Search This Blog

2.8.10

பக்தி வந்தால் புத்தி போகும் புத்தி வந்தால் பக்தி போகும்!

பக்தி - பணம்!

பிணையில் வெளிவந்துள்ள இரண்டு சாமியார்கள் வெளியில் ஜாம் ஜாம் என்று ராஜநடை போட்டுத் திரிகிறார்கள்.

ஒருவர் கொலைக் குற்றத்தின்கீழ் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் கம்பி எண்ணி பிணையில் வெளிவந்து பவள விழா நடத்திக் கொண்டிருக்கும் காஞ்சி ஜெயேந்திர சரஸ்வதி.

இன்னொருவர் நித்யானந்தா. இவர் மறுபடியும் தன் சித்து வேலையைத் தொடங்கி விட்டார். சில விளம்பர யுக்திகளைக் கையாள்கிறார். அவர்மீது சேற்றை வாரியி றைத்த சில ஏடுகள்கூட இப்பொழுது அவரை வேறு வகையில் சித்திரிக்கத் தொடங்கி விட்டன. பல வெளியீடுகளும் வெளிவரத் தொடங்கியுள்ளன.

பெ.நா. இறையடியான் எம்.ஏ.,எல்.எல்.பி., பொதுச்செயலாளர் தனித்தமிழர் சேனை பெங்களூர் என்ற முகவரியிலிருந்து பருவ இதழ்போல ஒன்றை வெளியிட்டு தமிழ் நாடெங்கும் பரப்பிக் கொண்டுள்ளனர்.

யோகானந்தாவின் காமலீலைகளை மிகவும் நுணுக்கமாக திட்டமிட்டு வெளிச்சத் துக்குக் கொண்டு வந்தவர்கள்மீது இந்த இதழ் குற்றப் பத்திரிகை படிக்கிறது.

ஆசிரமத்திற்கு வரும் பெண்களோடு உடலுறவு கொள்ள ஒப்பந்தம் போடப்பட்ட விவகாரங்கள் சந்தி சிரித்தன அல்லவா அதற்கெல்லாம் புதிய விளக்கங்களைக் கூற ஆரம்பித்துவிட்டன.

நித்யானந்தா லீலைகளை ஒளிபரப்பிய காரணத்தால் சன் தொலைக்காட்சி நிறு வனத்துக்கு வியாபாரத்தில் 200 கோடி ரூபாய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இந்த வெளியீடு கதைவிட்டுள்ளது.

பெங்களூருவில் ஒரு கலாச்சார அடியாள் படையை சிறீராம் சேனா என்ற பெயரில் பிரமோத் முத்தலிக் என்பவர் நடத்திக் கொண்டுள்ளார். அவரிடம் ஒரு பேட்டியை வாங்கிப் போட்டுள்ளனர்.

நித்யானந்தா தவறு செய்துவிட்டார் என்று தெரிந்தபோது பிடதி ஆசிரமத்தை தாக்கியவர்கள் நாங்கள். ஆனால், இவர்மீது எவரும் புகாரும், நேரடி சாட்சியமும் அளிக்க வில்லை. எனவே, அவர் எந்தத் தவறும் செய்யாதவர் என்றே தெரிகிறது. மத்திய அரசாங்கம் தொடக்கம் முதலே இந்துக்களின் மீதுள்ள காழ்ப்புணர்ச்சியை காட்டவே இதுபோல் அவதூறு கிளப்புகிறது. இனிமேல் இந்துக்களின்மீது கை வைத்தால் சிறீராம் சேனா பார்த்துக்கொண்டு சும்மா இருக்காது என்று கூறியுள்ளார்.

இந்த பிரமோத் முத்தலிக் எப்படிப்பட்டவர் என்று தெரிந்துகொள்ள வேண்டுமா? 50 லட்சம் ரூபாய் கொடுத்தால், நாட்டில் எங்கு வேண்டுமானாலும் சிறீராம் சேனா வகுப்புக் கலவரத்தை அரங்கேற்றத் தயார் என்று சொன்னவர்.

நித்யானந்தாவின் லீலா வினோதங்களை ரகசிய கேமராமூலம் வெளியில் கொண்டு வந்ததுபோலவே, தெகல்கா மாத இதழும், ஹெட்லைன்ஸ் டுடே செய்தித் தொலைக்காட்சியும் நடத்திய ரகசிய கேமரா நடவடிக்கைமூலம் இந்தத் தகவலை வெளியில் கொண்டு வந்துள்ளன.

ஆக, பெரும் பணத்தைச் செலவிட்டு, மீண்டும் தன் நிலையைத் தக்க வைக்கும் வேலையில், நித்யானந்தாக்கள் இறங்கியுள்ளனர். பாமர மக்களின் பக்தியும், கறுப்புப் பணபலமும் சேர்ந்தால் நாட்டில் எதையும் சாதித்துவிடலாம், எதையும் தலைகீழாகப் புரட்டியடித்துவிடலாம் என்ற மமதையில் திரியும் இவர்களைத் தோலுரிப்போம்!

பக்தி வந்தால் புத்தி போகும் புத்தி வந்தால் பக்தி போகும்!

------------------மயிலாடன் அவர்கள் 2-8-2010 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

0 comments: