Search This Blog

27.8.09

இந்துக்கள் கலாச்சாரத்தில் ஓரின சேர்க்கைக்கு இடம் இல்லையா?




ஹரிஹரபுத்திரன்

ஓரினச் சேர்க்கையைப்பற்றி நாடெங்கும் சர்ச்சைகள் வெடித்துக் கிளம்பியிருக்கின்றன. டில்லி உயர்நீதிமன்றம் இதனை அங்கீகரித்தது என்றவுடன், பிரச்சினை மேலும் சூடாகி, உச்ச கொதி நிலையை அடைந்துவிட்டது.

உத்தரப்பிரதேச மாநிலம் பக்பட் மாவட்டம் பாரட் நகரில் உள்ள ஒரு கோயிலில் இரு இளைஞர்கள் சென்று தாங்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ள விரும்புவதாகவும், மாங்கல்யம் தந்துனானே என்ற கல்யாண மந்திரத்தைச் சொல்லி கோயில் அர்ச்சகரை கல்யாணத்தை நடத்தி வைக்குமாறும் கேட்டுக்கொண்டனராம்.

அர்ச்சகர் அதிர்ச்சி அடைந்துவிட்டாராம். வாக்குவாதம் சூடு பிடித்ததாம். அந்த அர்ச்சகரை அடிக்கப் போகும் அளவுக்கு அந்த இளைஞர்கள் நடந்துகொண்டனராம். கூட்டம் கூடவே அந்த இரு இளைஞர்களும் நைசாகத் தப்பி விட்டனராம். இப்படியாக ஒரு தகவல் நேற்றைய மாலை ஏட்டில்.

ஓரினச் சேர்க்கையாளர் திருமணத்துக்கு அரசு அனுமதி அளிக்கக் கூடாது. நம் இந்துக் கலாச்சாரம் சீரழிவதை அரசு தடுக்கவேண்டும் என்று கோயில் அர்ச்சகர் குமுறினாராம்.

ஓரினச் சேர்க்கை சரியா, சரியில்லையா என்பது ஒருபுறம் இருக்கட்டும். இந்துக் கலாச்சாரம் அதனால் சீரழிவதாக ரொம்பவும் கவலைப்பட்டு கண்ணீர் வடிக்கிறார்களே, அது எப்படி?

இந்துக்கள் கலாச்சாரத்தில் ஓரின சேர்க்கைக்கு இடம் இல்லையா? அது என்ன அப்படி ஒரு இந்துக் கலாச்சாரம்?

இந்துக் கடவுளான அய்யப்பன் சங்கதி என்ன? பத்மாசுரன் என்ற அசுரன் சிவனிடம் வரம் கேட்டானாம்; எப்படிப்பட்ட வரம்? நான் யார் தலையில் கை வைத்தாலும் அவன் தலை பஷ்பமாகிட (எரிந்துவிட) வேண்டும் என்பதுதான் அந்த வரம். சிவனும் வரம் கொடுத்துவிட்டான்; சரி, வரம் வாங்கியாகிவிட்டது. பரீட்சித்துப் பார்க்கவேண்டாமா? வரம் கொடுத்த சிவன் தலையிலேயே கையை வைக்க விரும்பினானாம். கடைக்கண் பார்வையால் எரிக்கும் சக்தி வாய்ந்த கடவுள் என்று சொல்லப்படும் சிவன் ஓட்டம் பிடித்தானாம். விடவில்லை பத்மாசுரன்; துரத்தினான்; துரத்திக்கொண்டே ஓடினான்.

தன் மைத்துனன் ஆபத்தில் சிக்கிக்கொண்டதைப் பார்த்த விஷ்ணு, மோகினி அவதாரம் எடுத்து பத்மாசுரன் முன் வந்து நின்றானாம். போன காரியத்தை விட்டு விட்டு மோகினியின் அழகில் மயங்கி நின்றானாம். தன்னை அனுபவிக்கவேண்டுமானால், தலையைத் தேய்த்துக் குளித்துவிட்டு வரவேண்டும் என்று நிபந்தனையாம். பத்மாசுரன் தன் தலையில் கைவைத்தபோது, சிவன் வரத்தின் வலிமைப்படி எரிந்துபோய் விட்டானாம்.

அதன்பின், பத்மாசுரனுக்கு பயந்து அய்வேலங்காயில் ஒளிந்துகொண்டிருந்த சிவனை வெளியில் வர அழைத்தானாம். விஷ்ணுவாகிய அந்த மோகினியின் அழகில் மனதைப் பறிகொடுத்துக் கூடினானாம். ரிஷிப் பிண்டம் இராத்தங்காதாம் உடனே ஒரு குழந்தை பிறந்ததாம். அவன்தான் ஹரிஹரபுத்திரனாகிய அய்யப்பன் (ஹரி என்றால் விஷ்ணு; அரன் என்றால் சிவன்). அடேயப்பா, இந்தக் கடவுள்களுக்கு இந்து மதத்தில் எப்படிப்பட்ட மரியாதை!


சிவனும் ஆண், மோகினி உருவத்தில் இருந்த விஷ்ணுவும் ஆண். இருவரும் கூடி பிள்ளை பெற்றுள்ளார்களே. நாரதன் என்ற ஆணும், கிருஷ்ணன் என்ற ஆணும் கூடி 60 பிள்ளைகள் பெற்ற புராணமும் உண்டே! இந்த யோக்கியதையில் உள்ள இந்து மதத்தின் கலாச்சாரம் ஓரினச்சேர்க்கையால் கெட்டுப் போய்விடுமாம்!

ஹி.... ஹி... வாயால் சிரிக்க முடியவில்லையே!

---------------- மயிலாடன் அவர்கள் 27-8-2009 "விடுதலை"யில் எழுதிய கட்டுரை

0 comments: