ஜாதியின் பெயரால் கட்சி நடத்துகிறவர்கள்
திராவிடர் இயக்கத்தைப் பற்றி பேசலாமா?
தமிழர் தலைவர் தர்க்க ரீதியான கேள்வி
ஜாதியின் பெயரால் கட்சி நடத்துகிறவர்கள் சமூக நீதியைப் பற்றியும், திராவிடர் இயக்கங்களைப் பற்றியும் பேசலாமா? என்று திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் கேள்வி எழுப்பினார்.
தஞ்சை மாவட்டம் அம்மாப்பேட்டையில் 17.8.2010 அன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:
கடவுள் எப்படியப்பா இருப்பார் என்று கேட்டால் கடவுளை வணங்குகிறவன், நான் நம்புகிறேன் என்று ஒரே வார்த்தையில் சொல்லி விட்டுப் போய்விடுகின்றான். அவனிடம் போய் நாம் எப்படி மாரடிக்க முடியும்? (கைதட்டல்). நம்புவதற்கு உனக்கு உரிமை உண்டு. அறிவு பூர்வமாக ஆராய்வதற்கு உனக்கு ஏன் தயக்கம்?
கண்டவர் விண்டிலர்
கண்டவர் விண்டிலர்; விண்டவர் கண்டிலர் அப்படி என்றால் என்ன அர்த்தம்? பார்த்தவன் சொன்னதில்லை. சொன்னவன் பார்த்ததில்லை. அப்படியானால் அதற்குப் பெயர் என்ன? ஆனாலும் அதை எல்லோரும் நம்பிக்கொண்டிருக்கின்றானே. அது மாதிரி நம்முடைய நாட்டில் கடவுள் மூடநம்பிக்கை மட்டுமல்ல; அரசியலிலும் பல வகையான மூடநம்பிக்கைகள் பல பேருக்கு இருக்கிறது.
அரசியலுக்கு திடீரென வந்தவர்
அரசியலில் திடீரென்று வந்த காரணத்தினாலே அவர்கள் எதை வேண்டுமானாலும் சொல்லலாம் என்று கருதுகிறார்கள். ஆகவே அதைப் பற்றி எல்லாம் நாம் கவலைப்படாமல் இந்த இயக்கம் முழுக்க, முழுக்க சமுதாயத்திற்காகப் பாடுபடுகின்ற இயக்கம். சமூகநீதியைப் பரப்புகின்ற இயக்கம். அதற்காகத்தான் விடுதலை ஏடு இருக்கிறது. விடுதலையில் பார்த்தீர்களேயானால் எல்லா கேள்விகளுக்கும் தெளிவான பதில் கிடைக்கும். விடுதலையில் வரலாறு இருக்கும்.
இங்கே சொன்னார். அழகாக மனிதநேயர். கேள்வி கேட்டு தூண்டி விட்டுவிடுவான். நாம் அறிவு பூர்மாக பதில் சொன்னால் நம்மாள்களுக்கு அவ்வளவு சுலபமாக விளங்காது.
பூணூல் போட்டவன் கேட்கிற கேள்வி
ஏங்க! ஜாதி ஒழிய வேண்டும் என்று சொல்லு கின்றீர்கள். ஆனால் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தவேண்டும் என்று சொல்லுகின்றீர்களே இது எப்படிங்க? பெரியார் கொள்கைக்கே விரோதம் இல்லையா? என்று சொல்லுவான்.
நம்மாளும் விஷயம் தெரியாமல் ஆமாங்க, அது விரோதம் தாங்க என்று சொல்லுவான். சொல்லு கிறவன் யார்? முதுகில் பூணூல் போட்டிருக் கின்றவன். ஜாதியைக் கணக்கெடுக்க வேண்டும் என்று சொல்லுகின்றவன் யார்? வெறும் முதுகுக்காரன். இராமகோபாலன் ஜாதி வாரிக் கணக்கெடுப்பு கூடாது என்று ஒரு கூட்டத்தில் பேசினார். வாங்க, சட்டையைக் கழற்றுவோம்
இரண்டு பேரும் ஓர் இடத்தில் கூடுவோம். இரண்டு பேரும் சட்டையைக் கழற்றுவோம். முதுகில் பூணூல் உள்ளவர், ஜாதியைக் கணக் கெடுக்கக் கூடாது. ஜாதியைப் போடக்கூடாது என்று சொல்லுகிறார்.
நான் ஜாதியை விட்டுவிட்டு திருமணம் செய்து கொண்டவன். கணக்கிற்கு ஜாதி வேண்டும் என்று சொல்லுகின்றவன். ஏனென்றால் இதை வைத்துத் தான் நீதிமன்றத்தில் கேட்கிறான். பிற்படுத்தப் பட்டவன் தாழ்த்தப்பட்டவன் எத்தனை சதவிகிதம் இருக்கிறீர்கள். அதன்படிதான் இடஒதுக்கீட்டைக் கொடுக்க முடியும் என்று நீதிமன்றத்திலே கேட் கின்றான்.
1931க்குப் பிறகு இல்லையே
அந்த இடஒதுக்கீட்டைப் புள்ளிவிவரத்தோடு சொல்லுங்கள் என்று கேட்கின்றார்கள். 1931இல் தான் ஜனத்தொகை கணக்கெடுப்பு நடை பெற்றிருக்கிறது. அதற்கப்புறம் ஜாதிவாரி கணக் கெடுப்பு இல்லையே. இப்பொழுது எவ்வளவு என்று கேட்கின்றான்.
உச்சநீதிமன்ற நீதிபதிகளின் கேள்விக்கு பதில் சொல்ல, இடஒதுக்கீட்டைக் காப்பாற்ற, சமூக நீதியைக் காப்பாற்றுவதற்காக ஜாதிவாரி கணக் கெடுப்புத் தேவை என்று சொல்லுகின்றோம்.
அரசியல் சட்டத்தில் என்ன உள்ளது?
எதிலே இவர்கள் ஜாதியை விட்டிருக்கின்றார்கள்? பார்ப்பனர்களுக்கு ஆவணி அவிட்டத்தின் பொழுது பூணூல் மாற்ற விடுமுறை விடுகின்றார்கள். பழைய பூணூலைக் கழற்றி விட்டு புதிய பூணூலைப் போடுகின்றான். பூணூல் எதற்கு அடையாளம்? முதுகு சொரிவதற்கு வதிசயாக இருக்கிறது என்பதற்காகவா அது. ஜாதியின் சின்னம்தானே பூணூல். ஆவணி அவிட்டம் கொண்டாடுகின்றவன், ஜாதி வாரி கணக்கெடுப்பு கூடாது என்று சொல்லுகின்றான். வித்தியாசமே இருக்கக்கூடாது என்று சொல்லுகின்ற நாங்கள் ஜாதி வாரியாகக் கணக் கெடுப்பு நடத்தவேண்டும் என்று கேட்கின்றோம்.
ஏன்? ஜாதி இன்னமும் ஒழியவில்லையே. அரசியல் சட்டத்தில் தீண்டாமை ஒழிக்கப்பட்டுவிட்டது என்று சொல்லப்பட்டிருக்கிறதே தவிர, ஜாதி ஒழிக்கப்பட்டுவிட்டது என்று இல்லை. அரசியல் சட்டத்தில் ஜாதியை ஒழித்திருந்தால் நாம் கேட்கமாட்டோம். ஜாதியை ஒழிக்க வில்லையே.
கட்சியின் பெயரில் ஜாதி
ஒவ்வொருத்தன் பெயருக்குப் பின்னாலும் ஜாதி இருக்கிறது. நம்முடைய நாட்டில் கட்சித் தலைவர்கள் பெயரிலேயே ஜாதி இருக்கிறது. ஜாதியை வைத்துக்கொண்டே பல பேர் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். ஜாதி என்கின்ற மூலதனம் இல்லை என்றால் அவர்களால் வாழ முடியாது. ஜாதியை ஒழிக்க வந்தவன் ஜாதி வாரி கணக்கெடுப்பு தேவை என்று சொல்லுகின்றான். ஜாதியை ஒழிக்காத, ஜாதியில் ஊறிப்போனவன் அய்யய்யோ ஜாதி வாரிக்கணக்கெடுப்பு நடத்துவதா என்று கேட்டால் என்ன அர்த்தம்? அடையாளம் தெரியாமல் உள்ளே புகுந்துவிட வேண்டும். தாங்கள் ஏற்கெனவே அடைந்திருக்கிற நூற்றுக்கு நூறு சுரண்டல் இருக்கிறதே, அது தொடரவேண்டும் என்பதுதானே அவர்களின் எண்ணம்?
சேப்பர்ஸ் அண்டு மைனர்ஸ்
இதை நாள்தோறும் விளக்குவதற்கு விடுதலை இதழ் தேவை. இந்த மேடைகள் தேவை. எனவேதான் இரட்டைக் குழல் துப்பாக்கிகளாக திராவிடர் கழகமும், திராவிட முன்னேற்றக் கழகமும் எப்போதும் இயங்கும் ஆட்சியிலே கலைஞர் அவர்கள் செய்வார்கள். அதற்கு முன்னாலே சேப்பர்ஸ் அண்டு மைனர்ஸ் படை மாதிரி ஒரு இராணுவம் முன்னாலே செல்லும். சாலை அமைப்பது, பாலம் போடுவதை முன்னாலே சென்று செய்யும்.
அந்தப் பணிதான் திராவிடர் கழகத்தினுடைய பணி (கைதட்டல்). ஆகவே எங்களைப் பொறுத்த வரையிலே இந்த ஆட்சிக்கு உறுதுணையாக இருப்போம். காலம் காலமாக இந்த மாதிரி ஒரு ஆட்சி இந்தியாவின் வரலாற்றிலே கிடையாது. தமிழ்நாட்டிலே இப்பொழுது அய்ந்தாவது முறையாகப் பொற்கால ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறாரே கலைஞர். இந்த மாதிரி ஒரு ஆட்சியை நீங்கள் காட்ட முடியாது.
வாக்குறுதியை நிறைவேற்றியதற்கு வழக்கா?
உலகத்தில், ஜனநாயகத்தில் உள்ள நிலைமை ஒரு சின்ன விசயம். தேர்தல் வாக்குறுதி என்று ஒன்றைக் கொடுப்பார்கள். யாரும் தேர்தல் வாக்குறுதியை தேர்தல் அறிக்கையைப் பார்க்கவே மாட்டார்கள்.
ஆனால் திமுகவின் தேர்தல் வாக்குறுதிகள், தேர்தல் அறிக்கைகள் கலர் டி.வி கொடுப்போம் என்பதிலிருந்து, 1 கிலோ அரிசி இரண்டு ரூபாய்க்கு கொடுப்பதிலிருந்து இவை எல்லாம் பார்த்தீர்களே யானால் இவை எல்லாம் முடியுமா? என்று சவால் விட்டார்கள். அத்தனையையும் செய்து முடித்து விட்டு, தேர்தல் வாக்குறுதியாக இல்லாத வாக்குறுதி
குடிசைகளே இல்லாத கான்கிரீட் வீடுகள், நேற்று கூட ஒவ்வொரு கான்கீரிட் வீட்டிற்கும் ரூ.75 ஆயிரம் என்று அறிவித்திருக்கின்றார். விவசாயி களுக்கு பழைய மோட்டாரை எடுத்துவிட்டு புதிது போடுகிறோம் என்று சொல்லியிருக்கின்றார்கள்.
இன்னும் என்ன செய்ய?
கலைஞர் அவர்கள் இன்னும் என்ன செய்யப் போகிறார் என்றே தெரியவில்லை. விவசாயிகளுக்கு என்ன குறை சொல்வது என்றும் தெரியவில்லை. ஒருவன் தமிழ்நாட்டிலிருந்து போய் திமுக ஆட்சி மீது உச்ச நீதிமன்றத்தில் வழக்குப் போட்டி ருக்கின்றான்.
இந்த டி.வி. செட்டை எங்கு பார்த்தாலும் சொன்னபடி கொடுக்கிறார்கள். இதைத் தடுக்க வேண்டும். உலகத்தில் இதற்கு முன்பு அரசியல் கட்சிகளை குற்றம் சொல்ல வேண்டுமானால் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுவதற்காக வழக்கு போடலாம். தேர்தலின்பொழுது சொன்னார்கள். இந்தக் காரியத்தைச் செய்யவில்லை என்று.
இப்பொழுது வழக்கு எப்படி வந்திருக்கிற தென்றால், தேர்தல் வாக்குறுதியை ஏன் நிறைவேற்றினார்கள்? அது தப்பு; அதைத் தடுங்கள் என்று வழக்குப் போடக்கூடிய அளவிற்கு வந்ததென்றால், இது ஒன்றே போதும். திமுக ஆட்சி தனித்தன்மையாக இந்தியாவிலேயே வேறு. எந்த ஆட்சியிலும் இல்லாத அளவிற்கு இருக்கிறது என்பதற்கு இதைவிட வேறு என்ன உதாரணம் வேண்டும்? இந்த மாதிரி விசித்திர நிலையை எங்காவது காண முடியுமா? முதலில் என்ன சொன்னார்கள்? இதே ஆள்கள் கலர் டி.வி., இலவச எரிவாயு, எல்லாம் கொடுக்க முடியுமா? அம்மா சொல்லுவார்கள் இதெல்லாம் நடக்குமா என்று சொன்னார்கள்.
இன்னொருத்தர் சொன்னார் டி.வியை அப்படியே கொடுத்தாலும் அதைப் பார்க்க முடியுமா? அது ரிப்பேர் ஆகிவிடும் என்று சொன்னார்கள். இதை எல்லாம் தாண்டி அடுத்த கட்டம் தேர்தல் வரப்போகிறது என்றவுடன் டி.வி. கொடுக்கி றார்களா? அதைத் தடுக்க வேண்டும் என்று சொல்லக்கூடிய அளவிற்கு செயல்திறன் உள்ள ஓர் ஆட்சியாக உள்ள கலைஞர் ஆட்சியைத் தடுக்க வேண்டும் என்று நினைக்கின்றார்கள்.
மக்களிடையே விழிப்புணர்ச்சி ஏற்படுத்த...
எனவே மக்களுடைய அறியாமை மக்களுடைய விழிப்புணர்வைத் தேவையான அளவுக்கு உருவாக்க வேண்டும். அதற்குத் தேவை பிரச்சாரம், பிரச்சாரம், பிரச்சாரம் செய்ய வேண்டும்.
ஆளுங்கட்சியும் கூட, தங்களுடைய சாதனைகளே போதும் என்று கருதிக் கொண்டிருக்கக் கூடாது. இது போன்ற கூட்டங்களை அவ்வப்பொழுது கிராமங்கள் உள்பட போட்டு, அவர்கள் செய்த காரியங்களை மக்கள் மத்தியிலே விளக்கமாகச் சொல்ல வேண்டும். எதிர்க்கட்சிகள் எங்கேயாவது வாய்புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்று பேசினால் அதற்கு தக்க பதிலடி கொடுக்கவேண்டும்.
தி.மு.க ஆட்சியின் சாதனைகள்
அதற்கு ஏடுகள் தேவை. மற்ற ஏடுகளில் பார்த்தீர்களேயானால் நேர்மாறாக எழுதுவார்கள். தி.மு.க ஆட்சியின் சாதனைகளைச் சொல்லுவதற்கு இரண்டு ஏடுகள்தான் இருக்கின்றன. ஒன்று முரசொலி மற்றொன்று விடுதலை. அதிலேயும் ஆளும் கட்சிக்கு சில ரிசர்வேஷன்கள் இருக்கிறது. சில எல்லைகள் உண்டு. எங்களுக்கு அதெல்லாம் கிடையாது.
நாங்கள் துணிந்து எதை வேண்டுமானாலும் சொல்லுவோம். எதை வேண்டுமானாலும் எழுதுவோம். அய்யா சொல்லுவார்: எதையும் சிந்தியுங்கள் கேட்டால் கேளு. விட்டால் விடு. எனக்கென்ன இருக்கிறது என்று சொல்லுவார். பெரியார் அய்யா நல்ல உதாரணம் சொன்னார். ஒருவன் திடீரென்று சொன்னான். உலகில் எந்த வங்கி காலாவதியானாலும் எனக்குக் கவலை இல்லை என்று சொன்னான்.
எந்த வங்கி வீழ்ந்தாலும் எனக்குக் கவலை இல்லை
எல்லோரும் அவரை ஆச்சரியமாகப் பார்த் தார்கள். என்ன இவ்வளவு பெரிய பணக்காரர் போலிருக்கிறதே. எந்த பேங்க் விழுந்தாலும் பரவாயில்லை. எனக்கு அதைப் பற்றிக் கவலை இல்லை என்று சொன்னார்.
அவனவன் கவலைப்படுவான். பேங்க் வீழ்ந்து விட்டால், போட்ட பணம் கிடைக்காது என்று கவலைப்படுவான். உடனே எல்லா செய்தியா ளர்களும் அவரை சுற்றிக்கொண்டு நீங்கள் யாருங்க? அம்பானிக்கு சொந்தக்காரரா அல்லது டாடாவுக்கு சொந்தக்காரரா என்று கேட்டார்கள். அவன் சிரித்துக் கொண்டே சொன்னான், இது என்னய்யா, பெரிய சங்கதி, எந்த பேங்கிலேயும் ஒரு காசு போடவில்லை. எனக்கென்னய்யா கவலை என்று சொன்னானாம். அது மாதிரி எங்களைப் பொறுத்தவரையிலே மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும். மக்களுக்கு நன்மை செய்பவர்களை அடையாளம் காட்ட வேண்டியது எங்களுடைய பொறுப்பு.
இந்தச் சமுதாயத்தின் நலனைப் பாதுகாப்பது எங்களுடைய கடமை. அந்த அடிப்படையில்தான் நாங்கள் இந்தப் பிரச்சாரத்தைத் தொடர்ந்து செய்து கொண்டு வருகின்றோம். எனவே அம்மாப்பேட்டையிலே ஒரு நீண்ட இடைவெளிக்குப்பின்னாலே ஓர் அற்புதமான கூட்டத்தை ஏற்பாடு செய்து நல்ல சிந்தனைகளை மக்கள் சிந்திக்கக் கூடிய அளவிற்கு இன்றைக்கு இந்த ஏற்பாட்டை செய்திருக்கிறது. இளைஞர்கள் இந்த இயக்கத்தை நோக்கி வரவேண்டும். திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் இவற்றினுடைய பணியின் மூலமாகத்தான் இன்றைக்கு மூட நம்பிக்கையை ஒழிக்க முடியும்.
மெகா ஊழல்
தினமும் பத்திரிகையைப் பாருங்கள். குடந்தை அருகே சர்வேஸ்வரர் கோயில் தேரிலிருந்து 5 கிலோ வெள்ளித் தகடுகள் கொள்ளை. கடவுள் சர்வ சக்தி படைத்தவன். போலீசிடம்தான் புகார் சொல்ல வேண்டும்.
அதே மாதிரி திருப்பதி கோயில் அறங்காவலர்கள் மீது கிரிமினல் வழக்குகள் பதிவுமெகா ஊழல். ஊழலிலேயே மெகா ஊழல் எங்கே என்றால் திருப்பதி கோயிலில்தான். இருக்கிற கடவுள் களிலேயே கேபிடலிஸ்ட் கடவுள் அவர்தான். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஏகப்பட்ட ஊழல்.
இந்த இயக்கம் இல்லை என்றால், மக்களிடம் இடித்துச் சொல்வதற்கு வேறு யார் இருக்கிறார்கள்? ஆகவேதான் இந்த இயக்கம், இந்த ஏடுகள் மிக மிக முக்கியம். எப்படி கண்ணை இமை காப்பது போல இந்த இயக்கங்களைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு திராவிட மக்களுக்கு உண்டு. தி.க., தி.மு.க தோழர்களுக்கு நன்றி
ஆகவே கட்சி வேறுபாடு இல்லாமல், கருத்து மாறுபாடு என்ன இருந்தாலும்; நீங்கள் அதைத் தெளிவுபடுத்திக்கொள்ள இந்த ஏடுகளைப் படியுங்கள். இந்தக் கூட்டங்களுக்கு வாருங்கள். உங்கள் சந்தேகங்களை தீர்த்துக்கொள்ளுங்கள். அதன் மூலம் உங்களின் எதிர்கால சந்ததியினரின் நல்வாழ்விற்கு பாதுகாப்பான ஒரு வாய்ப்பை உருவாக்கும் என்று கேட்டு, வாய்ப்பளித்த அனைவருக்கும் நன்றி கூறி, மிகச் சிறப்பான இந்தக் கூட்டத்தை நடத்திய தஞ்சை மாவட்ட திராவிடர் கழகத் தோழர்களுக்கும், திராவிட முன்னேற்றக் கழகத் தோழர்களுக்கும் மனமார்ந்த நன்றியையும், பாராட்டையும், மகிழ்ச்சியையும் தெரிவித்து விடைபெறுகிறேன்.
இவ்வாறு தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.
--------------- "விடுதலை" 27-8-2010
0 comments:
Post a Comment