Search This Blog

25.8.10

ஜாதிவாரி கணக்கெடுப்பதற்கு பயோ மெட்ரிக் முறை என்பது தேவையற்றது

ஜாதிவாரிக் கணக்கெடுப்புக்கு பயோ மெட்ரிக் முறை காலங்கடத்தும் தந்திரமேயாகும்
இப்பொழுதுள்ள படிவத்தில் ஒரே ஒரு வரியைச் சேர்த்தாலே போதுமானது
முதலமைச்சர் கலைஞர் இதுகுறித்து
பிரதமருக்கும், சோனியாவுக்கும் எழுதவேண்டும்

ஜாதிவாரி கணக்கெடுப்பதற்கு பயோ மெட்ரிக் முறை என்பது தேவையற்றது; இது காலங்கடத்தும் வீண் முயற்சியாகும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங், அய்க்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவர் திருமதி சோனியா ஆகியோருக்கு முதலமைச்சர் கலைஞர் அவர்கள் கடிதம் எழுதவேண்டும்; அல்லது தமிழக நாடாளுமன்ற உறுப்பினர் களைச் சந்திக்கச் செய்யவேண்டும் என்றும் அறிக்கையில் திராவிடர் கழகத் தலைவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

அறிக்கை வருமாறு:

மக்கள் தொகை கணக்கெடுப்பில் ஜாதிவாரியான அம்சம் இடம்பெற்றால்தான், சமூகநீதி இட ஒதுக்கீடு குறிப்பாக மக்கள் தொகையில் மிகப்பெரும் எண்ணிக் கையைக் கொண்ட பிற்படுத்தப்பட்ட மக்கள் தொகை, துல்லியமாகக் கிடைக்க வாய்ப்பு ஏற்படும் என்பதால், ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்ற கட்சி பேதமின்றி ஒரு குரல் கொடுத்து, கருத்தொற்றுமை ஏற்பட்டதை மத்திய ஆட்சியாளர் ஏற்றுக்கொண்டுள்ளது மிகவும் பாராட்டி நன்றி செலுத்தவேண்டிய ஒன்றாகும்.

கட்சி வேறுபாடின்றி ஜாதிவாரி கணக்கு, மக்கள் தொகை கணக்கெடுப்பில் இடம்பெற வேண்டியது அவசியம் என்று கூறப்பட்டாலும், இன்னமும் இதுகுறித்து குறுக்குசால் ஓட்டி, கைக்கெட்டியதை வாய்க்கெட்டாமல் செய்யும் சக்திகள் ஓர் அணியாகத் திரளும் பிற்போக்காளர்கள்; இட ஒதுக்கீட்டு எதிர்ப்பாளர்களாகிய அவர்கள் வசம் சிக்கியுள்ள ஆயுதங்களைப் பயன்படுத்தி முயற்சிக்கின்றனர்.

சமூகநீதிப் போராளிகள் அவர்களை அடையாளம் காணத் தவறக்கூடாது; அத்துடன் அவர்களது சூழ்ச்சியை முறியடிக்கும் வண்ணம் இறுதிவரை விழிப்புடனும், ஒற்றுமையுடனும் செயல்படவேண்டும்.

மூன்று முட்டுக்கட்டைகள்

1. அதிகாரிகளான மேல்ஜாதிவர்க்கத்தினர்

2. அவர்களைக் கொண்ட ஊடகங்கள் ஏடுகள் தொலைக்காட்சிகள்.

3. ஜாதியை நிலை நிறுத்திவிடுமே இந்த ஏற்பாடு என்று புரியாமல் குழம்பி, கொள்ளிக் கட்டையை எடுத்து தங்கள் தலையைத் தாங்களே சொரிந்துகொள்ளும் அப்பாவிகளான பாமரத்தன்மை வாய்ந்த மற்ற மக்கள்.

பயோ மெட்ரிக் முறை தேவையற்றது

மழைவிட்டும் தூவானம் விடவில்லை என்பது போன்று, இப்பிரச்சினையில் ஜாதிவாரிக் கணக்கெடுப்பு பயோ மெட்ரிக் (Bio Metric) என்ற முறையைக் கையாண்டால், அது இந்த யுகத்தில் எளிதில் முடியாது பல ஆண்டுகள் நீடிக்கும் அபாயம் உண்டு.

அது முற்றிலும் தேவையற்றது. இதைத்தான் நேற்று (12.8.2010) நாடாளுமன்றத்தில் முலாயம்சிங், லாலு பிரசாத், சரத்யாதவ் போன்ற முக்கிய தலைவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

காங்கிரஸ், பா.ஜ.க. போன்ற ஜாதிவாரி கணக்கெடுப்பு ஆதரவாளர்களும் கூட இதே கருத்தைத்தான் எதிரொலித்துள்ளார்கள்!

இப்போதுள்ள படிவங்களில் ஜாதி பிற்படுத்தப் பட்டவர் என்று அதில் துணைப் பிரிவுபோல ஜாதி ஒரே வரியில் வீட்டில் உள்ளவர்கள் எண்ணிக்கையைக் கேட்டு எழுதும்போதே குறித்துவிடலாமே!

அங்கமச்ச அடையாளங்கள் எல்லாம் தேவையற்றவை!

இதுபற்றி நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறிய பதிலுரை மிகவும் அதிருப்தி அளிப்பதாகும்.

எடுத்த கொள்கை முடிவினை நடைமுறை சாத்திய மற்றதாகவும் ஆக்கி விடுவதாக அமைந்துள்ளது.

அவரது இந்த வாதம் ஏற்கத்தக்கதல்ல.

ஒரே ஒரு வரி சேர்த்தால் போதுமே!

1. சென்சஸ் அட்டவணை, அதற்குரிய வழிகாட்டும் முறைகள் 2011 பிப்ரவரி மக்கள் தொகையில், எளிதாகச் செய்யலாம்; இன்னமும் படிவங்களை அச்சடிக்கத் தொடங்கவில்லை.

ஒரே ஒருவரி சேர்ப்பதால் குடி முழுகிப் போய்விடாது. எளிதில் லகுவாக ஜாதியைப் பதிவு செய்ய முடியுமே!

கூடுதலாக சில கலங்கள் பத்திகள்தானே அந்த வினாப் பட்டியலில் சேர்க்கப்படவேண்டும்?

2. முன்னாள் ரிஜிஸ்டிரார் ஜெனரலும், சென்சஸ் கமிஷனர் ஆஃப் இண்டியாவும் ஆன டாக்டர் விஜயனுன்னி (Dr. M. Vijayanunni) அவர்கள் மிகவும் தெளிவாக 23.7.2010இல் பெங்களூருவில் நடைபெற்ற தேசிய மாநாட்டில் அளித்த ஒரு ஆய்வுரையில் குறிப்பிட்ட கருத்துகள் கீழே தரப்படுகின்றன:

ஒரு வெளியார் நிறுவனம் ஒளிப்படம் எடுப்பது, விரல்ரேகை பதிவு செய்வது, அய்ரிஸ் பிரின்ட் எடுப்பது போன்ற செயல்களை மேற்கொண்டிருக்கும் பயோமெட்ரிக் புள்ளிவிவரத் தொகுப்பு நேரத்தில் சென்சஸ் அமைப்பின் நெருங்கிய மேற்பார்வையும் பங்கேற்பும் இருக்காது. அந்த நேரத்தில் ஜாதி பற்றிய புள்ளிவிவரம் தொகுக்கப் பட்டால், அது ஒரு சாதாரணமான பயன் ஏதுமில்லா செயலாகவே தரம் தாழ்ந்துபோகும். நம்பத்தகுந்த முழுமையான ஜாதிவாரியான புள்ளிவிவரங்களாக அது அமையாது. மக்கள் தொகைக் கணக்கெடுப்புடன் இவ்வாறு பயோமெட்ரிக் புள்ளி விவரங்களைத் தொகுப்பது என்பது இப்போதுதான் முதன் முறையாக மேற்கொள்ளப்படுவதால், அது எந்த அளவுக்கு வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட இயலும் என்பதை எவரும் அறுதியிட்டுக் கூறமுடியாது. அவ்வாறு பயோமெட்ரிக் புள்ளிவிவரத் தொகுப்புடன் சேர்த்து ஜாதிவாரி மக்கள் தொகைப் புள்ளிவிவரக் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டால், ஜாதிவாரி மக்கள் கணக்கெடுப்பது என்னும் நோக்கமே தோல்வி அடைந்துவிடும் என்று குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் அமலில் உள்ள 69 சதவிகித இட ஒதுக்கீடுபற்றிய வழக்கில், உச்சநீதிமன்றம் ஓராண்டு அவகாசம் தந்துள்ளது. அதற்குள் நாம் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட (மிகவும் பிற்படுத்தப்பட்ட, மலைவாழ் மக்கள் இதில் அடக்கம்) கணக்கெடுப்பு முடியவேண்டும். அதுபற்றி தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையம் தொகுத்து, எத்தனை சதவிகித இட ஒதுக்கீடுகள் நியாயம் உள்ளதுபற்றி அறிவிக்கவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளதால்,

மற்ற மாநிலங்களைவிட நமது மாநிலத்திற்கு இந்த ஜாதிவாரி கணக்கெடுப்பின் அவசரமும், அவசியமும் மிகவும் அதிகமாகும்.

முதலமைச்சருக்கு வேண்டுகோள்

எனவே, நமது முதல்வர் கலைஞர் அவர்கள் பிரதமர் மன்மோகன்சிங் அவர்களுக்கும், அய்க்கிய முற்போக்குக் கூட்டணி தலைவர் திருமதி. சோனியா காந்தி அவர்களுக்கும் கடிதம் எழுதி, ஜாதிவாரி கணக்கெடுப்பில் பயோ மெட்ரிக் முறை இடம் பெறாமல், எளிமையான வகையில் உடனடியாக ஒரு வரி கூடுதல் கலம் மூலமே தகவல் திரட்டப்படவேண்டும் என்பதை வற்புறுத்திட வேண்டும். முடிந்தால் நமது தமிழ்நாட்டு எம்.பி.,க்கள் அனைவருமோ அல்லது குறைந்தபட்சம் கூட்டணிக் கட்சி எம்.பி.,க்களோ சேர்ந்து சென்றும், பிரதமரைப் பார்த்து வலியுறுத்தி விடலாம் என்று கேட்டுக்கொள்கிறோம்.


தலைவர்,
திராவிடர் கழகம்.

சென்னை
13.8.2010

0 comments: