Search This Blog

22.8.10

ஜாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்புக்கு எதிராக பொதுவாகக் கூறப்படும் கருத்துகள்



1. 2011 மக்கள் தொகைக் கணக்கெடுக்கும் பணியின் முதல் கட்டம் ஏற்கெனவே தொடங்கி நடைபெற்று வருவதால் ஜாதிவாரிய புள்ளிவிவரங்கள் தொகுப்பதற்கான காலம் கடந்துவிட்டது.

2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் முதல் கட்டப் பணி அதாவது வீடுகளைக் கணக்கெடுக்கும் பணி முடிந்துபோனதால், மக்கள்தொகைக் கணக்கெடுக்கு நடைமுறையில் மாற்றங்கள் செய்வதன் மீது அது எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. 2011 பிப்ரவரியில் நடைபெற உள்ள மக்கள் தொகைக் கணக்கெடுப்புக்கான படிவங்கள் வடிவமைக்கப்பட்டு இன்னும் அச்சிடப்படவில்லை என்பதால், இப்பணியின் காலத்திட்டத்தையும், அறிவுரைகளையும் ஜாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பைச் சேர்ப்பதற்கு ஏற்ப எளிதாக மாற்றி அமைத்துக் கொள்ளலாம். தற்போதுள்ள சென்சஸ் கேள்வித் தாளில் ஜாதியைக் குறிப்பிடுவதற்கான ஒரே ஒரு காலத்தைக் கூடுதலாகச் சேர்த்தாலே போதுமானது. 2. தேசிய அளவில் பேணப்படும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் பட்டியலுக்கும், மாநிலங்களால் பேணப்படும் பட்டியல்களுக்கும் இடையே வேறுபாடுகள் உள்ளன. ஒரு மாநிலத்தில் பிற்படுத்தப்பட்ட சமூகம் என்று பட்டியலிடப்பட்ட இனம் வேறு ஒரு மாநிலத்தில் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இல்லை. மூன்று நாள் பயிற்சி அளிக்கப்பட்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பவர்களாக பெரும்பாலும் ஆசிரியர்களே நியமிக்கப்பட்டுள்ளனர்; இவர்களால் இந்தச் சிக்கல்களை எல்லாம் சரியாகக் கையாள முடியும் என்று எதிர்பார்க்க முடியாது.

ஜாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுக்கும் நேரத்திலேயே அந்த ஜாதி பிற்படுத்தப்பட்டதா இல்லையா என்று கணக்கெடுப்பவரால் அடையாளம் காணப்பட வேண்டுமென்றால்தான் இத்தகைய சிரமங்கள் ஏற்படும். அவ்வாறு செய்வது இயலக் கூடியதும் அல்ல. அனைத்து ஜாதியினர் பற்றிய புள்ளி விவரங்களையும் தொகுப்பது என்பதன் மூலம் இந்தத் தடைகளைக் கடந்துவிடலாம். கணக்கெடுக்கும் போது, பிற்படுத்தப்பட்ட ஜாதியை மட்டுமேகேட்டு எழுதப்போவதில்லை; ஒரு ஜாதி பிற்படுத்தப்பட்டதா இல்லையா என்பதும் முடிவு செய்யப்படப் போவது இல்லை. மத்திய மாநில பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் பட்டியலைப் பார்க்க வேண்டிய அவசியமும் இல்லை. கணக்கெடுக்கப்படும் அனைத்து மக்களின் ஜாதி என்ன என்பது மட்டும் கேட்டு எழுதப்பட்டால் போதுமானது. சரிபார்ப்பது, வகைப்படுத்துவது என்பது சென்சஸ் அலுவலர்களால் பின்னர் மேற்கொள்ளப்படப் போகும் பணியாகும். மேலும், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் பற்றி கடந்த சென்சஸ்களின்போது அடையாளம் கண்டு, தகவல் தொகுக்க உதவி செய்த தேசிய பணிப் பிரிவு (நேஷனல் டாஸ்க் ஃபோர்ஸ்) அல்லது ஆலோசனைக் குழுவின் உதவியை இதற்கும் பெறலாம்.

3) யுனிக் அய்டென்டிபிகேஷன் அதாரிடி ஆஃப் இந்தியா Unique Identification Authority of India (UIDAI) வினால் பயோமெட்ரிக் தகவல்கள் தொகுக்கப்படும்போது ஜாதிவாரி புள்ளிவிவரங்களைத் தொகுப்பது எளிதாக இருக்கும்.

இரண்டு காரணங்களுக்காக இதை மாபெரும் தவறு என்று கூறலாம். இத்தகைய பெரும் அளவிலான புள்ளிவிவரங்களைக் கையாளுவதற்கு ORGI பெற்றுள்ள அமைப்பு ரீதியிலான தகுதியும், அனுபவமும் UID அமைப்புக்கு இல்லை என்பது முதலாவது. இரண்டாவது, ஜாதிகளின் பெயர்களை மட்டுமே UID யால் தொகுக்க இயலுமே அன்றி, அவர்களின் சமூகப் பொருளாதார நிலை பற்றிய புள்ளி விவரங்களைத் தொகுக்க இயலாது. ஜாதிகளின் சமூகப் பொருளாதா நிலை பற்றிய தெளிவாள ஆதாரங்கள் தேவை என்னும் நிலையில், சமூகக் கொள்கையின் கண்ணோட்டத்தில் இது அதிக அளவில் உதவி செய்வதாக இருக்காது.

4) சமூக நீதி மற்றும் அதிகாரமளிக்கும் அமைச்சகம் அல்லது பழங்குடி மக்கள் விவகாரத் துறை ஆகிய ஒன்றினிடத்தில் ஜாதிவாரியான மக்கள் தொகைப் புள்ளி விவரம் தொகுக்கும் பணியை ஒப்படைக்கலாம்.

ஜாதிகள் மற்றும் பழங்குடியின மக்களின் விவகாரங்களை இந்த அமைச்சகங்கள் கையாண்டு வருகின்றன என்றாலும், இந்தப் பணியை மேற்கொள்ளும் அளவுக்கான கட்டமைப்போ, அனுபவமோ, அடிப்படை அமைப்போ இவற்றுக்கு இல்லை. தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்களின் புள்ளி விவரங்களை இத்தனை ஆண்டு காலமாக ஏன் சென்சஸ் அமைப்பு மட்டுமே தொகுத்து, பிரித்து, பகுத்து ஆய்ந்து வருகிறது என்பதற்கான காரணம் இதுவே ஆகும். ஜாதி வாரி மக்கள் தொகைப் புள்ளி விவரங்கள் தொகுக்கும் பணி இந்த அமைச்சகங்களிடம் ஒப்படைத்தால், அந்தத் திட்டமே தோல்வியடைவது உறுதியானது.

------------------ "விடுதலை” 21-8-2010

0 comments: