Search This Blog

23.8.11

பார்ப்பனர்களை வீட் டுக்கு அழைப்போரே!உண்மையை அறிந்து தான் அழைக்கிறீர்களா?


சுவாமி கைவல்யம் என்று போற்றப்படும் கைவல்யம் அவர்களின் இயற்பெயர் பொன்னுசாமி. மலையாள நாட்டில் கள்ளிக் கோட்டையில் இந்நாளில் தான் பிறந்தார் (1877)

குடிஅரசு இதழில் இவர் எழுதிய இந்து மத வேத, சாஸ்திர, இதிகாச புராண எதிர்ப்புக் கட்டுரைகள் என்பவை அசைக்க முடியாத உருக்கு மலை போன்றவை. அதில் ஒரு வரியைக் கூட மறுத்து எழுதிட எந்தக் கொம்பனும் அன்றும் பிறக்கவில்லை; இன்றும் இல்லை.

கைவல்யத்திற்கு என்று இருந்த எழுத்து நடையின் சலங்கையில் தெறிக்கும் நாதம் படிப்போர் நெஞ்சில் மேடை கட்டும்.

கைவல்யம் என்னும் சாஸ்திர நூல் மிகவும் நெருடலானது. தாண்டவமூர்த்தி சுவாமிகள் அருளிச் செய்த கைவல்லிய நவநீதம் - என்று அதன் முதல் பதிப்பில் (1933) குறிப்பிடப்பட் டுள்ளது. பிறையாறு அருணாசல சுவாமிகள் என்பவர் இதற்கு உரை எழுதியுள்ளார்.

இ.அரங்கசாமி முதலியார் ஸன்ஸ் (சென்னை) பூமகள் விலாச அச்சுக் கூடத்தில் பதிப்பிக்கப் பட்டது. 184 செய்யுள்களைக் கொண்ட இந்த சாஸ்திர நூல் நமது சுவாமி கைவல்யத்திற்கு அத்துப்படி! அதன் காரணமாகத் தான் பொன்னுசாமி கைவல்ய சாமி என்று அழைக்கப்பட்டார்.

அப்படி அழைத்தவர்கள் சுயமரியாதைக் காரர்களும் அல்லர் - சாஸ்திரோத்திரங்களில் மூழ்கிக் கிடந்த அந்த வட்டாரத்தினர் தான். நம் வீட்டு விழாக்களுக்கு - காரியங்களுக்குப் பார்ப்பனப் புரோகிதர்களை அழைத்துத் தட்சணைகளைக் கொட்டிக் கொடுத்து மந்திரங்களை ஓதச் செய்கிறோமே - அதைப் பற்றி அருமையான கருத்துகளை சாஸ்திர ரீதியாக கைவல்யம் எழுதியுள்ளதைக் கவனியுங்கள்! கவனியுங்கள்!!

தானத்திற்குச் சற்பாத்திரம் யார்? என்ற கட்டுரையில் நூலிழைப் பிளந்து வெளுத்துக் கட்டுகிறார் கைவல்யம். பராசஸ்மிருதியிலிருந்தே எடுத்துக் காட்டியிருக்கிறார்.

பாத்திரம் என்பது கீழ் விழுதலினின்றும் தடுக்கப் படுவது - அதாவது நரகத்திலிருந்து தடுக்கப்படுவது. அப்படித் தடுப்பவன் யார்?
வேதம் படித்திருக்க வேண்டும். தபசு வேண்டும். அதுவும் போதாது, ஒழுக்கமும் வேண்டும். இம்மூன்றும் நிறைந்த பிராமணன் வாங்கின பொருளை நல்வழியில் செலவு செய்பவனாகவும் இருக்க வேண்டும். இவனும் ஒரு தடவை தானம் வாங்கினால் பின் வாங்க யோக்கியதை உடையவனன்று.

ஏன்? இவனிடம் ஒருவனை நரகத்தினின்றும் மீட்பதற்குத் தான் புண்ணியமிருக்கும். தேவ கர்மமோ, பிதுர் கர்மமோ அன்னியனுக்காக ஓர் நாள் செய்திருந்தாலும் அவனுக்குக் கொடுக்கும் எல்லா தானமும் வீண். தன் காரியத்திலேயே கருத்துடையவனுக்குக் கொடுத்தால் தான் செய்யும் காரியம் கெடும். இந்தப் பார்ப்பானுக்குக் கொக்குப் பார்வையுடையவன் என்று ஸ்மிருதியில் எழுதியிருக்கிறது.

இதன் அர்த்தம் வஞ்சகனுக்குக் கொடுத்தால் வாழ்க்கை சுருங்கும். ஒரு புத்திரனே புத்திரன்; மற்ற புத்திரர்களெல்லாம் காமபுத்திரர்கள். காமபுத்திரரை உடையவர்களுக்குத் தானங்கொடுத்தால் புத்திரஹானி உண்டாகும். கற்புடைய மனைவியில்லாதவன், புரோகிதன், குருக்கள், தானத்தை வாங்கியிருப்பாய் வைத்திருப்பவன், வேதத்தை விற்றவன், கூலிக்கு வித்தை சொல்லுகிறவன், தானத்தைத் தேடித் திரிகிறவன், இருவேளை உண்ணுகிறவன், மூன்று நாட்களுக்கு மேல் ஆகாரத்தை வைத்திருப்பவன், இப்படிப்பட்டவர்களுக்குக் கொடுக்கும் தானம் வீணாவது மன்னியில், கொடுப்பவன் குடும்பங் கெட்டு நரகத்திற்குப் போகிறான். - கைவல்யம் கூறுகிறார்.

பார்ப்பனர்களை வீட் டுக்கு அழைப்போரே! உங்கள் வீட்டுக்கு அழைக்கும் புரோகி தனை இந்தப் பரீட்சைகளை வைத்து, உண்மையை அறிந்து தான் அழைக்கிறீர்களா? இல்லை என்பதுதான் உண்மை.

அப்படியானால், நீங்கள் நரகத்திற்குத்தான் போவீர்கள். நாங்கள் சொல்லவில்லை. சாஸ்திரம் சொல்லுகிறது.

-------------------- மயிலாடன் அவர்கள் 22-8-2011 "விடுதலை” யில் எழுதிய கட்டுரை

0 comments: