Search This Blog

16.8.11

திருப்பதி வெங்கடேசப் பெருமாள் கடன்காரக் கடவுள்!


திருப்பதியில் நாமக் கடவுளான வெங்கடேசப் பெருமாள் கோயிலுக்கு 900 கிலோ வெள்ளியால் கதவு புதுப்பிக்கப்படுகிறதாம்!


76 சதவிகித இந்திய மக்களின் நாள் வருமானம் ரூ.20. வறுமைக்கோடு என்ற கணக்கில் 40.6 கோடி மக்கள் வருகிறார் கள். அவர்களின் சராசரி வருமானம் ரூ.54, பைசா 22. விவசாயிகள் ஆயிரக் கணக்கில் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார் கள். இப்படிப்பட்ட நாட்டில் ஒரு குழவிக் கல்லுக்கு அதாவது அவர்கள் பாஷை யில் கடவுளுக்கு 900 கிலோ செலவில் வெள்ளிக் கதவாம்!

இதன் பொருள் மனித உணர்வை - மனிதர்களின் நலனை இந்தியர்களாகிய நாங்கள் மதிக்க மாட்டோம்; மாறாக யாரோ எந்தக் காலத்திலோ கிறுக்கிவைத்த சமாச்சாரங்களை நம்பி குழவிக் கல்லுக்கு, சிலைகளுக்குத் தான் வந்தனம் செய்து கிடப்போம், கொட் டிக் கொடுப்போம் என்று அறிவுக்குப் பொருந்தாத மடத்தனமான - மனித நல விரோத செயல்பாடுகள் தான் எங்களுக்கான புத்தி என்று கூறுவது ஆகாதா?

கடவுளைத் தங்கள் ஜாதிப் பட்டியலில் அடைத்துள்ள நாடு இது. காஞ்சி மாஜி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி மூன் றரைக் கிலோ எடையில் தங்கப் பூணூலை இதே திருப்பதி வெங்கடாசல பதிக்கு சாத்தவில்லையா?

கடவுளுக்குப் பசி யுண்டு - காம உணர்ச்சி உண்டு - பெண்டாட்டி உண்டு - பிள்ளைக் குட்டிகள் உண்டு என்று இங்கு எழுதி வைத்திருக்கிறான் என்றால் தன்னை மனதிற் கொண்டே தன் சுற்றுச் சூழலை உள்வாங்கிக் கொண்டேதான் இந்த ஏற்பாடுகளைச் செய்திருக் கிறான் மனிதன் என்பதைக் கடுகளவு புத்தியைப் பயன் படுத்துபவர்களும் எளி தாகப் புரிந்து கொள்ள லாமே!

இந்தியாவிலேயே பெரிய கல் முதலாளி இந்த வெங்கடாஜலபதிதான். ஆனால் அவன் கடனில் சிக்கித் தவிக்கிறான். என்றால் நம்ப முடியுமா? ஆனாலும் அவாள் எழுதி வைத்த கதைப்படியே ஏழு மலையான் கடன்காரன் தான்.

தன்னுடைய கல்யாணத் துக்காகக் குபேரனிடம் கடன் வாங்கினானாம் இந்தக் கடவுள். அந்தக் கடனை அடைபதற்காகத் தான் திருப்பதிக் கோயிலில் உண்டியல் வைக்கப்பட்டுள்ளதாம்; காணிக்கையும் பெறப்படுகிறதாம். இவன்தான் கடவுள் ஆயிற்றே - இவன் ஏன் கடன் வாங்குகிறான்? இவனால் உண்டாக்கப்பட்ட பொருள்தானே பணமும் - இந்த நிலையில் இன்னொ ருவனிடம் போய் கடன் வாங்கினான் என்றால் எவ் வளவுப் பெரிய கையாலா காதவனாக இந்த ஏழு மலையான் கடவுள் இருப்பான்...?
அதுவும் வட்டியைத் தான் கட்டிக் கொண்டு இருக்கிறானாம். அசலை அடைக்க இன்னும் எவ்வளவு காலமோ!

ஒன்று செய்யலாம்; திருப்பதி ஏழுமலையான் சொத்துக்களை குபேரன் ஜப்தி செய்யலாமே!

--------------- மயிலாடன் அவர்கள் 15-8-2011 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

0 comments: