

இப்பொழுது அடுத்து கிடைத்திருக்கின்ற சாப்பாடு எப்படியிருக்கிறது என்பதை ஒன்றரை மாதத்திலேயே தெரிந்து கொண்டார்கள். அதுதான் தெருத்தெருவாகப் போகக் கூடிய சமச்சீர்கல்வி வேறு ஒன்றுமில்லை. (சிரிப்பு-கைதட்டல்)

சமையலுக்கும்-சமச்சீருக்கும்

சமையலுக்கும்-சமச்சீருக்கும் ரொம்ப வசதியாக இருக்கிறது. சொல்லிப் பார்த்தீர்களேயானால் உச்சரிப்பில் கூட ரொம்ப சாதாரணமாக இருக்கும்.

இந்த நாட்டில் மனுதர்மம் நடந்தது. மனுதர்மம் நடந்த ஆட்சியில் குல தர்மம் கோலோச்சியது. குல தர்மக் கல்வி மட்டும் தொடர்ந்திருந்தால் இன் றைக்கு இத்தனை எஞ்சினீயரிங் கல்லூரிகள் வந்திருக்குமா? இத்தனை பாலிடெக்னிக்குகள் வந்திருக்குமா? அய்யா டாக்டர் இலக்குவன் தமிழ் அவர்கள் காரைக்குடிக்குப் பக்கத்திலே ஒரு எளிய கிராமத்திலே சாதாரண பிற்படுத்தப்பட்ட சமுதாய குடும்பத்திலே பிறந்தவர்.

குலக்கல்வித் திட்டம் பற்றித் தெரியுமா?

குலக்கல்வித்திட்டம்-ஒழிந்ததினாலே அவர்-படித்தார். எஞ்சினீயரிங் முடித்தார். அதற்கடுத்து டாக்டரேட் முடித்தார். அமெரிக்காவில் தலைசிறந்த பேராசிரியர்களில் ஒருவராக டல்ல சிலே டெக்சாஸ் பல்கலைக் கழகத்திலே இன் றைக்கு அவர் தலைசிறந்த ஆராய்ச்சியாளராக இருக்கிறார் என்றால் இது அவருடைய திறமை மட்டுமல்ல (கைதட்டல்).

அவருடைய திறமை எப்பொழுது வெளியே வரும்? கதவைத் திறந்தால்தான் அவருடைய திறமை வெளியே வரும். அதேமாதிரி நம்முடைய டாக்டர் பெரிய மருத்துவமனை வைத்திருக் கின்றார். அதே மாதிரி நாங்கள் வழக்குரைஞர் களாக வந்திருக்கின்றோம். அமர்சிங் வழக்குரை ஞராக வந்திருக்கிக்கின்றார்.

எல்லாவற்றிலும் போலி

நம்முடைய அய்யா ராஜகிரி தங்கராசு அவர்களை விட்டால் வாதம் பண்ணமாட்டாரா? வாதம் பண்ணுவார். மற்ற வழக்குரைஞர்களை விட பழைய சங்கதிகளை எல்லாம் சொல்லி நீதிபதிகள் டையர்டு ஆகிறவரையிலே வாதம் பண்ணுவார் (கைதட்டல்).

அப்பேர்ப்பட்டவருக்கு ஒருடிகிரி இருந்தால் தானே வழக்குரைஞர் என்று போர்டு போட முடியும்? இல்லையென்றால் போட முடியாதே. ஆனால் இப்பொழுது டிகிரி படிக்காத வரும் போட்டுக்கொள்கிறார். எல்லாவற்றிலும் போலி வந்துவிட்டது. சாமியாரிலே-போலி. உண்ணா விரதத்திலும் போலி உண்ணாவிரதம். சாமியார் என்றாலே போலி. அதிலென்ன போலி சாமியார்? (கைதட்டல்). இதில் புரியவே இல்லை.

உண்ணாவிரதம் இருக்கிறேன் என்று ஒருவர் சொல்லிவிட்டு அதிலே ஏமாற்றுகிற வேலை என்னவென்றால் தொடர் உண்ணாவிரதம் என்பான். இது காந்திக்கே தெரியாத உண்ணா விரதம்.

காந்தியே கண்டுபிடிக்காத உண்ணாவிரதம்

காந்தியே கண்டுபிடிக்காத உண்ணாவிரதம். தொடர் உண்ணாவிரதம் என்றால் வேறு ஒன்றும் சிக்கலே இல்லை. ஷிஃப்டு சிஸ்ட்டம். ஒருத்தர் உட்காருவார். அவர் உண்ணாவிரதம் இருந்துவிட்டு போய்விடுவார். அடுத்தவர் ஒருவர் வருவார். அவர் ஒரு உண்ணாவிரதம் இருப்பார்.

ரொம்ப சுருக்கமாக அதற்கு விளக்கம் சொல்ல வேண்டுமானால் சாப்பிட்டு வந்தவர், சாப்பிட வேண்டியவரை அனுப்புகிற உண்ணாவிரதத்திற்குப் பெயர் தொடர் உண்ணாவிரதம் அவ்வளவுதானே தவிர வேறு ஒன்றுமே இல்லை.

ஒவ்வொருவரும் உண்ணாவிரதம்

அப்படிப்பார்த்தால் நாம் கூட ஒவ்வொருவரும் தொடர் உண்ணாவிரதம் இருக்கிறோம். நாம் காலையில் டிஃபன் சாப்பிட்டு முடித்தவுடனே அதற்கப்புறம் உண்ணாவிரதம், அதன்பிறகு மதியம் சாப்பாடு. அதற்கு மேல் இரவு சாப்பாடு.

அப்புறம் பிரேக்கிங் தி ஃபாஸ்ட், இங்கிலீஷ் வார்த்தையையேஅப்படித்தான் வைத்திருக்கின் றார்கள். பிரேக் ஃபாஸ்ட் சாப்டீங்களா? என்று இப்படிக் கேட்டால்தான் கவுரவம் என்று நினைக்கின்றான்.

அதாவது ஃபாஸ்டிங் என்றால் அதுவும் உண்ணாவிரதம்தான். அதாவது உடைப்பது என்று பொருள். இன்றைக்கு எந்தத் துறையிலே உண்மையான வாய்ப்பு இருக்கிறது என்றால் படிப்பு.

கை நிறைய சம்பாதிக்கிறார்கள்

இன்றைக்கு முத்தன் மகன் முனியன். குப்பன் மகன் சுப்பன். எல்லாம் பார்த்தீர்களேயானால் இவர்கள் கை நிறைய எவ்வளவு சம்பளம் வாங்கு கிறார்கள்? கம்ப்யூட்டர் எஞ்சினீயர் என்றால் லட்ச ரூபாய்- எத்தனை வருடமாக இருந்து வியாபாரம் செய்தாலும் அவ்வளவு பணத்தையும் அவர் பார்க்க முடியாது.

வழக்குரைஞர்கள் பெரும்பாலும் இவ்வளவு பணத்தைப் பார்க்க முடியாது. டில்லியில் சில வழக்குரைஞர்கள் லட்சக்கணக்கில் பணத்தைப் பார்க்கலாம்.

ஆனால் சாதாரணமான வழக்குரைஞர்களால் இவ்வளவு பணத்தைப் பார்க்க முடியாது. ஆனால் இவர்களுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கிறதென்றால் குலக்கல்வித்திட்டம் ஒழிக்கப்பட்டதனால்தான் இந்த வாய்ப்பு கிடைத்தது (கைதட்டல்). ஆனால் குலக்கல்வித் திட்டத்தை யார் ஒழித்தார் என்று எப்படி தெரிவிப்பது?

ராஜகோபாலாச்சாரியார் கொண்டு வந்த குலக்கல்வி திட்டம்

ராஜகோபாலாச்சாரியார் கொண்டு வந்தது குலக்கல்வித் திட்டம். பெருந்தலைவர் காமராஜர், பச்சைத் தமிழர் காமராஜர், கல்வி வள்ளல் காமராஜர் அவர்கள் தந்தை பெரியார் அவர் களுடைய எதிர்ப்புகளை எல்லாம் கணித்து குலக்கல்வித் திட்டத்தை ஒழித்தார். அதிலேதான் ஒரு பெரிய திருப்பத்தை ஏற்படுத்தினார். எப்பொழுது? 1954இல்.

இன்றைக்கு என்ன ஆண்டு? 2011ஆம் ஆண்டு. கணக்குப்போட்டுப் பாருங்கள். 57 வருடத்திற்கு முன்னால் இது நடந்திருக்கிறது. 57 வயது கொண்டவருக்குக்கூட இந்த விசயம் தெரியாது (சிரிப்பு). 67, 77 வயது கொண்டவர்களுக்குத்தான் வரலாறு தெரியும். 77-க்கு மட்டும் ஓட்டு இல்லைங்களே. 18-க்கும் ஓட்டு வந்தாகிவிட்டது. அதுதான் ஆபத்து (கைதட்டல்). ஒரு பக்கம் மகிழ்ச்சி. 18 வயதா-உடனே எஸ்.எம்.எஸ். கொடு. இதை அழுத்து. ஓட்டுப் போடு என்று உரிமை வந்துவிட்டது.

ஆ.இராசா செய்த புரட்சி

மத்திய முன்னாள் அமைச்சர் ஆ.இராசா செய்த புரட்சி இருக்கிறதே அது சாதாரணமல்ல. முத்தம்மா, முனியம்மா, சுப்பம்மா எல்லோர் கையிலும் செல்ஃபோன் கொடுத்துவிட்டார். அப்படி கொடுத்ததற்குத்தான் பரிசாக காங்கிரஸ் நண்பர்கள் அவரை உள்ளே கொண்டு போய் வைத்திருக்கிறார்கள். எனக்கு இது பரிசா என்று கேட்டார்.

ஒளிப்படத் தொழிலே நசிந்துவிட்டது

ஒரு ரூபாய்க்குப் பதிலாக 20 காசு, 30 காசுக்கு இன்றைக்குப் பேசலாம், எவர் கையிலேயும். செல்ஃபோன் மணி ஒலித்தவுடன் பேசுகிறார்கள். பேசுவது மட்டுமல்ல. ஒளிப்படம் எடுப்பவர்களுக் கெல்லாம் தொழிலே போய்விட்டது இப்பொழுது.
தனியாக யாரும் கேமராவைத் தேடுவதில்லை. அதற்குப் பதிலாக செல்ஃபோன் கேமராவை வைத்திருக்கிறார்கள். முதலில் இரண்டு பேர் சேர்ந்து தான் ஒருவருக்கு ஒருவர் ரோட்டில் பேசிக்கொண்டு போவார்கள்.

பெரிய சமுதாய மாற்றம்

இப்பொழுது தனித்தனி மனிதர்கள் அய்ந்து பேர் இருந்தால் அவர்கள் தலையாட்டிப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். நன்றாகத்தானே இருந்தார். திடீரென்று தலையாட்டி தனியாகப் பேசிக் கொண்டிருக்கிறாரே என்று மற்றவர்களுக்கு சந்தேகம் வருகிற அளவுக்கு நிலைமை வந்தது.

இவ்வளவு பெரிய சமுதாய மாற்றத்திற்கு அடித்தளம் எங்கே? எவ்வளவு பெரிய சமுதாய மாற்றம் அனுபவிக்கிறார்கள். நல்ல அளவுக்கு மிகப் பெரிய வாய்ப்பு இருக்கிறது. இதற்கு எல்லாவற் றிற்கும் பார்த்தீர்களேயானால் அந்தப் புள்ளியைத் தேடித் தேடி போனால் ஒரு புள்ளி அதுதான்-தந்தை பெரி யாரின் மாபெரும் தொண்டு (கைதட்டல்).

அந்தத் தொண்டுதான் இந்தக் குலக்கல்வித் திட்டத்தை ஒழித்தது. அந்தக் குலக்கல்வித் திட்டத்தை ஒழித்ததி னாலேதான் எல்லோரும் தகுதிக்கு ஏற்ப, அறிவுக்கு ஏற்ப, விருப்பத்திற்கு ஏற்ப, படிப்பு என்று வந்தது. அதனால் இன்றைக்குத் திருப்பம் வந்தது. சமச்சீர் கல்வி

எல்லோருக்கும் எல்லாமும்

அதேமாதிரிதான் சமச்சீர் கல்வி என்பது எல்லார்க்கும், எல்லாமும் என்பது. சமத்துவம் என்பதுதான் இதில் முக்கியம். என்ன குறைபாடு? இதைப் பார்த்து தரக்குறைவு என்று யார் சொல்லுவது? இது பத்தாம் வகுப்பில் இருக்கக் கூடிய சமூக அறிவியல் ஒரு பாடம். இந்த பாடத்திட்டத்தைப் பற்றி உச்சநீதிமன்றத்தில், உயர்நீதிமன்றத்தில் பலர், பல கட்சியினர் வழக்குப் போட்டு வாதாடி, பிறகு அவை அத்தனையும் சரி என்று சொன்ன பிற்பாடுதானே இந்தத்திட்டமே 3 ஆண்டுகளுக்குப் பிறகு உருவானது. 2008இல் இருந்து சமச்சீர் கல்வியை அமல்படுத்தும் காரியம் நடந்துகொண்டிருக்கிறதே.

சட்டப்பூர்வமாக அமைக்கப்பட்டது கலைஞர் அவர்கள் சட்டப்பூர்வமாக அமைச் சரவையில் வைத்து சட்டம் நிறைவேற்றினார். இதில் பாதிக்கப்பட்டவர்கள் வழக்கு போட்டார்கள். அந்த வழக்கு தள்ளுபடி ஆயிற்று.

----------------தொடரும் --- "விடுதலை” 5-8-2011

1 comments:

தமிழ் ஓவியா said...

திராவிடர் உணர்வை அழிக்க நினைக்கும் கூட்டம் எது?

இரண்டாயிரம், மூன்றாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட இனம், திராவிட இனம். அந்த இனத்தை இன்றைக்கு தாங்கிக் கொண்டிருக்கின்ற சக்தியாக, அந்த இனத்திற்கு மறுவாழ்வு அளிக்கக் கூடிய சக்தியாக, இன்றைக்கு இருப்பது தி.மு. கழகம். அதை வீழ்த்திவிட்டால், இனிமேல் நாம் தாராளமாக நடை போடலாம்.

தாராளமாக வாழலாம். தாராளமாக ஆட்சி நடத்தலாம். எவரையும் வாடா, போடா என்று அழைக்கலாம். எவனுக்கும் சமச்சீர் கல்வி இல்லை என்று சொல்லலாம். நாம்தான் படிக்கவேண்டும். நாம்தான் இந்தப் புத்தகங்களுக்கு அதிகாரிகள், அவன் யார் சூத்திரன். அவன் யார் நான்காம் ஜாதிக்காரன். அவன் யார் - அவன் மிகமிக கீழ்த்தரமானவன்.

அவனை நம்மோடு இணைக்கக் கூடாது - எனவே, பணக்காரர்களும் - பார்ப்பனீயத்திலே நம்பிக்கைக் கொண்டவர்களும் படிக்க, வாழ, தங்களுடைய எண்ணங்களை மேலும், மேலும் கொடூரமாக ஆக்கிக் கொள்ள இந்த இயக்கத்தை இப்போதே அழித்தால்தான் நம்முடைய பாதை பண்படுத்தப்படும் என்று எண்ணுகின்ற ஒரு கூட்டம், இன்றைக்கு தமிழ்நாட்டிலே மிச்சம் மீதி இருக்கிறது. அந்தக் கூட்டம் திராவிட முன்னேற்றக் கழகத்தை அடியோடு வீழ்த்தவேண்டும் என்று எண்ணுகிறது. நான் சொல்லுகிறேன், உங்களுக்கு, நான் எவ்வளவு நாளைக்கு இருப்பேன் என்று தெரியாது, இன்றைக்கே சொல்லி வைக்கின்றேன், உங்களுக்கு இந்தக் கழகத்தை எவனாலும் அழிக்க முடியாது. யாராலும் அழிக்க முடியாது. (பலத்த கைதட்டல்).

இந்த உணர்வை யாராலும் பட்டுப் போகச் செய்ய முடியாது என்பதை உறுதியாக நம்புங்கள். அந்த நம்பிக்கையை நெஞ்சிலே நிறுத்தி, இந்தக் கூட்டத்திலிருந்து விடைபெறுங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன்.

- 6.8.2011 அன்று திருவாரூர் பொதுக்கூட்டத்தில்
தி.மு.க. தலைவர் கலைஞர்