கற்பனை உரையாடல்
ஆன்மீகப்பணி
சிறையில் உள்ள ரஞ்சிதானந்தாவின் (செந்தில்) அறைக்கு, காவலாளியாகக் கவுண்டமணி வருகிறார்.
கவு: நம்ம தலையெழுத்து... சாமியார்ப் பசங்க உள்ள வரும்போதெல்லாம் நம்மள காவலாளியாப் போட்டுடுறாங்க...டேய், ரஞ்சிதானந்தா அதெப்பிடிடா ரங்கசாமி, ராமசாமின்னு பெயர் இருக்கிறவனெல்லாம் ஆன்மீக பிஸினஸ் ஆரம்பிச்சதும் அந்த ஆனந்தா இந்த ஆனந்தான்னு முழுநீளப்பேரா மாத்திக்கிறீங்க?
செ: அது அனுக்கிரகம்...
கவு: அடேய், பம்பர் வாயா, இப்ப நீ உள்ள இருக்கே... ஆசிரமத்துல உன் பக்தர்கள்கிட்டப் பேசறமாதிரி எங்கிட்டப் பேசாதே... அது சரி எனர்ஜி, ஹீலிங், சார்ஜ் ஏத்தறதுன்னு என்னென்னமோ செய்யறியாமே?
செ: ஆம், யாம் அதில் எக்ஸ்பர்ட்...
கவு: சார்ஜ்.... ஏத்தறதுல நீ எக்ஸ்பர்ட்ங்கறதுதான் உலகத்துக்கே தெரியுமே... அதென்னடா ஹீலிங்?
செ: உடலில் எந்த உபாதைகளிருந்தாலும் யாம் தொட்டவுடன் குணமாகிவிடும்
கவு: அந்த சி.டியில் நடிகை ஒருத்தர் உனக்கு மாத்திரை தர்றாரே?
செ: அது கிராஃபிக்ஸ்... திட்டமிட்டசதி...
கவு: நல்ல வேளை டூப் போட்டு எடுத்துட்டாங்கன்னு சொல்லாம விட்டாயே..
செ: எமது உச்ச நிலையைப் பொறுக்காதவர்கள்...
கவு: உன்னோட உச்ச நிலையைத்தான் சி.டியில் பார்த்தோமே.. உன்னைச் சொல்லி என்ன செய்ய... புரோட்டா மாஸ்டர்...சரக்கு மாஸ்டர்கள் எல்லாம்கூட ஆன்மீக பிஸினஸ் ஆரம்பிச்சவுடன் ஆண்டவனோட ஆஸ்தான ரெப்ரஸன்டேடிவ்னு ஜனங்க முடிவு பண்ற வரைக்கும் எவனாலும் ஒன்றும் பண்ணமுடியாது.
செ: அதுவே, உண்மை...
கவு: அதிருக்கட்டும் ரஞ்சா... அந்த நடிகையை எப்பிடிடா பிடிச்சே... செம ஃபிகர்டா
செ: மணவாழ்க்கை முறிந்து சோகத்திலிருந்த அவரினை யாம் ஆட்கொண்டோம்...
கவு: மணவாழ்க்கை இழந்த பெண்ணுக்கு மணவாளனாகித் தொலைக்க வேண்டியதுதானேடா... என்ன ஒரு இதுக்கு... அவளை ஆட்கொள்கிறாய்?
செ: ஆதரவற்றவர்களை அரவணைப்பதுதானே ஆன்மீகப்பணி..
கவு: ஆதரவற்ற கிழவிகளையும், ஊனமுற்ற குழந்தைகளையும் அரவணைப்பதுதானே?
செ: அவர்கள் எம்மை நாடவில்லையே?
கவு: ஏன், உன்னோட ஞானக்கண்ணால் பார்த்து உதவியிருக்கலாமில்ல...
செ: உதவத் திட்டமிட்டிருந்தோம்...
கவு: அதுக்குள்ள உள்ள போட்டுட்டாங்களாக்கும்
செ: பொய்வழக்கு...
கவு: டேய், க்ரோட்டன்ஸ் தலையா.. ஸ்டாப் தட் நான்சென்ஸ்... கேட்கிற கேள்விக்கு நேரடியா பதில் சொல்லு... ஃபார் ஆர்க்யுமென்ட் சேக்... பொய் வழக்குன்னாலும், உண்மையான வழக்குன்னாலும் நீ இதுவரைக்கும் செஞ்ச பூஜை, பஜனை உன்னைக் காப்பாத்தியிருக்கனுமில்ல...
செ: நாத்திகம் பேசுகிறீர்கள்...
கவு: நேரடியா பதில் சொல்லுன்னு முதல்லயே சொன்னேன்...பதில் சொல்ல முடியலைன்னா நாத்திகம்னு சொல்லி எஸ்கேப் ஆயிட வேண்டியது... கோவில் கருவறையில் ஜல்சா பண்றவன் கடவுள் இருக்கார்னு நம்பறவனா?
செ: ஆத்திக, நாத்திக வாதம் என்பதே ரிலேடிவ் டெர்ம்
கவு: அப்பிடிப்போடு.... அதெப்பிடிடா எல்லாக் கேள்விகளுக்கும் விரல் நுனியிலே பதில் வெச்சிருக்கே...
செ: கேளுங்கள், கிடைக்கும்; கேட்டைத் திறங்கள், கேளிக்கை கிடைக்கும் என்பதே எம் மந்திரம்.
கவு: கடைசியா கேட்டைத் திறந்தப்ப கேஸ்தானே வந்துச்சு
செ: கேஸெல்லாம் எமக்குத் தூசு; டெல்லியிலேர்ந்து பெரிய்ய வக்கீல் வந்து எமக்கு ஆஜராகிறார்
கவு: ஏன், லோக்கல்ல வக்கீல்கள் இல்லையா?... ஆமா, உன்னோட சொற்பொழிவுல பின்னிப் பெடலெடுப்பியாமே? திருக்குறள்லயும், நீதிப் புத்தகங்கள்ல இல்லாததயா நீ சொல்லிட்ட
செ: (கண்களை மூடியபடி) எம் பேச்சைக் கேட்க மக்கள் கைகட்டி, வாய் பொத்தி நூற்றுக்கணக்கில் வரிசையில் நிற்பார்களே... அதிலும் எம் காலைக்கழுவ... சிலிர்க்கும் அனுபவம் அது
கவு: அதான்டா, இந்த ஜனங்கள நெனச்சா வாயில கண்டபடி வருது... அனாதை விடுதிக்கு அய்நூறு ரூபாய் தராதவங்க உன்னை மாதிரிப் பயலுக காலைக்கழுவ அய்ம்பதாயிரம் தராங்க... திருந்தவே மாட்டாங்களா?
செ: எக்காலத்திலும், எந்த நாட்டிலும் மாறமாட்டாங்க... (சிரிக்கிறார்)
கவு: அதென்னவோ வாஸ்தவம்... நீ வெளியில வர்றதுக்குள்ள கொறஞ்சது நூறு இடத்துலயாவது உன்னோடு ஆஸ்ரம பிராஞ்ச் ஆரம்பிச்சிடுவாங்க
செ: அதுவே எமது தவ வலிமை
கவு: வெங்காயம்...உன்னோட தவ வலிமையால பல பெண்கள் பலிகடா ஆனதுதான் உண்மை
செ: எம் அறைக்கு 24 மணிநேரமும் நீர்தானா? வேறு பெண்டிர் எவரும் வரமாட்டாரா?
கவு: அடங்கொப்புறானே... உனக்குப் பக்கத்துலேதான் ரெட்டை ஆயுள் தண்டனை பெற்ற பிரம்மதீர்த்தானந்தா இருக்கான்... ஏதாவது 377 பண்ணிடாதீங்கடா
செ: அது எப்படிச் சாத்தியம்?
கவு: நீதான் உடலிலிருந்து வெளியேறி மறுபடியும் உள்ள வந்துருவயாமே... அப்படியே ஒரு ரவுண்டு போய் அந்த திவ்விந்திய மாதாஜியையும், ரஜ்சிதியாவையும் பார்த்துப் பேசி, கலந்துட்டு மறுபடியும் உள்ள வாடா
செ: யாம் போவதும், வருவதும் சகஜம்: வாழ்வில் துன்பமும், இன்பமும் இயல்பு; ஏற்றமும் இறக்கமும் வாழ்க்கை; அனுமதி வேண்டுவோர் எம்மிடம் வருக
கவு: அட, ரஞ்சிதானந்தா, இன்னமும் கொஞ்சநேரம் உங்கூட பேசிட்டிருந்தா என்னையே மாத்திடுவ... ஆளவிடு
(கவுண்டமணி நடையைக் கட்டுகிறார்)
---------------- கற்பனை: 'சுவாமி பகுத்தறிவானந்தா' - ”உண்மை” ஜூலை 16-31_2010
0 comments:
Post a Comment