Search This Blog

8.8.10

பக்தர்களிட மிருந்து யானைக்குத் தொற்றுநோய் பரவுகிறதாம்!


கஜேந்திரன்!

கோயில் யானை என்றால் சாதாரணமானதல்ல அது கடவுள் அருள் பெற்றது. அதுவும் கஜேந்திரன் ஒருமுறை முதலை ஒன்று யானையின் காலைக் கவ்விப் பிடிக்க, ஆதி மூலமே! என்று கஜேந்திரனாகிய யானை அலறிய மாத்திரத்திலேயே மகாவிஷ்ணுவாகிய பெருமாள் தன் கருட வாகனத்தில் விரைந்து பறந்து வந்து, தமது கையில் வைத்துள்ள வன்முறைக் கருவியான சக்கராயுதத்தை ஏவி, முதலையை அழித்து, கஜராஜனாகிய யானைக்கு விடுதலை அளித்து முதலை வடிவத்தில் இருந்த கந்தர்வனுக்கும் சாப விமோசனம் அளித்தாராம்.

கஜராஜன் கஜேந்திரன் என்று போற்றப்படும் அந்த யானையைத்தான் அதுவும் கோயில் யானையைத்தான் கடைவீதிகளில் பிச்சை எடுக்க விடுகிறார்கள்.

கடைக்குக் கடை சென்று பழங்களைப் பெற்று வயிறு வளர்க்கிறது.

இடையில் பக்தர்கள் கொடுக்கும் பணத்தை துதிக்கையால் வாங்கி பாகனிடம் கொடுத்து, பக்தர்களின் தலையில் துதிக்கையை வைத்து ஆசிர்வாதமும் செய்கிறது (எல்லாம் சர்ச்சுகள் மாதிரி தான்!)

பசியாத வரம் தாரேன் தாயே! பழைய சோறு இருந்தால் கொஞ்சம் பிச்சை போடு! என்றானாம் ஒரு பிச்சைக்காரன். பசியாத வரம் தரும் சக்தி அவனுக்கு இருந்தால், அவன் ஏன் பிச்சை எடுக்கிறான்? என்று யாரும் சிந்திப்பதில்லை.

சரி, பிரச்சனை என்ன? காரியம் இல்லாமலா? நேற்று ஒரு செய்தி... கோயில் யானையை ஆசிர் வாதம் செய்ய அனுமதிக்கக் கூடாது. அவ்வாறு பக்தர்களின் தலையில் யானை (கஜேந்திரன்) துதிக்கை வைத்து ஆசிர்வதிக்கும் போது பக்தர் களிடமிருந்து யானைக்கு நோய் தொற்றிக் கொள்கிறதாம் அதனால் இந்து அற நிலையத்துறை அதற்குத் தடை போட்டுள்ளதாம்!

அடே, இது என்ன அனாச்சாரம்! கோயில் யானைகள் தலைமுறை தலைமுறையாகப் பிச்சை எடுப்பதும், பக்தர்களுக்கு ஆசி வழங்குவதும் நடந்து கொண்டு தானே இருக்கிறது. அப்படியிருக்கும் பொழுது யானையின் தலையில் கை வைக்கலாமா? (யானை தான் மற்றவர்கள் தலையில் கை வைக்கலாம்!) என்று இந்து மக்கள் கட்சி போர்க் கொடி தூக்கியுள்ளது.

கஜேந்திரனைக் காக்க மனிதர்கள்தான் சத்தம் போட வேண்டியுள்ளது. அது சரி, பக்தர்களிட மிருந்து யானைக்குத் தொற்றுநோய் பரவுகிறது என்று சொல்லும் கால்நடை மருத்துவர்கள் எல்லாம் கருப்புச் சட்டைக்காரர்கள் நாத்திகர்கள் என்று அக்கட்சி சொல்லப் போகிறதா?

------------------மயிலாடன் அவர்கள் 9-8-2010 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

1 comments:

அ.முத்து பிரகாஷ் said...

பக்தர்களிடமிருந்து யானைக்கு மட்டுமல்ல சமூகத்திற்கே பரவிக்கொண்டு தானிருக்கிறது தொற்று நோய்... இந்து மக்கள் கட்சியினரை மிருகவதை சட்டத்தின் பிடியில் கொண்டுவந்தால் தான் அவர்கள் அடங்குவார்கள் ...

இனிய இரவு தோழர் !