அவலை நினைத்து
உரலை இடிக்கும் கல்கி
கேள்வி:
இப்போது நாட்டில் கள்ளக் காதல்களும், விவாகரத்துகளும் அதிகமாகிவிட்டது எதைக் காட்டுகிறது?
பதில்:
1) காசேதான் கடவுளடா என்ற உணர்வு
(2) பெண்ணுரிமைகள் வலிமை பெறல் (3)
இதனால் ஆண் ஆதிக்க உணர்வு சிலிர்த்தெழல்
(4) பெற்றோர்களின் ஆளுமை தேய்ந்து போனது
(5) கல்வி தரும் சுதந்திர உணர்வு, தன்னம்பிக்கை
(6) பெண்களுக்கு வேலை வாய்ப்பு தரும் பொருளாதாரப் பாதுகாப்பு
(7)பண்பாடு சீரழிவு என்று பல காரணங்கள். டாக்டர் பட்டத்துக்கு ஆய்வு நடத்தலாம். (கல்கி 1582010)
(1) காசேதான் கடவுளடா உணர்வு ஒரு வகையில் உண்மைதான். கடவுளைத் தரிசனம் செய்யச் செல்வதாக இருந்தாலும் காசுதான் பிரதானமாக இருக்கிறது.
காசு வருகிறது என்றால் வெளியில் ஓட்டலில் தங்கி இருக்கும் பணத்திமிங்கலங்களை நோக்கி திருப்பதி கோயில் பிரசாதத்தை பிரதான அர்ச்சகரே நேரில் கொண்டு போய் கொடுப்பதில்லையா?
கோயிலும் பக்தியும் காட்டும் இந்த உணர்வு சமூகத்திலும் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கலாம் அல்லவா?
(2) பெண்ணுரிமை வலிமை பெறல்.
இதன் மூலம் கல்கி கூட்டம் என்ன சொல்ல வருகிறது? பெண்கள் உரிமையற்று திடப் பிண்டமாகக் கிடக்க வேண்டும்; கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருசன் என்று அடங்கி ஒடுங்கிக் கிடக்க வேண்டும்.
சரி, இந்தப் பெண்ணுரிமையை நினைத்துப் பார்க்க முடியாத காலத்தில் இந்தச் சமாச்சாரங்கள் நடந்ததில்லையா? கல்கி சதாசிவம் சுப்புலட்சுமி காதல் கதைகள் எல்லாம் தெரியாதா?
உரிமை வந்தால் ஒழுக்கம் சிதைந்து விடும் என்பது எத்தகு பிற்போக்குத்தனம்? இவர்கள் கூற்றுப்படி ஒழுக்கம் நிலைக்கவேண்டுமானால் பெண்கள் உரிமை உணர்வு களுக்கு ஆட்படக்கூடாது அப்படித்தானே?
(3) ஆண் ஆதிக்க உணர்வு சிலிர்த்தெழல். ஆண்கள் ஆதிக்க உணர்வு என்பது எப்போதுமே இருந்து வந்தது தான். ஆண்கள் எத்தனை மனைவிகளை வேண்டுமானா லும் கட்டிக் கொள்ளலாம் என்ற நிலைதானே இருந்தது? பெண் என்பவர் ஆணின் உடைமை என்ற சமூகத்தில் ஆண்கள் வைப்பாட்டி வைத்திருப்பது பெருமையாகத் தானே பேசப்பட்டது?
(4) பெற்றோர்களின் ஆளுமை தேய்ந்து போனது. இவர்கள் கூறும் ஆளுமை என்பது என்ன? ஆண் பிள்ளைகளைத் தூக்கி வளர்க்கவேண்டும். பெண் பிள்ளைகளை அடக்கி வளர்க்கவேண்டும் என்பதுதானே?
பெற்றோர்கள் என்ற நிலைப்பாடு கூட காலத்திற்கேற்ப மாறக்கூடிய ஒன்றுதான். பிள்ளைகளுக்கு நற்பழக்கம், நற்கல்வி, நற்பண்பாடு இவற்றைச் சொல்லிக் கொடுப்ப தற்கும், ஆளுமைக்கும் எந்த விதத் தொடர்பும் கிடையாது. பிள்ளைகளை அடித்து உதைத்துக் கட்டுப்படுத்தத் தவறு வதுதான் ஆளுமை தேய்ந்து போனதாக கல்கி கருதுமே யானால், குழந்தை வளர்ப்பில் கடை பிடிக்க வேண்டிய உளவியலும், அறிவியலும் அறியாத தன்மையைத்தான் அது வெளிப்படுத்தும். (5) கல்வி தரும் சுதந்திர உணர்வும், தன்னம் பிக்கையும்: யாருக்கும் தேவைப்படும் உயரிய தன்மைகள் தான் இவை. ஆனால் பொருளைத் தலை கீழாக நின்று கல்கி பார்த்தால் அதற்கு நாம் என்ன செய்ய முடியும்?
சுதந்திர உணர்வும், தன்னம்பிக்கையும் இல்லாத மனிதர்களால், இதைவிட மோசமான வேறு பின் விளைவுகள்தான் ஏற்படும்.
(6) பெண்களுக்கு வேலை வாய்ப்பு தரும் பொருளாதாரப் பாதுகாப்பு. மீண்டும் சுற்றிச் சுற்றி மனுதர்மச் சிந்தனைதான் அவாளை ஆட்டிப் படைக்கிறது. வேலைக்குப் போகும் பெண்கள் ஒழுக்கம் கெட்டவர்கள் என்று காஞ்சி மடாதிபதி சொல்லவில்லையா? அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பு எதற்கு என்ற பத்தாம் பசலித்தனம்தான் அவர்களை ஆட்டிப் படைக்கிறது.
பெண்களுக்கு வேலை வாய்ப்பும், பொருளாதாரமும் இல்லாமல் ஆண்களுக்கு மட்டும் இந்த வாய்ப்புகள் இருந் தால் இந்த நிலை இருக்காது என்று கல்கி உத்தரவாதம் கொடுக்குமா? வெளி நாடுகளில் பெரும் பொருள் ஈட்டி திருமணமும் செய்து கொண்டு, அந்த உண்மையை மறைத்துவிட்டு, சொந்த நாட்டுக்கு வந்து மற்றொரு திருமணமும் செய்து கொள்ளும் ஆண் எத்தர்கள் பற்றி கல்கி என்ன கருதுகிறதோ தெரியவில்லை.
ஜாண் பிள்ளையானாலும் ஆண் பிள்ளையல்லவா என்று பாட்டி மொழியைக் கூறினாலும் கூறக்கூடும்.
(7) எல்லாவற்றுக்கும் மேலாகப் பண்பாடு சீரழிவு: உண்மைதான். அந்தப் பண்பாட்டுச் சீரழிவுக்கு யார் காரணம்?
ஒருவனுக்கு ஒருத்தி என்னும் பண்பாட்டுக்குப் பதிலாக அய்வருக்கும் தேவி அழியாத பத்தினி என்று கூறிக் கோயில் கட்டிக் கும்பிட வைத்த பண்பாடு எந்தப் பண்பாடு?
சிறீரங்கம் ரெங்கநாதர் துலுக்க நாச்சியார் வீட்டுக்குப் போனார் என்று சொல்லி விழா எடுக்கும் பண்பாடு பக்தர்கள் மத்தியில் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாதா?
ஜெகத் குரு என்று சொல்லப்படுபவர், மடத்தை பள்ளியறையாக மாற்றிய மதப் பண்பாடு சமூகத்தில் சீரழிவை ஏற்படுத்தாதா? அர்ச்சகர்களின் சாமியார்களின் கதை என்ன?
ஆன்மிகம் என்று சொல்லி ஓர் இதழில் அளவு கடந்த முறையில் பக்தி வெள்ளத்தைப் பாயவிடுகிறீர்களே அந்தப் பக்திப் பண்பாடு கற்பிப்பது என்ன? எந்தப் பாவத் தையும் செய்யலாம் அது அதற்கென்று பிராயச்சித்தம் உண்டு என்பது மனிதனிடத்தில் பண்பாட்டுச் சீரழிவை ஊக்குவிக்காதா?
அவலை நினைத்துக் கொண்டு உரலை இடிக்க வேண்டாம் கல்கிகள்.
---------------------------------- "விடுதலை” தலையங்கம் 13-8-2010
0 comments:
Post a Comment