Search This Blog

6.8.10

தலையில் தேங்காய் உடைக்கும் மூடத்தனம்


தேங்காய்!

ஆடி மாதத்தில் பல மூடப் பண்டிகைகள் ஆடிப் பாடிக் கொண்டுவரும். பதினெட்டாம் பெருக்கு என்று சொல்லி பழைய ஓலைச் சுவடிகளையெல்லாம் ஆற்றில் கொண்டுபோய் விடுவார்கள். பார்ப்பனர்களின் இந்தச் சூழ்ச்சியால் தமிழர்களின் பல அரும்பெரும் ஆக்கங்கள் படைப்புகள் ஆற்றோடு அடித்துக் கொண்டு போய்விடும். தப்பித் தவறியிருந்தவைகளைத்தான் பிற்காலத்தில் அச்சில் ஏற்ற முடிந்தது.

ஆடி 18 முடிந்து ஆடி 19 அன்று ஒரு கோயில் திருவிழா நடைபெறுகிறது. சில கோயில்களில் அந்நாளில் பக்தர்களின் தலையில் தேங்காய் உடைப்பது என்பது வாடிக்கை. குறிப்பாக கரூரையடுத்த கிருஷ்ணராயபுரம் அருகே உள்ளது மேட்டு மகாதானபுரம் மகாலட்சுமி அம்மன் கோயில்; அங்கு பக்தர்களின் தலையில் பூசாரி தேங்காய் உடைக்கும் காட்சி தொலைக்காட்சிகளில் ஒளிபரப் பவும்படுகிறது. பலரின் தலை யிலிருந்து ரத்தம் பீறிட்டுக் கிளம்புவதைப் பார்க்கும்பொழுது நமக்குப் பதைபதைக்கிறது குருதியே உறைந்து போகிறது. பக்தி என்றால் இப்படிப்பட்ட பைத்தியக்காரத்தனமா என்ற பரிதாப உணர்வைத் தூண்டு கிறது!

இதுபற்றி நரம்பியல் மருத்துவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பது மிகவும் முக்கியம். சென்னையில் பிரபல நரம்பியல் மருத்துவர் என். திலோத்தம்மாள் M.D., D.C.H., D.M. (Neurology) அவர்கள் சொல்லியுள்ள கருத்து மிகவும் முக்கியமானது.

தேங்காயைக் கையில் உடைக்கும்பொழுது சதை மட்டும்தான் பாதிப்புக்கு ஆளாகும். அதையே தலையில் உடைக்கும் பொழுது மூளை பாதிக்கப்படும்.

தலையில் உள்ள எலும்போடு இந்தப் பாதிப்பு நின்று விடாது. மண்டை ஓட்டுக்குள்ளே உள்ள மிருதுவான ஜெல்லி மாதிரி இருப்பதுதான் மூளை. ஒரு குழந்தையைக் குலுக்கினால்கூட அந்த ஜெல்லி போன்ற மூளை ஆடலாம்.

மூளையில் இரண்டு, மூன்று பிரிவு உண்டு. ஒன்று அதிர்ச்சி (Concussion) அடுத்து அடிபட்டு கன்னிப் போகுதல் (Contussion), மூன்றாவது Normal Damage, Oxonol Damage ஆகும்.

Oxonal என்பதுதான் அடிப்படை செல். அதாவது நரம்புகள் சிதறிப் போவது. குத்துச் சண்டையில் அடி வாங்கியவர் தள்ளாடி தள்ளாடிப் போய் மயக்கமாகி விழுவார். இதே நிலை தலையில் தேங்காய் உடைக்கும்போதும் ஏற்படலாம்.

தேங்காய் உடைக்கும் பொழுது மண்டையில் உள்ள ரத்தக் குழாய் உடையக்கூடும். அதன் காரணமாகக் கட்டி ஏற்படும். இது உடனேயும் நடக்கலாம்; தாமதமாகவும் ரத்தக் கட்டி ஏற்படலாம்.

மூளை மிகவும் பாதுகாப் புடன் இருக்கவேண்டும் என்பதற்காகத்தான் ஒரு இரும்புப் பெட்டியைப் போல் (Box) தலை அமைந்துள்ளது. இதயத்திற்குக் கூட இந்தப் பாதுகாப்பு இல்லை. எனவே, மூளை உயிர்த் தலம் போன்றது. அதனைப் பாதுகாப்பது அவசியம் என்று பிரபல நரம்பியல் மருத்துவர் கூறியுள்ளதை பக்தியால் மூளை மழுங்கிப் போன மக்கள் எப்பொழுது உணரப் போகிறார்கள்?

மத உணர்வால் மனித மூளை ஏற்கெனவே பாழ்பட்டுப் போய்விட்டது. அதற்குமேல் இப்படி ஒரு தாக்குதல் என்றால், மனித மூளையின் கதி என்ன?

இப்படி பக்தியின் பெயரால் மூளையை சிதற அடித்துக் கொள்கிறார்களே என்ற பரிதாப உணர்ச்சியே தவிர, கோப உணர்ச்சியல்ல பகுத்தறிவாளர்களுக்கு!

மனித உரிமை ஆணையம் இதற்குத் தடை விதித்தும் இந்தக் கொடுமை நடைபெற்றுக் கொண்டே வருவது பரிதாபமே!

அடுத்து கழகத் தோழர்கள் களத்தில் இறங்கிக் கருத்துப் பிரச்சாரம் செய்யத் திட்டமிடப் பட்டுள்ளது.

------------------மயிலாடன் அவர்கள் 6-8-2010 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

0 comments: