Search This Blog

25.8.11

பெரியார் ஏன் இந்தி மொழியை எதிர்த்தார்?

கலை,இசை,நாடகம் இலக்கியங்களில் பார்ப்பனர்களுக்குள்ள மரியாதை தமிழர்களுக்கு இல்லையே என பெரியார் வேதனைப்பட்டார்!

சென்னை பொதுக்கூட்டத்தில் தமிழர் தலைவர் விளக்கவுரை

கலை, இசை, நாடகம், இலக்கியங்களில் பார்ப்பனர்களுக்கு உள்ள மரியாதை பாராட்டு தமிழர்களுக்கு இல்லையே என்று வேதனைப்பட்டார் பெரியார் என்று திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணிஅவர்கள் கூறி விளக்கவுரையாற்றினார்.

தந்தை பெரியாரின் கலை இலக்கியச் சிந்தனைகள் என்ற தலைப்பில் 10.8.2011 அன்று இரவு ஏழு மணிக்கு சென்னை பெரியார் திடலில் திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய முதல் தொடர் சொற்பொழிவின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:

சீத்தாராம் கேசரி

நான் பல முறை சொல்லியிருக்கின்றேன். இந்த நேரத்தில் நினைவூட்டுவது பொருத்தமாக இருக்கும் என்று கருதுகிறேன். சீத்தாராம் கேசரி அவர்கள் இந்திப்பகுதியைச் சார்ந்தவர் என்பது உங்களுக்குத் தெரியும். பிகார், பாட்னா பகுதியிலிருந்து வந்தவர். அவர் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித் தலைவராக இருந்தவர். அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொருளாளராக நீண்டகாலம் இருந்தார்.

சந்திரஜித் அவர்களுடன் தொடர்புள்ளவர். சந்திரஜித் அவர்கள் சீத்தாராம் கேசரி அவர்களை அறிமுகப்படுத்தினார். அய்யா அவர்களுடைய புத்தகங்களை நாம் அவருக்குக் கொடுத்தோம்.

சீத்தாராம் கேசரி, அய்யா அவர்களுடைய நூல்களை படித்தார். பெரியாருடைய பற்றாளராக இருந்த சீத்தாராம் கேசரி அவர்கள் பெரியாருடைய மாணவராகவே ஆகிவிட்டார். இந்த எம்.ஆர்.ராதா மன்றத்தையே சீத்தாராம் கேசரி அவர்களை வைத்துத்தான் அடிக்கல் நாட்டினோம்.

கேசரி கேட்ட சந்ததேகக் கேள்வி


சீத்தாராம் கேசரி அவர்கள் ரொம்ப ஆழமாக சிந்திப்பார். பெரியாருடைய தத்துவத்தைப் பற்றி திடீரென்று சந்தேகம் கேட்பார். கேசரி அவர்கள் திடீரென்று ஒரு நாள் என்னிடம் ஒரு சந்தேகம் கேட்டார்.

பெரியாருடைய புத்தகங்களைத் தொடர்ந்து படிக்கக்கூடியவர். பெரியாருடைய புத்தகங்களை தலைமாட்டில் வைத்திருப்பார். அவருடைய படுக்கை அறைக்கே எங்களை அழைத்துக் கொண்டு போவார். நாங்கள் பேசுவோம். அவர் கேட்டார். பெரியார் தலைசிறந்த ஒரு பகுத்தறிவுவாதி. மிகுந்த மனிதநேயப் பற்றாளர். எதையுமே அவர் ஆழமாகப் பார்க்கக் கூடியவர்.

பெரியார் ஏன் இந்தி மொழியை எதிர்த்தார்?


அப்படிப்பட்டவர் கேட்டார். வெறும் இந்தி மொழி வடக்கே இருந்து வந்தது என்பதற்காக பெரியார் இந்தி மொழியை எதிர்த்திருக்க முடியாது. அதற்குப் பதிலாக முக்கியமான காரணம் ஏதாவது இருந்திருக்க வேண்டும். அது வடக்கே இருந்து வந்த மொழி என்பதாலே அவர் எதிர்த்திருக்க முடியாது என்று என் மனதில் தோன்றுகிறது.

ஏன் அவர் இந்தி மொழியை எதிர்க்க வேண்டிய அவசியத்திற்குத் தள்ளப்பட்டார்? அதற்கு ஏதாவது ஓர் மூலகாரணம் இருக்கும். அந்தக் காரணம் என்ன என்பதை கொஞ்சம் விளக்கிச் சொல்லுங்கள் என்று சொன்னார். அப்பொழுதுதான் இந்த பகுதியை எடுத்து அவர்களிடத்திலே சொன்னேன்.

இந்தியை நுழைப்பது மூலம் பண்பாட்டுப் படை எடுப்பு


இந்தியை திணிப்பதன் மூலமாக ஒரு பண்பாட்டுப் படைஎடுப்பு நுழைகிறது. அது ஆரிய-பண்பாட்டுப் படை எடுப்பு. அதன் மூலமாக பார்ப்பனரல்லாத மக்கள் திராவிட மக்கள், தமிழ் மக்கள் கலாச்சாரத்தை அழித்து திராவிடர்களை அடிமைப்படுத்துவதற்காக ஆக்கப்பட்ட ஒன்று என்று இதை எடுத்துச்சொன்னவுடனே சீத்தாராம் கேசரி கைதட்டினார்.

ஒருவாரம் அப்படியே யோசனை பண்ணிக் கொண்டேயிருந்தேன். அந்த கேள்விக்குப் பதில் கிடைக்கவில்லை. இப்பொழுதுதான் அது சரியான கருத்து என்று விளங்கியது. (கைதட்டல்). பெரியாருடைய கருத்துகள் அவர் தமிழில் என்ன எழுதியிருக்கிறாரோ அதை அப்படியே ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துச் சொன்னேன். அவர் புரிந்துகொண்டார். அது மாதிரி அய்யா அவர்கள் கலையாக இருந்தாலும், எதுவாக இருந்தாலும் மக்களுக்கு எப்படிப் பயன்படுகிறது என்று பார்ப்பார்கள்.

பெரியார் விரக்தி அடைந்துவிடவில்லை

பெரியார் விரக்தி அடைந்துவிடவில்லை. எவ்வளவு கட்டி அணைத்து இழுத்துச் செல்ல முடியுமோ அவ்வளவையும் செய்திருக்கிறார்.

இசையாக இருக்கட்டும். நாடகமாக இருக் கட்டும். இலக்கியமாக இருக்கட்டும். பார்ப்பனர் களுக்கு அதிக அளவுக்கு விளம்பரம் அவர்களுக்குத் தனித் தகுதியிருக்கிறது என்று சொல்லுவதைப் பார்த்த அய்யா அவர்கள் வேதனைப்பட்டார். தமிழர்களுக்கு அந்த மரியாதை இல்லையே என்று தமிழனின் சுயமரியாதை இனத்தின் சுயமரியாதை அதற்கு முக்கியத்துவம் வரவேண்டும் என்று பெரியார் நினைத்தார்.

தமிழை அவமானப்படுத்தும் பொழுது தமிழர்களை அவமானப்படுத்துகிற மாதிரி நினைக்கிறார். இது அய்யா அவர்களின் தனிச்சிறப்பு. தமிழர்களில் அதிகாரிகள் இல்லையா? அல்லது மற்ற இடங் களில் தமிழர்கள் இல்லையா?

தமிழர்கள் அவமானப்பட்டால்


தமிழர்கள் அவமானப்பட்டால் அது நாம் பட்ட அவமானம் என்று விடுதலைதானே முதலில் எழுது கிறது. திராவிடர் கழகத்துக்காரன் தானே முதலில் எடுத்துச்சொல்ல வேண்டும். காரணம் என்ன அது பெரியார் ஊட்டிய உணர்வு.

காஷ்மீரில் இருக்கின்ற பார்ப்பனருக்குத் தேள் கொட்டினால் கன்னியாகுமரியில் இருக்கின்ற பார்ப்பனருக்கு நெறிகட்டும் என்று அய்யா அவர்கள் சொன்னார்கள் அல்லவா? அது மாதிரி நம்மவர்களுக்கு ஏதாவது உணர்வு இருக்கிறதா? அந்த உணர்வு வரவில்லையே.

புத்தர் இதை வெறுத்தார். அதை வெறுத்தார். கலைகளை வெறுத்தார் என்கின்ற அந்த மாதிரி அணுகுமுறையே இல்லை. கலை-இலக்கியம் நமக்குப் பயன்படவேண்டும். நல்ல அளவுக்குப் பயன்படுத்தலாம் என்கின்ற முயற்சியிலும் அய்யா அவர்கள் தளர்ச்சி காட்டவில்லை.

பெரியாருக்கும்-சங்கீதத்திற்கும் என்ன சம்பந்தம்?


20.4.1930 குடிஅரசில் வந்த செய்தி உங்களுக் கெல்லாம் அதிசயமாக இருக்கும். பெரியாருக்கும்-சங்கீதத்திற்கும் என்னய்யா சம்பந்தம்? பெரியார் சங்கீத மாநாடு நடத்தினார் என்பது. எத்தனை பேருக்குத் தெரியும்? முதல்நாள் சுயமரியாதை மாநாடு. குடிஅரசில் உள்ள செய்தியைப் படிக்கின்றேன். ஈரோட்டில் மே மாதம் 24, 25 முதலிய தேதிகளில் நடக்கும். இரண்டாவது சுயமரியாதை மகாநாட் டின் (முதல் சுயமரியாதை மாநாடு செங்கற்பட்டில் இரண்டாவது சுயமரி யாதை மாநாடு ஈரோட்டில் நடைபெறுகிறது.) ஆதரவில் வேறு பல மகாநாடு களும் நடைபெறும் என்பது நேயர்கள் அறிந்த தாகும். அவற்றுள் சங்கீத மகாநாடு என்பதும் ஒன்றாகும்.

சங்கீத மாநாடு நடத்துவதற்கு என்ன காரணம்?


(சங்கீத மாநாடு நடத்துவதற்கு என்ன காரணம் என்பதை அய்யா அவர்கள் எழுதுகிறார்கள் பாருங்கள். பெரியாரின் கலை, இலக்கிய சிந்தனை எப்படிப்பட்டது என்பதற்கு இது ஆதாரம்.)

சங்கீத மகாநாடு கூட்டும் விஷயத்தில் நமக்கு உள்ள ஆர்வமானது. சங்கீதம் என்னும் ஒரு கலையானது மிக்க மேன்மையான தென்றோ அல்லது இன்றைய நிலையில் மனித சமூகத்திற்கு மிக்க இன்றியமையாததென்றோ கருதியல்ல.

(பெரியார் மாநாடு கூட்டி சொல்லுகிறார். இது மாதிரி யாராவது சொல்லுவார்களா? ) உலகத்தில் மக்களுக்குள்ள அனேக விதமான உணர்ச்சி தோற்றங்களில் இதுவும் ஒன்றே தவிர. இதற்கு எவ்விதத்திலும் ஒரு தனி முக்கியத்துவம் கிடையா தென்பதே நமது அபிப்பிராயம்.

சீதோஷ்ண நிலைக்குத் தகுந்தபடி!


உதாரணமாக சங்கீதம் என்பது தேசத்திற்குத் தகுந்த படியும் அங்குள்ள சீதோஷ்ண நிலைக்குத் தகுந்தபடியும் அவரவர்களது அறிவு வளர்ச்சிக்குத் தகுந்தபடியும் இருப்பதே தவிர ஒரே சங்கீத முறையானது உலகத்திற்கெல்லாம் பொறுத்தமான தென்று சொல்ல முடியாது. ஒரு நாட்டு சங்கீத உணர்ச்சிக்காரனுக்கு இன்பமாய் இருப்பது மற்றொரு நாட்டு வித்வானுக்குப் புரியாத தாகவேயிருக்கும். மேல்நாட்டு சங்கீத இன்பம் கீழ் நாட்டான் அனுபவிக்க முடியாது.

அது போலவே கீழ்நாட்டு சங்கீத இன்பம் மேல்நாட்டானுக்கு இன்பமாக இருக்க முடியாது. ஆனால் பொதுவில் சங்கீதம் என்னும் ஒரு கலை விசயத்தில் உலக மக்களுக்கெல்லாம் ஒரு வித போக்கிய அனுபவமிருக்கின்றதை மாத்திரம் காணலாம். ஆனாலும் அதை ஒருவர் அதிகமாக அனுபவிக்க ஆசைப்படுவார். மற்றொருவர் அதை சாதாரணமாகக் கருதுவார்.

சங்கீத துறையிலும் நம் மக்களுக்கே சுயமரியாதை உணர்ச்சி


எப்படி இருந்தாலும் உலகில் உள்ள பல கலைகளில் அதுவும் ஒன்றாயிருக்கின்றது. நம்மைப் பொறுத்தவரை நாம் இம்மாநாட்டில் கலந்து கொள்வதானது அக்கலையில் உள்ள மேன்மையை உணர்ந்ததல்லவென்பதை முதலில் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.

மற்றென்னவெனில் சங்கீதத் துறையிலும் நமது பார்ப்பனரல்லாத மக்களுக்கு சுயமரியாதை உணர்ச்சி ஏற்படவேண்டும் என்பதற்காகவேதான் சுயமரியாதை மகாநாட்டை அனுசரித்து இதை நடத்தவேண்டுமென்று கருதி கலந்துகொள்ள ஆசைப்பட்டதாகும்.

(அய்யா அவர்கள் சொல்லுகிறார். நான் சங்கீதத்தை தெரிந்தவன் என்ற முறையில் அல்ல என்று சொல்லுகின்றார்) ஒளிவு மறைவு இன்றி சொல்லுகின்றார். மற்றவர்களாக இருந்தால் ஆகா எனக்கு எல்லாம் மற்றவர்கள் தன்னைப் பெருமையாக நினைத்துப்பாராட்ட வேண்டும் என்று சொல்லுவார்கள். நான் அதற்காக வரவில்லை என்று அய்யா சொல்லுகின்றார்.) சங்கீதத்தை எப்படி நமது நாட்டில் மற்ற எல்லாத்துறை களையும் பார்ப்பனர்கள் கைப்பற்றி தங்கள் ஆதிக்கத்திற்குள்ளாக்கி அத்துறைகளில் மற்ற மக்களை தலையெடுக்க ஒட்டாமல் அழுத்தி வைத்திருக்கிறார்களோ அது போலவே சங்கீதத் துறையும் முழுதும் பார்ப்பனராதிக்கமாகி அதன் மூலம் நமது பொருள்கள் கொள்ளைபோவதுடன் அதைக்கொண்டிருக்கும். நமது மக்களின் சுயமரியாதையும் கொள்ளை போயிருக்கின்றது. போய்க்கொண்டும் வருகிறது.

பார்ப்பனரல்லாத வித்வான்கள் அநேகர்


உதாரணமாக நமது தமிழ்நாட்டில் சங்கீத விஷயத்தில் தேர்ச்சியுள்ள பார்ப்பனரல்லாத வித்வான்கள் அநேகர் இருக்கிறார்கள். அதிலும் சங்கீத சம்பந்தமான பல கலைகளிலும் தமிழ்நாட் டிற்கே சிறந்தவர்கள் முதன்மையானவர்கள் இணையில்லாதவர்கள் என்று சொல்லப்படுபவர் கள் எல்லாம் பெரும்பாலும் பார்ப்பனரல்லாதார் களேயாவார்கள்.

(அய்யா அவர்களுக்கு கவலை நமது பணத்தை இழக்கிறோம் என்பதுபற்றி அல்ல. காசு கொடுக்கிறோம். அவர்களுக்கு பொருள் கொள்ளை போகிறது என்பது கூட அல்ல.) அதைவிட அய்யா அவர்களுக்கு சுயமரியாதை கொள்ளை போகிறதே என்பதுதான் கவலை. ஆகவே எதை எடுத்ததாலும் பெரியாருக்கு என்ன பார்வை? மான உணர்ச்சிதான் முக்கியம்.

சுயமரியாதை அற்ற தன்மையாகவே


இப்படி இருந்தாலும் இவர்களது வாழ்வும் அந்தஸ்து பெரிதும் மிக்க சுயமரியாதை அற்ற தன்மையாகவே இருந்து வருகின்றது. பார்ப்பன ரல்லாத சங்கீத வித்வான்கள்-அதாவது வாய்ப் பாட்டு வீணை புல்லாங்குழல், பிடில் நாதசுவரம், மிருதங்கம், தவுல், முதலாகிய வாத் தியங்களில் முதன்மையான பார்ப்பனரல்லாத வித்வான்கள் தங்களிடம் எவ்வளவோ கீழ்தர பார்ப்பன வித்வான்களால் மிக்க இழிவாகவே நடத்தப்படு கிறார்கள் (தகுதியுள்ள நம்மவர்களை சாதார ணமாக நினைக்கிறான். இசையில்-சங்கீதத்தில் தகுதியில்லாத பார்ப்பனர்கள் இருந்தாலும் அதைப் பெரிதாகக் கருதுகிறார்கள் என்று பெரியார் வேதனைப் பட்டிருக்கிறார்)

கானாடு காத்தான் சம்பவம்


1930இல் நடைபெற்ற ஒரு செய்தியை சுட்டிக் காட்ட வேண்டும். அது மாத்திரமல்லாமல் இதன்பயனாய் பிரபுக்கள் என்று சொல்லப்படும் பார்ப்பனரல்லாத பணக்காரர்கள் பலருங்கூட பார்ப்பனரல்லாத வித்வான்கள் என்றால் மிக்க இழிவாகவே கருதும் உணர்ச்சியைக் கொண்டு இருக்கின்றார்கள்.

உதாரணமாக சென்ற இரண்டு, மூன்று வருஷத்திற்கு முன் நாட்டுக்கோட்டை நகரத்தில் ஒன்றான கானாடு காத்தானுக்கு நாம் போயிருந்த காலத்தில் தென்னிந்தியாவுக்கே முதன்மையான நாதசுர வித்வான் திரு.பொன்னுசாமி அவர்கள் ஒரு நாளைக்கு 500 ரூபாய் கொடுத்து ஒரு பிரபுவீட்டு விஷேசத்திற்குவாத்தியத்திற்காக வரவழைக்கப் பட்டிருந்தார்.

ஓர் தெளிவுபடுத்தவேண்டும்....!


இந்த இடத்தில் ஒரு மயக்கமான சூழல் இருக்கிறது. புலவர் மற்றவர்களிடத்தில் பிறகு அய்யா அவர்களே, இது பற்றி கேட்டிருக்கின்றார். நாதசுரம் வாசித்தவர் மதுரை சிவக்கொழுந்து என்பவர்தான். ஆனால் 1930 குடிஅரசில் நாதசுவரம் வாசித்தவர் பொன்னுசாமி என்று எழுதப்பட்டிருக் கின்றது. பிற்காலத்தில் ஆராய்ச்சியாளர்கள் வந்தால் பொன்னுசாமியா? சிவக்கொழுந்துவா? என்று கேட்பார்கள். இது தவறானதாக இருக்கலாம் பிறகு ஒரு முறை அய்யா அவர்களைக்கேட்டு அவரே நடந்த சம்பவத்தை எழுதியிருக்கின்றார்.

நாட்டுக்கோட்டையார் சமூகத்தில் நடந்ததை எடுத்துச்சொல்லியிருக்கின்றார். பணம் நிறைய செலவு செய்த கானாடு காத்தானில் நாட்டுக் கோட்டை சகோதரர் திருமணத்திற்காக வாசித்து வருகிறார். சில நண்பர்களுக்கு இந்த சம்பவம் தெரிந்திருக்கும். அந்த காலத்தில் நாதசுவரம் வாசிப்பவர்கள் சட்டை போட மாட்டார்கள். இப்பொழுதுதான் சட்டை போட்டுக்கொண்டு வருகின்றார்கள். துண்டு போட ஆரம்பித்ததே பெரியாரியக்கம் செய்த மாபெரும் புரட்சியும் வளர்ச்சியும்தான். அதற்கு முன்பு அந்த வாய்ப்பு இல்லை.)

மதுரை சிவக்கொழுந்து மதுரை சிவக்கொழுந்து சின்ன வட்டுத்துண்டை தன்தோள்மீது போட்டுக்கொண்டு நாதசுவரம் வாசிக்கும் பொழுது வியர்க்க வியர்க்க அதை வைத்துத் துடைத்துக் கொண்டே வந்தார். உடனே அதைப் பார்த்த மேல்ஜாதிக்காரர்கள் செட்டியார் கள் நாதசுவரம் வாசிப்பவர் ஒரு சாதாரண ஆள். அவர் எதற்கு தோளின் மீது துண்டை போடுவது. அவர் துண்டைப் போட்டு நாதசுவரம் வாசிக்கக் கூடாது. அவர் துண்டை எடுத்துவிட வேண்டும்.

அது துண்டு இல்லையா? நான் நாதசுவரம் வாசிக்கும் பொழுது என் உடலில் ஏற்படுகின்ற வியர்வையைத் துடைப்பதற்காக வைத்திருக் கின்றோம் என்று சொன்னார். ஊர்க்கார நாட்டுக் கோட்டையார்கள் மதுரை சிவக்கொழுந்துவைப் பார்த்து அதெல்லாம் உங்கள் கையில் இருக்க வேண்டும் என்று சொல்லுகின்றார்.

எதிர்பாராதவிதமாக கானாடுகாத்தானில் வை.சு.சண்முகம் வீட்டில் பெரியாரும், பட்டுக் கோட்டை அழகிரிசாமியும் தங்கியிருக்கின்றார்கள்.

பட்டுக்கோட்டை அழகிரிசாமி


அழகிரிசாமி அவர்களுக்கு எப்பொழுதும் சங்கீதத்தில் மிகுந்த ஈடுபாடு உண்டு. பட்டுக் கோட்டை அழகிரி ஊர்வலத்தில் இசைக் கச்சேரி யைக் கேட்கச் சென்றார். அங்கே தகராறு நடக் கிறது. ஏன் இங்கே ஊர்வலம் நிற்கிறது என்று கேட்கிறார்.

-------------------தொடரும் ....”விடுதலை” 25-8-2011

0 comments: