Search This Blog

24.8.10

பேய் உண்டா? ஆவி என்பதும் மெய்யா?


செக்குப்பட்டி

தொலைக்காட்சிப் பெட்டிகள் எந்த ஆவியின் சக்தியாலோ, ஆண்டவனின் அருளாலோ, சாய்பாபாக்களின் கை அசைப்பாலோ ஆகாயத்தில் இருந்து வந்து குதித்தவை அல்ல - அது அறிவியலின் மகத்தான கண்டுபிடிப்பு.

அறிவியல் கண்டுபிடித்த அந்தக் குழந்தையை மூட வியல் கத்தி கொண்டு சிதைக்கும் கொலைகாரத் தன்மையை என்னவென்று சொல்வது! விஞ்ஞானக் கண்டுபிடிப்பை அஞ்ஞான சாக்கடையில் குளிப்பாட்டு கிறார்களே என்ற வேதனை.

இரவு பத்து மணிக்கு மேல் நிஜம் என்ற பெயரிலும், குற்றம் என்ற தலைப்பிலும், நடந்தது என்ன? என்று சொல்லிக் கொண்டும் தொலைக் காட்சிகளில், குறிப்பாகக் கிராமப் பகுதிகளில் தலை விரித்தாடும் மூடநம்பிக்கைக் குப்பைகளை பூதாகரப்படுத்தி ஒளிபரப்புவதைக் காணச் சகிக்கவில்லை.

நாமக்கல் மாவட்டம் செக்குப்பட்டி கிராமமாம். வாகை மரத்தில் பேய் குடி கொண்டு இருக்கிறதாம். அந்தப் பேயே அப்படிச் சொன்னதாம். ஒரு வருடத்துக்கு முன் ரயிலில் அடிபட்ட ஒருவரின் ஆவிதான் அந்த ஊரில் சேட்டை செய்கிறதாம். அந்த மரத்தின் வழியாகச் சென்ற ஒரு பெண் ஆவி மிரட் டலால் சாமி ஆடினாராம். அடேயப்பா, செட் அப் பண்ணி ஒளிப்பதிவு செய்தது போல் இருக்கிறது.

ஊடகப் பேரவையில் உரையாற்றிய பேராசிரியர் சுப. வீரபாண்டியன் அவர்கள் ஒரு தகவலைச் சொன்னார். அது பெரும் அதிர்ச்சிக்கு உரியது. பேய் நடமாடியதாகக் கூறப்பட்ட ஒரு ஊருக்கு திராவிட இயக்கத் தமிழர் பேர வைத் தோழர்கள் சிலர் சென்றபோது அந்த ஊர்க்காரர்கள் சொன்னார்களாம். நீங்களும் டி.வி.க்காரர்கள் போல ஏமாற்ற வந்திருக்கிறீர்களா? என்று கேட்டனராம். சென்ற தோழர்கள் ஆர்வத்தோடு விசாரித்த போது, ஓர் உண்மை வெளிப்பட்டது. குறிப்பிட்ட தொலைக் காட்சி யின் பெயரைச் சொல்லி உங்கள் ஊரைப் பற்றி டி.வி.யில் வரவேண்டுமானால், நாங்கள் சொல்லுவது போலச் சொல்லுங்கள் என்று கூறி ஒத்திகை நடத்தி பதிவு செய்து அதன் பின்னர் அதனை ஒளிபரப்பினார்களாம். இதை விட வெட்கக்கேடு வேறு ஒன்று இருக்க முடியுமா?

குறிப்பிட்ட மரத்தில் பேய் இருக்கிறது என்று சொன்னால், உடனே திராவிடர் கழகத் தலைமை நிலையத்திற்குத் தெரிவியுங்கள். கோடரி கொண்டு அந்த மரத்தினை வெட்டித் தள்ள திராவிடர் கழக இளைஞர் பட்டாளம் தயாராக இருக்கிறது.

பேய் உண்டா? ஆவி என்பதும் மெய்யா என்பது பற்றி பிரபல மனநல நிபுணர் டாக்டர் ருத்ரன் (இவரும் டி.வி.யில் அடிக்கடி வரக் கூடியவர்தான்) என்ன கூறு கிறார்?

உலகில் ஆவி என்ற ஒன்றோ, பேய், பூதம், பிசாசு, பில்லி சூனியம் என்பதோ இல்லை. சில போலிகள் இந்தப் பொய் வியாபாரத்தைச் செய்கிறார்கள். வாழ்க்கையில் விரக்தி ஏற்பட்டவர்களிடம் இதைச் சொல்லி பயமுறுத்தி அவர்களின் முட்டாள்தனத் தைப் பயன்படுத்தி ஏமாற்று கிறார்கள் என்று கூறினார். சொன்ன இடம் சன் தொலைக்காட்சியில் உங் களுக்காக நிகழ்ச்சியில். இவ்வளவுக்கும் டாக்டர் ருத்ரன் கருப்புச் சட்டைக்காரர் அல்லர் - ஆன்மிக வாதிதான்.

---------------- மயிலாடன் 24-8-2010 "விடுதலை” யில் எழுதிய கட்டுரை

************************************************************************************

பேய்-பிசாசா?

தொலைக்காட்சிகள் போட்டிப் போட்டுக்கொண்டு பேய் - பிசாசு - ஆவிக் கதை களை இறக்கைக் கட்டிப் பறக்கவிடும் நிலையில், கலைஞர் தொலைக்காட்சி யில் ரோஸ் மேடம் ஏற்பாடு செய்த நிகழ்ச்சிதான் வித்தியாசமாக இருந்தது. சுடுகாட் டிற்குச் சென்று நிரூபிக்கிறேன் என்று சொன்ன மயிலாடுதுறை மந்திரவாதி பகுத்தறிவுவாதிகளின் சவாலை ஏற்று, இறுதியில் தோல்வியை ஒப்புக்கொண்டார்.

குமுதம் ரிப்போர்ட்டரில் (9.11.2003) ஒரு தகவல் வெளிவந்தது. மயிலாடு துறையையடுத்த எலந்தங்குடி கிராமத்தைப் பற்றியது அது. ஊரே கெட்ட குணம் புடுச்சு ஆட்டுது செத்துப்போன கருவக்காட்டு உஷாதான் இப்பப் பேயா வந்து தலைச்சன் பிள்ளைகளைக் காவு கேட்டுக் கிட்டு இருக்கா என்பதுதான் அந்தப் புரளி.

இதுகுறித்து நேரடி விசாரணையை (ரிப்போர்ட்) மேற்கொண்டு குமுதம் ரிப் போர்ட் கட்டுரை ஒன்றைத் தீட்டியிருந்தது. சிலரிடம் பேட்டி வாங்கியும் போட்டது.

பேய் பிடிச்ச பொண்ணுங்களுக்கு ரத்தம் என்றால் ரொம்பப் பிரியமாம். உயி ரோடிருக்கும் பேயைப் பிடித்து, அப்படியே அதன் கழுத்தைக் கடித்து, சூடாக ரத்தத்தைக் குடித்துவிடுவார்களாம். அதுபோல ஒரு பெண்ணு ரத்தம் குடிச்ச அடுத்த வினாடி செத்துப் போச்சு இப்படிப் பேய்க் கதைகள் பில்டப் கொடுத்து பரவ ஆரம்பித்துள்ளன என்றும் சிலர் வருத்தத்துடன் சொல்கின்றனர்.

கருவக்காட்டில் கள்ளச் சாராயம் காய்ச்சுவோர், சூதாட்டக்காரர்கள் கிளப்பி விட்ட புரளி என்றும் சிலர் கூறினர். அதுதான் உண்மை என்று பட்டது என்று குமுதம் ரிப்போர்ட்டரும் கூறி முடித் துள்ளது.

உண்மையிலேயே பேய், பிசாசு உண்டா? இதுகுறித்து இங்கிலாந்து நாட்டுக்கார மனோதத்துவம் மற்றும் நரம்பியல் வல்லுநர் பிரைட்லைட் என்பவர் என்ன கூறுகிறார்?

பேய், பிசாசு இருப்பது பற்றி இவர், காந்தவியல் மின்புலம்மூலம் ஆராய்ச்சி நடத்தி, பேய், பிசாசு இல்லை என்று உறுதி செய்துவிட்டு, அதை மக்களுக்கு உணர வைப்பதற்காக பேய், பிசாசு இருப்பதாகக் கூறப்படும் தற்போது புழக்கத்தில் இல்லாத 800 வருட பழங்காலக் கட்டடம் ஒன்றில் பாதிக்கப்பட்டவர்களைக் கொண்டு, ஆராய்ச்சியில் ஈடுபட்டார்.

அதில் பேய் மற்றும் பிசாசு பிடித்தவர்கள், தங்களுக்குப் பேய் பிடித்தபோது திடீர் சத்தம் கேட்டதாகவும், இன்னும் ஒரு சிலர் குழந்தை அழுவதுபோல சத்தம் கேட்ட தாகவும், வேறு சிலர் திடீரெனத் தன்னை யாரோ தொட்டுவிட்டு மறைந்துவிட் டது என்றும் கூறினார்கள்.

பேய், பிசாசு இருப்பதாகக் கூறப்படும் இடத்தில் இருந்து வழக்கத்திற்கு மாறான காந்த புலம் வெளிப்பட்டிருக்கலாம். மூளையில் சில நரம்புகள் பாதிக்கப்பட்டவர்கள் இந்த இடங்களுக்குச் செல்லும்போது அல்லது அதிகமாக உணர்ச்சி வசப்படுகிறவர்கள் அந்த இடத்திற்குச் செல்லும்போது வழக்கத்திற்கு மாறான காந்தபுலம் மேற்கூறிய பிரமைகளை ஏற்படுத்தி இருக்கலாம். எனவே, பேயோ, பிசாசோ அதைச் செய்யவில்லை என்று கூறியதோடு நின்றுவிடாமல் விஞ்ஞானக் கருவிகளுடன் அவர்களுக்கு அதை நிரூபித்தும் காண்பித்தார்.

(தினத்தந்தி, 10.2.2006).

அறிவியல் இவ்வாறு கூறுகிறது. இந்த நாட்டில் உள்ள படித்த அமாவாசை இருட்டு அறிவாளர்களோ ஊடகங்களோ பொய்யை விற்றுப் பிழைப்பு நடத்துகின் றன - உஷார்!

குறிப்பு: பேரம்பாக்கம் என்னும் ஊரில் சுடுகாட்டில் இருந்த முள்செடியில் பேய் இருந்ததாகப் புரளி கிளம்பிய போது, திராவிடர் கழக மகளிர் அணியினர் அங்கு சென்று அதை வெட்டித் தீயிட்டுக் கொளுத்திக் காட்டினர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். (14.4.1991).

----------------- மயிலாடன் அவர்கள் 25-8-2010 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை












0 comments: