துக்ளக்கின் புரட்டுக்குப் பதிலடி! (7)
தீண்டாமை ஒழிப்பு, இளம் விதவைகள் மறுமணம், கலப்புத் திருமணம், மது ஒழிப்பு, ஹரிஜன ஆலயப் பிரவேசம், தேவதாசி முறை ஒழிப்பு, ஆலயங்களில் ஆடு, மாடு, கோழி முதலியவற்றைப் பலியிடும் கொடுமைக்கு எதிர்ப்பு என்று பல சமுதாயச் சீர்திருத்தங்களை அன்றைய காங்கிரஸ் மகாசபை இந்தியா முழுவதும் தீவிரமாகப் பிரச்சாரம் செய்தது. எனவே, ஈ.வெ.ரா. காங்கிரசில் இருந்து கொண்டே சீர்திருத்தப் பிரச்சாரம் செய்திருக்கலாம்
அன்றைய காங்கிரஸ் மகாசபையில் கடவுள் நம்பிக்கையற்ற சிலரும் உறுப்பினர்களாக இருந்தார்கள். நேருஜி ஒரு நாத்திகர் என்பதை எல்லோரும் அறிவார்கள். ஆகவே, கடவுள் மறுப்புக் கொள்கையைப் பின்பற்றிக் கொண்டே காங்கிரசில் தொடர்ந்து ஈ.வெ.ரா. பிரச்சாரம் புரிந்திருக்கலாம். எனினும், பகுத்தறிவுக்குப் பொருந்தக் கூடிய எந்தவித காரணமும் இல்லாமல் காங்கிர சிலிருந்து -ஈ.வெ.ரா. வெளியேறி விட்டார்
-என்று குற்றப் பத்திரிகை படிக்கிறார் திருவாளர் கே.சி. லட்சுமிநாராயணன் (துக்ளக் 20--7-2011) வைக்கம் போராட்டம், சேரன் மாதேவி குருகுலப் போராட்டத்தை எல்லாம் காங்கிரசில் இருந்து கொண்டே காங்கிரஸ் பார்ப்பனர்களின் எதிர்ப்பையும் முறியடித்துத்தான் தந்தை பெரியார் வெற்றி பெற்றார்.
தீண்டாமையை எதிர்த்து வைக்கத்தில் தந்தை பெரியார் போராடி வெற்றி பெற்றாரென்றால் தமிழ்நாடு காங்கிரசின் ஒத்துழைப்பால் அல்ல. இன்னும் சொல்லப் போனால் காந்தியாரின் விருப்பத்துக்கு எதிராகவே நடத்தப்பட்ட போராட்டம் அது என்பதுதான் உண்மை.
இதுபற்றி தந்தை பெரியார் அவர்கள் தெரிவித்துள்ள தகவல்கள் மிகவும் முக்கியமானவை. கன்னியாகுமரி மாவட்டத்தில் மார்த்தாண்டம், இரணியல் ஆகிய ஊர்களில் ஆற்றிய உரை - தீண்டாமையை ஒழித்தது யார்? (திராவிடர் கழக வெளியீடு - முதற்பதிப்பு 1961) என்ற தலைப்பில் வெளியாகியுள்ளது. அதில் குறிப்பிட்டு இருப்பதாவது:
திரு. ராஜகோபாலாச்சாரியார் எனக்குக் கடிதம் எழுதினார். நீ ஏன் நம்நாட்டை விட்டு இன்னொரு நாட்டிலே (கேரளா வைக்கத்தில்) ரகளை செய்கிறாய்? அது சரியல்ல, அதை விட்டுவிட்டு நீ இங்கு வந்து, விட்டுச் சென்ற வேலைகளைக் கவனி என்று எழுதினார். அப்போது இருந்த எஸ். சீனிவாச அய்யங்காரும் இப்படித்தான் என்னை வைக்கத்திற்கு வந்தே அழைத்தார்; வரச்சொன்னார். அதே மாதிரி பத்திரிகையிலேயும் எழுதினார்கள். ஆனால் இதற்குள் சத்தியாகிரக ஆசிரமத்தில் ஆயிரம் பேருக்கு மேல் சேர்ந்தார்கள். தினமும் ஊர் முழுவதும் சத்தியாக்கிரக பஜனையும் தொண்டர்கள் ஊர்வலமும் நடந்தது; உணர்ச்சி வலுத்துவிட்டது.
பஞ்சாபில் சுவாமி சிரத்தானந்தா என்பவர் ஒரு அப்பீல் போட்டார். அதன் பிரகாரம் பஞ்சாபிலேயிருந்து சீக்கியர்கள் 20, -30 ஆட்களையும், இரண்டாயிரம் ரூபாயும் கையிலெடுத் துக் கொண்டு நேரே வைக்கத்துக்கு வந்தார்கள். தாங்கள் சாப்பாட்டுச் செலவை ஏற்றுக் கொள்ளும் ஆதர வைத் தருவதற்காக. உடனே இங்கிருந்த பார்ப்பனர்கள் எல்லாம் சீக்கியர்கள் வந்து இந்து மதத்திற்கு எதிராகப் போர் தொடுக்கிறார்கள் என்றெல்லாம் காந்திக்கு எழுதினார்கள்.
உடனே அதன் பேரில் காந்தியார் சாயபு, கிறிஸ்துவன், சீக்கியன் ஆகிய பிறமதக்காரன் எவனும் இதில் கலந்து கொள்ளக்கூடாது என்று எழுதி விட்டார்கள்.
காந்தி எழுதினவுடனே இதில் கலந்திருந்த சீக்கியன், சாயபு, கிருஸ் துவன் எல்லாம் போய்விட்டார்கள். அதுபோலவே தீவிரமாக இதில் ஈடுபட்டு முன்னோடியாக உழைத்த காலஞ்சென்ற ஜோசஃப் ஜார்ஜுக்கும், ராஜ கோபாலாச்சாரியார் கடிதம் எழுதினார். இந்து மதச் சார்புள்ள இந்தக் காரியத்தில் நீ சேர்ந்திருப்பது தப்பு என்றார்.
அதை ஜோசஃப் ஜார்ஜ் அவர்கள் லட்சியம் பண்ணாமல் திருப்பி எழுதினார்: நான் என் சுய மரியா தையை விட்டுவிட்டு இருக்கமாட் டேன். வேண்டுமானால் என்னை விலக்கிவிடுங்கள் என்றார். தற்போதைய நாகர்கோவில் பயோனீர் டிரான்ஸ் போர்ட்டைச் சேர்ந்த சேவு என்பவரும், அண்மையில் காலஞ்சென்ற டாக்டம் எம்.இ.நாயுடு (திரு எம்.எம்.பெருமாள் நாயுடு அவர்கள் இந்தப் பேச்சுக்கு முதல்நாள் இரவு நாகர்கோவிலில் காலமானார். பிறகு தந்தை பெரியார் சென்று துக்கம் விசாரித்தார் என்பதை வாசகர்கட்கு நினைவூட்டுகிறோம்.) அவர்களும் என்னுடனேயே இருந்து தொடர்ந்து நடத்துவது என்று முடிவு செய்தார்கள். அவர்கள் இதை விட்டுப் போகமாட்டேன் என்று உறுதியாகத் தெரிவித்து விட்டார்கள். என்றாலும், காந்தி சத்தியாக்கிரகத்திற்கு விரோத மாக எழுதி பணத்தையும் ஆளையும் தடுத்துவிடுவாரோ என்று சிலர் பயப்பட்டார்கள்.
அந்த சமயம் சாமி சித்தானந்தா அவர்கள் வைக்கம் வந்து, தான் பணத் திற்கு வகை செய்வதாகச் சொன்னார். பிறகு காந்தி கட்டளைக்கு விரோத மாகவே சத்தியக்கிரகம் நடந்து வந்தது.
இதற்கிடையிலே நடந்த ஒரு நிகழ்ச்சியும் கவனிக்கத் தக்கது. எங்கள் போராட்டத்திற்கு பெரிய மரியாதை யையும், செல்வாக்கையும் தேடிக் கொடுத்துவிட்டது, இந்த காந்தி கட்டளை. இந்த சமயத்தில் என்னை மறுபடியும் பிடித்து 6 மாதக் கடினக் காவல் விதித்து சிறையில் போட்டு விட்டார்கள். பிறகு சத்தியாக்கிரகத்தை நிறுத்துவதற்காகவும், எங்களை அழிப்பதற்காகவும் என்று நான் ஜெயிலிலே இருக்கிற சமயத்தில் இந்த நம்பூதிரி பார்ப்பனர்களும் சில வைதீகர்களும் சேர்ந்து கொண்டு சத்ருசங்கார யாகம் என்ற ஒன்றை வெகு தடபுடலாக ஆயிரக்கணக்கான ரூபாய் செலவு செய்து நடத்தினார்கள். ஒரு நாள் நடுச்சாமத்தில் தொடர்ந்து வேட்டு சத்தம் கேட்டது. நான் ஜெயிலில் விழித்துக் கொண்டிருந்தேன். ரோந்து வந்தவனைப் பார்த்துக் கேட்டேன், என்ன சேதி இப்படி வெடிச் சத்தம் கேட்கிறது? என்று கேட்டேன். இந்தப் பக்கம் ஏதாவது பெரிய திருவிழா நடக்கிறதா? என்று கேட்டேன். அதற்கு அவன் சொன் னான்: மகாராஜாவுக்கு உடம்பு சவுக் கியம் இல்லாமல் இருந்து மகாராஜா நேற்று ராத்திரி திருநாடு எழுந்து விட்டார் என்றான்.
அதாவது ராஜா செத்துப் போனார் என்று சொன்னான். அவ்வளவுதான். மகாராஜா செத்தார் என்றவுடன் எங்களுக்கு சிறைக்குள்ளாகவே ரொம்ப பெருமை வந்துவிட்டது. அவர்கள் பண்ணிய யாகம் அங்கேயே திருப்பி மகாராஜாவைக் கொன்று விட்டது என்றும் அந்த யாகம் சத்தியாக் கிரக்காரர்களை ஒன்றும் செய்ய முடியவில்லை என்றும் மக்களிடையே இது ஒரு தனி மதிப்பை ஏற்படுத்தி விட்டது. அதன் பிறகு அரசாங்கம் எங்களையெல்லாம் ராஜாவின் கருமாதியை முன்னிட்டு விடுதலை செய்தனர். எதிரிகள் குரலும் கொஞ்சம் கொஞ்சமாக இறங்கி வர ஆரம்பித்தது.
ராணியின் ராஜி முயற்சியும், பார்ப்பனர் சூழ்ச்சியும்
ராணியும் கூப்பிட்டு எங்களோடு ராஜி பண்ணி ஒரு உடன்பாட்டுக்கு வர விருப்பம் தெரிவித்தவுடன் அப்போது சமஸ்தானத்தில் திவானாக இருந்த ஒரு பார்ப்பான் என்னிடத்தில் நேரே ராணி பேசக்கூடாது என்று கருதி திரு. ராசகோபாலாச்சாரிக்கு கடிதம் எழுதினான். ராச கோபாலாச்சாரியும் எங்கே என்னிடத்தில் ராணி பேசி உடன்பாட்டிற்கு வந்தால் எனக்கு மரியாதையும் புகழும் வந்து விடுமே! அந்த மாதிரி வரக்கூடாது என்று கருதி, காந்தியாருக்கே அந்த வாய்ப்பையளித்து காந்தியின் மூலமே காரியம் நடந்ததாக உலகுக்குக் காட்ட வேண்டும் என்று தந்திரம் செய்து காந்திக்கு கடிதம் எழுதினார். எப்படியாவது காரியம் வெற்றியானால் போதும்; நமக்குப் பேரும் புகழும் வருவது முக்கியமல்ல என்ற கருத்தில் நானும் ஒப்புக் கொண்டேன்.
காந்தியும் புறப்பட்டு வந்தார். ராணியோடு காந்தி பேசினார். (இப்படி இந்த சத்தியாக்கிரகம் நல்லபடி வேரூன்றி வெற்றி நிலைக்கு வந்தவுடன் பார்ப்பனர்கள் காந்தியை இதில் புகுத்தினார்கள்.)
ராணி, காந்தியோடு பேசும்போது தெரிவித்தார்கள்: நாங்கள், ரோடுகளைத் திறந்து விட்டு விடுகிறோம். ஆனால் அதை விட்டவுடன் நாயக்கர் கோயிலுக்குள் போக உரிமை வேண்டும் என்று கேட்டு ரகளை செய்தால் என்ன செய்வது? அதுதான் தயங்குகிறோம் என்றார்கள். உடனே காந்தி, டீபியில் தங்கி இருந்த என்னிடத்தில் வந்து ராணி சொன்னதைச் சொல்லி என்ன சொல்லுகிறாய்? இதை ஒப்புக் கொண்டுவிடுவது நல்லது என்றார். நான் சொன்னேன்: ரோடு திறந்து விடுவது சரி; ஆனால் அதை வைத்துக் கொண்டு கோயிலைத் திறந்துவிடும்படி கேட்க மாட்டோம் என்று எப்படி நாம் உறுதியளிப்பது? கோயில் பிரவேசம் என்பது காங்கிரசின் லட்சியமாக இல்லாவிட்டாலும், எனது லட்சியம் அதுதானே? (கோயில் நுழைவு) அதை எப்படி விட்டுக் கொடுக்க முடியும்? வேண்டுமானால் ராணிக்கு ஒரு வார்த்தை சொல்லுங்கள். இப் போதைக்கு இம்மாதிரி கிளர்ச்சி எதுவுமிருக்காது. கொஞ்சநாள் அது பற்றி மக்களுக்கு விளங்கும்படி பிரச் சாரம் செய்து கலவரத்திற்கு இடமிருக் காது என்று கண்டால்தான் கிளர்ச்சி ஆரம்பிக்கப்படலாம் என்று சொல் லுங்கள் என்று சொன்னேன்.
போராட்ட வெற்றி
அதை காந்தி, ராணியிடம் சொன்னவுடன் ராணியார், ரோடில் யார் வேண்டுமானாலும் நடந்து செல்லலாம் என்று சொல்லி பொது ரோடாக ஆக்கினார்கள் என்று தந்தை பெரியார் பேசியுள்ளார்.
தீண்டாமை ஒழிப்பில் காங்கிரசின் லட்சணம், காந்தியின் பங்கு இதுதான். இவற்றையெல்லாம் மீறிதான் தந்தை பெரியார் வெற்றி பெற்றார். அவரை வைக்கம் வீரர் என்று திரு.வி.க. எழுதி யது காங்கிரஸ் ஏடான நவசக்தியில் தான் என்பது நினைவிருக்கட்டும்.
சேரன்மாதேவியில் நடத்தப்பட்ட குருகுலத்திலும் அதன் பொறுப்பாளரான வ.வே.சு. அய்யர் பார்ப்பன மாணவர்களுக்கு தனிப் பந்தி; பார்ப் பனர் அல்லாதாருக்கு வேறு பந்தி; உணவிலும் வேறுபாடு என்று நடத்தியதை எதிர்த்துத் தந்தை பெரியார் போராடி ஒழித்தார்.
இது தொடர்பாக 29.-4.-1925 அன்று திருச்சிராப் பள்ளியில் டாக்டர் வரதராசலு நாயுடு அவர்கள் தலைமையில் கூடிய தமிழ்நாடு காங்கிரஸ் கூட்டத் தில் எம்.கே.ஆச்சார்யா என்ற பார்ப் பனர் என்ன சொன்னார் தெரியுமா?
ஒரு பிராமணச் சிறுவன், ஒரு பிராமணரல்லாத சிறுவனுடன் உட்கார்ந்து சாப்பிட்டதாகக் கேள்வியுற்றால் நான் இதற்காகப் பத்து நாட்கள் பட்டினிக் கிடப்பேன் என்று சொன்னாரென்றால் பார்ப்பனர்கள் கூறும் தேசியமும் சுய ராஜ்யம் கோரும் உணர்வும் எந்த டிகிரியில் இருந்தன என்பதை அறியலாம்.
வைக்கம் போராட்டமும் சரி, சேரன் மாதேவி குருகுலப் போராட்டமும் சரி- அவற்றில் தந்தை பெரியார் பெற்ற வெற்றி என்பது சாதாரண முயற்சியல்ல.
பார்ப்பனர்களையும், அவர்களுக்கு உறுதுணையாக இருந்த மக்களின் செல் வாக்கும் பெற்றிருந்த காந்தியாரையும் எதிர்த்துத் தாண்டிதான் வெற்றி பெற்றார் என்றால், அந்த தன்மையின் பரிணாமத்தைப் புரிந்து கொள்ளலாமே!
இந்து ஏட்டிலிருந்து (12-_3-_1925) இதற்கான ஆதாரத்தை எடுத்துக் காட்ட முடியும்.
இதோ இந்து ஏடு பேசுகிறது:
Walls Round Vaikom Road
(From our Special Correspondent)
Quilon, March 12, 1925
“Mr.V.V.S.Iyer of the Tamil Gurukulam at Shermadevi was at Vaikom for the past two days and had a long interview with Mahatmaji on the question of interdining the Vidyalaya. It is understood that Mahatmaji did not wish that there should be any compulsion in the matter, and if any peopil hadscruples such scruples had to be respected, Mahatmaji was also against the levelling down of the caste system,because it was a necessary implication of the Hinduism.
“Devasam Commissioner Mr. Raja Raja Varma also interviewed Mahatmaji yesterday with orthodox pundits and discussed the situation at Vaikom. It appears that the Devasom authorities contemplating raising another wall to cover the temple roads on the four sides thus effectively preventing not only untouchables but also Christians and Mohammodans from entering the prakarams.”
கிலான் மார்ச் 12 (1925)
வைக்கத்தில் தங்கியிருந்த காந்தியாரை திரு.வ.வே.சு. அய்யர் சந்தித்து சேரன்மாதேவி குருகுலத்தில் சமபந்தி போஜனம் நடைபெற்றாக வேண்டும் என்று ஒரு சாரார் வற்புறுத்தி வருவதைப் பற்றி கருத்துக் கேட்டார். அதற்குக் காந்தியார், சமபந்தி போஜனம் என்பது வற்புறுத்தலின் அடிப்படையில் நடக்கக்கூடாது. ஒரு சாரார் மற்றவர் களோடு கலந்து அமர்ந்து சமபந்தி போஜனம் செய்ய விரும்பவில்லை என்றால் அவர்களின் அந்த உணர்வு மதிக்கப்பட்டாக வேண்டும் என்றார். சாதி என்பது ஒழிக்கப்பட்டு சரிசமமாக ஆக்கப்பட வேண்டும் என்பதை மகாத்மாஜி விரும்பவில்லை. ஜாதி அமைப்பு என்பது இந்திய சமூகத்தின் முக்கிய அம்சம். இதுதான் காந்தியாரின் ஜாதி வர்ணாசிரமப் பார்வை!
ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள்
வைக்கம் தேவஸ்தான கமிஷனர் திரு ராஜவர்மா சில வைதீகப் பண்டிதர் களுடன் சென்று மகாத்மாவைச் சந்தித்து வைக்கத்தில் நிலவி வரும் சூழ்நிலையை விவரித்தார்
விவாதத்திற்குப் பின்பு தேவஸ்தான அதிபதிகள் தீண்டத்தகாதவர்கள் மட்டுமல்ல, கிருஸ்தவர்கள், முஸ்லிம் களும் கூட கோயில் பிரகார வீதிகளில் நுழையா வண்ணம் கோயிலைச் சுற்றி நான்கு புறங்களிலும் மற்றொரு சுவரை எழுப்புவது பற்றி ஆலோசித்து வருவதாகத் தெரிகிறது. என்று இந்து ஏடு கூறுகிறது.
வைக்கத்தில் காந்தியார் சாதித்தது ஒட்டக் கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள் கதைதான்!
சேரன்மாதேவி பிரச்சினையிலும் காந்தியார் பார்ப்பனர்கள் பக்கமே - ஜாதியின் பக்கமே நின்றார் என்பதையும் இந்து செய்தி தெரிவிக்கிறதே! இவர் களை எல்லாம் எதிர்கொண்டே பெரி யார் வென்றார் என்றால் அத்தகைமையை - திடத்தை -ஆசாபாசமின்றி எடை போட்டுப் பார்க்கட்டும்-அறிவாளிகள் எனப்படுவோர்.
தந்தை பெரியாரை எப்படி நடத்தினார்கள்?
தாழ்த்தப்பட்டவர்களைப் பார்ப்பனர்கள் நடத்தியது ஒரு புறம் இருக்கட்டும். தமிழ்நாட்டின் காங்கிரஸ் தலைவராகவும் செயலாளராகவும் பணியாற்றிய பெரும் புகழ் ஓச்சிக் கொண்டிருந்த பெரியாரையே எப்படி நடத்தினார்கள் இந்தப்பார்ப்பனர்கள்? இதோ பெரியார் எழுத்தாலேயே அதனைத் தெரிந்து கொள்ளலாமே!
காங்கிரஸ் அங்கத்தினரில் ஜாதி வித்தியாசம் பாராட்டப்பட்டதில்லை என்று ஒரு நண்பர் சொன்னார். என்னுடைய சொந்த அனுபோகத்தை இங்கு எடுத்துச் சொல்வதற்கு மன்னிக்க வேண்டுகிறேன். அதாவது நானும் உயர்திரு எஸ். சீனுவாச அய்யங்காரும் காங்கிரஸ் பிரச்சார விஷயமாய்த் திண்டுக்கல்லுக்குப் போனபோது ஒரு பார்ப்பனர் வீட்டுக்குப் போயிருந்தோம். அந்தக் காலத்தில் நான் வேறாக வைத்தே சாப்பாடு போடப்பட்டேன். ஆனாலும் பகலில் சாப்பிட்ட இவை அப்படியே இருக்க அதன் பக்கத்தில் தான் இரவும் இலை போடப்பட்டுச் சாப்பிட்டேன்.
மற்றொரு சமயம் நானும், தஞ்சை திருவேங்கடசாமிப் பிள்ளையும் காங் கிரஸ் பிரச்சாரமாகப் பெரியகுளத் திற்குப் போனபோதும் ஒரு காங்கிரஸ் பார்ப்பனர் வீட்டில் இறக்கப் பட் டோம். அப்போது காலைப் பலகாரம் சாப்பிட்ட எச்சில் இலைக்குப் பக்கத் தில் பகல் சாப்பாடும், பகல் சாப்பாடு, காலை பலகாரம் சாப்பிட்ட எச்சில் இலைக்குப்பக்கத்தில் இராத்திரி சாப்பாட்டுக்கும் இலை போடப்பட்டு எறும்புகளும், பூச்சிகளும், ஈக்களும் மொய்த்துக் கொண்டிருக்கவே சாப் பிட்டு வந்தோம். ("குடிஅரசு" 10_1-1948) இதுதான் காங்கிரஸ் பார்ப்பனர் களின் சீர்திருத்த உணர்வோ! எந்தத் தைரியத்தில் எழுதுகிறார் ஸ்ரீமான் லட்சுமிநாராயண அய்யர்?
குழந்தைகள் திருமணத் தடுப்பிலும் கூட அன்றைய காங்கிரஸ் பார்ப்பனர்கள் எவ்வளவு கேவலமாக நடந்து கொண்டனர். 8 வயதுப்பெண்ணை விவாகம் செய்து கொடுப்பவன் சுவர்க்க வாசத்தையும், 9 வயதுப் பெண்ணை விவாகம் செய்து கொடுப்பவன் வைகுண்டத்தையும், 10 வயதுப் பெண்ணை விவாகம் செய்து கொடுப் பவன் பிரம்ம லோகத்தையும் அடை கிறான். அதற்கு மேற்பட்டு பெண்ணை விவாகம் செய்து கொடுப்பவன் நகரத்தையே அடைகின்றான் என்று பராசர் சொல்லியிருக்கிறார் என்று கூச்சல் போட்டார்கள்.
ஆஜ்மீர் - மெர்வாராத் தொகுதியில் இருந்து டில்லி சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியான ராவ் சாகிப் ஹரி விலாஸ் சாரதா என் னும் அறிஞர் 1-2-1927 இல் இந்துக் குடும்பங்களைச் சார்ந்த குழந்தைகளின் திருமண வயதுச் சீர்திருத்த மசோ தாவை முன்மொழிந்தார். ஏழரை மாதங்களுக்குப் பிறகு (5-9-1927) விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட் டது. பெண்களின் திருமண வயது 13 என்று ஆக்கப்பட்டது. காங்கிரஸ்கார ரான எம்.கே. ஆச்சாரியார் என்ற பார்ப் பனர் என்ன சொன்னார் தெரியுமா?
பால்மணம் இல்லாவிட்டால் உண்மையான கற்பு என்பது சாத்தியமில்லை. பெண்களின் வாழ்க்கை நரக மாகி விடும். குடும்ப வாழ்க்கை துக்கமய மாக ஆகி சதா ஆபத்துக்குள்ளாகி இருக்கும் . புருஷர்களுக்குச் சிறைத் தண் டனை அளித்துவிடுவதால் பெண்கள் நடத்தையும் அதிகக் கேவலமாக ஆகிவிடும். எனவே பால்மணம் இருந்தாலொழிய வாழ்க்கையில் உண்மையான ஒழுக்கம் ஏற்படுவது அசாத்தியம்! என்று அவிழ்த்துப் போட்டு ஆடாத குறையாகச் சத்தம் போட்டார். இன்னொரு தேசியத் திலகம் இருக்கவே இருக்கிறாரே - வாயாடி சத்தியமூர்த்தி அய்யர். அந்தப் பெருமான் என்ன முழங்கினார்?
அரசாங்கம் இந்துக்களுடைய விவாகத்தில் தலையிட்டால் இந்துச் சமூகமே கெட்டு, இந்து மதமே பாழாகிவிடும். பெண்களுக்கு 10, 12 வயதுக்கு முன்னமேயே திருமணம் செய்து விட வேண்டும், இல்லையேல் பாவம் வந்துசூழும் என்று பராசரர் எழுதியிருக்கிறார். நாங்கள் பாவத்திற்குப் பயப்படுவோமா? அல்லது உங்கள் சட்டத்திற்குப் பயப்படுவோமா? என்று சம்மத வயதுக் கமிட்டியின் முன்பு வாதிட்டார்.
இந்தச் சட்டம் வருவதற்கு முன்பு இருந்த நிலை என்ன? ராமகிருஷ்ண பரமஹம்சரே 5 வயதுப் பெண்ணைத் தானே திருமணம் செய்து கொண்டார். காந்தியார் திருமணம் செய்து கொண்ட போது அவருக்கு வயது 13 கஸ்தூரி பாவுக்கு வயது ஏழு.
தங்களுக்குப் பயன்படாத நேரத்தில் வெள்ளைக்காரனை மிலேச்சர்கள் என்பார்கள் பார்ப்பனர்கள். ஆனால் அவன்தான் குழந்தைகள் திருமணத்தையும், கணவன் இறந்தால் அவனோடு அவன் மனைவியையும் தீயில் தள்ளி எரிக்கும் உடன்கட்டை என்னும் சதியையும் ஒழித்துக் கட்டினான் என்பதை மறுக்க முடியுமா?
காங்கிரஸ்காரர்களின் சீர்திருத்த உணர்வுகள் இந்தக் கேடு கெட்ட நிலையில் இருக்க, காங்கிரசில் இருந்து கொண்டே பெரியார் சீர்திருத்தங்களைச் செய்து கொண்டிருக்கலாம் என்றும் பகுத்தறிவிற்குப் பொருந்தக் கூடிய எவ்விதக் காரணமும் இல்லாமல் காங்கிரசிலிருந்து ஈ.வெ.ரா. வெளியேறி விட்டார் என்றும் துக்ளக்கில் திருவாளர் கே.சி. லட்சுமி நாராயண அய்யர்வாள் எழுதியிருப்பது எவ்வளவுப் பெரிய பிதற்றல்! - பொய்யிலே திளைத்த புழு போன்றது என்பதை இவற்றின் மூலம் அறியலாமே!
----------------------------(இன்னும் உண்டு)...20-8-2011 "விடுதலை” ஞாயிறு மலரில் மானமிகு.கவிஞர் கலி. பூங்குன்றன் அவர்கள் எழுதிய கட்டுரை
0 comments:
Post a Comment