Search This Blog

9.8.09

அய்.ஏ.எஸ். பெண் அதிகாரி பேய் பிடித்து ஆடியதாகக் கேள்விப்பட்டதுண்டா?




சாட்டை அடி!

பேய் விரட்டுதல் என்ற பெயரால் அப்பாவிப் பெண்களை பூசாரிகள் அடிக்கும் கொடுமைக்கு ஒரு முடிவேயில்லையா? இந்த 21 ஆம் நூற்றாண்டிலும் பக்தியின் பெயரால் இத்தகு காட்டுவிலங்காண்டித்தனங்களை அனுமதிக்கலாமா என்று கேள்வி கேட்பதற்குக்கூட பெரியார் தொண்டர்கள்தான், கறுப்புச் சட்டைக்காரர்கள்தான் தேவைப்படுகின்றனர்.

திருச்சி மாவட்டம் தாத்தையங்கார் பேட்டை ஒன்றியம் சோளம்பட்டி கிராமத்தில் சோழராஜா கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் மூன்று நாள்கள் தொடரும் இந்தக் கொடுமை காண்போரின் ரத்த நாளங்கள் வெடிக்கச் செய்யும்.

பேய்ப் பிடித்ததாகக் கூறப்படும் பெண்களின் முகத்தில் தண்ணீரைத் தெளித்து, சாம்பிராணிப் புகையைக் காட்டி, உனக்குப் பேய் பிடித்திருக்கிறது; அது எந்த ஊர்ப் பேய்? அதன் பெயர் என்ன? (பேயின் பிறந்த நாளைக் கேட்காமல் இருக்கிறார்களே, அதுவரை சந்தோஷம்!) என்று கூறி சாட்டையால் ரத்தம் சொட்டச் சொட்ட அடிக்கிறார்கள்.

அடிக்குப் பயந்து துன்பம் தாங்காத அந்தப் பெண்கள் ஏதோ உளறுகிறார்கள். அதோடு விட்டு விடுகிறார்களா, அந்தப் பெண்ணைப் பிடித்த பேயை விரட்டியாகவேண்டுமே! (தொழில் ரீதியான ஏற்பாடு இது காசைக் கறக்கவேண்டாமா?).

அந்தப் பெண்ணின் தலைமுடியை எடுத்து ஓர் ஆணியில் சுற்றி அப்பகுதி புளிய மரத்தில் அடிக்-கிறார்கள்.
பொதுவாக புளிய மரத்தோடு பேயை இணைத்துப் பேசுவது என்பதுகூட இந்நாட்டில் வழமையான ஒன்றே!

பேய்கூட ஏன் பெண்களைப் பிடிக்கிறது? பெண்களிலும் ஏன் படிக்காதவர்களைப் பிடித்து ஆட்டுகிறது? அய்.ஏ.எஸ். பெண் அதிகாரி பேய் பிடித்து ஆடியதாகக் கேள்விப்பட்டதுண்டா? கலெக்டருக்கு சாமி வந்தது தாசில்தார் தாங்கிப் பிடித்துக் கொண்டார் என்ற செய்தி வந்திருக்கிறதா? இதெல்லாம் ஒரு மனப் பிராந்திதான்!

பேயைப்பற்றி சாசன் பிரைட் வைட் என்ற இங்கிலாந்தைச் சேர்ந்தவர் ஆய்வு செய்தார். 800 வருடம் பழங்காலக் கட்டடம் ஒன்றுக்குப் பாதிக்கப்பட்டவர்களை அழைத்துச் சென்றார்.
அதில் பேய், பிசாசு பிடித்தவர்கள் என்று கருதப்பட்டவர்கள் தங்களுக்குப் பேய் பிடித்தபோது திடீர் சத்தம் கேட்டதாகவும், இன்னும் ஒரு சிலர் குழந்தை அழுவதுபோல சத்தம் கேட்டதாகவும், வேறு சிலர் திடீரென யாரோ தொட்டுவிட்டு மறைந்துவிட்டதாகவும் கூறினார்கள்.

இதற்கெல்லாம் காரணம் பேய் என்ற ஒன்றல்ல விஞ்ஞானக் காரணம் என்றார் அந்த ஆய்வாளர்.

பேய், பிசாசு இருப்பதாகக் கூறப்படும் இடத்தில் இருந்து வழக்கத்திற்கு மாறான காந்தபுலம் வெளிப்பட்டிருக்கலாம். மூளையில் சில நரம்புகள் பாதிக்கப்பட்டவர்கள் இந்த இடங்களுக்குச் செல்லும்போது அதிகமாக உணர்ச்சிவயப்படுகிறார்கள். குறிப்பிட்ட இடத்திற்குச் செல்லும்போது வழக்கத்திற்கு மாறான காந்தபுலம் மேற்கூறிய பிரமைகளை ஏற்படுத்தியிருக்கலாம் என்று கூறுகிறார்.

உண்மை இவ்வாறு இருக்க, பேய் பிடித்திருப்பதாகக் கூறி, பெண்களை சித்திரவதை செய்வது எவ்வளவுப் பெரிய கொடுமை!

மாட்டுக்குத் தார்க்குச்சி போட்டால் அதைத் தடுக்க சட்டம் இருக்கும்போது, பெண்களைப் பேய் பிடித்திருப்பதாகக் கூறி சவுக்கால் அடிப்பதைத் தடுக்க சட்டம் வரக்கூடாதா?

--------------- மயிலாடன் அவர்கள் 8-8-2009 "விடுதலை"யில் எழுதிய கட்டுரை

0 comments: