
ஏமன்
ஏடன் துறைமுகத்தைச் சுற்றி அமைந்த பழங்கால ஏமன் பகுதியை முதல் நூற்றாண்டில் ரோமானியர்கள் படையெடுத்துப் பிடித்தனர். ஆறாம் நூற்றாண்டில் பாரசீகர்களும் எத்தியோப்பியர்களும் படை யெடுத்தனர். 628ஆம் ஆண்டில் மக்கள் அனைவரும் இசுலாத்தைத் தழுவினர். பத்தாம் நூற்றாண்டில் ஜைதி இனப்பிரிவினராக ராசைட் அரச வமிச ஆட்சியில் இருந்தனர். 1538 முதல் 1918 வரை ஏமன் துருக்கியின் ஒட்டோமான் வமிச ஆட்சியில் இருந்தனர்.
ஏமனின் வடபகுதியில் இமாம்கள் (முசுலிம் மத குருக்கள்) ஆட்சியில் 1962 வரை ஆட்சி செய்தனர். எகிப்து நாட்டுக்கு ஆதரவாளர்களால் உள்நாட்டுக் கலவரம் மூண்டதன் விளைவாக ஏமன் அரபுக் குடியரசு நாடு பிரகடனப்படுத்தப்பட்டது. ஆனால் ஏடன் துறைமுகம் அமைந்துள்ள தென்பகுதி நாடு பிரிட்டன் வசமே இருந்தது. தேசிய விடுதலை முன்னணி அமைப்பு பிரிட்டிஷ் ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடி, 1967இல் தெற்கு ஏமன் மக்கள் குடியரசு எனும் பெயரில் அமைத்தது.
அரபு நாடுகளில் அமைந்த ஒரே பொது உடைமை நாடாக 1979இல் ஏமன் இருந்தது. 22-.3.1990இல் ஏமனின் இரு பகுதிகளும் - மேற்கத்திய சார்பான வட ஏமனும் மார்க்சியச் சார்பான தென் ஏமனும் ஒன்றிணைந்து 300 ஆண்டுக்கால பிரிவினைக்கு முற்றுப் புள்ளி வைத்தது. ஓமன் நாட்டுக்கும் சவூதி அரேபியாவுக்கும் இடையில் அமைந்துள்ள ஏமன் நாட்டின் பரப்பு 5 லட்சத்து 27 ஆயிரத்து 970 சதுர கி.மீ. மக்கள் தொகை 2 கோடியே 15 லட்சம். மூன்று வகை (ஷபி, சன்னி, ஜைடி (ஷியா) முசுலிம் பிரிவுகளிலும் மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர்.
50 விழுக்காடு மக்கள் மட்டுமே படிப்பறிவு பெற்றவர்கள். 22.-5.-1990இல் விடுதலை நாள் கொண்டாடும் குடியரசு நாடு. குடியரசுத் தலைவர், துணைக் குடியரசுத் தலைவர் உள்ளனர். ஆட்சித் தலைவராகப் பிரதமரும் இருக்கிறார். 35 விழுக்காடு மக்கள் வேலை கிட்டாதோர். பாலைவனப் பகுதி நிறைந்த நாட்டில் நிலத்தடி எண்ணெய் வளம் உள்ளது. இருப்புப் பாதையே இல்லை.
ஜாம்பியா
ஜாம்பியாப் பகுதியில் 12ஆம் நூற்றாண்டில் ஷோனா இனத்தவர் குடியேறி மவேனா முடாபா அரச வமிச ஆட்சியை நிறுவினர். 16ஆம் நூற்றாண்டில் தற்போதைய காங்கோ நாட்டில் இருக்கும் இனத்தவரான லூபா மற்றும் லுண்டா மக்கள் குடியேறிச் சிறுசிறு ராஜ்யங்களை அமைத்தனர்.
18ஆம் நூற்றாண்டில் போர்த்துகீசியர்கள் வந்தனர். பிரிட்டிஷ் மதப் பிரச்சாரகர் டேவிட் லிவிங்ஸ்டன் 1851இல் வந்தார். 1889இல் பிரிட்டன் இப்பகுதியில் தன் ஆதிக்கத்தைச் செலுத்தியது. வடரொடீஷியா எனப் பெயரிடப்பட்டது. உள்ளூர்த் தலைவர்களிடம் ஆட்சி செலுத்தும் உரிமையை அளித்துவிட்டு மறைமுகமான முறையில் பிரிட்டன் ஆண்டது.
1953இல் ரொடீஷியா மற்றும் நியாசாலாந்துக் கூட்டாட்சி அமைக்கப்பட்டது. அதில் வடரொடீஷியா, தென் ரொடீஷியா (தற்போதைய ஜிம்பாப்வே) நியாசாலாந்து (தற்போதைய மாளவி) ஆகியவை அடங்கின. 1963இல் இக்கூட்டாட்சி கலைக்கப்பட்டது. ஜாம்பியா 1964இல் விடுதலை அடைந்து கென்னத் கவுன்டா குடியரசுத் தலைவரானார். ரொடீஷியாவின் விடுதலைப் போராட்டத்திற்கு ஜாம்பியாவின் ஆதரவு அந்நாட்டின் (ஜிம்பாப்வே) விடுதலைக்குப் பெரும் பங்கு உதவியது.
தென்ஆப்ரிக்கப்பகுதியில அங்கோலா நாட்டுக்குக் கிழக்கே உள்ள இந்நாட்டின் பரப்பளவு 7 லட்சத்து 52 ஆயிரத்து 614 சதுர கி.மீ. மக்கள் தொகை ஒரு கோடி 15 லட்சம். பாதிக்கும் மேற்பட்டோர் கிறித்துவர். மீதிப் பேர் முசுலிம்களும் இந்துக்களும். 81 விழுக்காடுப் பேர் படிப்பறிவு பெற்றவர்கள்.
24-.10.-1964இல் விடுதலை நாள். குடியரசுத் தலைவரே ஆட்சியின் தலைவர். வறுமைக் கோட்டுக்குக் கீழ் 86 விழுக்காடு மக்கள் இருப்பதாக 1993இல் எடுக்கப்பட்ட கணக்கு தெரிவிக்கிறது. 50 விழுக்காடு பேர் வேலை கிட்டாதோர் என 2000இல் எடுக்கப்பட்ட கணக்கு தெரிவிக்கிறது.
--------------------"விடுதலை" 17-8-2009
0 comments:
Post a Comment