Search This Blog

2.8.09

வன்முறை + ஆபாசம் + மூடநம்பிக்கை = ?




தொலைக்காட்சித் திரையிலிருந்து வெளிவரும் கதிர்வீச்சு 13 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் மேல் அபாயகரமான விளைவை ஏற்படுத்துகிறது. தொலைக்காட்சி பார்ப்பது குழந்தைகளுக்குத் தீர முடியாத பாதிப்பை ஏற்படுத்துகிறது.

மத்திய நடத்தை அறிவியல் நிறுவனத்தின் (Institute of Behaviour Sciences) இயக்குநரும், குழந்தைகள் மன நல மருத்துவருமான டாக்டர் சைலேஸ் பகோங்கர்.



தொலைக்காட்சியில் வரும் கொடூரமான கொலை, கற்பழிப்பு, ரத்தவெறி பிடித்த காட்சிகளைப் பார்க்கும் குழந்தைகளின் மனதில் Aggressive behaviourஎன்னும் குத்துதல், அடித்தல், உதைத்தல், வெட்டுதல் போன்ற வெறி உணர்வு பதிவாகிறது. பெரியவர்கள் ஆன பிறகு இவர்கள் வன்முறையாளர்களாக ஆகலாம். சில சிறுவர்களிடம் தொலைக்காட்சி Mood Disorder manial என்ற மன நோயை உண்டாக்-குகிறது.

-------- மனநல மருத்துவர் எஸ். விசுவநாதன்

ஆட்டோ சங்கர் நினைவிருக்கிறதா? ஆறு பேரைக் கொலை செய்தவர். மட்டுமல்ல; விபச்சாரத் தொழிலையும் நடத்தியவர்; அவருக்குத் தூக்கும் உறுதியாயிற்று.

ஆட்டோ சங்கரும் அவரின் நண்பர்களும் நீதிமன்றத்தில் என்ன கூறினார்கள்?

வன்முறை மற்றும் கவர்ச்சியான திரைப்படங்களைப் பார்த்தோம். அதுதான் இந்தக் கொலைகளைச் செய்ய எங்களைத் தூண்டியது என்று கூறவில்லையா?

இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜெயச்சந்திரரெட்டி, ரே ஆகியோர் 76 பக்கங்களைக் கொண்ட தீர்ப்பை வழங்கினர் (ஏப்ரல் 94)

அந்தத் தீர்ப்பிலே நீதிபதிகள் தெரிவித்த கருத்துகள் கவனத்துக்கும், கவலைக்கும் உரியவையாகும். கதாநாயகி என்றாலே ஆபாசமான அங்க அசைவுகளுடனும் ஆபாசமான உடைகளுடன், ஆபாசமான கோணத்திலும்தான் காட்ட வேண்டுமா? கலை, கலாச்சாரத்தை வளர்க்க வேண்டும் என்பதுதான் அடிப்படை நோக்கம் என்றால் இவையெல்லாம் தேவைதானா?



ஒரு தொலைக்காட்சி விளம்பரம். தன் பெற்றோரிடம் ஒருவீட்டைக் காட்டி ஒரு இளம் வயது பெண் அப்பா, நான் இந்த வீட்டுப் பையனையே கல்யாணம் செய்துக்கப் போறேன். அவங்க வீட்டுல பேசுங்க என்பார். பெற்றோரும் அந்த வீட்டுக்காரரிடம் போய்ப் பேசுவர்... வீட்டுக்காரரோ அசோக் என்று தன் மகனைக் கூப்பிடுவார். அவனோ 14 வயது பையன், பெண்ணுக்கோ வயது 18. வெட்கத்துடன் பார்த்த பெண், நான் காத்துக்கிட்டு இருப்பேன் என்பார். சற்று தள்ளி அய்ஸ்கிரீம் சாப்பிட்டபடி அந்த 14 வயது பையன் பிரமாதம் என்பான்.

இது ஒரு விளம்பரம்தான் என்றாலும் அது நிஜமாகவேஆகிவிட்டது என்றால் ஆச்சரியமாகத் தானிருக்கும்.

டில்லியில் உத்தம் நகரைச் சேர்ந்தவர் அந்தப் பெண்ணுக்கு வயது 22. திடீரென்று காணவில்லை. எங்கு தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.

அதே கால கட்டத்தில் 14 வயது பையன் ஒருவனும் காணவில்லை. கடைசியில் பார்த்தால் அந்த 22 வயது பெண்ணும் 14 வயது ஆணும் ராஜஸ்தான் மாநிலம் ஆஜ்மீரில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு டில்லிக்கு அழைத்து வரப்பட்டனர். விசாரணையில் நாங்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டோம். நான் இப்போது ஆறு மாத கர்ப்பம்; எனக்கு 22 வயதாகி விட்டது. அவருக்கு வயது 14. பதினெட்டு வயதாக இன்னும் நான்கு ஆண்டுகள் காத்துக் கொண்டிருப்பேன். சமீபத்தில் ஒரு விளம்பரத்தை டி.வி.யில் பார்த்தேன். அதில் ஒரு பெண் தன் கணவன் வயது 18 ஆகும் வரை காத்திருப்பதாகப் பெற்றோரிடம் கூறுவாள். அதைப் பார்த்த நானும் அவர் 18 வயது அடையும் வரை காத்திருந்து உலகுக்குச் சொல்லலாம் என்று இருந்தேன் என்று அந்தப் பெண் சொன்னார். ஒரு தொலைக்காட்சி விளம்பரம் எந்த அளவு விபரீதத்தின் எல்லையை தொட்டு இருக்கிறது பார்த்தீர்களா?




தொலைக்காட்சி டிடி ஒன்றில் சக்திமான் என்ற ஒரு தொடர் இடம் பெற்று வந்தது. அபார மாயசக்திகள் கொண்ட வீரனாக முகேஷ் கன்னா நடித்த அந்தத் தொடரை வாரந்தோறும் சனிக்கிழமையன்று சிறுவர்கள் தவறாமல் பார்ப்பார்கள். அந்தத் தொடருக்கு அவ்வளவு மவுசு! திருவாரூரையடுத்த திருநெல்லிக்காவல் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த நாகராஜ் என்ற சிறுவன் தனக்குத்தானே தீ வைத்துக் கொண்டான். கடைசியாக அவன் சொன்னவார்த்தை சக்திமான் என்னைக் காப்பாற்றுவார் என்பதுதான். ஒரே மகன் அதுவும் பக்கத்து வீட்டுக்குச் சென்று சக்திமான் தொடரைத் தொடர்ந்து பார்த்து வந்த சிறுவன் இந்தக் கொடூரத்துக்கு ஆளானான்.

(1998 நவம்பர்)

பஞ்சகல்யாணி சினிமாவில் இடம் பெற்ற கழுதைக்குப் புதுச்சேரியில் தலைமை ரசிகர் மன்றம் துவக்கியுள்ளனர். இதன் தொடக்க விழா தேய்காய்த் திடலில் நடந்தது இதனைத் தொடர்ந்து ஒரு கழுதைக்கு மாலை போட்டு அலங்கரித்து ஊர்வலமாக அழைத்துச் சென்ற
னர் (14.3.1986).



சிட்டுக் குருவி சினிமா படம் பார்த்து கொலை செய்தோம்.

-------------- கைதானவர்கள் வாக்குமூலம்



மதுரையில் தமது அபிமான நடிகரின் திரைப்படக் காட்சிகளை ஒளிபரப்பவில்லை என்பதற்காக இருவர் தற்கொலை முயற்சி



உளுந்தூர்பேட்டை அருகே சினிமாவில் பார்ப்பதுபோல் சிறீய பாம்பின் முன் விழுந்து கும்பிட்ட சிறுமி கடிபட்டு மரணம் (27.7.1986)



பாபா படத்தை நண்பர்கள் விமர்சித்தனர் என்பதற்காக, இனி நல்ல படமாக எடுங்கள் என்று நடிகர் ரஜினிகாந்துக்கு உருக்கமாகக் கடிதம் எழுதி வைத்துவிட்டு சயனைடு சாப்பிட்டு கோவை செல்வபுரம் சுந்தரம் மரணம் (25.8.2002)



இந்தியாவிலிருந்து லண்டன் சென்றால் ஹித்ரு விமான நிலையத்தில் மணமாகாத பெண்களுக்கு வர்ஜினிட்டி டெஸ்ட் செய்யப்பட வேண்டியிருந்ததையும் சற்று எண்ணிப் பார்க்க வேண்டும். இவ்வளவு எடுத்துக்காட்டுகளும் எதற்கு? சினிமா என்ற ஆயுதம் கொலைக் கருவியாக ஆபாச சாதனமாக மாற்றப்பட்டுள்ளது என்னும் கொடுமையை சமூகத்திற்கு எடுத்துக்காட்டுவதற்காகத்தான்.

இந்தியா முழுமையும் 12 ஆயிரம் திரையரங்குகள் இருப்பதாகவும் அதில் தமிழ்நாட்டில் மட்டும் 2500 இருப்பதாகவும் (மொத்தத்தில் 23 விழுக்காடு) தமிழ்நாட்டில் மட்டும் நாள் ஒன்றுக்கு 31,48,000 பேர் திரைப்படம் பார்ப்பவர்கள் என்றும், இதில் சின்னத்திரை சேராது என்றும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

இதன் பொருள் திரைப்படம் என்ற அறிவியல் சாதனம் மக்களை குப்புறத்தள்ளி நாசப்படுத்திக் கொண்டிருக்கிறது.

படிப்பதையோ, கேட்பதையோ மனத்திரையில் ஓடச் செய்து பதிவு செய்து கொள்ள வேண்டும். ஆனால் தொலைக்காட்சி பார்க்கும் போதே எவ்விதக் கூடுதல் முயற்சியும் இன்றி செய்திகள் மனதில் பதிகின்றன. பார்ப்பதும், கேட்பதும் ஒரே சமயத்தில் நடப்பதால் கிரகிப்பது மிக எளிதாகிறது. எனவே இந்தச் சாதனத்துக்குச் சக்தி அதிகம் என்கின்றனர் மனநல மருத்துவர்கள்.

ஒரு சித்திரம் என்பது ஆயிரம் எழுத்துகளுக்குச் சமம் என்பது சீன நாட்டுப் பழமொழி.

இவ்வளவு நுட்பமான ஆயுதம் அறிவையும், ஆற்றலையும், பண்பாட்டையும் ஒரே வரியில் சொல்ல வேண்டுமானால் மனித வாழ்க்கையையே ஒட்டு மொத்தமாக நாசப்படுத்துகின்றன. இத்தகு சாதனத்தின்மீது அரசின் கண்கள் ஊடுருவ வேண்டாமா? தடுத்து நிறுத்த உரியது செய்யப்பட வேண்டாமா? நெருப்புக்குப் பக்கத்தில் பஞ்சு மூட்டையை அடுக்கி வைக்கலாமா?

மட்டுப்படுத்த வேண்டாமா? கட்டுப்படுத்த வேண்டாமா? என்ற குரல் காலந்தாழ்ந்தாலும் நாடாளுமன்றத்தில் எதிரொலிக்கத் தொடங்கிவிட்டது.

தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் திருமதி அம்பிகாசோனி அவர்கள் இந்தப் பிரச்சனைக்கு முக்கியத்துவம் கொடுத்துப் பேசியுள்ளார்.

உறுப்பினர்கள் வெளியிட்ட கருத்துகள் மிகவும் உணர்ச்சிகரமானவை; நாம் இப்பொழுது ஒரு படித்த பண்பட்ட சமூகமாகத் திகழ்கிறோம். எனவே நமக்கு நாமே ஒழுங்கு முறைகளை ஏற்படுத்த ஓர் அமைப்பை ஏற்படுத்துவது அவசியமாகும். இதற்கு மத்திய அரசு ஒளி, ஒலிபரப்பு ஒழுங்கு முறை ஆணையம் ஒன்றை விரைவில் கொண்டு வரும்.

இதில் அரசு அதிகாரிகள், சமுதாயப் பெரியவர்கள், ஊடகப் பிரதிநிதிகள் ஆகியோர் உறுப்பினர்களாக இடம் பெறுவார்கள்.

பத்திரிகைகளில் வரும் விரும்பத்தகாத வெளியீடுகளைத் தடுக்க பிரஸ் கவுன்சிலிடம் புகார் கூறலாம்.

பல்வேறு தனியார் வானொலி நிகழ்ச்சிகளிலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பெருகிவரும் வன்முறை கலாச்சார சீரழிவு, ஆபாசம் ஆகியவற்றைக் கடப்படுத்த விரைவில் மத்திய அரசு புதிய சட்டம் கொண்டு வரும் என்று மத்திய அமைச்சர் அம்பிகாசோனி அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கதாகும். அதே நேரத்தில் வன்முறை, ஆபாசங்களை மட்டுமல்ல மூடநம்பிக்கைகளையும் பரப்பி வருகிறது.

உத்திராட்சக் கொட்டையால் மாயாஜாலம் புரியலாம்; நோய்கள் நீங்கும் என்ற விளம்பரம் சமீபத்தில் லண்டன் தொலைக்காட்சியில் தடை செய்யப்பட்டது.

மக்களிடம் அறிவியல் மனப்பான்மையை ஏற்படுத்த வேண்டும் அது ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் அடிப்படைக் கடமை என்று இந்திய அரசமைப்புச் சட்டம் கூறுகிறது.

இந்த நிலையில் மத்திய அரசு ஏற்படுத்தவிருக்கும் ஒழுங்கு முறை ஆணையத்தில் பகுத்தறிவுச் சிந்தனையாளர்களும், அறிவியலாளர்களும் கண்டிப்பாக இடம் பெறச் செய்ய வேண்டும் என்பதே நமது அழுத்தமான வேண்டுகோள்.
*********************************



8 க்கும் 18 க்கும் இடையில்!

8 வயது முதல் 18 வயது வரைக்கும் இடையில் உள்ளவர்கள் பத்து வருடங்களில் மட்டும் இரண்டு லட்சத்துக்கும் அதிகமான வன்முறைக் காட்சிகள் ஆபாச காட்சிகளை தொலைக்காட்சிகளில் காண்கின்றனர்.

----------------------- டான் ராபின்சன் (அமெரிக்காவில் உள்ள ஸ்டேன் போர்டு பல்கலைக் கழக மருத்துவர்)

இவர் தனது ஆராய்ச்சியை இரு வகையாகப் பிரித்துக் கொண்டார் இரு பள்ளிக் கூட மாணவர், மாணவியர்களைத் தேர்ந்தெடுத்தார். முதல் பிரிவில் 105 மாணவர் மாணவியர் தொலைக்காட்சிகளைப் பார்க்காமல் நிறுத்தி வைக்கப்பட்டனர். மற்றொரு பிரிவில் 120 மாணவர் மாணவிகள் அவர்கள் விருப்பப்படி தொலைக்காட்சிகளை பார்க்க அனுமதிக்கப்பட்டனர். 6 மாத காலம் தொடர்ச்சியாக இந்தச் சோதனை நடத்தப்பட்டது. தொலைக்காட்சியைப் பார்க்ககாதவர்கள் இயல்பாக இருந்தனர். ஆனால் தொலைக்காட்சியை விருப்பப்படி பார்த்தவர்கள் மற்றவர்களைக் கிண்டல் செய்வது, மிரட்டுவது, துன்புறுத்துவது போன்ற கெட்ட நடவடிக்கைளைக் கொண்டவர்களாக இருந்தனர். தற்போதைய தொலைக்காட்சியின் ஆபத்துகள் எத்தகையன என்பது இப்பொழுது புரிகிறதா?

************************************************************************************

விசால உள்ளமோ!

ஸ்டார் டி.வி.யில் ஒளிபரப்பாகும் பல நிகழ்ச்சிகளை நான் என் குழந்தை-களுடன் உட்கார்ந்து பார்ப்பதில்லை என்று உலகம் பூராவும் -_ ஒளிபரப்பாகும் ஸ்டார் தொலைக்-காட்சியின் உரிமையாளர் ரூபேர்ட்-மர்டக் சொல்கிறார் - ஆம் உலகம் கெட்டுக் குட்டிச் சுவராகப் போனால் என்ன -_ அவரும் அவர் சார்ந்த குடும்பமும் நல்ல-படியாக இருந்தால்போதும் ---_ அடடே, எவ்வளவுப் பெரிய விசால உள்ளம்!

*********************************************************************************


நாட்டைப் பீடித்த நோய்களுள் சினிமாவும் ஒன்று என்று இன்றைக்கு 50 ஆண்டுகளுக்குமுன் (22.5.1959) தந்தை பெரியார் அவர்கள் சொன்னதை அந்தத் தொலைநோக்கை என்னவென்று சொல்வது!


எதிலும் காலத்தால் முந்தி ஒலிக்கும் அந்தப் பகுத்தறிவுக் கதிரவனின் முழக்கங்களுக்கு உலகம் காது கொடுக்கட்டும் சிந்திக்கட்டும் செயல்பட்டும். காரிருள்அகலும்; கண்ணியமான கருத்துலகம் மலரும்!

---------------------------- 1-8-2009 "விடுதலை" ஞாயிறுமலரில் மின்சாரம் அவர்கள் எழுதிய கட்டுரை

0 comments: