Search This Blog

3.8.10

ஆடி 18 க்கும் அழுக்கு மூட்டைக் கதை


ஆடி 18

ஒவ்வொரு நாளுக்கும் ஒவ்வொரு மகாத்மியம் இந்த அர்த்தமுள்ள இந்து மதத்தில் உண்டு; இந்தப் புராணப் புளுகுகள் தான் பார்ப்பனியத்தின் வயிற்றுப் பிழைப்பும் உயிர்நாடியும்.

இன்று ஆடி 18. வழக்கம்போலவே இந் நாளுக்கும் அழுக்கு மூட்டைக் கதை உண்டு. இது காவிரிப் பெண்ணுக்கு நடைபெறும் மணவிழாவாம்.

இந்த நாளில் காவிரியில் பதினெட்டுப் படிக்கட்டுகளிலும் தண்ணீர் கரைபுரண்டு ஓடுமாம் சுமங்கலிப் பெண்கள் தாலி பிரித்துக் கட்டுவார்கள். திருமணம் ஆகாத பெண்களும் விரைவில் திருமணம் ஆகவேண்டும் என்பதற்காக தாலிச் சரடு போன்ற மஞ்சள் கயிற்றை காவிரித் தெய்வத்தை வணங்கிக் கட்டிக் கொள்வார்கள்.

ஈரோடு மாவட்டம் பவானி, பூம்புகார், மயிலாடுதுறை போன்ற ஊர்களில் இந்த ஆடி 18 விழா கோலாகலமாகக் கொண்டாடப்படுவதுண்டு.

அது சரி, இந்தக் காவிரியின் கதையளப்பு என்ன? அதுதான் சுவையானது சுத்த மூடத்தனத்தில் பொரிக்கப்பட்ட கடைச்சரக்கு!

கைலாயத்தில் சிவன் பார்வதி திருமணமாம்! (கடவுளுக்குக் கூட கல்யாணமா? பேஷ்! பேஷ்!!) கடவுள் கல்யாணம் என்றால், சும்மாவா! முப்பத்து முக்கோடி தேவர்களும், அட்ட திக்கு பாலர்களும், ரிஷிகளும் திரண்டுவிடமாட்டார்களா? அதனால் பாரத்தால் வடபுலம் தாழ்ந்தது; தென்புலம் உயர்ந்துவிட்டது. இந்தத் தராசுத் தட்டை நிமிர்த்த சிவன் ஏதாவது வழிகாண வேண்டுமே ஏனெனில் அவன்தானே எல்லா வற்றிற்குமான சகல அதிகாரங்களையும் படைத்த பொறுப்பாளி?

அகத்தியன் என்ற குள்ள முனிவனை (இவன் கும்பத்தில் பிறந்தவனாம் அது ஓர் ஆபாசக்கதை அதை எழுத ஆரம்பித்தால் காவிரியிலிருந்து பிரியும் கொள்ளிடம் போல வளர்ந்துகொண்டே போகும்!!) தென்புலம் அனுப்பி பூமியைச் சமன் செய்யக் கட்டளையிட்டானாம் சிவன்.

சிவனைக் கல்யாணம் கட்டிக் கொள்ள ஒற்றைக்காலில் தவமிருந்த பார்வதி தேவியாரின் கையில் ஒரு மாலை தயாராக (ரெடியாக) இருந்தது. அந்த மாலையை ஒரு பெண்ணாக்கி, அதனை அகத்திய முனிவனிடம் அளித்தாளாம் பார்வதி.

அகத்திய முனிவனோ அந்தப் பெண்ணைத் தம் கமண்டலத்தில் அடக்கி வைத்தி ருந்தான் (என்ன, தலையைச் சுற்றுகிறதா? புராணம் என்றால் அப்படித்தான் நம்பித்தான் தொலையவேண்டும் இல்லாவிட்டால் நீங்கள் நாத்திகர்கள்).

அகத்திய முனிவன் தென்னாடு வந்த போது, அவன் கமண்டலத்தில் இருந்த தண்ணீர் கொஞ்சம் வழிந்துவிட்டது வழிந்த அந்தத் தண்ணீர்தான் காவிரியாம்! (இதைக் கண்டுபிடித்த கொலம்பசுக்கு பாரத ரத்னா பட்டம் கூடக் கொடுக்கலாம் அல்லவா!).

கமண்டலத்தில் மீதியிருந்த தண்ணீரை தான் வசித்த பொதிகை மலையில் அகத்தியன் கொண்டுபோய்விட, அதுதான் தாமிரபரணி ஆகிவிட்டதாம்!

காவிரி பிறப்பு இப்படியெல்லாம் இருக்கும் போது, கருநாடகத்துக்காரனோடு நாம் சண்டை பிடித்துக்கொண்டிருப்பது வீண் வேலைதானோ!

சிவபெருமான் மனைவி கொடுத்து, பின் அகத்திய முனிவனின் கமண்டலத்திலிருந்து விழுந்த தண்ணீர்தான் காவிரி என்கிறபோது, அதனைத் தடை செய்ய யாருக்கு அதிகாரம்?

இதுபற்றி நீதிமன்றம் செல்வானேன்?

அதுசரி, அகத்தியன் விட்ட இந்தக் கரடியான காவிரித்தாய் இந்த ஆடி 18 இல் கரை புரண்டு ஓடவேண்டுமே ஏன் ஓடவில்லை?

எல்லாம் கப்சாதானே!!

---------------மயிலாடன் அவர்கள் 3-8-2010 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

0 comments: