Search This Blog

19.8.11

எங்களுக்கு பூநூல் மீது என்ன கோபம்?- சோ என்னிடம் கேட்ட கேள்வி -கி.வீரமணி

பெரியாருக்குப் பிறகு மத்திய அரசை அசைய வைத்தது திராவிடர் கழகம் நாகை மாணவர் கழக மாநாட்டில் தமிழர் தலைவர் விளக்கம்

பெரியாருக்குப் பிறகும் மத்திய அரசை அசைய வைத்தது திராவிடர் கழகம் என்று திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் கூறி விளக்கவுரையாற்றினார்.

நாகையில் 13.8.2011 அன்று நடைபெற்ற திராவிடர் மாணவர் கழக இனஎழுச்சி மாநாட்டில் திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரை யின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:

திராவிடர் ஆட்சி திராவிடர்களால், உண்மைத் தமிழர்களால் நடத்தப்படக்கூடிய ஆட்சி ஊடகங்களும், ஆதிக்கவாதிகளாலும் தாங்க முடியாது. இவர்கள் நினைப்பார்கள் தி.மு.க ஆட்சி எவ்வளவு காலத்திற்கு இருக்கப் போகிறது என்று நினைப்பார்கள்.

அப்பொழுது அண்ணா அவர்கள் தனது உடல் நலிவையும் பொறுத்துக்கொண்டு சொன்னார்கள். நான் ஓராண்டு காலம் ஆண்டிருக்கிறேன். இந்த ஓராண்டிலே முப்பெரும் சாதனைகளைச் செய்திருக்கிறேன். அண்ணாவே சொன்னார்.

ஒன்று தாய்த்திருநாட்டிற்கு தமிழ்நாடு என்று பெயர் மாற்றம். இரண்டு சுயமரியாதை திருமணத்திற்கு சட்டவடிவம் தந்தது. மூன்றாவது இருமொழிக்கொள்கை இந்திக்கு இடமில்லை என்று சொல்லிவிட்டு மேலும் சொன்னார்.

ஆட்சியை விட்டு இறக்க நினைக்கலாம்


இதை மாற்ற வேண்டும் என்று பலர் நினைக்கலாம். இந்த முப்பெரும் சாதனைகளை அண்ணாதுரை அல்லவா செய்தார். இவர்களை ஆட்சிக்கு விட்ட காரணத்தால் அல்லவா நமக்கு மாறு பட்டவைகளை எல்லாம் செய்து முடித்து விட்டார்கள் என்று நினைத்து எங்களை ஆட்சியை விட்டுவிரட்ட வேண்டும் என்று சிலர் நினைக்கலாம். முடியுமா? என்றால் உங்களால் முடியும். நான் முடியாது என்று சாவல்விட மாட்டேன். மத்திய அரசைப் பார்த்து அன்றைக்கு அண்ணா சொன்னார்.

எங்களை வீட்டுக்கு அனுப்பிவிட்டு....


எங்களை வீட்டுக்கு அனுப்பிவிட்டு வேறு யாராவது அந்த இடத்திற்கு வந்து உட்கார்ந்து இதை மாற்ற வேண்டும் என்ற நினைப்போடு வரலாம். வந்து உட்கார்ந்து அண்ணாதுரை செய்த மூன்று சாதனைகளை மாற்ற வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் உடனடியாக என்ன எண்ணம் வரும் என்று சென்னால் நண்பர்களே, ஒரு அச்சம் வரும். சுயமரியாதைத் திருமணத்தை மாற்றினால் தமிழ்நாடு என்று நான் பெயர் வைத்ததை சென்னை ராஜதானி என்று மாற்றினால் மீண்டும் இந்தியை கொண்டுவந்தால் பழைய அரசு செய்ததை மீண்டும் செய்ய நினைத்தால் உங்கள் மனதிலே ஒரு அச்சம் உலுக்கும். மக்கள் நம்மை சும்மா விடு வார்களா என்ற அச்சம் உங்களை உலுக்கும்.

அண்ணாதுரைதான் இந்த நாட்டை ஆளுகிறான்


அண்ணா சொன்னார். ஒரு அரசியல் தத்துவத்தையே சொன்னார். நான் ஆட்சியிலே இருக்கிறேனோ இல்லையோ அது முக்கியமல்ல. அந்த அச்சம் உங்கள் யாருக்கு வந்தாலும் எவ்வளவு காலத்திற்கு அந்த அச்சம் உங்களை உலுக்குகிறதோ அவ்வளவு காலத்திற்கும் அண்ணாதுரைதான் இந்த நாட்டை ஆளுகிறான் என்று பொருள் என்று சொன்னார் (கைதட்டல்). இந்தத் தத்துவத்தை இன்றைய ஆட்சியாளரும் மறந்து விடக்கூடாது. இதுதான் அண்ணா சொன்ன தத்துவம். மற்றவர்கள் சொன்னால் அவர்களுக்குப் பிடிக்காது. ஏனென்றால் அண்ணா பெயரில் ஆட்சி இருக்கிறது.

இதை மாற்றலாம், அதை மாற்றலாம் என்று நினைத்தால்...


இதை மாற்றலாம், அதை மாற்றலாம் என்று நினைத்தால் அது அவ்வளவு சுலபமானதல்ல. இங்கே சொன்னார்களே! பூநூல்களை உருவிக் கொண்டிருக்கிறார்கள் என்று. பேதமில்லா பெருவாழ்வு வரவேண்டும் என்பதுதானே எங்களது கொள்கை. எங்களுக்கு என்ன தனிப்பட்ட முறையிலே அந்த பூநூல் மீது என்ன கோபம்?

மனுதர்மத்தில் என்ன எழுதப்பட்டிருக்கிறது? மனுதர்மப்புத்தகம் இங்கே விற்கப்படுகிறதே இன்னும் அறிவுள்ள தமிழர்கள், மானமுள்ள தமிழர்கள் யோசிக்க வேண்டாமா? சிந்திக்க வேண்டாமா? நான் சொல்லுவது மனுதர்ம ஸ்லோகம்.

ஆவனி அவிட்டத்தில் வேறுபாடு பிராமணக்குப் பஞ்சு நூலாலும்-ஆவனி அவிட்டத்தில் கூட ஒரே மாதிரி இல்லை. அதிலும் பேதம் வர்ணாஸ்ரம தர்மம் சதுர்வர்ணம் நான்கு. பிராமணனுக்குப் பஞ்சு நூலாலும் (யாருக்காவது சந்தேகம் இருந்தால் மனுதர்ம நூல் இங்கே விற்கிறது. அதை வாங்கிப் பாருங்கள்.)

சத்திரியனுக்கு சணைப்பை நூலாலும், வைசியனுக்கு வெள்ளாட்டின் மயிராலும் மூன்று வடம் தரிக்க வேண்டியது. சூத்திரனுக்கு பூநூல் போடுவதற்கு உரிமையே கிடையாது. நமது செட்டியார், பட்டர், அவர், இவர் போடுவது இருக்கிறது பாருங்கள் இது இமிடேசன். இதற்கு எந்த மரியாதையும் கிடையாது.

ரிசர்வேசனை ஆரம்பித்தவர்களே பார்ப்பனர்கள்தான்


ஆகவே மனுதர்ம சாஸ்திரப்படி, சதுர்வர்ண தத்துவப்படி, வர்ணாஸ்ரம தர்மப்படி பிராமண னுக்கு பஞ்சுநூல். அதில்கூட நல்ல நூல் பஞ்சு நூலை அவன் ரிசர்வ் பண்ணிவிட்டான்.

ரிசர்வேசனை முதன்முதலில் ஆரம்பித்தது நம்மாள் இல்லை. பார்ப்பான்தான் மனுதர்மத்தில் முதன்முதலில் ரிசர்வேசனை ஆரம்பித்தவன். ஆகவே பஞ்சுநூல் அவனுக்கு. சணைப்பை நூல், சத்திரியனுக்கு. பாவம் வைசியர்கள் இருக்கிறார்கள் பாருங்கள். வைசியர்களுக்கு வெள்ளை ஆட்டின் மயிரை எடுத்துப் பின்னி அதை நூலாகப் போட வைத்திருக்கிறார்கள்.

வெள்ளாட்டின் மயிரை நூலாகப் போட்டால்...


அதை பூநூலாகப் போட்டல் முதுகு சொரி வதற்கு இவனுக்கு ஒரு ஆள் கூடப் போகவேண்டும். ஆக அதிலே கூட பேதம், ஜாதி இல்லை என்று சொல்லக்கூடிய இந்த சமுதாயத்திலே எதற்காக பேதம் இருக்க வேண்டும்? இடஒதுக்கீட்டிற்காக பிற்படுத்தப்பட்டவர்கள் இந்த நாட்டில் எவ்வளவு பேர் இருக்கிறார்கள் என்று நீதிமன்றம் கேட்கின்றது. நாங்கள் நிறைய பேர் இருக்கிறோம் எங்கள் எண்ணிக்கைக்கு குறைவாகத்தான் இடஒதுக்கீடு இருக்கிறது என்று சொன்னால் அதற்குப் புள்ளிவிவரம் வேண்டும் என்கிறான்.

பிற்படுத்தப்பட்டோர் எவ்வளவு பேர்?


சென்சஸ் எடுக்கும்பொழுது ஜாதி அடிப் படையிலே பிற்படுத்தப்பட்டோர் எவ்வளவு பேர் என்று கணக்கெடுங்கள் என்று சொன்னால் அய்யய்யோ இது ஜாதியை வளர்ப்பது என்று சொல்லுகின்றார்கள். யார்? பழைய பூநூலை கழற்றிவிட்டு, புதிய பூநூலைப் போடுகிறவன் ஜாதியை வளர்க்கிறது என்று சொல்லுகின்றான். அப்படியானால் அவர்களுடைய இரட்டை வேடம் எப்படிப்பட்டது என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும்.

பேசுநா இரண்டுடையாய்
போற்றிப் போற்றி


ஆரிய மாயைப் பற்றி அண்ணா அவர்கள் எவ்வளவு அழகாகச் சொன்னார்கள். பிற்படுத்தப் பட்ட, தாழ்த்தப்பட்ட சகோதரர்களான எங்களுக் குரிய பங்கு இல்லை என்று சொல்வதிருக்கிறது பாருங்கள். அதுக்கு ஆதாரம் கணக்கு எடுத்துச் சொன்னால் நீதிமன்றத்திற்குக் கணக்கு கொடுக்க வேண்டும் என்று சொன்னால் 1931-க்கு முன்னால் எப்படி கணக்கு எடுத்தார்களோ அது போல சொல்ல வேண்டும் என்று சொன்னால் ஜாதியை உண்டாக்குகிறார்கள் என்று சொல்லுகின்றார்கள். ஜாதியை உண்டாக்குவது நாம் அல்ல. ஆனால் பழைய பூநூலைக் கழற்றிவிட்டு, புதிய பூநூலைப் போடுங்கள் என்று பார்ப்பனர்கள் சொல்லு கிறார்கள்.

சோ என்னிடம் கேட்ட கேள்வி


என்னிடம் ஒரு முறை சோ இராமசாமி பேட்டிகண்ட பொழுது ஒரு கேள்வி கேட்டார். உங்களுக்கும், நமக்கும் பேதமிருக்கிறதே என்று சொன்னேன். என்ன சார் பேதமிருக்கிறதே என்று கேட்டார்.

இரண்டு பேரும் சட்டையைக் கழற்றுவோம் என்று சொன்னேன். ஏதோ சண்டைக்கு வருவதற்காக என்று கோகப்படாதீர்கள். இரண்டு பேருமே சட்டையைக் கழற்றுவோம்.

உங்கள் முதுகு எப்படியிருக்கிறது என்னுடைய முதுகு எப்படியிருக்கிறது இரண்டு பேருடைய முதுகையும் பார்ப்போம் என்று சொன்னேன்.

உடனே அவர் சிரித்துக்கொண்டே சொன்னார் சார்! என் முதுகில் பூநூல் என்பது என்னுடைய பெரியவர்கள் விருப்பத்திற்காகப் போட்டிருக்கிறேன் சார். இப்படி சொன்னார். அவர் ரொம்ப சாமர்த்தியமாகப் பேசுவார். பெரியவர்களுடைய விருப்பத்திற்காக எங்களுடைய ஆச்சாரத்திற்காகப் போட்டிருக்கிறேன் என்று சொன்னார்.

நீங்களும் பூணூல் போட்டுக்கொள்ளுங்களேன்!


அதுமட்டுமல்ல, சரி நீங்களும் போட்டுக் கொள்ளுங்களேன் என்று சொன்னார். கிண்டலாக இப்படிச் சொன்னார். எங்களுக்கொன்றும் ஆட் சேபணை இல்லை. நீங்களும் போட்டுக் கொள்ளலாம் என்று சொன்னார்.

நான் பூநூல் போட்டுக்கொண்டால் சங்கராச்சாரி ஒத்துக்கொள்கிறாரா? கேளுங்கள்-சங்கராச்சாரியாரிடம் கேட்டுச் சொல்லுங்கள். இதற்கு உங்களுடைய சாஸ்திரம் இடம் கொடுக்கிறதா? கேளுங்கள் என்று சொன்னேன் (கைதட்டல்).

சார்! எல்லோரும் பூநூல் போட்டுக் கொள்ளலாம் சார். என்று சொன்னார். சோ அவர்களே நாங்கள் பெரியாருடைய ஆட்கள் எதிலும் சிக்கனமான அணுகுமுறை கொண்டவர்கள்.

நான் சொல்லுகிறேன். மூன்று பேராக இருக்கின்ற நீங்கள்அதிலும் பெண்கள் பூநூல் போடுவதில்லை. ஒன்றரை சதவிகிதம் போய்விட்டது. 12 வயதிற்குக் கீழ் இருக்கும் பையன்கள் போடுவதில்லை. அதிலும் அரை சதவிகிதம் போய்விட்டது.

தேவையில்லாத வேலை


ஆகவே ஒரே ஒரு சதவிகிதம் நீங்கள்தான் பூநூல் போடுகிறீர்கள். அந்த ஒரு சதவிகிதம் பூநூலை கழற்றிப்போடுவது சுலபமா? 98 பேர் புதிதாக பூநூல் போட்டால் பூநூலுக்கு அல்லவா கிராக்கி வந்துவிடும் அது தேவையில்லாத வேலை அல்லவா? ஆகவே பேதத்தை ஆணி அடிக்கிற விசயமல்லவா என்று கேட்டேன்.

உடனே சார்! அடுத்த கேள்விக்குப் போகலாம் என்று சொல்லிவிட்டார். எதற்காக இதை எடுத்துச் சொல்லுகிறோம் என்றால் நண்பர்களே! இது மனிதநேய இயக்கம். நாங்கள் யாரையும் வெறுக் கிறவர்கள் அல்லர். பார்ப்பனர்கள் புரிந்துகொள்ள வேண்டும். இங்கு ஆவேசமாகப் பேசினார்கள் என்றால் அது வன்முறையத் தூண்டக்கூடியதல்ல.

மனிதன் செவ்வாய் கிரகத்திற்குப் புறப்படுகிறான்


மாறாக சமுதாயத்திலே இந்த காலகட்டத்தில் இன்னமும் நெருங்க முடியவில்லையே. மனிதன் செவ்வாய் கிரகத்திற்குப் போக முயற்சி செய்கிறான். நிலவிலே இறங்குகிறான். நம்மூரில் கர்ப்பக்கிர கத்திற்குள் தாழ்த்தப்பட்டவன் போக முடிய வில்லையே! ஆதிதிராவிடர் அய்.ஏ.எஸ். அதிகாரி ஆகலாம். அய்.பி.எஸ். அதிகாரி ஆகலாம். உயர்நீதிமன்ற நீதிபதி ஆகலாம். அக்கிரகாரத்தைத் தவிர, ஆதி திராவிடர் அர்ச்சகர் ஆக முடியாதே. பெரியார் தானே இந்தக் கேள்வியைக் கேட்டார்.

தி.க., தி.மு.க.வைத்தவிர வேறு யார்?


இதற்காக போராடுகிற இயக்கமாக திராவிடர் கழகத்தைத் தவிர, திராவிட முன்னேற்றக் கழ கத்தைத் தவிர வேறு இயக்கம் இருக்கிறதா? தயவு செய்து எண்ணிப் பாருங்கள்.

எனவே, சமுதாயப் போராட்டம் என்பது இன இழிவை ஒழிக்கின்ற போராட்டம். மானமும், அறிவையும் உருவாக்குவதுதான் திராவிடர் இயக்கத்திற்கு என்னுடைய பணி என்று பெரியார் சொன்னார். எனவே மாணவச் சிங்கங்களே உங்களை நாங்கள் அழைத்திருப்பது வேடிக்கை காட்டுவதற்கு அல்ல.

ந்த போதைக்கும் ஆட்படாத தங்கங்கள்


நீங்கள் எல்லாம் சொக்கத் தங்கங்கள். உங்களி டத்திலே போதைகள் இல்லை. மத போதை இல்லை. ஜாதி போதை இல்லை. பதவி போதை இல்லை. வேறு, வேறு போதைகள் இல்லை.

எனவேதான் நீங்கள் அற்புதமாக தயாரிக்கப் பட்டிருக்கின்ற, கெட்டுப்போகாத இளைஞர்கள். எனவே உங்களைப் பார்த்து நாங்கள் அன்போடு கேட்டுக்கொள்வதெல்லாம் உங்கள் வாழ்க்கை ஒரு 25 வயது வரையிலே முழுக்க முழுக்க கொள்கைக் காகவே நீங்கள் சர்வபரித்தியாகம் செய்யுங்கள். 25 வயதிற்குள்ளாக திருமணம் செய்துகொள்ளா தீர்கள். அறிவை கூர்மையாக்கிக் கொள்ளுங்கள். எப்போதுமே திருமணம் செய்து கொள்ளா தீர்கள். என்று நாங்கள் சொல்லமாட்டோம். அது இயற்கைக்கு முரணானது. காமராஜர்கள் எத்தனையோ பேர் இருக்கலாம். அது அவர்களைப் பொருத்தது. ஆனால் உங்களைப் பொறுத்த வரையிலே, பின்னால் வரக்கூடிய இளைஞர்களே! மாணவர்களே! நீங்கள் உங்களை அறிவை கூர்மையாக்கிக் கொள்வது கல்வியைப் பெருக்கிக் கொள்வது,

இன எழுச்சித் திருப்பணி


ஒழுக்கத்தை வளர்த்துக்கொள்வது, கட்டுப் பாட்டை வளர்த்துக்கொள்வது இவை எல்லாம் முக்கியமென்றாலும் அதைவிட மிகப்பெரிய ஒரு பணி உண்டு. அதுதான் இனமானப் பெரும்பணி. இன எழுச்சித் திருப்பணி. சாதாரணமல்ல. திருப்பணி என்று சொல்ல வேண்டும். திருப்பணி என்றால் அது ஏதோ கடவுள் சம்பந்தப்பட்டது என்று நீங்கள் நினைக்க வேண்டியதில்லை.

அறிவுப்பூர்வமாக சொல்லக்கூடிய இயக்கம்


இந்த இயக்கம்தான் அறிவுப்பூர்வமாக சொல்லக் கூடிய இயக்கம். வடபுலத்திலே பார்க்கும்பொழுது கேட்கிறார்கள். தமிழ்நாட்டில் இருக்கிறத் தெளிவு எங்களுக்கு வரவில்லையே. இடஒதுக்கீடா? நீங்கள்தான் முன்னாலே நிற் கின்றீர்கள். சுயமரியாதை இயக்கமா? நீங்கள்தான் முன்னாலே நிற்கின்றீர்கள். எனவே இங்கே வந்து உங்களுடைய சுயமரியாதை இயக்கத்தைத் தொடங் குங்கள் என்று கேட்கிறார்கள்.

காசியில் சமூகநீதித் திருவிழா


இதே சென்ற வாரத்திலே இதே நேரத்திலே இதே சனிக்கிழமை வாரணாசி என்றழைக்கப்படக் கூடிய காசியிலே என்னை அழைத்திருந்தார்கள். சமூகநீதித் திருவிழா அங்கு நடைபெற்றது.

ஒடுக்கப்பட்ட அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ்., அதிகாரி கள். அய்.ஆர்.எஸ். அதிகாரிகள் தேர்வு செய்யப் பட்டவர்கள். அந்த சமுதாயத்திலிருந்து வந்தவர்கள் நன்றியுணர்ச்சியோடு விழா எடுத்தார்கள்.

ஆகஸ்ட் 7ஆம்தேதி தான் சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் மண்டல்கமிசன் அறிக்கைப்படி ஆணை போட்டார்கள். பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 27 சதவிகித பணியிடங்களை மத்திய அரசில் நிரப்பப்படும் என்று உத்தரவு போட்டார்கள்.

பெரியாருக்குப் பிறகு மத்திய அரசு அசைந்தது


எண்ணிப்பாருங்கள். பெரியாருக்குப் பிறகு இந்த இயக்கம் இருக்குமா? என்று கேட்டார்கள். பெரியாருக்குப் பிறகுதான் மத்திய அரசே அசைந்தது. காரணம் நான் காலையிலே சொன்னதைப் போல பெரியார் என்பவர் தனிமனிதரல்லர். பெரியார் என்பவர் ஒரு தத்துவப் போராளி. அந்தத் தத்துவம் வளர்ந்து கொண்டே யிருக்கும்.

-----------தொடரும் .............."விடுதலை” 19-8-2011

1 comments:

rajasundararajan said...

'பூணுதல்' = மார்பில் அணிதல். அதனை ஒட்டிவந்த பெயர்வழக்குதான் அது. 'பூநூல்' என்று தவறுதலாகத் தட்டச்சியிருக்கிறீர்கள் என்று கொள்ளவும் கூடவில்லை. கட்டுரை நெடுக வருகிறது!