Search This Blog

30.8.09

விடுதலை ஏடு சாதித்திருக்கின்ற சாதனை

ஈரோட்டில் துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

விடுதலை ஏடு சாதித்திருக்கின்ற ஒரு சாதனைக்கு ஒரு வரலாற்றுப் பட்டியலையே எடுத்துச் சொல்லலாம் என்று தமிழ்நாட்டின் துணை முதல-மைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கூறி விளக்கவுரையாற்றினார்.

ஈரோட்டில் 25.8.2009 அன்று நடைபெற்ற விடுதலை பவள விழாவில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆற்றிய உரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:

விடுதலை ஏடு சாதித்திருக்கின்ற சாதனை

விடுதலை ஏடு செய்திருக்கக் கூடிய சாதனைகளுக்காக ஒரு பெரிய வரலாற்றைப் பெற்றிருக்கக் கூடிய அந்தப் பின்னணியை அடிப்படையாக வைத்து இன்றைக்கு இந்த சிறப்பு சேர்க்கப்பட்டிருக்கிறது என்று பெருமையோடு எடுத்துச் சொன்னார்கள்.

நான் குறிப்பிட்டுச் சொல்ல விரும்புகிறேன். இதே தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு என்று அழைக்க வேண்டுமென்று முதன் முதலில் எழுதிக்காட்டியது எந்த ஏடு என்று கேட்டால் விடுதலை என்கிற ஏடுதான் என்பதையும் இங்கே பெருமையோடு நான் குறிப்பிட்டுக் காட்ட விரும்புகிறேன்.

தமிழ்நாடு எழுதிய ஏடு விடுதலை

ஆந்திரா தனி மாநி-லமாகப் பிரிந்தபொழுது அந்த நேரத்திலே தமிழ்நாடு என்று அழைக்க வேண்டுமென்று முதன் முதலில் எழுதிக் காட்டிய ஏடுதான் இந்த விடுதலை ஏடு.

அதே போல தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகமாக இருக்கக் கூடிய அந்த கோட்டையிலே பொறிக்கப்பட்டிருக்கக் கூடிய ஒரு வாசகம் நம்முடைய தமிழ்நாட்டின் சின்னத்தைப் பதித்து அதிலே எழுதப்பட்டிருக்கக் கூடிய வாசகம் சத்தியமேவ ஜெயதே என்ற வடமொழிச் சொல்தான் பொறிக்கப்பட்டிருக்கும்.

வாய்மையே வெல்லும்!

அந்தச் சொல்லை மாற்றி வாய்மையே வெல்லும் என்று தமிழிலே மொழி பெயர்த்து எழுத வேண்டுமென்று முதலில் எழுதிக்காட்டிய ஏடும் இந்த விடுதலை ஏடுதான் என்பதை நான் பெருமையோடு குறிப்பிட்டுக் காட்ட விரும்புகிறேன். (கைதட்டல்).

எனவே, அதைத்தான் 1967ஆம் ஆண்டு தமிழகத்திலே அறிஞர் அண்ணா அவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு அதை நிறைவேற்றித் தந்தார்கள்.

அதுமட்டுமல்ல, அறிஞர் அண்ணா அவர்கள் விடுதலை ஏட்டினுடைய பொறுப்பாசிரியராக இருந்த பொழுதுதான் அறிஞர் அண்ணா அவர்களுடைய எழுத்து அதிலே கட்டுரைகளாக, தலையங்கங்களாக வந்தநேரத்திலே மக்களிடத்திலே விழிப்புணர்வு ஏற்பட்டது; ஒரு பரபரப்பு ஏற்பட்டது.

படிக்கத் தூண்டக் கூடிய ஒரு சூழ்நிலைக்கு தள்ளப்பட்டது.

அதனால் பத்திரிகையைப் படிப்பவரின் எண்ணிக்கையும் உயர்ந்திருக்கிறது என்பது வரலாறு.

அது மட்டுமல்ல. கல்கத்தா காய்ச்சல் அதிர்ச்சி வைத்தியம், கோடு உயர்ந்தது, குன்றம் தாழ்ந்தது என்ற தலைப்புகளில் எல்லாம் எழுதினார்.

1939ஆம் ஆண்டில் ரிப்பன் மண்டபத்து மகான்கள் என்ற தலைப்பில் அண்ணா அவர்கள் எழுதிய தலையங்கத்தைப் படித்த தந்தை பெரியார் உடனே மாடிப்படி ஏறி அறிஞர் அண்ணாவைத் தட்டிக்கொடுத்து அன்றைக்கே அவர் பாராட்டியிருக்கின்றார் என்பதும் வரலாறு என்பதை இங்கே நான் பதிவு செய்ய விரும்புகிறேன். அதுமட்டுமல்ல, விடுதலை யிலே என்னென்ன தலையங்கங்கள் வெளியிட வேண்டுமென்று அங்கேயிருக்கின்ற பொறுப்பாசிரியர்கள் கேட்டால் தந்தை பெரியார் கேட்பாராம்_இன்று காலை இந்து பத்திரிகை படித்தாயா? அதைப் படி எதிர்ப்பதமாக அதற்குப் பதில் சொல்லக் கூடிய வகையிலே நீங்கள் எழுதுங்கள். அதை எழுதினாலே நம்முடைய தலையங்கம் சிறப்பாக அமைந்துவிடும் என்று எடுத்துச் சொல்லக் கூடிய வகையிலேதான் அன்றைக்கு அந்த விடுதலை ஏடு விளங்கியிருக்கிறது என்பதையும் நான் இங்கே தெரிவித்துக்கொள்ள கடமைப்பட்டிருக்கின்றேன்.

கலைஞர் தாழ்த்தப்பட்டவரை நீதிபதியாக்கினாரே!

அதுமட்டுமல்ல, தலைவர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்த நேரத்திலே இதே விடுதலை ஏட்டிலே இன்றைக்கு இருக்கக் கூடிய இந்தியாவில் இருக்கக் கூடிய எந்த உயர்நீதிமன்றமாக இருந்தாலும், ஒரு தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த ஒரு நீதிபதி கூட இல்லையே என்ற ஒரு ஏக்கத்தை வெளியிட்டிருந்தார்கள்.

அதைப்படித்து மனதிலே வைத்திருந்த காரணத்தால்தான் நம்முடைய தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர் அவர்கள் ஒரு மாவட்ட நீதிபதியாக இருந்த ஒரு தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த வரதராஜன் அவர்களை உடனடியாக உயர்நீதிமன்றத்தினுடைய நீதிபதியாக அன்றைக்கு அந்தப் பொறுப்பிலே உட்கார வைக்கக் கூடிய வாய்ப்பை ஏற்படுத்தித் தந்தார்கள் என்பது வரலாறு.

1929 செங்கற்பட்டு சுயமரியாதை மாநாட்டில்

இங்கே அஞ்சலுறையைப் படித்த பொழுது ஆசிரியர் அவர்கள் குறிப்பாக பெண்களுக்கு தாய்மார்களுக்கு, எப்படிப்பட்ட உரிமைகளைப் பெற்றுத்தர வேண்டும் என்று டாக்டர் பொன்முடி அவர்கள் இங்கே பேசும்பொழுது எடுத்துச் சொன்னார்கள்.

இன்றைக்கு பெண்கள் சுயஉதவிக்குழுக்கள் தொடங்கப்பட்டிருப்பதைப் பற்றி எடுத்துச் சொன்னாரே, இது எங்கிருந்து தோன்றியது என்று கேட்டால், 1929ஆம் ஆண்டு செங்கல்பட்டில் நடைபெற்ற சுயமரியாதை சீர்திருத்த மாநாடு.

அந்த மாநாட்டில் தந்தை பெரியார் அவர்களால் கொண்டு வரப்பட்ட தீர்மானங்கள் எத்தனையோ தீர்மானங்கள் இடம் பெற்றன. அப்படி இடம் பெற்ற தீர்மானங்களில் பெண்களின் முன்னேற்றத்திற்கான முக்கியமான தீர்மானங்கள் அதில் இடம் பெற்றிருந்தன. அதிலே இடம் பெற்ற தீர்மானங்களை நிறைவேற்றிக் காட்டியிருக்கக் கூடிய ஆட்சிதான் இன்றைக்குத் தமிழ்நாட்டிலே நடைபெறக் கூடிய கலைஞர் ஆட்சி என்பதையும் நான் பெருமையோடு நினைவுபடுத்த விரும்புகிறேன்.

கலைஞர் தொடங்கிய சுயஉதவிக்குழு

சொத்திலே பெண்களுக்குச் சமஉரிமை. இன்றைக்குப் பெண்கள் சுயஉதவிக்குழு என்கிற ஓர் அமைப்பு தொடங்கப்பட்டிருக்கிறது என்று சொன்னால் தன்னம்பிக்கை பெற்றவர்களாக பெண்கள் வாழ்ந்திட வேண்டும். யாருடைய தயவையும் எதிர்பார்க்காமல் அவரவர்கள் சொந்த காலில் நிற்கக் கூடிய சூழ்நிலையைப் பெற்றிட வேண்டும்.

சுயமரியாதையோடு அவர்கள் வாழ்ந்திட வேண்டும் என்பதற்காகத்தான் 1989ஆம் ஆண்டு முதன்முதலில் தருமபுரி மாவட்டத்திலே தலைவர் கலைஞர் அவர்களால் சுய உதவிக்குழு என்கிற ஓர் அமைப்பு தொடங்கப்-பட்டது.

அப்படித் தொடங்கப்பட்டு, இன்றைக்குப் பறந்து விரிந்து கம்பீரமாக விளங்குவதைப் பெருமையோடு எடுத்துக் கூற விரும்புகிறேன்.

இந்தியாவிலேயே இருக்கின்ற மாநிலங்களை எல்லாம் ஒப்பிட்டு பார்க்கின்ற பொழுது நம்முடைய தமிழ்நாட்டில்தான் சுயஉதவிக்குழு இன்றைக்கு கம்பீரமாக வளர்ந்து வந்திருக்கிறது. அந்தக் காட்சியை நாம் பார்க்கிறோம். ஆக இப்படி பல திட்டங்கள்.

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்று ஒரு சட்டத்தை நிறைவேற்றித் தந்திருக்கக் கூடிய ஆட்சி, இந்த ஆட்சி.

நம்முடைய மத்திய அமைச்சர் ஆ.இராசா இங்கே குறிப்பிட்டுச் சொன்னாரே. தந்தை பெரியாருடைய நெஞ்சிலே குத்திய அந்த முள்_ அது இன்றைக்குத் தலைவர் கலைஞர் அவர்களால் எடுக்கப்பட்டு இன்றைக்கு அதை சட்ட-வடிவமாக்கித் தந்திருக்கிறார். அதே போல சுயமரியாதைத் திருமணங்கள் நடைபெற வேண்டும் என்று தந்தை பெரியார் அவர்கள் எடுத்து வைத்த கொள்கையைத்தானே 1967லே அறிஞர் அண்ணா அவர்கள் ஆட்சிக்கு வந்தவுடனே, சட்டமன்றத்திற்குள் முதன் முதலாக நுழைந்து நிறைவேற்றிய தீர்மானம்தான் சீர்திருத்தத் திருமணங்கள் அனைத்தும் சட்டப்படி செல்லுபடியாகும் என்பது.

ஒட்டுமொத்த இந்தியாவிற்கு

இன்றைக்கு நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள், நம்முடைய மாநிலத்திலே மட்டுமல்ல, ஒட்டு மொத்த இந்தியாவிலும் அந்தத் திருமணம் சட்டப்படி செல்லுபடியாகும் என்று இன்றைக்கும் தலைவர் கலைஞர் அவர்கள் குரல்கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.

ஆக,இப்படி பல திட்டங்களை பல சாதனைகளை தொடர்ந்து தந்தை பெரியார் கண்ட கனவை, அறிஞர் அண்ணா எண்ணியிருந்த அந்த இலட்சிய உணர்வை, தொடர்ந்து நிறைவேற்றிக்கொண்டிருக்கக் கூடிய தந்தை பெரியாருடைய ஆட்சியாக, அறிஞர் அண்ணா அவர்களு-டைய ஆட்சியாக இன்றைக்குத் தமிழகத்திலே நடைபெற்றுக்கொண்டிருக்கக் கூடிய இந்த ஆட்சிக்கு நீங்கள் என்றைக்கும் துணை நிற்கக் கூடிய வகையிலே உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும் என்றுதான் விடுதலை ஏட்டினுடைய பவள விழா நிகழ்ச்சியிலே உங்களை எல்லாம் நான் அன்போடு கேட்டுக்கொண்டு இந்த சிறப்பான வாய்ப்பினை தந்திருக்கக்கூடிய அனைவருக்கும் இந்த நேரத்திலே என்னுடைய இதயமார்ந்த நன்றியைத் தெரிவித்து இந்த அளவில் விடைபெறுகின்றேன்.

இவ்வாறு துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரையாற்றினார்.

-------------------"விடுதலை" 29-8-2009

0 comments: