Search This Blog

28.8.10

பரலோகத்துக்குப் பார்ப்பானை அழைத்த கதை



தஞ்சை ஜில்லாவில் ஒரு சம்பவம் நடந்ததாகக் கூறுவார்கள். அதாவது இறந்து போனவர்கள் மோட்சம் அடைவதற்கென்று அங்கு பார்ப்பனப் புரோகிதன் ஒருவன் பணம் பெற்றுக் கொண்டு சிவபிரானுக்குச் சீட்டுக் கொடுப்பது வழக்கமாம். மக்கள் அவனிடம் சீட்டுப் பெற்றால் சிவபெருமான் அவசியம் மோட்சம் கொடுத்து விடுவார் என்று நம்புவார்கள் ஆதலால் செத்துப்போனவனின் வாரிசு இந்தப் பார்ப்பானுக்குப் பணம் கொடுத்து செத்தவன் பாவத்திற்கு ஏற்ற அளவு மோட்சச்சீட்டு வாங்கி அந்தச் சீட்டை பிணத்துடன் பாடையில் கட்டிககொண்டு போய், சுடுகாட்டில் பிணத்துடன் போட்டு எரித்துவிட்டால், இறந்து போனவன் சீட்டில் எழுதியுள்ளபடி மோடசத்துக்குப் போய்ச்சேருவான் என்பது அதன் பொருள். இதை ஒருவன் கண்டிக்கவேண்டும் என்று முற்பட்டான்.

ஒரு நாள் அந்த புரோகித சாமியாரிடம் சென்று நீங்கள் கொடுத்த ஒரு மோட்சச் சீட்டில் தவறாக மற்றொருவர் பெயரை நீங்கள் எழுதிவிட்டீர் என்ற காரணத்தால் சிவபெருமான் அந்த நபருக்கு மோட்சம் கொடுக்க மறுப்பதோடு, விவரம் அறிய உங்களை எப்படியாவது அனுப்பிக் கொடுக்கும்படியும், நீங்கள் வரும்வரை அந்த நபர் அந்தரத்தில் தொங்கிககொண்டுதான் கிடப்பார் என்றும் என் கனவில் வந்து சொல்லிவிட்டுப் போயவிட்டார். ஆதலால் உடனே புறப்படுங்கள் காலையில் இறந்துபோன ஒருவருக்கு நீங்கள் மோட்ச சீட்டுக் கொடுத்தீர்களே அவனுடனேயே நீங்களும் செல்லலாம். இன்னும் அவன் கொளுத்தப்படவில்லை உங்களுக்காகக் காத்துக் கொண்டிருககிறார்கள். நான் உங்களைக் கூட்டிவருவதாகச் சொல்லி வந்திருக்கிறேன், ஆகையால் தயவு செய்து புறப்படுங்கள்.

சிவபெருமானிடம் வாதாடி எப்படியாவது அந்த நபரை திருப்பிவிடாமல் அவனுக்கு மோட்சம் வாங்கிக் கொடுத்துவிட்டு உடனே தாங்கள் இந்த லோகத்திற்கு வந்து சேருங்கள் என்று கூப்பிட்டான். அதற்கு சாமியார் ஆனாலும் பாதகம் இல்லை. நான் வேறு ஏதோ பெயரை மறதியாக எழுதிவிட்டேன் போலிருக்கிறது. இபபோது வேறு சீட்டுத் தருகிறேன். அதை எரித்துவிட்டால் அந்த ஆளுக்கு மோடசத்தில் இடம் கிடைக்கும் என்றானாம். ஆனாலும் வந்தவன் அதையும் மறுத்துககூறி உங்களையே அனுப்பிக் கொடுக்கும்படி என் நேரில் சிவபெருமான் சொன்னார்கள், நீங்கள் நேரில் சென்று இந்த ஆளைக் காட்டி இந்த ஆளுக்குத்தான் சீட்டுக் கொடுத்தேன் என்று ஒரு வார்த்தை சொன்னால் போதும் என்று கட்டாயபபடுத்தினானாம். சாமியார் எவ்வளவோ மறுத்துக் கூறியும், தப்பித்துக் கொள்ள வழியில்லை. அங்கு குழுமியிருந்த மற்றவரகளும் சாமிகளே ஒரு ஆள் அந்தரத்தில் தொங்கிக்கொண்டு மோட்சம் அடைய முடியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கையில் நீங்கள் தான் நேரில் சென்று ஒரு வார்த்தை சொல்லிவிட்டு வருவதில் என்ன மோசம் போய்விடும். ஆகவே நீங்களே புறப்பட்டுச் செல்லுங்கள் என்றார்களாம்!

அதற்கு சாமியார் மறுத்துக் கூற முடியாமல் விழித்தார். உடனே சாமியாரைககட்டி பாடையில் வைத்து சுடுகாட்டுக்குக் கொண்டு சென்று அங்கு கொளுத்தினால் தானாகவே சாமியார் மோட்சம் போய்ச் சேருவார் என்று அங்கிருந்த எல்லோரும் கூறியவுடன், சாமியாரைக் கட்டி, சுடுகாட்டுக்குக் கொண்டு சென்றார்கள். அதுவரை சாமியார் தன் விஷயத்தை வெளியில் கூறவில்லை. இறுதியில் நெருப்பு வைத்துக் கொளுத்தும் சமயத்தில், என்னை விடுங்கள் நான் உண்மையைச் சொல்லி விடுகிறேன் என்று சொல்லி, நான் இதுவரை செய்ததெல்லாம் உங்களிடம் பணம் காசு சம்பாதிப்பதற்கே ஆகும். மோட்சம் நரகம் என்பதும் அதற்கு நான் சீட்டுக் கொடுப்பதும் பெரும்பித்தலாட்டம் என்று சொல்லியவுடன் சாமியாரை அடித்து உதைத்து இனி இந்த ஊர்பபக்கமே திரும்பக்கூடாது என்று துரத்தினார்களாம்.

------------------24.4.1956 எடைகீழையூர் (மன்னார்குடி) குமாரசாமி நீத்தார் நினைவு நாள் நிகழ்ச்சியில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு "விடுதலை" 10.6.1956

0 comments: