Search This Blog
14.8.10
பெயருக்குப் பின்னால் ஜாதிப் பட்டம் போடலாமா? பெரியார் விளக்கம்
கடந்த சில நாட்களுக்கு முன் பெரியார் திரைப்படத்தை தெலுங்கில் மொழி பெயர்த்து ஆந்திராவில் வெளியிட்டார்கள். அப்படி வெளியிட்ட படத்தின் தலைப்பு "பெரியார் ராமசாமி நாயக்கரு" என்பதாகும்.
"பெரியார் ராமசாமி நாயக்கரு" என்று தலைப்பு வைத்து விட்டதால் பெரியாரின் அடிப்படைக் கொள்கையை அதிலும் பெரியாரின் ஜாதி ஒழிப்புக் கொள்கையை வீரமணி அவர்கள் குழி தோண்டி புதைத்து விட்டதாக ஒரு சிலர் குய்யோ முறையோ என்று கூக்கிரலிட்டு வருகிறனர். கூக்கிரலிடும் ஒவ்வொருவரும் அவரவர்களுக்கு தோன்றிய விதத்தில் காரணங்களை கற்பித்து விமர்சித்து வருகின்றனர். நாமும் அவ்விமர்சனங்களை ஊன்றிப் படித்து வருகிறோம். எனது நெருங்கிய நண்பர்கள்கூட அலைபேசியில் அழைத்து இப்படி பெயரிடுவது சரியா? என்று விளக்கம் கேட்டு வருகின்றனர். அவர்களின் அய்யம் போக்கி தெளிவு ஏற்படுத்த பெரியாரியல் அடிப்படையில் இப்பிரச்சினையை ஆய்வு செய்வோம்.
ஆரம்ப காலங்களில் சென்னை மாநிலத்தில் நாயக்கர் என்றால் ஈ.வெ.ராமசாமி நாயக்கர் அவர்களை குறிக்கும் சொல்லாக நாயக்கர் என்ற சொல் இருந்தது. குடி அரசு இதழ்களி கூட ஆசிரியர் ஈ.வெ.ராமசாமி நாயக்கர் என்றே பதிவு செய்யப்பட்டது 1927 குடி அரசு இதழிலிருந்து நாயக்கர் என்ற சொல் தூக்கியெறியப்பட்டு ஈ.வெ.ராமசாமி என்று பதிவு செய்யப்பட்டது. அதன் பின் 1938 இல் பெண்கள் மாநாட்டில் பெரியார் என்ற பட்டம் வழங்கப்பட்டது. (இந்தப் பட்டம் வழங்கப் படுவதற்கு முன்பே பெரியார் ராமசாமி என்று பலராலும் அழைக்கப்பட்டு வந்தார்) இது குறித்து ஆனைமுத்து அவர்கள் தரும் விளக்கம் இதோ:
“ஈ.வெ.ராமசாமி அவர்கள் 1938 முதல் பெரியார் என அன்புடன் அழைக்கப்பட்டார் என்பதாக இது காறும் வெளிவந்துள்ள வரலாற்றுக் குறிப்புகள் கூறுகின்றன. ஆயினும் இது குறித்து உண்மை வேறாகும். தமிழகத்தில். ஒருவரின் சொந்தப் பெயரின் பின்னால் அவரது சாதிப்பெயரைக் குறிக்கும் பட்டச் சொல் (cast title) இணைக்கபட்டே அழைக்கப்படுவது ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக உள்ள பழக்கமாகும். இது அப்பெயரை உடையவருக்கு உரிமையாகவும், பிறருக்கு நீங்காக் கடமையாகவும் சாதி வழக்கச் சம்பிரதாயங்களின் படி பெருமை சேர்ப்பதாகவும் இன்று கருதப்பட்டு வருகிறது. இச்சம்பிராதாயத்தை உடைத்து வழிகாட்ட விரும்பிய ஈ.வெ.ரா. 18.12.1927 “குடிஅரசு” மலர் வரையில் ஆசிரியர் ஈ.வெ.ராமசாமி நாயக்கர் எனக் குறிப்பிட்டு வந்ததை மாற்றி 25-12-1927 “குடிஅரசு” மலர் முதல் ஆசிரியர் ஈ.வெ.ராமசாமி என்று மட்டும் குறிப்பிட்டு ‘நாயக்கர்’ என்பதை நறுக்கிவிட்டார். இவ்வாறாக ‘நாயக்கர்’ என்ற பட்டச் சொல்லை அவருடைய பெயருக்குப் பின்னால் இருந்து நீக்கிவிட்ட நிலையில் ‘நாயக்கர்’ என்ற பட்டச் சொல் இல்லாமல் அவரது பெயரைக் குறிப்பிடுவதானது. அவருக்கு உரிய பெருமையைக் குறைத்து விடுமோ என நம் இனப் பெருமக்கள் அஞ்சினர். அங்ஙனம் அஞ்சிய பலருள் ‘நாயக்கர்’ என்ற சொல் இருந்த இடத்தில் ‘பெரியார்’ என்ற சொல்லை முதல் முதலாகச் சேர்த்து “ஈ.வெ.ராமசாமிப் பெரியார்” என அழைத்தவர் நாகர்கோவில் வழக்கறிஞர் திரு.பி.சிதம்பரம்பிள்ளையே ஆவார். மற்றும் இராமநாதபுரம் மாவட்டம் இரண்டாவது சுயமரியாதை மாநாட்டில் நம் அறிஞர்கள் பலரும் ‘ஈ.வெ.ரா. பெரியார்’ என்றே குறிக்கலாயினர். 20.21.7.1929இல் நடைபெற்ற திருநெல்வேலி ஜில்லா இரண்டாவது சுயமரியாதை மாநாட்டில் திருவாளர்கள் எஸ். குமாரசாமி ரெட்டியார், நீதிபதி எம்.கோவிந்தன். டீ.கே. சிதம்பரநாத முதலியார் ஆகியோரும் பெரியார் எனக் குறிக்கலாயினர். 1930ல் திருச்சி மருத்துவகுல சங்கத்தார் அளித்த உபசாரத்தில் பெரியார் ஈ.வெ.ராமசாமி என்றும் (சென்னை, திராவிடன் 5.9.1930) ; 22.10.1932ல் கொழும்பு நகரில் ஆதிதிராவிட சங்கத்தார் அளித்த வரவேற்பில் பெரியார் இராமசாமி (“குடிஅரசு” 6.11.1932) என்றும் நெஞ்சாரப் போற்றி பெரியார் என அழைக்கலாயினர். இவ்வாறாக 1928 முதல் பெரியார் என அன்புடன் அழைக்ப்பட்ட அன்னார், 1938 முதல் பெருவழக்காக அவ்வாறு அழைக்கப்பட்டார். 12,13 -11 -1938 ல் தமிழ்நாட்டுப் பெண்கள் மாநாடு சென்னை ஒற்றை வாடைத் தியேட்டரில் நடைபெற்றது. தமிழ்நாட்டுப் பெண்கள் விடுதலைக்குப் பெரியார் ஆற்றியுள்ள தொண்டுக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தை முதல் தீர்மானமாக அம்மாநாட்டில் நிறைவேற்றினர். ஆத்தீர்மானமாவது. “இந்தியாவில் இதுவரையும் தோன்றின சீர்திருத்த தலைவர்கள் செய்யவியலாமற்போன வேலைகளை இன்று நமது தலைவர் ஈ.வெ.ராமசாமி அவர்கள் செய்து வருவதாலும்., தென்னாட்டில் அவருக்கு மேலாகவும் சமமாகவும் நினைப்பதற்கு வேறொருவர் அல்லாமையாலும் அவர் பெயரைச் சொல்லிழும், எழுத்திலும் வழங்கும் போதெல்லாம் பெரியார் என்ற சிறப்புப் பெயரையே வழங்குதல் வேண்டுமென இம்மாநாடு எல்லோரையும் கேட்டுக் கொள்கிறது. (விடுதலை 16.11.1938)
----------------(வே.ஆனைமுத்து, பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள் -1
பக்கம் XXXVIII – XXLX)
ஈ.வெ.ராமசாமி நாயக்கர் இப்படித்தான் பெரியார் ஆனார். சமீபத்தில் தெலுங்கில் வெளியிட்ட பெரியார் திரைப்படத்திற்கும் இந்த அடிப்படையில் அதாவது ஈ.வெ.ராமசாமி நாயக்கர் என்பவர் செய்த தொண்டால் உழைப்பால் பெரியார் ஆனார் என்பதை மக்களுக்கு உணர்த்த "பெரியார் ராமசாமி நாயக்கரு" என்று பெயரிட்டிருக்கலாம். அந்தப்படத்திலும் (பெரியார்) தமிழ் திரைப்படத்திலும் நாயக்கர் என்று அழைக்கும் காட்சி வந்துள்ளதே.
ஜாதி ஒழிய வேண்டும் என்று கூறும் பெரியார் ஜாதிவாரி இடஒதுக்கீடு கேட்கலாமா? ஜாதி ஒழிய வேண்டும் என்ற பெரியார் ஜாதி மாநாடுகளில் கலந்து கொள்ளலாமா? கடவுள் இல்லை என்று சொல்லும் பெரியார் மட்டும் ராமசாமி என்று பெயர் வைத்துக் கொள்ளலாமா? கடவுள் இல்லை என்று சொல்லும் பெரியார் அனைத்துச் ஜாதியினரும் அர்ச்சகர் உரிமை கோரலாமா?
இது போன்ற அபத்தமான விமர்சனங்கள் போல் தான் பெரியார் தெலுங்குப் பட தலைப்பு தொடர்பான விமர்சனமும். வீரமணி அவர்களை எப்படியாவது கொச்சைப் படுத்தி விமர்சிக்க வேண்டும் என்ற நோக்கம் தான் அவர்களுக்கு முக்கியமாக படுகிறதே தவிர இதில் உள்ள உண்மைத் தன்மையை உணர மறுக்கும் இவர்களுக்கு பெயருக்குப் பின்னால் ஜாதிப் பட்டத்தை மீண்டும் போடச் சொல்லலாமா? என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன் என்று பெரியார் பேசியது இவர்களுக்கு தெரியுமா?
இதோ பெரியார் பேசுகிறார்:
”தோழர்களே! மக்கள் எல்லாரும் தத்தமது ஜாதிப் பட்டங்களை, அதாவது முதலியார், செட்டியார், கவுண்டர், படையாச்சி, நாயுடு போன்ற பேருக்குப் பின் சேர்த்துக் கொள்ளும் சொல்லை எல்லாம் போட்டுக் கொள்ளாமல் விட்டுவிட வேண்டும் என்று சொல்லி வந்திருக்கின்றோம். அதன்படியே நாங்களும் மற்றும் பல்லாயிரக்கணக்கான மக்களையும் அப்படியே வாலைத் (ஜாதிப் பட்டத்தை) துறக்கும்படியே செய்து இருக்கின்றோம். அப்படிக் கூறிச் செயலிலும் காட்டிய நான் இன்று மக்களை மீண்டும் ஜாதிப் பட்டம் போட்டுக் கொள்ளச் சொல்லலாமா என்று எண்ணிக் கொண்டு இருக்கின்றேன். இப்படி நான் சொல்வதால் இவன் தன் கொள்கையில் இருந்து பல்டி (தலைகீழாய்க் குதித்தல்) அடித்துவிட்டான் என்று என்னைப் பலர் ஏளனம் செய்யலாம். அது பற்றி எனக்குக் கவலை இல்லை. நான் என் சுயநலத்திற்காக எந்தவித நலத்தினையும் எனக்கு எதிர்பார்த்து பல்டி அடிக்கவில்லை. பொது நலத்துக்காகப் பல்டி அடிக்கின்றேன்.
தோழர்களே! இதை நீங்கள் நன்கு விளங்கிக் கொள்ள வேண்டும். நாம் ஜாதி ஒழிய வேண்டும், ஜாதியைக் காட்டக் கூடிய ஜாதிப் பட்டத்தைவிட வேண்டும் என்று கூறி விளங்கிக் கொண்டு வந்தபோது, பார்ப்பனர்கள் ஜாதிப் பட்டத்தை விடாப் பிடியாகப் போட்டு கொண்டு வந்தனர்.
கல்வி, உத்தியோகங்களில் பார்ப்பனர் தம் ஆதிக்கமே அதிகமாக இருக்கின்றது. 100 க்கு 3 பேராக உள்ள பார்ப்பனர் 100 க்கு 70, 80 உத்தியோகங்களில் இருக்கின்றார்கள். கல்லூரிகளிலும், தொழில் படிப்பிலும் பார்ப்பன மாணவர்களே மிகுதியாக இருக்கின்றார்கள். 100 க்கு 97 பேராக உள்ள நமக்குக் கல்வியிலும், உத்தியோகத்திலும் உரிய பங்குகள் இல்லையே என்று புள்ளி விவரங்களோடு எடுத்துக்காட்டி, கூப்பாடுகள் தொடர்ந்து போட்டுக் கொண்டு வந்தால் நம்மவர்களுக்கும் (திராவிடருக்கும்) உணர்ச்சி வந்து எதை எடுத்தாலும் பார்ப்பனர் அல்லாதார் உணர்ச்சியே தலை எடுக்க ஆரம்பித்துவிட்டது.
இதன் காரணமாக நம்மவர்களும் கல்வி உத்தியோகங்களில் பார்ப்பனருடன் போட்டி போடுவது மட்டும் அல்லாமல், 100 க்கு 97 உள்ள எங்களுக்கு எங்கள் எண்ணிக்கைக்குத் தக்கவாறு உத்தியோகத்திலும் பங்கு வேண்டுமென்று கூப்பாடு போட்டு, அதை ஓரளவு செயல்படும்படியும் செய்து விட்டனர். இதன் காரணமாக 100 க்கு 3 பேராக பார்ப்பான் 100 க்கு 70, 80 பதவிகள் அனுபவித்து வந்த நிலை மளமளவென்று குறைலாயிற்று.
இன்று கல்லூரிகளில் சேரச் சென்றாலோ, உத்தியோகத்திற்கு விண்ணப்பித்தாலோ, இண்டர்வியூவில் (நேர்காணல்) ஜாதியை அறிந்து கொண்டு சேர்த்துக் கொள்கின்றனர்.
அதன் காரணமாகப் பார்ப்பனர்கள் தந்திரம் செய்து தங்கள் பேருக்குப் பின்னால் ஜாதிப் பட்டத்தைப் போடுவதை விட்டு விட்டனர்.
அத்தோடு மட்டும் அல்லாமல் ஜாதி இன்னது என்று இண்டர்வியூலோ, விண்ணப்பத்திலோ நேர்முகம் மட்டும் அல்லாமல் மறைமுகமாகக் கூட கேட்கக் கூடாது என்று அரசாங்கம் மூலமே கூறச் செய்துவிட்டனர்.
இந்த நிலையில், ஜாதி கண்டுகொள்ள முடியாமல் போகின்றதனால், பார்ப்பனர்களே மீண்டும் உத்தியோகங்களிலும் கல்லூரிகளிலும் நிரம்ப இது ஏதுவாகின்றது. எனவே தான் நாம் இனிக் கல்வி, உத்தியோகங்களைப் பொறுத்தாவது விண்ணப்பிக்கும் போது ஜாதிப் பட்டத்தைப் போட்டுக் கொண்டால் அதன் மூலம் தேர்வு செய்பவர்களுக்குப் பார்ப்பனர், பார்ப்பனர் அல்லாதார் (திராவிடர்) என்று தெரிந்து கொள்ள முடியும். இதன்படிக் கூறலாமா என்று எண்ணிக் கொண்டிருக்கின்றேன்.
சென்னை மாநிலத்தில் நல் வாய்ப்பாக நமக்குக் கிடைத்து இருக்கும் முதல் அமைச்சர் காமராசர் ஆட்சியில், நாம் கல்வி உத்தியோகங்களை ஓரளவு அடைவதற்கு வசதி ஏற்பட்டு இருக்கின்றது. இதனைக் கண்டு பொறாது பார்ப்பனர்கள் - "இங்கு ஜாதி பார்த்து உத்தியோகம் கொடுப்பதால் நீதி கெட்டுப் போச்சு, நிருவாகத் திறமை கெட்டுப் போச்சு. ஜாதி பார்த்து கல்லூரியில் சேர்ப்பதால் கல்வியில் தரமே கெட்டுப் போச்சு" என்று கூப்பாடு போட்டு இந்த ஆட்சிக்கு மத்திய ஆட்சியிடம் களங்கம் கற்பிக்கும் வேலை நடைபெறுகின்றது.
இதன் மூலம் நம் மக்களுக்குப் பெரிய கேடு வர இருக்கின்றது. அதனில் இருந்து நாம் மீளவேண்டும். இராசகோபால ஆச்சாரியாரின் சுதந்தரா கட்சியின் உள் எண்ணம் பற்றியும் எதிர்க்கட்சிகளின் பித்தலாட்ட அரசியல் பேச்சுகள் பற்றியும் நாம் விழிப்பாக இருக்க வேண்டும்.”
---------------- 28-05-1960 கருர் நகரில் பெரியார் ஈ.வெ.ரா. சொற்பொழிவு. ”விடுதலை”, 29-05-1960
பெயருக்குப் பின்னால் ஜாதியைப் போடுவது குறித்து பெரியார் மிகத் தெளிவாகவே விளக்கியுள்ளார்.
ஜாதி ஒழிப்பது என்பது கொள்கை (Principles ).ஜாதி ஒழிய குடுமி வைக்கக் கூடாது, பூணூல் போட்டுக் கொள்ளக் கூடாது என்பது போன்ற செயல்கள் திட்டங்கள் ( Policies ).
காலப்போக்கில் கொள்கையில் மாற்றம் இல்லாமல் திட்டங்களில் மாற்றம் செய்து கொண்டு பெரியார் போராடியுள்ளார். மேற்கண்ட பெரியாரின் சொற்பொழிவு நமக்கு தெளிவாக அதை உணர்த்துகிறது.
அம்மை நோயை தடுப்பதற்கு அம்மை கிருமியிலிருந்தே தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப் பட்டது போல் ஈ.வெ.ராமசாமி நாயக்கர் ஜாதி என்னும் கிருமியை, நோயை ஒழித்து பெரியார் ஆனார் என்ற வரலாற்றை சொல்ல பெரியார் ராமசாமி நாயக்கரு" என்ற தலைப்பு கொடுத்திருக்கிறார்களே ஒழிய ஜாதியை நிலை நிறுத்த அல்ல.
Labels:
பெரியார்-மற்றவர்கள்
Subscribe to:
Post Comments (Atom)
8 comments:
எப்படி தமிழ் ஓவியா ஐயா இதைக்கூட நியாயப்படுத்த தரவுகளை தேடமுடிகிறது? ஆனால், உண்மை வெண்ணிற ஆடை மூர்த்தி சொல்ற மாதிரி பப்பரப்பான்னு அம்பலமாயி நிக்குதே!
வணிக(வியாபாரம்) நோக்கம்!
வணிக(வியாபாரம்) நோக்கம்!
வணிக(வியாபாரம்) நோக்கம்!
நீங்க செய்யறது எல்லாமே தப்பே இல்லை! சால்ஜாப்பில் நாயகருங்கோ!
சாதி ஒழிக்க வேண்டும் என்று கதறிக் கொண்டே, ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு ஒத்து ஊதுகிறீர்களே! உங்களை எதில் சேர்ப்பது!
என்னுடைய இந்த கேள்விக்கும் எதிர்க்க ஒரு கும்பலே கிளம்பும்! சமூக நீதியைக் காக்க என்று!
கொள்கையில் உறுதியாக நிற்காதவரை, உம்முடைய தலைவரின் பின்னால், மக்கள் யாரும் வரமாட்டார்கள்!
‘பெரியார்’ படம் தெலுங்கில் ‘ராமசாமி நாயக்கர்’ ஆனது!
‘திருவாளர் 15 லட்சம்’ (கி.வீரமணி) நடத்தும் ‘லிபர்ட்டி கிரியேஷன்ஸ்’ தமிழில் உருவாக்கிய ‘பெரியார்’ படம், இப்போது தெலுங்கிலும் மொழி மாற்றம் செய்யப்பட் டுள்ளது. இதற்கான அனுமதியை ‘திருவாளர் 15 லட்சம்’ நடத்தும் ‘லிபர்ட்டி கிரியேஷன்ஸ்’தான் வழங்கியிருக்கிறது.
தெலுங்கில் ‘பெரியார்’ படத்துக்கு பெயர் என்ன தெரியுமா?“பெரியார் ஈ.வெ.ராமசாமி நாயக்கர்”
‘விடுதலை’ நாளேட்டிலேயே - தெலுங்கு மொழியில் - இந்தத் தலைப்பை அவர்களே படத்துடன் வெளியிட்டிருக்கிறார்கள். ஆனால், செய்தியில் ‘பெரியார்’ படம் என்று குறிப்பிட்டுள்ளார்களே தவிர, சாதி ‘வாலை’ யும் ஒட்ட வைத்து பெயர் மாற்றம் செய்யப் பட்டுள்ளதை மறைத்து விட்டார்கள்.
இந்த தெலுங்கு படத்தின் அறிமுக விழா வுக்கு, ‘திருவாளர் 15 லட்சமும்’ கலந்து கொள்கிறாராம். சரி; இப்போது ‘விடுதலை’க்கு ஒரு கேள்வி! பெரியார் நூல்களை தங்களைத் தவிர வேறு எவரும் வெளியிடக் கூடாது என்று - நீதிமன்றம் வரை போய் மூக்குடை பட்டு நிற்கும் இவர்கள், அதற்காக முன் வைத்த வலிமையான வாதம் என்ன தெரியுமா? சாமி சிதம்பரனார் எழுதிய ‘தமிழர் தலைவர்’ நூலை ஆங்கிலத்தில் வெளியிட்ட ஒரு நிறுவனம், ‘தமிழர் தலைவர்’ என்ற பெயரை மாற்றி ‘ராமசாமி நாயக்கர்’ என்று பெயர் சூட்டிவிட்டதாம்! வெளியீட்டு உரிமை தங்கள் கட்டுப்பாட்டுக்குள்ளே இருந்தால், வாழ்நாள் முழுதும் சாதி ஒழிப்புக்காகப் போராடிய பெரியார் பெயருக்குப் பின்னால், இப்படி சாதி போடுகிற கேவலம் நடந்திருக்குமா, என்று ‘விடுதலை’ கேட்டது!
அப்படி எழுதிய “பத்தரை மாற்றுக் கொள்கைத் தங்கங்கள்” தான் இப்போது தங்கள் உரிமைகளின் கீழ் உள்ள பெரியார் படத்தை ஆந்திர சந்தையில் விற்று காசாக்க - பெரியாரை ‘ராமசாமி நாயக்கர்’ என்று பெயர் மாற்ற அனுமதித்திருக்கிறார்கள். ‘விடுதலை’ எழுத்தாளர்களே! இதற்கு என்ன பதிலை கூறப் போகிறீர்கள்?
“ஆந்திராவில், ‘நாயக்கர்’ என்று போட்டால் தானே படத்தை ஓட்ட முடியும். அந்த சூட்சமத்தைப் புரிந்த காரணத்தால்தான் தமிழர் தலைவர், இப்படி அருமையான முடிவை எடுத்திருக்கிறார்கள்! இது தமிழர் தலைவரைத் தவிர வேறு எவரால் முடியும்?” என்று விளக்கவுரை எழுதுவீர்களோ? அய்யோ பாவம்!
‘பெரியார்’ படம் தெலுங்கில் ‘ராமசாமி நாயக்கர்’ ஆனது!
‘திருவாளர் 15 லட்சம்’ (கி.வீரமணி) நடத்தும் ‘லிபர்ட்டி கிரியேஷன்ஸ்’ தமிழில் உருவாக்கிய ‘பெரியார்’ படம், இப்போது தெலுங்கிலும் மொழி மாற்றம் செய்யப்பட் டுள்ளது. இதற்கான அனுமதியை ‘திருவாளர் 15 லட்சம்’ நடத்தும் ‘லிபர்ட்டி கிரியேஷன்ஸ்’தான் வழங்கியிருக்கிறது.
தெலுங்கில் ‘பெரியார்’ படத்துக்கு பெயர் என்ன தெரியுமா?“பெரியார் ஈ.வெ.ராமசாமி நாயக்கர்”
‘விடுதலை’ நாளேட்டிலேயே - தெலுங்கு மொழியில் - இந்தத் தலைப்பை அவர்களே படத்துடன் வெளியிட்டிருக்கிறார்கள். ஆனால், செய்தியில் ‘பெரியார்’ படம் என்று குறிப்பிட்டுள்ளார்களே தவிர, சாதி ‘வாலை’ யும் ஒட்ட வைத்து பெயர் மாற்றம் செய்யப் பட்டுள்ளதை மறைத்து விட்டார்கள்.
இந்த தெலுங்கு படத்தின் அறிமுக விழா வுக்கு, ‘திருவாளர் 15 லட்சமும்’ கலந்து கொள்கிறாராம். சரி; இப்போது ‘விடுதலை’க்கு ஒரு கேள்வி! பெரியார் நூல்களை தங்களைத் தவிர வேறு எவரும் வெளியிடக் கூடாது என்று - நீதிமன்றம் வரை போய் மூக்குடை பட்டு நிற்கும் இவர்கள், அதற்காக முன் வைத்த வலிமையான வாதம் என்ன தெரியுமா? சாமி சிதம்பரனார் எழுதிய ‘தமிழர் தலைவர்’ நூலை ஆங்கிலத்தில் வெளியிட்ட ஒரு நிறுவனம், ‘தமிழர் தலைவர்’ என்ற பெயரை மாற்றி ‘ராமசாமி நாயக்கர்’ என்று பெயர் சூட்டிவிட்டதாம்! வெளியீட்டு உரிமை தங்கள் கட்டுப்பாட்டுக்குள்ளே இருந்தால், வாழ்நாள் முழுதும் சாதி ஒழிப்புக்காகப் போராடிய பெரியார் பெயருக்குப் பின்னால், இப்படி சாதி போடுகிற கேவலம் நடந்திருக்குமா, என்று ‘விடுதலை’ கேட்டது!
அப்படி எழுதிய “பத்தரை மாற்றுக் கொள்கைத் தங்கங்கள்” தான் இப்போது தங்கள் உரிமைகளின் கீழ் உள்ள பெரியார் படத்தை ஆந்திர சந்தையில் விற்று காசாக்க - பெரியாரை ‘ராமசாமி நாயக்கர்’ என்று பெயர் மாற்ற அனுமதித்திருக்கிறார்கள். ‘விடுதலை’ எழுத்தாளர்களே! இதற்கு என்ன பதிலை கூறப் போகிறீர்கள்?
“ஆந்திராவில், ‘நாயக்கர்’ என்று போட்டால் தானே படத்தை ஓட்ட முடியும். அந்த சூட்சமத்தைப் புரிந்த காரணத்தால்தான் தமிழர் தலைவர், இப்படி அருமையான முடிவை எடுத்திருக்கிறார்கள்! இது தமிழர் தலைவரைத் தவிர வேறு எவரால் முடியும்?” என்று விளக்கவுரை எழுதுவீர்களோ? அய்யோ பாவம்!
வணக்கம் தோழர்
இதைக்கூடவா நியாயப்படுத்துவீர்கள்? கேவலமாக இருக்கிறது.
இனிமேல் தோழர் வீரமணி என்ற பெயரை திரு.வீரமணி------ ( ஜாதிப்பெயர்)என்றோ, தோழர் மாரிமுத்து என்ற பெயரை திரு.மாரிமுத்து-----( ஜாதிப் பெயர்) என்றோ அழைக்கலாமா? ஒரு இயக்கத்தை முற்போக்கு திசையில் வளர்ப்பதற்கு நமது அறிவு பயன்படவேண்டும். அழிப்பதற்கு துணை போகவேண்டாம்.
தெலுங்கில் பெரியார்!
தமிழில் வெளிவந்த பெரியார் திரைப்படம் இப்பொழுது தெலுங்கு மொழியில் வெளிவந்துள்ளது.
அதன் வெளியீட்டு விழாவிற்குச் சென்றிருந்தோம்.
தெலுங்கில் வெளியிடும்பொழுது பெரியார் ராமசாமி நாயக்கர் என்று பெயர் கொடுக்கப்பட்டு இருந்தது. இதுபற்றி தயாரிப்பாளர்களிடம் நான் கேட்டேன்.
உங்கள் தமிழ்நாட்டில் பெரியார் என்று சொன்னால் எல்லோருக்கும் தெரியும். இங்கு அப்படியல்ல; பெரியார் ராமசாமி நாயக்கர் என்ற முறையில்தான் அறியப் பட்டிருக்கிறார். மேலும், ஆந்திர மாநிலத்தில் பெயருக்குப் பின்னால் ஜாதிப்பட்டமும் ஒட்டிக்கொண்டு தானிருக்கும். படத்தின் பெயரில் நாயக்கர் என்று இருந்தாலும், படத்தைப் பார்த்தவர்கள் மத்தியில் பெரியார் ஜாதி ஒழிப்பு வீரர் என்ற எண்ணம்தான் மேலோங்கி நிற்கும் என்று கூறினார்கள். அதுபற்றி மேலும் விவாதித்தோம். பட விளம்பரத்தில் நாயக்கர் என்னும் இடத்தில் ஓர் அடித்தல் குறி இருக்குமாறு செய்கிறோம். அதன்மூலம் ஜாதி ஒழிப்புக்கு வித்தியாசமான முறையில் கூடுதல் முக்கியத்துவம் ஏற்படுமே என்று கூறியிருக்கிறார். வைக்கத்தில் அதன் வெள்ளி விழாவில் கலந்துகொள்ள அம்மா அவர்களும், நானும் சென்றிருந்தோம். அங்கு அமைக்கப்பட்டிருந்த வளைவில் E.V.Ramasamy naicker என்று போட்டிருந்தனர். நாயக்கர் என்பது - அதுவும் ஒரு பெயர்போல வெளிமாநிலங்களில் நினைக்கிறார்கள்.
- கலந்துறவாடல் கூட்டத்தில் தமிழர் தலைவர் - "விடுதலை” 19-8-2010
தெலுங்கு மொழி பெரியார்திரைப்படம் பெயர் சூட்டல் ஒரு விளக்கம்
Share
பெரியார் திரைப்படம் தெலுங்கில் மொழியாக்கம் பெற்று ஆந்திர மக்களுக்கு அறிமுகம் ஆகியுள்ள நிலையில் தெலுங்கு படத்திற்கு பெரியார் ராமசாமி நாயக்கர் என பெயர் சூட்டப்பட்டுள்ளது குறித்து சில விமர்சனங்கள் எழுந்துள்ளன. பெரியாருக்கு தமிழ் நாட்டில் முளைக்காத நாயக்கர் பட்டம் ஆந்திராவில் மட்டும் முளைத்தது எப்படி? எனும் விமர்சனப் போக்கு நிலவுகிறது. விமர்சனங்களை படிப்பவர் களுக்கு நியாயம்போலக்கூட அது தோன்றலாம்.
தமிழில் பெரியார் திரைப்படத்தினை லிபர்ட்டி கிரியேஷன்ஸ் நிறுவனத்தினர் தயாரித்தனர். தெலுங்கு மொழியாக்க படத்தினை நாக் எண்டர் பிரைசஸ் எனும் நிறுவனம் தயாரித்து வெளியிட்டுள்ளது. அம்பேத்கர் தெலுங்கு மொழியாக்க படத்தினை ஏற்கெனவே ஆந்திரத்தில் தயாரித்து வெளியிட்ட நிறுவனம் இது. மற்ற திரைப்பட தயாரிப்பாளர்களிட மிருந்து சற்று வேறுபட்டு லாபநோக்கினை மட்டும் கருத்தில் கொண்டு செயல்படும் நிறுவனம் அல்ல இது. பெரியார் தெலுங்கு பட முன்னோட்ட நிகழ்ச்சி அய்தராபாத் நகரில் நடைபெற்ற பொழுது தெலுங்கு படத்தின் பெயர் குறித்து விளக்க மளிக்கப்பட்டது.
படத்தின் இயக்குநர் ஞான.ராஜசேரன் அய்.ஏ.எஸ் உடன் இருந்தார். வெளிமாநிலங்களில் ஜாதிப் பெயரைப் போடாமல் ஒருவரின் பெயரை மட்டும் குறிப்பிடுவது மரியாதை குறைவாகவே கருதப்படும் நிலை இன்றும் நீடித்து வருகிறது. தந்தை பெரியாரைப் பற்றி பிற மாநிலங்களில் ஈ.வெ.ராமசாமி நாயக்கர் என்று குறிப்பிடும் வழக்கம் இன்றும் நீடித்து வருவது எதார்த்தமான நிலையாகும். பொதுமக்களுக்கு யாரைப் பற்றிய படம் என்பது எளிதில் விளங்க வேண்டும் என்ற நோக்கில் தெலுங்கு பட தயாரிப்பாளர் பெரியார் இராமசாமி நாயக்கர் எனும் பெயரில் படத்தினை உருவாக்கியுள்ளதாக கூறினார்.
நாயக்கர் என குறிப்பிட்டது மரியாதை நிமித்தம் என்றார். பெரியார் திரைப்படத்திலேயே செங்கல்பட்டு முதல் சுயமரியாதை மாநாடு நடைபெறும் காட்சியில், அதில் பெரியார் உட்பட பல தலைவர்கள் தங்களது பெயருடன் ஜாதிப் பட்டத்தை போட்டுக்கொள்ளும் பழக்கத்தினை விட்டுவிடும் காட்சியும் இடம்பெற்றுள்ளது. பெரியார் ஜாதியினை எதிர்த்துப் போராடியவர் என்ற செய்தியெல்லாம் படத்தில் வருகிறது. தெலுங்கு படம் மக்களை சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் பெரியார் ராமசாமி நாயக்கர் எனும் பெயரினை தயாரிப்பாளர் சூட்டி இருந்தாலும், நாயக்கர் எனும் பெயரினை நீக்கி வெளியிட வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
நடைபெற்றது படத்தின் முன்னோட்ட நிகழ்ச்சி மட்டுமே. படம் இன்னும் வெளியிடப் படவில்லை. தெலுங்கு படம் ஆந்திரா முழுவதும் வெளியிடப் படும்பொழுது நாயக்கர் எனும் ஜாதிப் பெயரினை பெரியார் விட்டுவிட்டார் எனும் செய்தியினைத் தெரிவிக்கும் முகமாக
எனும் பெயரிலேயே படம் வெளியிடப் படும். பெரியார் ராமசாமி எனப் பெயரிடுவதை விட என வெளியிடுவது பெரியாருடைய கொள்கையினை அழுத்தமாக வெளியிடும் அணுகுமுறை என்பது ஊடகப் பார்வையில் உள்ளவர்களுக்கு உண்மையிலே புரியும்.
ஒரு திரைப்பட பெயரிலேயே திரிபு நிலைகள் தோன்றி அது மாற்றப்படும் நிலை உருவாகும் சூழலில், திரைப்படம் பெயர் பற்றி விமர்சனம் கொடுப்பவர்கள், பெரியாரது எழுத்துகளின் பதிப்பு தாராளமயமாக்கப்பட்டால் ஏற்படும் கொள்கை திரிபு நிலைகளை அறிவார்களா? அடுத்து நிச்சயம் அறிவார்கள்! பெரியாரது எழுத்துப் பதிப்பின் தாராளமயம் பற்றி அவர்கள் கூற வேண்டிய அவசியம் என்ன? அவர்களது நோக்கம் பெரியாரது எழுத்துகளைப் பரப்புவது என்பதல்ல. காலப்போக்கில் அதை சிதைப்பது என்பதைத் தவிர வேறென்னவாக இருக்க முடியும்? நடுநிலையாளர்கள், நல்லெண்ணம் கொண்ட மக்கள் சிந்திப்பார்களாக!
-------------------------”விடுதலை” 19-8-2010
Post a Comment