புகழ் தேடும் மனிதன்
இன்றைய ஆஸ்திகர்களின் யோக்கியதை எல்லாம் மனிதனை செத்துப் போன மனிதனை வணங்குவதாகவே இருந்து வருகிறது.
இராமன், கிருஷ்ணன், சுப்ரமணியன் முதலிய கடவுள்கள் என்பவர்கள் ஒரு தாய் தந்தைக்குக் கலவியினாற் பிறந்து, மனிதனுக்கு உண்டான நல்ல கெட்ட குணங்களுடன் நடந்துவந்து, அவர்களுக்குச் சாதாரண மனிதர்களுக்கு ஏற்படும் சம்பளம் போல் ஏற்பட்ட விதியின்படி நடத்தையில் செத்தவர்களே ஆவார்கள். இதில், சுப்பிரமணியன் செத்ததற்கு விபரம் தெரியவில்லை. ஆனாலும், பிறவி மிக மிக ஆபாசமான பிறவியாகவே இருக்கிறது. இப்படிப்பட்ட இவர்களை எதற்கு ஆக வணங்க வேண்டும் என்பதற்கு நல்ல காரணம் காட்டாமல், அவர்களது ஒழுக்க ஈனமான நடவடிக்கைகளைக் குறிப்பிட்டு உருவம், பக்திப்பாடல், உற்சவம் முதலியவைகளால் வணங்குகிறார்கள்.
நிற்க, இன்று தமிழ்நாட்டில் மாத்திரம் பதினாயிரக்கணக்கான கடவுள்கள் இருக்கின்றன என்பது ஒரு புறம் இருந்தாலும் அவை அவ்வளவிற்கும் மனைவி, பல மனைவிகள் இருக்கின்றன. சிலவற்றிற்கு மனைவிகள் மாத்திரமல்லாமல் வைப்பாட்டிகள் இருக்கின்றன சில. இரண்டும் தவிர விபச்சாரித்தனம் செய்கின்றன. இந்த மனைவிகளையும் வைப்பாட்டிகளையும்கூட நம் ஆஸ்திகர்கள் தெய்வங்களாகவே கருதி வணங்கி வருகிறார்கள். கடவுள் வணக்கத்திற்கு ஆக மக்களால் தெய்வத்திற்கு என்று செய்யப்படும் செலவுகள் போலவே. இந்த மனைவிமார்களுக்கும் வைப்பட்டிமார்களுக்கும் ஆஸ்திகர்கள் மக்களைச் செலவு செய்து வரச்செய்கிறார்கள்.
இதுவரை எந்த அறிவாளி, தத்துவஞானம் போதிப்பவர், சீர்திருத்தவாதி ஆகிய ஆஸ்திகர்களும் இந்த ஆபாசமான காரியத்தைக் கூட, தடுக்க எவ்வித முயற்சியும் செய்தவர்கள் அல்ல. குருமார்கள், பண்டாரசந்நிதிகள், சமயப்புலவர்கள், கரைகண்ட ஆஸ்திகர்கள், மற்றும், மனிதத்தன்மைக்கு மேம்பட்டவர்களாகக் கருதப்படும் ஆஸ்திகர்கள் ஞானவான்கள் என்று சொல்லப்படுபவர்கள் ஆகிய இவர்களில் எவரும் இந்தக் கடவுள் சம்பந்தமான அறிவீனமான ஆபாசநடத்தைகுத் தத்துவார்த்தம் சொல்லி ஆதரிக்கப் பார்க்கிறார்களே ஒழிய, ஆதரித்து வருகிறார்களே ஒழிய ஒரு ஆஸ்திகராவது இக்கருத்தை ஒழிக்கவோ, திருத்தவோ முற்படவே இல்லை.
அடிப்படையை வைத்துக் கொண்டு சீர்திருத்தம் செய்ய வேண்டும் என்கின்ற விஞ்ஞானவாதிகளாகிய சர்.சி.வி. ராமன், சர். ராதாகிருஷ்ணன் போன்ற அறிவாளிகளும் கூட இவ்விஷயத்தில் வாய்திறப்பதில்லை.
பாலைவனத்தின் காட்டுமிராண்டிக் காலத்தில் தோன்றிய ஆஸ்திகரான மகம்மது (நபி) அவர்களுக்குத் தோன்றிய பகுத்தறிவுகூட 1953ஆம் வருடத்தில் இருக்கும் விஞ்ஞானிகளுக்கும், கல்விமான்களுக்கும், புலவர்களுக்கும், மகான்களுக்குங்கூடத் தோன்றவில்லை என்றால், இந்த ஆஸ்திகம் என்பது மடமையும் சூதும் என்றுதானே சொல்லவேண்டும்.
மனிதன் தன்வாழ்வில் புகழைத் தேடுவதற்கு விரும்புவது என்பது இயற்கையே ஆகும். புகழைத் தேடுவதற்கு விரும்பாதவன் ஒருவன்கூட இருக்கமாட்டான். ஒவ்வொருவனும் ஒவ்வொரு துறையில் முயற்சிசெய்து புகழடைய விரும்புகிறான். ஒருவன் பணக்காரன் ஆகி அதன் மூலம் தன்னை மற்றவர்கள் லட்சாதிபதி, கோடீஸ்வரன் என்று புகழ வேண்டும் என்று விரும்பி அதற்காக எல்லையே இல்லாமல் பொருள் சேர்க்க விரும்புகிறான். வியாபாரத்தில் ஈடுபட்டவன் தன்னை மற்றவர்கள் பேசிப்புகழவேண்டும் என்று விரும்பி வியாபாரத்துறையில் பெருக்குகிறான். உத்தியோகத்தில் உள்ளவன் தன்னைக் கலெக்டர் என்று புகழவேண்டும், தன்னை மந்திரி என்று புகழ வேண்டும், என்று ஆசைப்பட்டு அந்தந்த உத்தியோகத்தை அடைய முயற்சிக்கிறான். இப்படியே மனிதன் புகழைத்தேடிப் பலவழிகளிலும் முயற்சிக்கிறான்.
தவறான முறை
ஆனால் மனிதன் புகழைத் தேடுகிற வழியைப் பின்பற்றுகையில் மிகவும் தவறான முறையில் பின்பற்றுகிறான். தனக்குப் புகழ் வேண்டும் என்ற எண்ணத்தின் மீது முயற்சிக்கிறானே அன்றி உண்மையில் அது அவனுக்குப் புகழைத்தேடிக் கொடுப்பதாக இருப்பதில்லை, எப்படியோ இம்முறையை மாற்றி விட்டனர். உண்மையில் புகழடைய விரும்புகிற முறையைப் பின்பற்றாமல் மிகவும் தவறான முறையில் பின்பற்றுகிறான். இதனால் அவர் முயற்சித்த முயற்சி எல்லாம் வீணாகிறது. இன்றைக்கு ஒருவர் தன்னுடைய வீடு என்று ஒரு வீட்டைக் கட்டினால் நாளை இவர் இறந்துபோன பிறகு அவனுடைய மகனுக்குச் சொந்தமாகிறது. இப்படியே மாறிக்கொண்டு போகிறது, இவனுடைய வாழ்நாள் உள்ளவரை மட்டும் அது அவனுடைய வீடு என்று அவன் பெயர் இருக்கிறது. இன்னமும் இவனுடைய காலத்திலேயே கூட இவன் கடன்பட்டு அந்த வீடு ஏலத்தில் போனால் ஏலத்தில் வாங்கியவனுக்குச் சொந்தமாகிறது. இன்றைக்கு முதலியார் வீடு, நாளைக்கு ஏலம் எடுத்த சாய்புக்குச் சொந்தமாகிறது. சாய்பு விற்று விட்டால் அதை நாடார் வாங்கினால் நாடாருடைய வீடு, இப்படிப் பலருக்குச் சொந்தமாகிறது.
பிறர் நலனுக்குழைப்பதே நீடித்த புகழ்தரும்
ஆனால், இவன் தனக்கு என்று பெரும்பொருளைச் சேர்த்துவைத்தால் தன் பெயர் நிலைத்து நிற்காமல் மறைந்துபோய் விடுகிறது. ஆனால், மற்றவர்களின் நலனுக்கு என்று சிறிதளவு மதிப்புள்ள பொருளை விட்டுச் சென்றாலும் அது அவருடைய பெயரை நிலைத்து நிற்கச் செய்யும். ஒரு சிறிய மண்குடிசை என்றாலும் அது பொதுநலனுக்கென்று விட்டுச்சென்றால் அக்குடிசை உள்ளவரை அவனுடையபெயரை நிலைத்து நிற்கச்செய்யும்.
எனவே, மனிதன் தன்னலத்திற்கென்று புகழைத்தேடுவதற்கு முயற்சிக்கும் அத்தனையும் உண்மையில் புகழைக் கொடுப்பது இல்லை. பிறர் நலத்திற்கென்று வைத்துச் செல்லும் பொருளே அவருடைய பெயரை நிலைத்து நிற்கச் செய்யும் என்பதாகத் தெரிவித்தார்கள்.
--------------- தந்தை பெரியார் - "விடுதலை" 22.2.1956
0 comments:
Post a Comment