Search This Blog

9.8.10

பெரியார் பிரச்சாரத்தால் தேச மத அபிமானிகள் மனம் புண்படுகின்றதா? பெரியார் விளக்கம்


தூத்துக்குடி திரு. சோமசுந்தரம் பிள்ளை “நவசக்தி” யில் எழுதிய “இந்து மதமும் வைக்கம் வீரரும்” என்ற கட்டுரைக்குச் சமாதானம்

ஸ்ரீமான் தூத்துக்குடி கா. சோமசுந்தரம் பிள்ளை அவர்கள் ‘இந்து மதமும் வைக்கம் வீரரும்’ என்பதாக ஒரு வியாசம் 7-12-27 தேதி ‘நவசக்தி’யில் எழுதி இருக்கிறார். அதற்கு சமாதானமாக பல கனவான்கள் ஆராய்ச்சி மூலமாகவும் மற்றும் பொதுவாகவும் வியாசங்கள் எழுதி பிரசுரிக்க நமக்கு அனுப்பி இருக்கின்றார்கள். நாம் அவற்றை அவ்வியாசம் தோன்றிய பத்திரிகைகளுக்கு அனுப்பும்படி எழுதி விட்டோம். நம்மையும் பிரசுரிக்கும் படி வற்புறுத்தினால் ஒருக்கால் பிரசுரிக்கலாம். ஆனாலும் அவைகள் பிரசுரமாகும் முன்பு நமது சமாதானத்தை தெரிவிக்க விரும்புகிறோம். அவ்வியாசத்தின் சாராம்சத்தை முதலில் சுருக்கமாக குறிப்பிடுவோம்.

1. “நாயக்கர் பேச்சிலும் எழுத்திலும் இந்து மதத்தை மனம் போனவாறு இழிந்து கண்டித்து வருகிறார்.....

2. பிராமணரல்லாதார் முன்னேற்றத்திற்கு என்று கூறும் முறையில் அவரது கூற்றால் அச்சமூகத்தாருக்கு எவ்வித மதஉணர்ச்சியும் அற்றுப்போகும்......


3. மதவுணர்ச்சியற்று நாஸ்திகம் பரவும்படி செய்வதே இவரது தொண்டாயிருக்கின்றது............

4. இத்தொண்டின் பயனாய் தேசாபிமானிகள், மதாபிமானிகள் ஆகியவர்கள் மனம் புண்படுகின்றது.................

5. (a) இவர் ஆராய்ச்சி செய்து பேசுகிறாரா? .


(b)அல்லது மக்களை வேறு மதத்திற்காவது விரட்டியடிக்கப் பேசுகிறாரா? என்று எண்ண வேண்டியிருக்கிறது............

6. (a) பக்தி மூட நம்பிக்கை என்கின்ற படுகுழியில் என்கின்றார்.

(b) அப்படியானால் பற்பல அற்புதங்களைச் செய்து உலகத்தை வாழ்விக்க வந்த திருஞான சம்மந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்க வாசகர், பன்னிரு ஆழ்வார் முதலியோர்கள் எல்லாம் இந்த படுகுழியில் வீழ்ந்தோர்கள் போலும்.........

7. சைவம், வைணவம், சமணம், பௌத்தம், துவைதம், அத்வைதம், விசிட்டாத்வைதம், வீர சைவம் முதலியன இந்து சமயம் என்ற விரிந்த மதத்தின் பாற்படும் என்பது யாவரும் அறிவர். இது நாயக்கருக்கு தெரிந்தும் தெரியாததுபோல் பேசி மக்களை மயக்கு கிறார். ‘இந்துமதம்’ என்கின்ற பெயர் எப்படி வந்ததென்பது சுவாமி விவேகானந்தர் சொல்லியிருக்கிறார்.....

8. மத சம்மந்தமான எந்த நூலையும் பார்க்க யாருக்கும் தடையில்லை. எல்லாம் கடையில் விற்கின்றது. யாரும் நாக்கை அறுக்க மாட் டார்கள்......

9. கோவிலை நாயக்கர் கூத்துச்சாலைபோல் நினைக்கின்றார்.....


10. கல் மனதையும் கரைக்கும்படியான சக்தி சில ஆலயங்களில் இருப்பதை நாயக்கர் அறிவாரா...............


11. இக்கலிகாலத்திலும் பல இடங்களில் எத்தனையோ அற்புதங்கள் நடக்கின்றன.


12. விசேஷ காலங்களில் லட்சக்கணக்கான ஜனங்கள் கால்வலி மெய்வலி பார்க்காமல் நடந்துபோய் சுவாமி தரிசனம் செய்து ஆனந்த பரவசமாகின்றதை பார்க்கின்றோம்......


13. அதை நிவர்த்திக்காமல் இந்து மதம், பக்தி, கோயில் முதலிய எல்லாவற்றையும் அழித்துவிட முயல்வது அறிவுடமையாகாது...........


14. கௌதமர் இந்து மதத்திலுள்ள சில குறைகளை உணர்ந்து சில சீர்திருத்தங்கள் செய்து போதித்தார். அதுதான் பௌத்தமதம்..............

15. அதுபோல் நாயக்கர் தமக்குத் தெரிந்த சீர்திருத்தத்தைக் கொண்டு வந்து ஜனங்கள் நம்பத்தக்கது இன்னது, அனுசரிக்க வேண்டியது இன்னது என்று தெளிவாகச் சொல்லி ஒரு மதத்தை ஸ்தாபிக் கட்டும்....................” என்று எழுதுகிறார்.

நமது சமாதானம்

அவற்றுள் ( 1 ) “நாயக்கர் இந்து மதத்தை கண்டிக்கிறார்” என்பது,

ஆம், கண்டிக்கிறோம். இந்து மதம் என்பதாக ஒரு மதம் இல்லை என்றும் இந்து என்கின்ற வார்த்தையே நமது பாஷை அல்லவென்றும், வட சொல்லிலோ மற்ற எந்த சொல்லிலோ இந்து என்கின்ற சொல் இல்லை யென்றும்( இதை ஒப்பாமலும் போதிய ஆதாரம் காட்டாமலும் இந்து என்கின்ற ஒரு வார்த்தை இருப்பதாக யாராவது வாதாடுவதானாலும்) அது இந்தியாவிலிருக்கும் மனிதரைக் குறிப்பதென்றும், உதாரணமாக, பங்காளத்தில் இருப்பவன் பங்காளி, குஜராத்தில் இருப்பவன் குஜராத்தி, மலையாளத்தில் இருப்பவன் மலையாளி என்பதுபோலவும், பிரான்சு தேசத்தவனை பிரன்சு என்றும், துருக்கி தேசத்தவனை டர்க் என்றும், ஜப்பான்காரனை ஜப்பானி என்றும், ஜர்மன் காரனை ஜெர்மன் என்றும் அழைப்பதுபோல் இந்து என்பது இந்நாட்டு மனிதனைக் குறிக்கும் சொல்லாகும் என்றும், இந்தியா தேசத்தவன் இந்து என்றும் இந்தியன் என்று அழைக்கப்படுவதோடு இந்தியா தேசத்திற்கும் ஆரிய பாஷையில் இந்துஸ்தானம் என்றே வழங்கப்படுகின்றது என்றும் எனவே இந்து என்கின்ற சொல்லானது இந்தியா நாட்டில் வகிக்கின்ற எல்லா மக்களையே குறிப்பிடுவதேயல்லாமல் அது ஒரு குறிப்பிட்ட ஜாதியையோ அல்லது மதக்காரரையோ குறிப்பதல்ல என்றும் அல்லாமலும் தேசத்தின் பேரால் மதமே இருப்பதாக நாம் அறியவில்லை என்றும் (‘இவற்றையும் ஒப்புக் கொள்ளாமலும் ஆதாரம் காட்டாமலும் இதையும் மறுப்பதானாலும்’) இந்தி என்கின்ற பாஷையை பார்த்தாலும் அது ஆரிய பாஷையாகவே இருப்பதாலும், அது தமிழ்நாட்டு உச்சரிப்புக்கே பொறுத்த மற்றதாகவும் இருப்பதால் அது நமது மக்களுக்கு எவ்வகையிலும் சம்மந்தப் பட்ட சொல்லுமல்ல என்றும், அநேக தடவைகளில் சொல்லியும் எழுதியும் வந்திருப்பதை ஸ்ரீமான் பிள்ளை அறியாரா என்று கேட்கின்றோம். இதையும் ஒப்புக் கொள்ளாவிட்டாலும் ஆங்கில அகராதிகளில் அதாவது ஆரியர்கள் ஒப்புக்கொண்டு பழக்கத்தில் வைத்திருக்கிற - ஆரியர்களாலேயே எழுதப்பட்ட அகராதிகளிலும் இந்து என்கிற பதத்திற்கு அர்த்தமாக இந்தியன், இந்தியாவில் வசிப்பவன் ஆரியன், ஆரியக் கொள்கை, ஆரியமதம், ஆரியரை பின்பற்றுவோன், பார்ப்பனீயத்தில் நம்பிக்கையுள்ளவன், மகமதி யனல்லாதவன் அதாவது மகமதியர்களுக்கு எதிரானது என்பது போன்ற பொருள்களே குறிக்கப்பட்டிருக்கின்றனவே யல்லாமல் நம்மெல்லோரையும் கட்டுப்படுத்தத்தக்க ஒரு மதம் என்கிற பொருளில் அல்ல.

தவிர இந்து மதம் என்கின்ற வார்த்தையானது ஆரியர்களின் சமயம் பழக்கம் வழக்கம் என்பது முதலியவைகளைக் குறிப்பிடும் வேதம், சாஸ்திரம், புராணம், கதை என்பவைகள் முதலிய எவைகளிலாவது அல்லது தமிழ் மக்களின் பழக்க வழக்கமென்பது முதலியவைகளைக் குறிப்பிடும் பழந் தமிழ் ஆதாரங்கள் என்பவைகள் எவைகளிலாவது இருந்ததாகவோ இருக் கின்றதாகவோ யாராவது சொல்லக் கூடுமா? என்று கேட்கின்றோம். ஆகவே பொருளற்றதான ஒரு வார்த்தையை ஒரு சமயம் என்பதாக ஏற்றுக் கொண்டு அதற்கு அநாகரீகமானதும், மனித இயற்கைக்கும் நேர்மைக்கும் பொருத்த மில்லாததுமான விஷயங்கள் நிறைத்து வைத்திருக்கும் புத்தகங்களை ஆதாரங்கள் என்பதாக வைத்துக் கொண்டு அதைக் கடவுள் சொன்னார் என்பதாக அதனிடம் குருட்டு விஸ்வாசத்தைக் காட்டிக்கொண்டு இருப்ப தோடு அதை நமது தலையிலும் சுமத்த வந்தால் அதற்கு நாம் எப்படி சம்மதிக்க முடியும்?

( 2 ) தவிர இப்படிச் செய்வதால் பார்ப்பனரல்லாத மக்களுக்கு எவ்வித உணர்ச்சியும் அற்றுப்போகும் என்பது.

அற்றுப்போனால் குற்றமில்லை. சகல மத உணர்ச்சியும் அற்று மனிதத் தன்மையான சுயமரியாதை உணர்ச்சி மாத்திரம் வந்தால் போதுமானது. எந்தவிதமான மத உணர்ச்சிக்கும் மனிதன் அடிமையல்ல. மதம் என்பது அவனவன் இஷ்டத்தைப் பொறுத்தது. மனிதத் தன்மை உணர்ச்சி வந்து விட்டால் அல்லது அதற்கு விரோதமாயிருப்பவைகளை அழித்துவிட்டால் அவசியமான உணர்ச்சி வந்தேதீரும். இதற்கு யாரும் கவலைப்பட வேண்டியதில்லை.

( 3 ) நாஸ்தீகம் பரவிவிடுமே என்று பயப்படுவது.

இந்த இடத்தில் நாஸ்தீகம் என்றால் என்ன என்று கேட்கிறோம். கடவுள் என்பதாக ஒன்று இல்லை என்று சொல்வது நாஸ்தீகமானால் அதைப் பற்றி யாவரும் கவலைப்பட வேண்டியதில்லை. கடவுள் என்பதாக ஒன்று இருக்குமானால் அதை இல்லாமல் செய்து விடவோ இல்லை என்று எண்ணும் படி செய்துவிடவோ எந்த மனிதனாலும் முடியாது. அப்படி ஒரு சமயம் ஏதாவது ஒரு மனிதன் கடவுள் என்பதாக ஒன்று இல்லாமலோ இல்லைஎன்று எண்ணும்படியோ செய்து விடுவானானால் அப்பொழுது உண்மையிலேயே கடவுள் என்பதாக ஒன்று இல்லை என்றுதான் அர்த்தமேயொழிய, ஒரு மனிதனது செய்கையினால் கடவுள் இல்லாமல் போய்விட்டது என்பது அசம்பாவிதமானதாகும்.

தவிர கடவுள் உணர்ச்சியை ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்குப் புகட்ட வேண்டும் என்று சொல்வதானால் அப்படிச் சொல்லுபவர் உண்மைக் கடவுளை அறியாதவர் என்றுதான் அர்த்தம் கொள்ள வேண்டும்.

தவிரவும் சூரியன் இல்லை சந்திரன் இல்லை என்று ஒரு மனிதன் சொல்லிக் கொண்டு திரிவானானால் அதன் மூலம் மக்களுக்கு சூரியன் சந்திரன் என்கின்ற உணர்ச்சியற்றுப் போகுமா என்று கேட்கின்றோம். எத்தனையோ கோடி வஸ்துகளில் இரண்டு வஸ்துகளை எப்படி ஒரு மனிதன் இல்லாமல் செய்யமுடியாதோ அது போலவே கடவுள் என்பதாக ஒன்று இருப்பதாய் ஸ்ரீமான் சோமசுந்தரம் பிள்ளை அவர்கள் உண்மையில் உணர்வாரானால் கண்டிப்பாய் அதை மற்றொருவன் அழித்து விடுவானென்றோ, மக்களுக்கு அவ்வுணர்ச்சியில்லாமல் செய்துவிடுவான் என்றோ அவர் பயப்படுவதாகச் சொல்வது கேலிக் கூத்தேயாகும்.

( 4 ) நாயக்கர் இப்பிரசாரத்தால் தேச மத அபிமானிகள் மனம் புண்படுகின்றது என்பது.

இதற்கு நாம் என்ன செய்யமுடியும்? இமயமலைப் பனியால் மூடப் பட்டு குளிரால் அவஸ்த்தைப் படுகின்றது என்று அதற்கு யார் கம்பளிப் போர்வையைப் போற்றி குப்பை செத்தைகளை அரித்துப்போட்டு நெருப்பு வைத்து குளிர்காய வைக்க முடியும்? எரிமலை நெருப்பு ஜுவாலையில் கஷ்டப்படுகின்றது என்று அதற்கு யார் தண்ணீர் ஊற்றி குளிர்ச்சி செய்ய முடியும்? அது போல அவரவர்கள் தன்மைக்கு ஏற்ற பலனை அவரவர் அடையவேண்டியதுதானே ஒழிய வேறில்லை. பேசாமல் உட்கார்ந்து கொண்டிருக்கும் தேச மத அபிமானியையும் யோக்கியமாய் நடந்துகொள்ளும் எந்த தேச மதஅபிமானியையும் நாம் கனவிலும் நினைப்பதற்கே நம்மால் அவர்கள் மனம் புண்பட நியாயமில்லை. அப்படிக்கில்லாமல் மக்களை ஏமாற்றவென்றே வெளிவரும்போது தாம் நாம் சும்மாயிருக்க முடியவில்லையே ஒழிய மற்றபடி நமக்கு யார் மனதையும் புண்படுத்த நினைத்து இத்தொண்டை ஆரம்பிக்கவில்லை என்பது உறுதி.

( 5 ) a. நாயக்கர் ஆராய்ச்சி செய்து பேசுகின்றாரா என்பது.

நாம் 10 -வது வயதிற்குமேல் எந்த பள்ளிக்கூடத்திலும் படிக்க வில்லை. நமக்கு புத்தக ஆராய்ச்சி இல்லை. நம் சக்திக்குள்ள அறிவு என்பதைக் கொண்டு நடுநிலை என்பதிலிருந்து ஆராய்வதின் மூலம் அறிவதும், ஆராய்ச்சிக்காரர்கள் என்பவர்களை சந்திக்க நேர்ந்தபோது கேட்டு அறிவது தானே ஒழியவேறில்லை என்பதைக் கண்ணியமாய் ஒப்புக்கொள்ளுகிறோம்.

( 5 ) b. இவர் வேறு மதங்களுக்கு மக்களை அனுப்ப முயற்சிக் கின்றார் என்பது.

மதம் என்பதாக ஒன்றை நித்திய பொருளென்றோ, தத்துவப் பொருளென்றோ நாம் கருதுவதில்லை. மதம் என்பது எதுவும் ஒரு மனிதன் அல்லது சில, பல மனிதரின் அபிப்பிராயம் என்பதாகவே கருதுகிறோம்.

தவிர, அது எவ்வளவு வேண்டுமானாலும் தோன்றவும் மறையவும் கூடியதே தவிர நிலைத்ததல்ல. அது ஒரே மனிதனின் அடிக்கடி மாறுப்பட்ட அபிப்பிராயங்களாகவும், பல மனிதர்களின் ஒன்றுபட்ட அபிப்பிராயங் களாகவும் பல காலங்களில் பல மனிதர்களின் பலமாதிரியான அபிப்பிராயங் களாகவும் இருக்கலாம். மதமானது எந்த மனிதனையும் தனக்கு அடிமைப் படுத்தத்தக்கினதல்ல. ஒரு மனிதன் அவன் வாழ்நாளில் பல மதத்தை தழுவலாம். பல மதத்தை உண்டுபண்ணலாம். பல மதத்தை சீர்திருத்தலாம். பல மதத்தை அழிக்கலாம். இதனாலெல்லாம் ஒரு மனிதன் பாவியாகிவிட முடியாது. கெட்டவனும் ஆகிவிட முடியாது. ஆகவே எந்த மனிதனை எந்த மதத்திற்கு போகும்படி யார் சொன்னாலும் அதில் ஒரு குற்றமும் இல்லை. அன்றியும் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு மதம் இருக்க வேண்டி யதோ கற்பிக்க வேண்டியதோ அவசியம் என்பதாக நாம் நினைக்கவில்லை.

ஏனெனில் அறிவுள்ள மனிதனுக்குத் தனது வாழ்க்கைக்கேற்ப கொள்கைகளை ஏற்படுத்திக் கொள்ளத்தெரியும், தெரிந்துதான் வருகிறது.

அறிவில்லாத மனிதனுக்கு இன்ன மதம்தான் சொந்தம் என்று சொல்லவோ அவன் இன்ன மதத்தில்தான் இருக்க வேண்டுமென்று சொல்லவோ யாருக்காவது அதிகாரமிருப்பதாகச் சொல்லுவதானது “கோழிக் குஞ்சைத் தூக்கிக் கொண்டு போக கருடனுக்கு பாத்தியமா, கழுகுக்கு பாத்தியமா, இராஜாளிக்குப் பாத்தியமா” என்று முடிவு செய்யும் நியாயத்தைப் போன்றது தான் என்பதே நமது அபிப்பிராயம்.

மதமோ, சமயமோ அவ்வக் காலங்களில் ஏற்பட்ட மனிதர்களால் அவ்வக் காலங்களின் நிலைமைக்குத் தக்கபடி அவ்வவ்விடத்திய சீதோஷ்ண முதலிய காலநிலைக்கு ஏற்றாற்போல் நிர்ணயமாக்கப்பட்டதே ஒழிய எக்காலத்திற்கும் எல்லா மனிதர்களுக்கும் எல்லா இடத்திற்கும் எல்லா நிலைக்கும் இதுவேதான் ஏற்றது என்பதாக ஏற்பட்டதல்ல என்பதே நமது அபிப்பிராயம். ஆகவே காலம், இடம்,மக்களின் அறிவுநிலை இவை களுக்குத் தக்கதுபோல் தானாகவே மாறிக்கொண்டுதான் வரும். இதைப்பற்றி யாரும் சிந்திக்க வேண்டியதில்லை.
( 6 ) a. மூடபக்தி, மூடநம்பிக்கை என்கின்ற படுகுழி என்பது.

இதில் மூடபக்தி, மூட நம்பிக்கை என்று சொல்வதைப் பற்றி யாரும் கஷ்டப்படவேண்டியதில்லை. மூடபக்தி, மூடநம்பிக்கை என்பதின் கருத்து என்ன? ஒரு மனிதன் தன்னுடைய நடவடிக்கைகளைப் பற்றி கவலை எடுத்துக்கொள்ளாமல், தனக்கு இன்ன இன்ன காரியங்கள் ஆகவேண்டும் என்று நினைத்துக்கொண்டு ஒரு கடவுளை வணங்குவதும், அதன் பெயர், உருவம், குணம், சக்தி இவைகளை கட்டுப்படுத்துவதும் மூட பக்தி என்பதே நமது அபிப்பிராயம். அதோடு நாம் கடவுளுக்கு இன்னது செய்தால் நமக்கு இன்னது கிடைக்கும் என்கின்ற வியாபார நோக்கத்துடன் செய்யும் காரியங்கள் எதுவும் மூட நம்பிக்கை என்பதே நமது அபிப்பிராயம்.

அதுவும் தவிர சுவாமி காரியம் நடக்க வேண்டும். சுவாமியைப் பற்றி மக்களுக்கு அறிவிக்க வேண்டும், சுவாமிக்கு இன்னது இன்னது செய்ய வேண்டும், சுவாமியை தோத்திரம் பண்ண இன்ன இன்ன மாதிரி இருக்க வேண்டும் என்பவைகள் போன்றதெல்லாம் மூடபக்தி மூடநம்பிக்கையில் பட்டது என்பதே நமதபிப்பிராயம்.

அன்றியும் வாழ்க்கையின் ஒவ்வொரு நிலையிலும் காரியத்தின் தன்மையை கவனிக்காமல், சுவாமி காப்பாற்றுவார், சுவாமி கொடுத்துவிடுவார், சுவாமிக்கு பொருத்தமாக இருக்க வேண்டும், சுவாமி அறிய சொல்லுகிறேன், சுவாமி தலையில் பாரத்தைப் போட்டு செய்கின்றேன் என்பதுபோல் ஒவ்வொன்றையும் சுவாமி தலையில் போடுவது ஆகிய விஷயங்கள் எல்லாம் மூடபக்தி, மூட நம்பிக்கை என்பதே நமதபிப்பிராயம்.

b. அப்படியானால் பல அற்புதங்கள் செய்து உலகத்தை வாழ் வித்த அப்பர் சுந்தரர் முதலிய நால்வர்களும், ஆழ்வாராதிகளும் மூட பக்தி படு குழியில் விழுந்தோர்களா என்பது.

அவர்கள் எப்படி இருந்தாலும் நமக்கு என்ன. முதலாவது அவர்களைப் பற்றிய கதை நமக்குத் தெரியாது. தவிர அவர்கள் நடவடிக்கைகள் சாதாரண மனிதத் தன்மைக்கு மீறினதாகச் சொல்லப்படுகிறது. அதை நாம் நம்புவதால் பயன் என்ன? நம்பாததால் நஷ்டம் என்ன? யார் இருந்து அந்த சமயம் பார்த்தவர்கள்? அந்தகால மக்கள் அறிவு, மூளை, சக்தி ஆகியவைகள் எப்படி இருந்தது? இவைகள் எல்லாம் விவகாரத்திற்கு இடமில்லாமல் சொல்லக்கூடியதாயிருந்தால் நம்புகின்றவர்கள் நம்பட்டும். மலை சமுத்திர மாக மாறியிருக்கின்றது. சமுத்திரம் மலையாக மாறியிருக்கின்றது. நாடு காடாயிருக்கின்றது. காடு நாடாயிருக்கின்றது என்கின்றார்கள்? அப்படி இருக்கையில் இவைகள் எங்கு எப்போது நடந்தது என்பதும் எப்படி தெரிந்த தென்பதும் சுலபத்தில் முடிவு செய்யக்கூடிய காரியமல்ல. உதாரணமாக, முதலையுண்ட பாலனை வரவழைத்தக் கதை சொல்லும்போது அந்தக் காலத்து முதலை எப்படிப்பட்டது. குழந்தை எப்படிப்பட்டது என்பதை யார் நிர்ணயிப்பது. நரி குதிரையான கதை சொல்லும்போது அக்காலத்திய நரிக்கும் குதிரைக்கும் உள்ள வித்தியாசம் அக்காலத்திய மக்கள் கண்ணின் நிலைமை யும் அறிவின் நிலைமையும் யார் அறிந்தவர்கள்.

சமுத்திரத்தில் கல்லைக் கட்டிப் போடப்பட்டவர் தண்ணீரில் மிதந்தார் என்கின்ற கதையும், ஓலை எழுதி ஆற்றில் போட அது எதிர்த்து வந்தது என்பதுமான கதைகளும் அப்படியேதான்.

இதுபோலவே ஆழ்வாராதிகள் சங்கதியும் வைத்துக் கொள்ளலாம். இதை எல்லோரையும் நம்பும்படி கட்டாயப்படுத்த யாருக்கு அதிகாரமிருக் கின்றது. இன்னமும் இராமாயணம், பாரதம் முதலிய கதைகளையும் எடுத்துக்கொண்டு விவகாரம் பேசப் புறப்பட்டால் அவைகளுக்கு முடிவு எது?

அராபியன் நைட் என்கின்ற கதையையும் குஹஐசுலு கூஹடுநுளு என்கின்ற மோகினிக் கதைகளையும் வேறு ஒருவர் நம்முன் தோன்றி அவர்களும் சில நாயன்மார்கள், ஆழ்வாராதிகள், கடவுள்கள் அவதாரங்கள் என்கின்றவைகளின் பெயரால் சொல்ல வந்தால் யாருக்கு அவைகளை மறுக்க அதிகாரம் இருக்கின்றது. எனவே “ஒரு காலத்தில் நடந்தது என்கின்ற விஷயம்” இப்போது யாருக்கு என்ன பலனைக் கொடுக்கும். அது பொய்யா, மெய்யா என்று வாதாடுவதில் செலவாகும் நேரம் கடவுளுக்கோ, மதத்திற்கோ, மக்களுக்கோ என்னப் பலனைக் கொடுக்கும் என்பதுதான் இங்கு கேள்வியே ஒழிய அதன் உண்மையைப் பற்றியே முழு விவகாரமும் அல்ல. எவ்வளவோ கஷ்டப்பட்டு உண்மை கண்டுபிடிக்க முயற்சித்தால் பிறகு திடீரென்று தத்துவார்த்தம் வேறே வந்து குறுக்கே விழுந்து எல்லாவற்றையும் கெடுத்து விடுகின்றது. ஆதலால் நம்முடைய எண்ணத்தால், வார்த்தைகளால், நடவடிக்கைகளால் நாம் அன்னியருக்கு உதவுவது எப்படி, அன்னியர் கஷ்டத்தை நிவர்த்திப்பது எப்படி என்கின்ற காரியத்தில் காலத்தை செலவழிக்க வேண்டுமென்று எண்ணியே மூடபக்தி, மூடநம்பிக்கை என்ப தோடு ஏட்டில் உள்ள அற்புதங்களைப் பற்றியும் கவலைவேண்டாம் என் கின்றோம்.

( 7 ) சைவம், வைணவம், சமணம், பௌத்தம், துவைதம், அத் வைதம், விசிஸ்டாத்வைதம், வீரசைவம் முதலியன எல்லாம் இந்து மதத்தில் பட்டது என்பது.

அப்படியானால் கிறிஸ்துவம், மகமதியம், ஆரிய சமாஜம், சீக்கியம், பிரம்ம சமாஜம், பார்சீகம் முதலியவைகளான மற்றும் சில மதங்கள் இதில் ஏன் ஸ்ரீமான் பிள்ளையவர்களால் சேர்க்கப்படவில்லையோ நமக்கு தெரியவில்லை.

தவிர, சைவ மதம் ஏன் சமணர்களை கழுவேற்றிற்று என்பது நமக்கு விளங்கவில்லை. பௌத்த மதத்தை ஏன் பார்ப்பனர்கள் விரட்டி அடித்தார்கள் என்பது நமக்கு விளங்கவில்லை.

சங்கராச்சாரி மதமான ஸ்மார்த்த மதத்திற்கும் சைவ மதத்திற்கும் ஏன் சண்டை நிகழ்கின்றதென்பது நமக்குத் தெரியவில்லை. வைணவத்திற்கும் சைவத்திற்கும் பரத்துவத் தகரார் ஏன் நடைபெறுகின்றது என்பது நமக்குப் புலப்படவில்லை. ஆளுக்கு ஒருவிதமான குறிகள் ஏன் என்பதும் தெரிய வில்லை. பௌத்தர் ஏன் கடவுளைப் பற்றி பேசவில்லை என்பதும் தெரிய வில்லை. ஒரு மதக் கடவுள் மற்றொரு மதக் கடவுளை ஏன் பூசித்தார் என்பதும் தெரியவில்லை. இன்னும் இவற்றின் உட்பிரிவும், கடவுள்களும் அவைகளின் நடவடிக்கைகளும் எப்படி ஒரே மதமாகுமென்பது நமக்கு படவில்லை. ஆதலால் இந்து மதத்திற்கு இவைகள் மாத்திரம் உட்பிரிவு என்பதையோ, இவைகளெல்லாம் ஒரே மதம் என்பதையோ ஒப்புக் கொள்ள முடியாது. ஒப்புக்கொள்வதானால் நாம் சொல்வதெல்லாம் மேல்கண்ட மதத்தில் பட்டவர்களே. ஒவ்வொரு சமயத்தில் ஒவ்வொருவர் சொன்னதாக அந்தந்த மதக்காரர்களே சொல்ல நாம் கேட்டிருக்கின்றோம். ஆகையால் நாம் சொல்லுவதைப் பற்றி இது என்ன மதமோ என்று யாரும் கவலைப்பட வேண்டியதில்லை.
இந்து மதம் என்கின்ற பெயர் எப்படி வந்தது என்று விவேகா னந்தர் சொல்லியிருக்கிறார் என்பது.

அவர் எதையோ சொல்லி இருக்கலாம். எந்த அர்த்தத்திலோ சொல்லியிருக்கலாம். இப்பொழுது நமக்குத் தெரியவேண்டாமா? என்பது தான் கேள்வி. ஸ்ரீமான் பிள்ளை அவர்களுக்குத் தெரிந்தால் சொல்லட்டும் பதில் சொல்ல முயலுகிறோம்.

( 8 ) மத சம்மந்தமான எந்த நூலையும் பார்க்க யாருக்கும் தடை யில்லை என்பது.

பார்க்கவேண்டும் என்கிற ஆசை ஒன்றும் நமக்கில்லை. நாம் சொல்வ தென்னவென்றால் மதப்படி நடப்பதாக ஒருவன் ஒப்புக் கொண்டால் வேதத் தைப் பார்க்க முடியுமா என்பதுதான் கேள்வி. பார்க்க மதம் இடம் கொடுக்கின்றதா என்பதுதான் கேள்வி. அப்படி இடம் கொடுக்குமானால் எவ்வளவோ பழய மதம் என்று சொல்லப்படுவதான இந்துக்கள் என்போர்கள் என்ன காரணத்தினால் இதுவரை 100 க்கு 5 பேருக்கு மேல் படிக்க முடியவில்லை என்பதையும், அப்படி படித்திருப்பதும் இந்து அரசாங்க மல்லாத வெள்ளைக்கார அரசாங்கத்தினாலா அல்லது மதத்தின் உதவியி னாலா என்பதையும் யோசித்துப் பார்க்க வேண்டுகின்றோம்.

( 9 ) கோயில்களைக் கூத்துச்சாலை என்று நாயக்கர் சொல்லு கின்றார் என்பது.

ஆம், அப்படித்தான் சொல்லுகிறோம். ஏனெனில் கோயிலுக்குள் மாத்திரம்தான் இருக்கின்றது என்பதாக ஒரு விசேஷமும் இல்லை என்றும், ஏதாவது இருப்பதாகச் சொன்னால் பொய்யும், புரட்டும், கூடா ஒழுக்கங் களுக்கு சௌகரியமும் மாத்திரம் இருக்கின்றதெனவும் சொல்லுகின்றோம். இது நம்முடைய 30 வருஷத்திய கோயில் நிர்வாக அனுபவம்.

( 10 ) கல் மனதையும் கரைக்கும்படியான சக்தி சில ஆலயங்களுக்கு இருக்கின்றது என்பது.

அது எந்த ஆலயத்தில் என்று ஸ்ரீமான் பிள்ளையவர்கள் சொல்வார்களானால் மெத்த உபகாரம். தவிரவும் ஏன் மற்ற ஆலயங்களுக்கும் அச்சக்தி இல்லாது போயிற்றென்பதையும் எடுத்துச் சொன்னாரானால் அதைவிட உபகாரமாயிருக்கும் என்று தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.

( 11 ) இக்காலத்தில் பல இடங்களில் எத்தனையோ அற்புதங்கள் நடக்கின்றன என்பது.

நம் நாட்டில் எங்கே என்ன விதமான அற்புதங்கள் நடக்கின்றன என்பதை காட்டி ருஜுப்பிப்பாரானால் அதற்கு ஏற்படும் செலவு முழுவதையும் கொடுத்து ஏற்றுக்கொள்ளத் தயாராயிருக்கின்றோம். அப்படி இல்லாவிட்டால் குருட்டு நம்பிக்கைக்கும், மூட பக்திக்கும் ஸ்ரீமான் பிள்ளை அவர்களே சாட்சியாவார்கள்.

( 12 ) பல ஸ்தலங்களுக்கு விசேஷ காலங்களில் லட்சக் கணக்கான ஜனங்கள் நடந்துபோய் ஆனந்த பரவசர்களாகிறார்கள் என்பது.

லட்சக்கணக்கான ஜனங்கள் நடந்து போவதாலேயே ஒரு ஸ்தலம் உயர்ந்ததாய் விடாது. சந்திரனுக்குத் தாரை நிர்வாணமாய் எண்ணெய்த் தேய்ப்பதாக விளம்பரம் போட்டால் தாரை வேஷக்காரன் ஆணாயிருந்தா லும் கொட்டகை நிறைய ஆட்கள் கூடி விடுகிறார்கள். வெகுதூரத்திலிருந்து பணம் கொடுத்து பார்த்து விட்டுப் போகின்றார்கள். இன்னக் கள்ளுக்கடையில் நல்ல போதையுள்ள கள்ளு விற்கிறதாக பறையடித்தால் நிற்கக் கூட இடமில்லாமல் ஆள்கள் பல இடங்களில் இருந்து வந்து குடித்து மெய்மறந்து தெருவெல்லாம் புரண்டு கொண்டிருக்கிறார்கள். வண்டிமேல ஏறுவது கூட தெரிவதில்லை. அதுபோலவே பீபிள்ஸ் பார்க் வேடிக்கைக்கு எத்தனையோ பேர் போகின்றார்கள். அதுபோலவே காங்கிரஸ் என்றும், கண்காட்சி சபை என்றும், காந்தி என்றும், சங்கராச்சாரி என்றும், மாமாங்கமென்றும், மேளா என்றும் எத்தனையோ பேர் போகின்றார்கள். இதனாலெல்லாம் இடத்திற்கு மகத்துவமா? அந்த ஆள்களுக்கு மகத்துவமா? என்னவென்று ஸ்ரீமான் பிள்ளை சொல்வாரோ தெரியவில்லை.

( 13 ) மதம், கோவில், பக்தி முதலியவற்றை அழித்துவிட நாயக்கர் முயலுவது அறிவுடைமையாகாது என்பது.

யோக்கியமாக மனிதன் உலகத்தில் வாழ்வதற்கு இவைகள் வேண்டுமென்றே அவசியமில்லை. இப்போதைய மதம், கோயில், பக்தி முதலியவை கள் மக்களுக்கு எவ்வித பலனையும் ஒழுக்கத்தையும் கொடுப்பது மில்லை, கெடுதியும் செய்கின்றது. எனவே ஏதாவது ஒரு காலத்திலாவது அவைகள் அழிய நேரிட்டால் யாரும் கவலைப்பட வேண்டியதுமில்லை. தவிர கோவில்கள் இல்லாத காலத்தில் மக்கள் இவ்வளவு அயோக்கியர்களாக இருந்தார்கள் என்றும் மக்களை மக்கள் இவ்வளவு கொடுமைப்படுத்தினார்கள் என்றும் ஆராய்ச்சிக்காரர்கள் சொல்வதில்லை.

( 14 ) கௌதமர் இந்து மதத்திலிருந்தே சீர்திருத்தம் செய்திருக்கிறார். அதுபோல் நாயக்கர் செய்யட்டுமே என்பது.

கௌதமர் கொள்கைகளை ஒப்புக்கொண்டு அதன்படி நடப்பவர் களிடம் அதிக தகராரில்லை.

அவர் எந்த மதத்தைச் சொன்னார். எந்த கடவுளைச் சொன்னார். எந்தக் கோவிலைச் சொன்னார், எந்த உற்சவத்தைச் சொன்னார், எந்த ஜாதியைச் சொன்னார், எந்த பக்தியைச் சொன்னார் என்பதை பிள்ளையவர்கள் சற்று யோசித்துப் பார்ப்பாரானால் இவ்வளவு தூரம் கவலைப்பட்டிருக்க மாட்டார் என்றே சொல்லுவோம்.

அவர் ஜீவன்களிடத்தில் எப்படி நடந்துகொள்வது என்பதைத்தான் சொல்லியிருப்பார் என்று நினைக்கிறோம்.

( 15 ) நாயக்கர் புதுக் கொள்கைகளைக் கொண்டு வந்து சீர்திருத்தம் செய்யட்டுமே என்பது.

நாம் எவ்வித புதுக் கொள்கைகளையும் கொண்டு வரவேண்டு மென்கின்ற எண்ணமில்லை. இப்போது இருக்கும் ஆபாசக் கொள்கைகள் ஒழிந்தாலே தானாக நல்ல கொள்கைகள் ஏற்பட்டு விடுமென்கின்ற நம்பிக்கை நமக்கு உண்டு. சுருக்கிச் சொன்னால் மனிதனை மனிதன் இழிவு படுத்துவதும், பலத்தினால் அடக்கி ஆளுவதும் ஒழிய வேண்டும். இதுபோல பல ஒழிவதற்கு இடையூராயிருக்கும் எது ஒழிவதானாலும் நமக்குக் கவலை இல்லை. நமது கவலை சுயமரியாதையும் அன்புந்தான்.

மற்றும் அவர் வியாசத்தில் உள்ளவைகளுக்கும் இவற்றில் சமாதானம் இருக்குமென்று சிந்திக்கின்றோம். எவ்வளவு சுருக்கியும் வியாசம் அதிகமாக நீண்டுவிட்டதால் இதுசமயம் இத்துடன் நிறுத்தி விட்டோம்.

------------------- தந்தை பெரியார் - “குடி அரசு” - கட்டுரை - 25.12.1927

0 comments: