Search This Blog

4.8.10

ஆக்டோபஸ் பெயரால் அரங்கேறும் மூடத்தனங்கள்!



உலகக் கால்பந்து போட்டியில் ஆக்டோபஸ் என்ற பிராணி கணித்ததெல்லாம் நூற்றுக்கு நூறு சரியாக இருந்ததாம்; அதன் காரணமாக இந்த மனிதப் பிராணிகள் எல்லாம் அந்த ஆக்டோபஸ் பிராணியைத் தலையில் தூக்கி வைத்துக்கொண்டு ஆட ஆரம்பித்துள்ளன.

மூட நம்பிக்கைகளை மூலதனமாகக் கொண்டு மக்களைச் சுரண்டும் பேர்வழிகளும், மதவெறி யர்களும், எதை விற்றாவது வயிறு வளர்க்க வேண்டும் என்று அலைகின்ற வெட்கங்கெட்ட ஊடகங்களும் ஆக்டோபசையும் மூலதனமாக்கி, மூர்க்கத்தனமாகப் பகுத்தறிவைக் கேலி செய்யும் வேலையில் இறங்கியுள்ளன.

ஸ்பெயின் நாடு ஆக்டோபசுக்குக் குடியுரிமை வழங்கி, பைத்தியக்காரத்தனத்துக்கு அளவேயில்லை என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டியும் உள்ளது.

ஜெர்மனியில் உள்ள ஒரு சிறப்பு அங்காடி (சூப்பர் மார்க்கெட்) 160 பொருள்களுக்கு விளம்பரம் செய்ய அந்த ஆக்டோபசுடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளதாம்.

இவற்றையெல்லாம் பார்க்கும்பொழுது வாயால் சிரிக்க முடியவில்லை. மூட நம்பிக்கை என்பது இந்தியாவுக்கு மட்டுமே சொந்தமல்ல - அது உலகத்துக்கே பொதுச்சொத்து என்ற முடிவுக்குத் தான் வரவேண்டியுள்ளது.

உலகக் கால்பந்து போட்டியில் வெற்றி பெறப் போகும் அணியைப்பற்றி ஒரு பிராணிமூலம் ஆரூடம் கணித்துச் சொல்லப்பட்டது. இதைவிட விளை யாட்டு வீரர்களை எப்படி கொச்சைப்படுத்த முடியும்?

ஓயாப் பயிற்சிகளில் நாளும் ஈடுபட்டு, தம் திறமையினையும், உழைப்பையும் முன்னிறுத்தி, மூச்சுத் திணறத் திணற விளையாடும் வீரர்களைப் பற்றிப் பேசாமல், புகழாமல், அவற்றையெல்லாம் புறந்தள்ளி, ஒரு கண்காட்சிக் கூண்டுக்குள் அடைப்புக்குள் வைக்கப்பட்டு, தீவனம் கொடுத்து வளர்க்கப்படுகின்ற அற்பப் பிராணி ஆரூடம் சொல்லுகிறது என்பதை முதன்மைப்படுத்திப் பிரச்சாரம் செய்வதை விளையாட்டு உலகின் விற்பன்னர்களோ, எந்த ஒரு விளையாட்டு வீரரோ விமர்சனம் செய்யாதது பரிதாபமே!

ஜெர்மனியில் ஒரு பால் ஆக்டோபசு என்றால், ஹாலந்தில் ஒரு குட்டி ஆக்டோபஸ் சிங்கப்பூரில் ஒரு பச்சைக் கிளி (18 வயது), சென்னையில் ஒரு எலி என்று வியாபாரக் கடைகளைத் திறந்து விட்டார்களே!

பச்சைக்கிளி சொன்ன ஆரூடம் பல நேரங்களில் சரியாகவே இருந்தன என்று ஒரு பக்கம் பிரச்சாரம் செய்யப்படுகிறது.

இதே பால் ஆக்டோபஸ் 2008 ஆம் ஆண்டில் அய்ரோப்பிய நாடுகளுக்கிடையே நடைபெற்ற கால்பந்தாட்டப் போட்டியில் சொன்ன ஆரூடம் என்னாயிற்று என்பதை சாமர்த்தியமாக, வசதியாக மறைப்பது ஏன்?

இறுதி ஆட்டத்தில் ஜெர்மனி வெல்லும் என்று ஆரூடம் சொன்னது - ஆனால், அந்த ஆட்டத்தில் ஜெர்மனி தோற்று ஸ்பெயின் வெற்றி பெற்றதே!

விளையாட்டு விற்பன்னர்களின் கணிப்பே தோற்கும்போது இந்த அய்ந்தறிவு ஆக்டோபஸ் வாச்சான் போச்சான் போக்கில் ஒற்றையா இரட்டையா? என்ற தன்மையில் சொல்லுவதை யெல்லாம் நம்பி, அந்தப் பிராணிக்குப் புகழ் மாலை சூட்டக் கிளம்பியிருப்பது அத்தகையவர்களின் அறிவுச் சூன்யத்தைத்தான் புலப்படுத்தும்.

இரண்டு நாடுகளின் பெட்டிகளுக்குப் பதில், மூன்று, நான்கு நாடுகளின் பெட்டிகளை வைத்து, ஆக்டோபசைக் கணிக்கச் சொல்லிப் பார்க்க வேண்டியதுதானே? ஒரு பெட்டியிலும் ஏறாது ஆக்டோபஸ் தவிர்த்துவிடுமா என்பதையும் பார்த்துவிடலாமே!

இதற்கிடையே துக்ளக் சோ ராமசாமி பகுத்தறிவாளர்களைக் கொஞ்சம் சீண்டிப் பார்க்கிறார் (துக்ளக், 4.8.2010). ஆக்டோபஸ் ஆரூடம்பற்றி திராவிடர் கழகம் எதிர்க்க வில்லையாம்; எழுதவில்லையாம்!

இவர் எந்த உலகத்தில் வாசம் செய்கிறார் என்று தெரியவில்லை. ஆக்டோபஸ் பித்தலாட்டம் குறித்து ஜூலை 10 ஆம் தேதி மற்றும் ஜூலை 12 ஆம் தேதி ஆகிய இருநாள் விடுதலையிலும் விவரமாக எழுதப்பட்டுள்ளதே! ஆத்திரத்தில் அவசரக் குடுக்கைத்தனமாக எழுதலாமா?

மூடநம்பிக்கைச் சகதியில் ஜனிக்கும் புழுக்கள் அய்ந்தறிவு ஆக்டோபஸ் என்னும் பிராணியின் காலைப் பிடித்துக் கரையேறலாம் என்று துடிக்கின்றன என்பதுதான் உண்மை.

---------------------- "விடுதலை” தலையங்கம் 3-8-2010

4 comments:

Bibleunmaikal said...

click the link and read


உச்சமான காமம் கொண்ட வேசிகள்.
அவசியம் படியுங்கள்.ஆபாச வர்ணனைகள் நிறைந்த இந்நிகழ்வை. கர்த்தரின் வார்த்தைகளான புனித பைபிளில் இருப்பது தான் இந்நிகழ்வுக்கு மதிப்பளிக்கிறது.


................

அ.முத்து பிரகாஷ் said...

பேரன்பின் மாலை வணக்கங்கள் தோழர் !

// விளையாட்டு உலகின் விற்பன்னர்களோ, எந்த ஒரு விளையாட்டு வீரரோ விமர்சனம் செய்யாதது பரிதாபமே! //
ஆமாம் தோழர் . அவர்களிடம் எடுத்துச் சொல்ல உங்களை போன்ற பகுத்தறிவு பேரொளிகள் அங்கு இல்லையோ என்னவோ ?

அ.முத்து பிரகாஷ் said...

// இதற்கிடையே துக்ளக் சோ ராமசாமி பகுத்தறிவாளர்களைக் கொஞ்சம் சீண்டிப் பார்க்கிறார் (துக்ளக், 4.8.2010). ஆக்டோபஸ் ஆரூடம்பற்றி திராவிடர் கழகம் எதிர்க்க வில்லையாம்; எழுதவில்லையாம்! //

கிழவியை தூக்கி மனையில் வையுங்கள் தோழர் ....

தமிழ் ஓவியா said...

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தோழர்