Search This Blog

6.8.09

இலங்கையில் என்ன நடக்கிறது?




ஈழத்திலே போர் முடிந்துவிட்டது என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், அப்பாவித் தமிழர்களின் மீதான நிர்பந்தங்கள் மட்டும் முடியவில்லை. இன்னும் மின்சார முள்வேலிக்குள் தங்களின் ஒவ்வொரு நொடியையும் மரணப் பயணத்தில் கழித்துக் கொண்டுள்ளனர். இதற்குக் காரணமானவர்கள் ஆட்சியின் பேரால் தமிழர்களை எப்படியெல்லாம் கொடுமைப்படுத்தியிருப் பார்கள் என்பதற்கு நிகழ்கால இந்தக் கெடுபிடிகளே போதுமானவை!

ஈழத் தமிழர்களின் பசிக்குத்தான் உணவு தர முடியவில்லை, சிங்கள அரசாங்கத்தால்; வெளிநாட்டிலிருந்து அனுப்பப்படுகிற உணவுப் பொருள்களைக் கூடவா கொடுக்கக் கூடாது?

இது எவ்வளவுப் பெரிய கொடுமை! தமிழ்நாடு அரசின் சார்பில் நான்காவது தவணையாக ஈழத் தமிழர்களுக்கு அனுப்பப்பட்ட நிவாரணப் பொருள்கள் சிங்கள அரசின் நிபந்தனைகளால் இலங்கைத் தீவுக்குப் போய்ச் சேர முடியவில்லையாம். பல கோடி மதிப்புள்ள உணவுப் பொருள்கள், உயிர் காக்கும் மருந்துகள் மற்றும் நிவாரணப் பொருள்கள் 80 ஆயிரம் மக்களுக்குத் தேவையான பொருள்கள் சென்னைத் துறைமுகத்திலேயே கடந்த 15 நாள்களாக முடங்கிக் கிடக்கின்றனவாம். இதற்கான பராமரிப்பு செலவு மட்டும் இதுவரை 45 லட்சம் ரூபாயாம்!

என்ன நிபந்தனை? செஞ்சிலுவைச் சங்கத்தின்மூலம் கொடுக்கப்படவேண்டும் என்பது தமிழ்நாடு அரசின் வேண்டுகோள். அதனை ஏற்க மறுக்கிறது சிங்களப் பேரினவாத அரசு.

கடைசியாக அய்.நா. மூலம் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு நிவாரணப் பொருள்களை அளித்திட இலங்கை அரசு ஒப்புதல் அளித்துள்ளதாம்.

தமிழர்களிடத்தில் இலங்கை அரசு எப்படி நடந்துகொண்டு வருகிறது என்ற உண்மைகள் வெளி உலகிற்கு மிக வெளிச்சமாகத் தெரிந்துவிட்டன. என்னதான் சமாதானம் சொன்னாலும் ராஜபக்சே அரசு என்பது ஓர் இனவாதப் பாசிச அரசுதான் என்பதை உலக நாடுகள் காலந்தாழ்ந்தாகிலும் உணரும் நிலை ஏற்பட்டுவிட்டது.

இதை மூடி மறைக்க ஏதோதே தந்திர உபாயங்களைச் செய்து பார்க்கிறது சிங்கள அரசு.

இந்து ராமை அழைத்துச் சென்று நேரிடையாகக் காட்டுவதாகச் சொல்லி, உண்மைக்கு மாறாக முகாம்களில் ஈழத் தமிழர்கள் நல்ல வசதியுடன் வாழ்கிறார்கள் என்று இந்து ஏட்டில் வெளியிடச் செய்தார். சிறீலங்கா ரத்னாவான என். ராம் தமது எஜமானரின் (ராஜபக்சேயின்) குரலை அப்படியே எதிரொலித்தார்.

இப்பொழுது வேலூரிலிருந்து பொற்கோயில் சாமியார் ஒருவரை (அம்மாவாம்!) இலங்கைக்கு வரவழைத்து, முகாம்களில் முடங்கிக் கிடக்கும் தமிழர்களுக்கு அவரே நேரிடையாக நிவாரணப் பொருள்களை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. அவர் என்ன சொல்கிறார்? முகாம்களில் தமிழர்கள் வசதியாக இருக்கிறார்களாம்.

ஆணாகிய அந்த அம்மா சொல்கிறார்: இல்லை இல்லை சொல்ல வைத்திருக்கிறார்கள். மற்றவர்களுக்கெல்லாம் ஆயிரம் ஆயிரம் நிபந்தனைகள். ஆனால், இதுபோன்ற ஆமாம் சாமி. ஆசாமிகளுக்கு மட்டும் ராஜபாட்டைதான். என்னே பித்தலாட்டம்!


ராஜபக்சே நடந்துகொள்ளும் போக்கைப் பார்த்தால், இப்போதைக்கு முள்வேலி முகாம்களிலிருந்து ஈழத் தமிழர்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பப்பட மாட்டார்கள் என்றே தெரிகிறது. முகாம்களில் விடுதலைப்புலிகள் இருக்கிறார்கள் என்று சொல்லி காலத்தைக் கடத்தி வருகிறார்கள். சிலர் விடுதலைப்புலிகள் என்று சொல்லி கடத்தப்பட்டு கொல்லப்பட்டு வருகின்றனராம்.

என்ன நடக்கிறது இலங்கையில்? இந்தக் கொடுமைகளைத் தட்டிக் கேட்பதற்கு உலகில் எந்தவித அமைப்பும் ஏற்பாடும் கிடையாதா?

கம்யூனிஸ்ட் நாடுகளான சீனா, ரஷ்யா, கியூபா, வியட்நாம் நாடுகள் இலங்கை அரசுக்கு மூர்க்கத்தனமான ஆதரவைக் கொடுக்கிற காரணத்தால், அய்.நா. மன்றமோ மற்ற நாடுகளே மூச்சு விடுவதில்லையா?

அய்.நா. செயலாளர் பான் கீ மூன் இலங்கைப் பிரச்சினையில் சரியாக நடந்துகொள்ளவில்லை என்ற குற்றச்சாற்று வந்தபோது, அதனை மறுத்தவர், இப்பொழுது என்ன செய்து கொண்டிருக்கிறார்?

இதைவிட என்ன நடந்தால் அய்.நா. தலையிடுமாம்?

முகாம்களில் முடங்கிக் கிடக்கும் மூன்று லட்சம் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட பின்தான், அங்கு இலங்கையில் ஏதோ நடக்கிறது போலிருக்கிறது! என்று கொட்டாவி விட்டு கண்களைக் கசக்கிக் கொண்டு எட்டிப் பார்க்குமோ!

இந்தியாவைக் கேட்கவே வேண்டாம், சுத்தம்! எதாவது நடந்துவிட்டுப் போகட்டும், நமக்கென்ன என்று இழுத்துப் போர்த்திக் கொண்டு தூங்குவதுதான் இந்தியாவின் வேலை. தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது குறித்து மாநிலங்களவையில் தி.மு.க. உறுப்பினர் சிவா போர்க்குரல் எழுப்பியிருக்கின்றார்.

நிஜமாகவே தூங்குபவரைத் தான் எழுப்பலாம். பாசாங்குக்காரர்களை எழுப்ப முடியுமா?


சீனா பக்கம் இலங்கை சாய்கிறது என்று தெரிந்த பிறகாவது, இந்தியா வேறு கண்ணோட்டத்திலாவது விழித்துக் கொள்ளவேண்டாமா?

------------------------"விடுதலை" 5-8-2009

0 comments: