தமிழில் மொழி பெயர்த்து பரப்பியதாலேயே தமிழர்கள் ஆரியர்களுக்கு அடிமையாயினர்!
நமது புலவர்கள், பண்டிதர்கள் சமஸ்கிருத புராண, இதிகாசக் கதைகளை
தமிழில் மொழி பெயர்த்து பரப்பியதாலேயே தமிழர்கள் ஆரியர்களுக்கு அடிமையாயினர்!
சென்னை கூட்டத்தில் தமிழர் தலைவர் வரலாற்றுப் பேருரை
நமது புலவர்கள், பண்டிதர்கள் என்பவர்கள் சமஸ்கிருத புராணங்களை, இதி காசங்களை, புராண கதைகளை தமிழில் மொழி பெயர்த்து சொன்னதால் தான் தமிழர்கள் ஆரியர்களுக்கு அடிமையாகினர் என்ற பெரியாரின் கருத்தை எடுத்துக்கூறி விளக்கவுரையாற்றினார் திராவிடர் கழக தலைவர், தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள்.
தந்தை பெரியாரின் கலை இலக்கியச் சிந்தனைகள் என்ற தலைப்பில் 10.8.2011 அன்று இரவு 7 மணிக்கு சென்னை பெரியார் திடலில் திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய முதல் தொடர் சொற்பொழிவின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:
இலக்கியத்தில் மதம் புகுந்ததால்
மதம் எப்படி மூடப்பட்ட உள்ளத்துக்கு இடமாக இருக்கிறதோ அதே போலத்தான் இலக்கியத்திலும் ஆக்கிவிட்டார்கள். இலக்கியத்திலும் மதம் புகுந்ததால் இதை விமர்சிக்கக் கூடாது. கம்பராமாயணம் இப்படித் தான் இருக்க வேண்டும்.
திருக்குறளுக்கு உரை என்றால் பரிமேலழகருடைய உரையைத்தான் நாங்கள் அங்கீகரிப்போமே ஒழிய புலவர் குழந்தை அவர்களுடைய உரையையோ, நாவலர் நெடுஞ்செழியன் அவர்களுடைய உரையையோ, அல்லது கலைஞர் அவர்களுடைய உரையையோ பெரியார் உரையையோ ஒப்புக்கொள்ள மாட்டோம். புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் சொன்னால் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று ஒரு பழைமை சிந்தனையோ குறுகலான பழைமைப் பிடிப்புள்ள ஒரு சூழலோ இருந்தால் அது நல்லதா?
குடிஅரசைத் திருத்தியதால் தொடர் சொற்பொழிவு
பெரியார் அவர்களுடைய கருத்துகள் எந்தப் பொருளைப் பற்றி இருந்தாலும்கூட, தெரிந்து கொள்ள வேண்டிய செய்திகள் ஏராளம் உண்டு. நிறைய களஞ்சியம் நூல்கள் போட்டிருக்கிறோம். பெரியாருடைய சிந்தனைகளை நூலாகப் போட்டிருக்கின்றோம்.
எனக்கு இப்படிப் பேச சிந்தனை வந்ததற்குக் காரணமே குடிஅரசைத் திருத்திக்கொண்டிருக்கும் பொழுது படித்தேன்.
கலைக்காக-இலக்கியத்திற்காக அய்யா அவர்கள் மற்றவர்கள் செய்யாத பணியை செய்திருக்கிறார்கள் என்று தெரிய வந்தது. மற்றவர்கள் செய்ய முன் வராத உதவிகளை செய்திருக்கிறார். கலைவாண ருக்காக!
பெரியார் கலைக்கு விரோதி இல்லை
பெரியார் கலைக்கு விரோதி இல்லை. அந்தகலை பயன்படுகிற முறைக்குப் பெரியார் விரோதி. அது நம்முடைய மானத்தை நம்முடைய அறிவைக் கெடுப்பதாக இருந்தால் அதை ஒழித்தால்தான் நாம் முன்னேற முடியும். கிருமியை அழித்தால்தானே நோயில்லாமல் இருப்போம்.
நோயில்லாமல் இருந்தால்தான் நல் வாழ்வு
நோயில்லாமல் இருந்தால்தானே நல்வாழ்வு, வளர்ச்சி ஏற்படும். குழந்தைகளுக்கு வயிற்றில் பூச்சி இருந்தது என்றால் அந்த பூச்சி கிருமிகளை சாகடிப்பதற்காக குழந்தைகளுக்கு மருந்து கொடுக்கின்றோம். அந்த பூச்சிகள் எல்லாம் சாக வேண்டும். வெளியேற வேண்டும் என்று ஏன் நினைக்கின்றோம்?
அந்த மாதிரி நம்முடைய நாட்டில் இலக்கியம் என்கிறபெயரில் கலை என்கிற பெயரில் மற்றத் துறைகளில் இப்படி இருந்து கொண்டிருக்கிறதே என்று அய்யா அவர்கள் நினைத்த காரணத் தால்தான் முன்னோக்கி சிந்தித்தார்.
தன் தோளில் தூக்கி சுமந்திருப்பார்
கலையோ, இலக்கியமோ, மக்களிடம் வளர்ச்சிக்குப் பயன்படுமேயானால், முன்னேற்றத்திற்குப் பயன்படுமேயானால் அதை பெரியார் அவர்கள் கட்டி அணைத்துக் கொண்டு அவர்களைத் தன் தோளில் தூக்கி நிறுத்தியிருக்கிறார்கள்.
இன்னும் கேட்டால் அவருடைய தகுதியை குறைத்துக்கொண்டு மற்றவர்களைத் தூக்கியி ருக்கிறார். மற்றவர்களை எவ்வளவு வேகமாகக் கண்டித்திருக்கிறாரோ சுட்டிக்காட்டும் பொழுது எவ்வளவு-விருப்பு-வெறுப்பு இன்றி சுட்டிக் காட்டியிருக்கின்றாரோ அதே போல தூக்கி நிறுத்தும்பொழுதும் செய்திருக்கின்றார். எம்.ஆர்.ராதா மன்றம் என்று ஏன் பெயர் வைத்தார்?
குழந்தைகளை கொஞ்சும்பொழுது ராசா! என்று அழைத்து கொஞ்சுகிறோம். அதற்காக உண்மையான ராஜாவாக ஆகிவிடுவதில்லை. அய்யா கண்மணியே என்று அழைக்கின்றோம். நம்முடைய பிள்ளை என்பதால் தூக்கிக் கொஞ்சுகிறோம்.
இதற்கு நிறைய புத்தகங்களை ஆதாரங்களை கொண்டு வரவேண்டும் என்று தேவையில்லை. இந்தக் கூட்டம் நடத்துகிறோம் பாருங்கள். இந்த மன்றத்திற்கு என்ன பெயர்? தயவு செய்து யோசனை செய்து பாருங்கள். நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றம் என்று தந்தை பெரியார் பெயர் வைத்தார் என்றால் எதற்கு பெயர் வைத்தார்?
எனக்கு ராதா மீது ஒன்றும் பற்றில்லை
அய்யா அவர்கள் எம்.ஆர்.ராதா மன்றத்திறப்பு விழாவில் பேசினார். எனக்கு ராதா மீது தனிப்பட்ட ஒரு பெரிய பற்று ஒன்றும் இல்லை. அவர் செய்திருக்கிற பணியைப் பாராட்டினால் தான் அடுத்தவர்களுக்கு அது மாதிரி செய்யக்கூடிய ஒரு துணிச்சல் வரும். ஓகோ இது மாதிரி செய்தால் பாராட்டுவார்கள் என்று தெரிய வேண்டும்.
ராதா அவர்கள் துணிந்து எதிர்நீச்சல் அடித்தார். என் கருத்தை எடுத்துச் சொன்னார். அதற்கு எதிர்ப்பு வந்தால் கவலைப்படாமல் என் கருத்தை எடுத்துச் சொன்னார் என்று சொன்னார்.
நாடக தடைச்சட்டம்!
இந்தியாவிலேயே இந்த இலக்கியக் கலைத் துறையிலே எவ்வளவு பெரிய புரட்சியைப் பெற்றிருக்கிறது என்பதற்கு உதாரணம். நாடக தடை சட்டம் என்று ஒன்றைக்கொண்டு வந்து காங்கிரஸ் ஆட்சியிலே நிறைவேற்றினார்கள் என்று சொன்னால் அது வேறு யாருக்காகவும் இல்லை. இந்த இயக்கத்திற்காக இந்த இயக்கத்தினுடைய கருத்துகளுக்காகக் கொண்டு வரப்பட்டது.
ராதா நாடகம் நடித்தார். பெரியார் கருத்தை மய்யப்படுத்தி நாடக-சினிமா மூலம் பிரச்சாரம் செய்தார் என்பதற்காகத்தான். அந்த தடைச் சட்டத்தை கொண்டு வந்தார்கள்.
இவை எல்லாம் பதிவாக வேண்டும்
ஆகவே அய்யா அவர்கள் கலை இலக்கியம் அல்லது வேறு எந்த அறிவுபூர்வமானதாக இருந்தாலும் அவர் பார்த்த முறை இருக்கிறது பாருங்கள். அதுதான் ரொம்ப சிறப்பானது. எனவே அது பதிவாக வேண்டும். இப்படி ஏராள மான செய்திகள் இருக்கின்றன. அந்த செய்திகள் அத்துணையும் வருங்கால சந்ததியினருக்கு-தலை முறைக்கு பதிவாக்கப்பட வேண்டும் என்பதற்காகத் தான் இந்த தொடர் சொற்பொழிவுகளை நிகழ்த்துகின்றோம். வேறொன்றுமில்லை. புத்தகங்களில் இந்த செய்திகள் வரும்பொழுது அது முழுமையாக இடம் பெறும்.
பெரியார் ஓர் எழுத்தைக் கூட வீணாகப் பயன்படுத்தமாட்டார்
ஏனென்றால் பெரியார் அவர்களுடைய எழுத்துக்கள் கமா, முற்றுப்புள்ளி உள்பட தேவை யில்லாமல் அய்யா அவர்கள் அதை பயன்படுத்தவே மாட்டார். அழகுக்காக, அலங்காரத்திற்காகப் பயன்படுத்த மாட்டார்கள் அவர்கள். அர்த்தத் திற்காகவும், தேவைக்காகவும் தான் பயன் படுத்துவார்கள். 1939லே தந்தை பெரியார் சொல்லுகிறார். நம்முடைய நாட்டிலே மான உணர்ச்சி என்பதுமிக மோசமாகப் போய்விட்டது. நம்மை மனுதர்மத்தில் எழுதி வைத்திருக்கின்றான். பார்ப்பானுக்கு வைப்பாட்டி மகன் என்று சொல்லுகின்றான். இன்றைக்கும் நாம் அதைப் பற்றியே கவலைப்படவில்லை.
நம்மை சூத்திரன் என்று சொல்லுகிறான்
நம்மை சூத்திரன் என்று சொல்லுகின்றான். அவனைக் கூட்டி வைத்து உட்கார்ந்திருக்கின்றான். இன்னும்கேட்டால் ஒரு தலைமுறை, இரண்டாம் தலைமுறை, மூன்றாம் தலைமுறை வந்தாகிவிட்டது. இவன் வளர்ச்சி அடைய வேண்டுமே தவிர பின்பக்கம்செல்வது போன்று இருக்கிறது.
இன்னொரு பக்கம்-இப்பொழுதுபோய் அவரை எங்கள் இல்லத்திருமணத்திற்கு கூப்பிட முடியா துங்க என்று சொல்லுகிறார். ஏதோ அவருக்காக நினைக்கிறார். இவன் மான உணர்ச்சியைப் பற்றிக் கவலைப்டவில்லையே. பெரியாருக்கு இருந்த கவலை என்ன? அய்யா சொல்லுகிறார் பாருங்கள்.
புலவர்கள் மீது அய்யா அவர்களுக்குக் கோபம்
நம்முடைய பண்டிதர்கள் மீது, புலவர்கள் மீது எவ்வளவு கோபம் என்பதை அய்யா அவர்கள் சொல்லுகின்றார்.
சமஸ்கிருத புராணங்கள் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு இருக்காவிட்டால், நமது பண்டி தர்கள் அந்தப் புராணக் கதைகளை தமிழர்களி டையே பிரச்சாரம் செய்து ஏற்றுக்கொள்ளச் செய்திருக்காவிட்டால் தமிழ்நாட்டில் இந்தத் தன்மான எழுச்சியானது தற்காலத்தில் ஆரிய சமயத்திற்கும், ஆரிய கடவுள்களுக்கும், ஆரிய பார்ப்பனர்களுக்கும் இவ்வளவு மதிப்பும், இவ்வளவு தமிழர் அடிமைகள் ஏற்பட்டிருக்க முடியுமா? என்று பெரியார் கேட்கிறார்.
தமிழர் அடிமைகள்
தமிழர் அடிமைகள் என்று பெரியார் சொல்லுகிறார். தமிழன் மூளையை அடகு வைத்தான். பண்பாட்டுப் படை எடுப்புக்கு அடகு வைத்தான். தமிழர்களை காட்டிக்கொடுக்க இவர்கள் தயாராக இருக்கிறார்கள். தமிழனுடைய வாழ்வைப் பற்றி கவலைப்பட வில்லை. தமிழனுடைய ஆட்சி இருக்கிறதே என்பதைப்பற்றிக் கவலைப் படுவ தில்லை. விளைவு என்னாகுமோ என்பதைப் பற்றிக் கவலைப் படுவதில்லை.
சிறுபிள்ளை தீ வைத்துவிட்டு கூத்தாடுவது போல்....!
சிறு பிள்ளை தீவைத்து விட்டு, நன்றாக எரிகிறது. நன்றாக எரிகிறது என்று கூத்தாடும்படியான சூழல் இன்றைக்கு இருந்துகொண்டிருக்கிறது. மேலும் பெரியார் சொல்லுகிறார்.
ஆரிய சமயத்திற்கும், ஆரியக் கடவுள்களுக்கும் ஆரியப் பார்ப்பனர்களுக்கும் இவ்வளவு மதிப்பும், இவ்வளவு தமிழர் அடிமைகள் ஏற்பட்டிருக்க முடியுமா? என்று கேட்பதோடு ஆரிய பாஷை ஆரிய கலை வேண்டாம் என்று சொல்லும் தமிழ் பண்டிதர்கள் உண்மைத் தமிழர்கள் என்று தங்களை சொல்லிக்கொள்பவர்கள் ஆரிய கலை களை தங்கள் கலைகள் என்றும், ஆரியக் கடவுள்களை தங்கள் கடவுள்கள் என்றும் இவற்றை ஆரியர்கள் திருடிக்கொண்டார்கள் என்று சொல்லிக்கொள்ளாவிட்டால் இப்படிப்பட்ட சூழ்நிலை இருக்குமா? என்று கேட்கிறார்.
இறக்குமதி செய்ததை எதிர்த்து பேசி ஒழித்து விட்டால் கொஞ்சம் மான உணர்ச்சி வரும். நோய்க்கு மருந்து கொடுத்தமாதிரி.
நமது பண்டிதர்களின் அறிவு, ஆராய்ச்சி எதற்குப் பயன்படுகிறது என்றால் இல்லை இல்லைங்க அந்த கலைகள் எல்லாம் நம்முடையது. அவர்கள் எடுத்துக்கொண்டு போய் திருப்பிக் கொண்டு வந்துவிட்டார்கள்.
கந்தனை அவன் ஸ்கந்தனாக்கி விட்டான். முருகன் தமிழக்கடவுள் பெரிய பகுத்தறிவோடு கண்டுபிடித்து சொன்ன மாதிரி சொல்லுகிறார்கள்.
ஒரு பெரிய நண்பர் இன்னொருத்தர் எனக்குச் சொல்லித் தெரிந்தது. அவர் ஒரு நல்ல பகுத்தறி வாளர் இசைத்துறையில் இருக்கின்றார். கடவுள் இல்லைங்கிறோம். முருகன் தமிழ்க்கடவுள்ங்க என்று சொல்லுகிறார். கந்த புராணத்தில் முருகன் கதை என்னங்க? ரொம்ப அசிங்கமான கதை, தாய்மார்களை வைத்துக்கொண்டு சொல்ல முடியாது. ஒரு கடவுள் கதைகூட ஒழுக்கமானது இல்லை.
நம்மிடம் புஷ்பக விமானம் இருந்திருக்கிறது
ஆகவே யார் மோசமான எதிரிகள்? இதைக் கொண்டு வந்தான் பாருங்கள். அந்த கலை நம்முடையதுதான் திரும்பி வந்துவிட்டது என்று ஆணி அடித்துச் சொல்லுகிறார்கள் பாருங்கள். அதுதான் வேதனை. அதற்கு வியாக்கியானம், தத்துவார்த்தங்கள் வேறு சொல்லுகிறார்கள்.
அந்த காலத்திலேயே புஷ்பக விமானம் இருந்திருக்கிறது. கம்ப இராமாயணத்திலே இது சொல்லப்பட்டிருக்கிறது. அது ஆட்டோமேட்டிக் லேண்டிங். பைலட் இல்லாமல் லேண்ட் ஆகிவிடும். அந்த காலத்திலேயே கண்டுபிடித்திருக்கிறார்கள். இதை எல்லாம் ஜெர்மன்காரன் திருடிக்கொண்டு போய்விட்டான். அப்புறம் அவன் திருப்பிக் கொண்டு வந்திருக்கிறான் என்று இப்படி எல்லாம் பேசுவது இருக்கிறது பாருங்கள். ஒன்றுக்கும் பயனில்லாதது. நம்மை நாமே ஏமாற்றிக்கொள்ளலாமா?
எது நமக்கு அறியாமை என்று தெரிந்தால்தான் அறிந்துகொள்ள வேண்டியவைகளை அடுத்தக் கட்டத்தில் அறிந்துகொள்ள முடியும். நம்மிடம் இல்லை என்று தெரிந்தால்தான் அதைத் தேடிக்கண்டு பிடித்து கொண்டு வர வேண்டும் என்று நினைக்கின்றோம்.
அதை விட்டுவிட்டு நம்மிடம் எல்லாம் இருக் கிறது என்று நம்மை நாமே ஏமாற்றிக்கொண்டி ருந்தால் எப்படி? உடலை பரிசோதிக்கின்ற மருத்துவர் வருகின் றார். புற்றுநோய் இருக்கிற வரைப் பார்த்துவிட்டு நீங்கள் ரொம்ப நன்றாக இருக்கின்றீர்கள் என்று சொல்லிவிட்டால் டக்கென்று என்ன ஆகும்? வெளியே தெரியும் பொழுது எல்லோருக்கும் அதிர்ச்சியாக இருக்கும். காப்பாற்ற முடியாத ஒரு சூழல் ஏற்படும். பெரியார் இந்தியை ஏன் எதிர்த்தார்?
இந்தி பாஷையைப் பற்றி சொல்லும்பொழுது தந்தை பெரியார் ஏன் இந்தியை எதிர்த்தார்? வெறும் மொழிக்காக மட்டும் அவர் எதிர்க்கவில்லை. இது ரொம்ப பேருக்குத் தெரியாது.
ஏங்க! இந்தியைப் படித்துவிட்டுப் போகலாமே இன்னொரு மொழி தெரிந்துவிட்டால் நல்லது தானே, வடநாட்டுக்குப் போகிறீர்கள் உங்களுக்கு இந்தி தெரிந்தால் பேசி விட்டு வருவதற்கு வசதியாக இருக்குமே என்றெல்லாம் சொல்லுவார்கள்.
நம் காதில் கேட்பதற்கும் நன்றாக இருக்கும். பெரியார் அவர்களுடைய இந்தி எதிர்ப்பு போராட்டம் என்பதிருக்கின்றதே அது ஒரு மொழி இன்னொரு மொழி மீது திணிக்கப்படுகிறது என்பதற்காக மட்டுமே செய்யப்பட்ட போராட்டம் அல்ல.
1939 டிசம்பர் 27இல் அய்யா சொல்லுகிறார்
நிற்க! இந்தி பாஷை என்பதே ஆரியர் பாஷை என்றும் அது சமஸ்கிருதத்தின் மற்றொரு ரூபம் என்றும் அப்பாஷைகளின் வேதம், சாஸ்திரம், ஸ்ருதி, ஸ்மிருதி, புராணம், இதிகாசம் ஆகியவை தமிழ்நாட்டில் இந்திக் கட்டாயமாய் புகுத்தப் படுவதின் மூலம் பரப்பப்பட்டு செல்வாக்குப் பெறப்படுமேயானால் தமிழ் மக்களின் சுதந்திரத் தன்மை வாய்ந்த தமிழும் தமிழ் கலைகளும் அழிய நேரிடுவதோடு தமிழர்களின் சுதந்திரமும், தன் மானமும் அடியோடு இழக்க நேரிட்டு தமிழர்கள் ஆரியர்களுக்கு பரம்பரை அடிமையாக இருக்க நேரிட்டுவிடும் என்று கருதியே நாம் இந்தியை எதிர்க்கிறோம் என்று பல தடவை சொல்லி யிருக்கின்றோம் என்று.
கல்லிலே செதுக்கி வைக்கவேண்டியவை
பெரியார் சொன்னார். இது கல்லில் செதுக்கி வைக்க வேண்டிய விசயம். இதெல்லாம் பதிவாக வேண்டும்.
---------------தொடரும்! ............"விடுதலை” 24-8-2011
0 comments:
Post a Comment