
உலகில் இந்துக்கள் (இந்தியர்கள்) பரம முட்டாள்களாகக் கருதப்படுகிறவர்கள் ஆவார்கள். இதற்குக் காரணம் அவர்கள் (இந்துக்கள்) மதமும், கடவுள்களும் சாதிகளும் தான்.
உலகில் மற்ற நாடுகளில் கடவுளுக்காக மதங்கள் இருக்கின்றன; இந்தியாவில் இந்துக்களுக்கு மதத்திற்காகக் கடவுள்கள் இருக்கின்றன.
உலகத்தில் மற்ற இடங்களில் கடவுள் அல்லது மதங்கள் இருக்கின்றன. இந்தியாவில் சாதிகளுக்காகவே கடவுள்கள், மதங்கள் இருக்கின்றன!
மற்ற உலகில் அறிவு வளர்ச்சிக்காகக் கடவுள், மதம் இருக்கின்றன; நம் நாட்டில் மனிதனை முட்டாள் (மூடநம்பிக்கைக்காரனாக) ஆக்கவே கடவுள், மதம் இருக்கின்றன.
மற்ற நாடுகளில் மக்களை ஒன்றுபடுத்தவே கடவுள், மதம் இருக்கின்றன. நம் நாட்டில் மக்களை வேறு வேறாகப் பிரிக்கவே கடவுள், மதம் இருக்கின்றன.
மற்ற நாட்டில் மனிதனிடம் மனிதனுக்குப் பற்றும், அன்பும் உண்டாகவே கடவுள், மதம் இருக்கின்றன. நம் நாட்டில் மனிதனுக்கு மனிதன் வெறுப்பும், வேற்றுமையும் உண்டாக்கவே கடவுள், மதம், சாதி இருக்கின்றன.
மற்றொரு குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், நம் நாட்டில் (இந்தியாவில்) மேற்கண்ட தன்மைகளைக் காப்பதையே மூலாதார உரிமையாகக் கொண்ட ஆட்சி (அரசாங்கம், அரசியல் சட்டம்) இருக்கிறது.
அதிலும் விசேஷமாகக் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், இப்படிப்பட்ட ஆட்சித் தலைவராக இத்தன்மைகளைக் காப்பாற்ற வேண்டிய அவசியமுள்ள இவற்றால் தனிப்பட்ட நன்மை அடையும் மக்களே ஆட்சித் தலைமையாளராக இருந்து வருகிறார்கள்.
நல்வாய்ப்பாக வெள்ளையர் ஆட்சியினால் இந்த நாட்டுப் பெருங்குடி மக்கள் இந்தப்படியான பேதங்களையும், கேடுகளையும் ஒருவாறு உணர முடிந்தது. இதன் காரணமாகவே வெள்ளையன் மீது வெறுப்பை உண்டாக்கும் கிளர்ச்சியைப் பார்ப்பனர்களும், அவர்களது கூலிகளும், முட்டாள்களும் ஆரம்பித்தார்கள்.
உலக யுத்ததின் காரணமாக உலகில் வெள்ளையர்கள் ஆதிக்கத்திலிருந்த இலங்கை, ஃபிரெஞ்ச், இந்தியா போன்ற நாடுகள் உட்பட, எல்லா நாடுகளும் பூணர சுதந்திரம் அடைந்தது போல், இந்தியாவும் வேறு யாருடைய முயற்சியாலும் இல்லாது தானாகவே பூணர சுதந்திரம் அடைந்தது.
இந்தியா பூணர சுதந்திரம் அடைந்தவுடன், பார்ப்பான் இந்த நாடு எந்தவித சமூதாய மாறுதலும் அடையக்கூடாது என்கின்ற தன்மையில் மனுதருமத்தையே அரசியல் சட்டமாக ஆக்கி, சாதி, மதம், கடவுள்கள் முதலிய கொடுமைகளையும், முட்டாள்தனமுமான தன்மையில் யாரும் கை வைக்கக் கூடாது என்கின்ற திட்டங்களை மூலாதாரக் கொள்கைகளாக ஆக்கிக் கொண்டார்கள்.
இதன் காரணமாக இந்த 20 ஆண்டு காலத்தில் 'பறையன்', 'சக்கிலி', “அரிசனன்”ஆனான். 'சூத்திரன்', 'முதலியார்', 'கவுண்டன்', 'படையாட்சி', 'செட்டி', 'நாயக்கன்', “நான் பிராமின்” (Non - Brahmin ) ஆனான் என்பதைத் தவிர வேறு மாறுதல் இல்லை.பிராமணன், பிராமணனாகவே ஜாதி உரிமையோடு, அரசியல் பொருளாதார வாழ்வு, கல்வி உத்தியோகம் ஆகிய துறைகளில் அவன் உரிமைக்கு மேல் 10 பங்கு அதிகமாகவே அனுபவிக்கிறான். நாம் (பெருங்குடி மக்கள்) 'தகுதி-திறமை' என்னும் இழிவால் தாழ்த்தப்பட்டுக் கிடக்கிறோம்.
இன்றைய நிலைமையில் இந்தியாவில் பெரும் புரட்சி ஏற்பட்டு அரசமைப்புச் சட்டம் கொளுத்தப்பட்டு, வேறு உண்மையான சமதர்ம ஆட்சி ஏற்பட்டால் ஒழிய, அல்லது அன்னியர் படையெடுப்பினால் நாடு திருத்தபட்டால் ஒழிய, இந்நாட்டில் இன்று மூலாதாரப் பாதுகாப்பாய் இருந்து வரும் மேற்கண்ட கடவுள்கள், மதங்கள், சாதிகள் சம்பந்தமான இழிவுகளும், பேதங்களும் ஒழியாது. ஒழியச் செய்ய முடியாது என்பது எனது உறுதியான கருத்தாகும். அரசியலின் பேரால் தங்கள் வாழ்வை நிறுவிக் கொண்ட மக்களுக்கு மானம் வெட்கம், இழிவு தோன்றாது. ஆதலால் அவர்கள் இன்றைய நம் மக்களின் வாழ்வை 'விடுதலை வாழ்வு' என்று கூறுவார்கள்.
நான் அரசியல்; மதத்துறையின் பேரால் அயோக்கிய, மூட சுயநல மக்களால் வெறுக்கப்பட்டவன்; துன்பப்பட்டன்; நட்டப்பட்டவன்; மானத்தையும் பறி கொடுத்தவன்; மந்திரிப் பதவியை உதறித் தள்ளியவன்; ஆனதால் எனக்கு இந்த இழி வாழ்வு வெறுப்பாகத் தோன்றுகிறது.
---------------------- தந்தை பெரியார் அவர்கள் 24-04-1969 ”விடுதலை” யில் எழுதிய தலையங்கம்.
0 comments:
Post a Comment