Search This Blog

14.8.10

துளசி பிரசாதமானது எப்படி? ஆபாசத்தின் உச்சம்

பெருமாள் கோவிலில்
துளசி பிரசாதமானது எப்படி?


பெருமாள் கோவில்களில் துளசி பிரசாதமானது எப்படி? திருத்துழாய் என்று வைணவர்கள் துளசியைப் போற்றுகிறார்கள். துளசிக்கு மருத்துவ குணங்கள் உண்டு. தலையில் பேன் இருந்தால் தலையணை உறைக்குள் துளசியை அடைத்து அதன்மீது படுத்தால் பேன் உதிர்த்து விடும். இருமல், சளிக்குச் சுக்குக் கஷாயத்தோடு துளசியைச் சேர்த்துச் சாப்பிடுவதும் உண்டு.

ஆனால் இந்தக் காரணங்களாலெல்லாம் துளசி பிரசாதமாகி விடவில்லை. துளசி பிரசாதம் ஆன புராணக் கதை பலருக்குத் தெரியாது. இதில் தத்துவார்த்தமோ, ரகசிய அர்த்தமோ எதுவும் கிடையாது. அவ்வாறு நல்ல வாய்ப்பாக எந்தப் பண்டிதரும் சொல்லவுமில்லை. துளசி பற்றிய புராண மூடநம்பிக்கைக் கதை புராணத்திலுள்ளதுதான். எனவே துளசிபற்றிய மூடக்கதை என்று சொல்லும் பகுத்தறிவாளரைக் குறை கூறக்கூடாது. இதில் இன்னொரு சுவையான தகவலும் கூடுதலாக உண்டு. இராமனின் அவதாரமும், இராமாயணமும் உண்டாவதற்குத் துளசிபற்றிய கதையும் காரணம். துளசி பற்றிய கதை பகுத்தறிவுவாதிகளோ, வரலாற்று ஆசிரியர்களோ கற்பனையாகப் புனைந்த கதையும் அன்று. சைவ புராணங்களில் கந்த புராணத்தில் உள்ளது. இந்தப் புராணத்தை எடுத்து விட்டால் சைவமில்லை என்று கூறுமளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்று கூறுவர்.

இனி கதைக்கு வருவோம்.

விருத்தாசுரன் என்கிற ஒரு வலிமை மிக்கவன் இருந்தான். அவனுடைய மனைவி பெயர் விருதை என்பதாகும். விருத்தாசுரனின் துணைவி அழகிலும் கற்பிலும் சிறந்தவள்.

விருதையை மகாவிஷ்ணு கண்டு மோகித்து வசப்படுத்தத் தந்திரங்கள் பல செய்தும், தம்முடைய கடவுள் சக்தி எல்லாம் காட்டியும் முடியாமல் சூரனிடம் சண்டையிட்டார். சூரன் மகாவிஷ்ணுவைவிட வலிமைமிக்கவன் ஆதலால், சூரனிடம் சண்டையிட்ட அவர் தோற்று ஓடி விட்டார்.

ஓடியவர் சிவனைக் கண்டு அவரிடம் தன் ஆசையையும் கவலையையும் தெரியப்படுத்தினார். சிவன் சூரனிடம் சண்டையிட்டுச் சூரனைக் கொன்றார். விஷ்ணு சூரன் உடலுக்குள் புகுத்து கொண்டார். விருதையிடம் திருட்டுத்தனமாகக் கலந்து இருந்தார்.

விஷ்ணுதான் தன் புருஷன் உடலில் புகுந்து திருட்டுத்தனமாகத் தன்னைக் கூடி விட்டான் அன்று தெரிந்து விஷ்ணுவை நீ அயோக்கியனினும் அயோக்கியன். நீ ஒரு சண்டாளன். நீ செய்த காரியத்திற்கு மன்னிப்புக் கிடையாது. ஆகையால் நீ மனிதனாகப் பிறந்து உன் மனைவியை அசுரகுலத்தவன் தூக்கிச் சென்று சிறை வைத்துக் கற்பை அழிக்கும்படியாகச் சாபம் கொடுக்கிறேன் என்று சாபம் கொடுத்துவிட்டாள்.

பத்தினி சாபம் பலிக்கும் என்று சொல்வார்கள் அல்லவா? எனவே விருதையின் சாபம் பலித்தது. சாபம் கொடுத்த விருதை அக்கினியில் விழுந்து சாம்பலானாள். மகாவிஷ்ணுவுக்கோ விருதை சாம்பலான பின்னரும் மோகம் தணியவில்லை.

விருதையின் மோக ஆசையால் அந்தச் சாம்பலில் விழுந்து புரண்டு கிடந்தார். இந்த அவமானத்தை விஷ்ணுவின் சகோதரியும், சிவனின் மனைவியுமான பார்வதி பொறுக்காமல் துளசி என்னும் தன்னுடைய தாதிப் பெண்ணை அனுப்பி விஷ்ணுவின் சோகங்களை எல்லாம் தீர்த்து அழைத்து வருமாறு அனுப்பினாள். அவ்வாறே துளசி என்னும் பெண் சென்று திருமாலின் சோகங்களையெல்லாம் நீக்கி, அவரை அழைத்து வந்தாள். அந்தத் துளசி என்னும் பெண்ணை மகாவிஷ்ணு தம் மார்பில் வைத்துக் கொண்டார்.

இவ்வாறு இராம அவதாரமும், இராமாயணமும் உண்டாவதற்கு இந்தக் கதை அடிப்படையாயிற்று.

ஜனகாதி மகரிஷிகள் விஷ்ணுவின் காவற்காரர்களான துவாரபாலகர்களுக்குக் கொடுத்த சாபத்தால் விஷ்ணு ராமராக அவதாரம் செய்தார் என விஷ்ணு புராணம் கூறும். எப்படியாயினும் சாபத்தால் விஷ்ணு அவதாரம் செய்தார் என்று ஆகிறது.

பார்வதியின் பணிப்பெண் துளசி விருதையின் பிணச் சாம்பலில் சோகத்தில் புரண்டு உருண்ட மகாவிஷ்ணுவின் சோகத்தைத் தீர்த்தமையால் துளசியை மகாவிஷ்ணு மார்பில் அணிந்துகொண்டார். அதுபோல் எல்லாரும் துளசியை அணிந்து கொண்டால் எல்லாவித சோகத்தினின்றும் சுகம் பெறலாம் என்று நினைத்து வைணவ பக்தர்கள் துளசியை அணிந்து கொள்கிறார்கள்.

மகாவிஷ்ணு பார்வதி தேவியின் அண்ணனானபடியால் அவருக்குப் பணிப் பெண் துளசி கிடைத்தது. அவ்விதம் எல்லாருக்கும் கிடைக்க வழியில்லாததால் விஷ்ணுவின் பெயர் சொல்லித் துளசித் தழையை அணிந்து கொள்கிறார்கள். வைதீக மதம் பொய்யைப் புளுகி வயிறு வளர்க்கும் கதையில் இதுவும் ஒன்று என்று கூறுவார் கைவல்யம் சுவாமிகள்.

இதுவரை புராணக் கதை கேட்டோம். துளசியை நம்பி தஞ்சாவூர் ஒழிந்த உண்மையான வரலாறு ஒன்று இருக்கிறது. இது நாயக்க மன்னர்கள் காலத்து வரலாறு.

தஞ்சாவூரை நாயக்க மன்னர்கள் ஆண்டார்கள். மதுரையை ஆண்டவர்கள் மதுரை நாயக்கர்கள். தஞ்சையை ஆண்டவர்கள் தஞ்சை நாயக்கர்கள். தஞ்சை நாயக்கர்கள் வைணவர்கள். அதாவது நாமக்காரர்கள். எனவே இந்த வைணவர்களின் அரசாட்சியை ஒழித்துக் கட்ட சைவர்கள், மராத்தியர்களுடன் பேசித் தஞ்சாவூர்மீது படையெடுத்து வரும்படி செய்தார்கள். மராத்தியர்களுக்குச் சைவர்கள் கூறிய யோசனை இது. நவராத்திரி சமயம் தஞ்சைமீது படையெடுங்கள். அதுதான் சரியான சமயம். ஏனென்றால் நவராத்திரியின் போது ஆயுதங்கள் எல்லாம் பூசையில் இருக்கும். அதை எடுக்காமலிருக்க ஏற்பாடு செய்கிறோம் என்றும் கூறினார்கள். அதுபடி மராத்தியர்கள் நவராத்திரியின் போது வந்தார்கள். மராத்தியர்கள் படை எடுத்து வந்திருக்கிறார்கள்; தடுத்து நிறுத்த வேண்டும் என்று தஞ்சை நாயக்க மன்னரின் தளபதிகள் சொன்னார்கள். ஆயுதமோ இல்லை, பூசையில் இருக்கிறது. என்ன செய்வது? குருக்களையும் புரோகிதர்களையும் கேட்டார்கள்.

குருக்களின் யோசனை எப்படி இருக்கும்? குருக்கள் சொன்னார்: ஆயுதத்தைப் பூசையில் வைத்திருக்கிறோம். எனவே ஆயுதத்தை எடுத்தால் அம்பாள் கோபிப்பாள், மகாதோஷம் என்றார்.

மன்னர் கேட்டார்: மராத்தியர் படை எடுத்து வந்திருக்கிறார்களே, தடுக்க என்ன வழி?

குருக்கள் அருமையான ஆன்மிக யோசனை ஒன்று சொன்னார். பூசைக்கு ஏராளமான துளசி வந்திருக்கிறது. அதைக் கோட்டை வாசலில் போட்டு விட்டால் அதைத் தாண்டி எதிரிகள் வர மாட்டார்கள். துளசியைத் தாண்டுவது மகாபாவம் என்றனர். இவ்வாறு புரோகிதர்களின் புளுகை அன்றும் நாயக்க மன்னர்களும், அவருடைய பக்தர்களும் நம்பினார்கள்.

அங்குள்ள துளசியையெல்லாம் கோட்டை வாயிலில் போட்டார்கள். துளசியின் விசேடம்(!) மராத்தியனுக்குத் தெரியுமா? தெரியவில்லை. மராத்தியர்களிள் குதிரைகளுக்கும் தெரியவில்லை. கோட்டைக்குள் மராத்தியர்கள் மளமளவென்று வெள்ளம் போல் புகுந்தார்கள். தஞ்சை நாயக்கர்களின் தலைகளைப் பனங்காய்களைப் போல் சீவித் தள்ளினார்கள். தஞ்சை நாயக்கர் ஆட்சி மறைந்து நாயக்கர் ஆட்சி இருந்த இடத்தில் மராத்தியர் ஆட்சி ஏற்பட்டது.

அன்று துளசியின் பித்தலாட்டத்தைச் சொல்ல தந்தை பெரியார் போல் வேறு ஒருவரும் இல்லை. இராப்பகலாய் இருபது நாள் கொள்ளையடித்தார்கள். துளசி பார்த்துக் கொண்டிருந்தது. துளசிக்குள்ளிருந்த அம்பாளும், சக்திகளும் பட்டஅடியால் அங்கேயே மாண்டு போனார்கள். தஞ்சை நாயக்கர் ஆதிக்கம் துளசிப் பிரசாதத்தின் மகிமை யால் நம்பி மன்னர்களின் அலுவலர்கள் தம் கடமையைக் கைவிட்டனர். எனவே அந்தக் காலத்துப் புலவன் பார்ப்பான் பெருத்து வடுகன் துரைத்தனம் பாழ்ந்ததுவே என்று பாடினார். பிரசாதமும், பூசையும் மலிந்து விட்டது என்பதுதான் இதன் பொருள்.

--------------------- முனைவர் பேராசிரியர் ந.க. மங்களமுருகேசன் அவர்கள் 14-8-2010 “விடுதலை” ஞாயிறு மலரில் எழுதிய கட்டுரை

1 comments:

sundar said...

When you are writing about the obscenity in Puranas why not you also cover the perversions of the so called rationalist EVR who was member of a nudist society abroad?