Search This Blog

29.8.09

ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனர்களின் அமைப்பு

மரண ஓலை எழுதப்படட்டும்!

பாரதீய ஜனதா கட்சி அழிவின் விளிம்பில் தொங்கிக் கொண்டிருக்கிறது. அதற்காக வெகுமக்கள் யாரும் இரங்கப் போவதில்லை. காரணம் அது ஒரு பிற்போக்குத்தனமான கட்சி; மக்கள் நலன் என்கிற பரந்த பார்வை அதற்குக் கிஞ்சிற்றும் கிடையாது.

இந்து மதக் கொள்கைகளையும், குறிப்பாக அதன் வருணாசிரமக் கொள்கைகளையும் உணர்ந்தோர் அதனை எந்த வகையில் ஏற்றுக் கொள்வார்கள்?

பிறப்பின் அடிப்படையில் பேதம் கற்பிக்கும் ஒரு மதத்தை சமத்துவம் விரும்புவோர், மனித உரிமைகளை நேசிப்போர் எப்படி ஏற்றுக்கொள்வார்கள்?

21 ஆம் நூற்றாண்டிலும் இதுபோன்ற கட்சிகள் இயங்குவது என்பதே பெரும் தலைக்குனிவாகும்.

பிரபல பத்திரிகையாளரும், இங்கிலாந்துக்கான இந்தியத் தூதராகப் பணியாற்றியவருமான குல்தீப் நய்யார் பா.ஜ.க.பற்றி சொன்ன கருத்துக் கணிப்பு, கருத்தில் கொள்ளத்தக்கதாகும்.

முன்னாள் ஜனசங்கம் மற்றும் பா.ஜ.க.வின் அனைத்துக் கூட்டங்களையும், கருத்தரங்குகளையும், பேச்சுகளையும் கடந்த நாற்பது ஆண்டுகளாகத் தொடர்ந்து நான் கவனித்து வருகிறேன். இந்த இந்துக்களின் கட்சி ஏன் எப்பொழுதுமே தீண்டாமை பற்றி கேள்வியை எழுப்பியதே இல்லை? இந்துக் களிடையே உள்ள ஜாதி நடைமுறை மிகவும் அடக்கு முறை நிறைந்த ஒன்றாகவே உள்ளது. பா.ஜ.க.வை கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ள ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனர்களின் அமைப்பு என்பது இதன் காரணங்களில் ஒன்றாக இருக்கலாம். இதனைச் சீர்திருத்த வேண்டும் என்று பா.ஜ.க. நினைத்திருக்கக் கூடும் என்று நான் நினைக்கவே இல்லை. உண்மையைக் கூறுவதானால், அனைத்து மக்களுக்கும் பொருளாதார சமத்துவம் அளிக்கும் எந்த சட்டத்தையும் பா.ஜ.க. விரும்புவதில்லை. உயர்ஜாதி மக்களின் கட்சி அது. தொடக்க முதல் அக்கட்சிக்குப் பிரியமானது என்னவென்றால், சிறுபான்மையினரை குறிப்பாக முஸ்லிம்களை இழிவுபடுத்திக் கொடுமைப் படுத்துவதுதான்.

(டெக்கான் கிரானிக்கிள், 4.2.2008)

கணித்திருப்பவர் பார்ப்பன ஆதிக்க எதிர்ப்பாளர் அல்ல. அத்தகைய இயக்கத்தோடு தொடர்பு கொண்டவர்கூட அல்ல. ஒரு மூத்த பத்திரிகையாளர் என்ற முறையில் கடந்த 40 ஆண்டுகாலம் கணித்த முறையில் இப்படியொரு கருத்தை அழுத்தமாகப் பதிவு செய்துள்ளார்.

ஜாதி அமைப்பு தேவை_ வருணாசிரமம் நல்லது என்பதுதான் சங் பரிவார்க் கும்பலின் குருநாதரான கோல்வால்கரின் வேத நூலில் மிகவும் வெளிப்படையாகவே தெரிவிக்கப்பட்டுள்ளது.

செத்த பசு மாட்டின் தோலை உரித்தனர் அய்ந்து தாழ்த்தப்பட்டவர்கள் என்பதற்காக, அந்த அய்வரையும் படுகொலை செய்த கூட்டம் இது. இதற்குமேல் இதன் தீண்டாமை வெறியை, ஜாதி வெறியை எடை போடுவதற்கு வேறு எந்த எடுத்துக்காட்டு தேவை?

சமூகநீதியை எடுத்துக்கொண்டாலும், அவர்கள் அதற்கு எதிராகவே இருந்து வருகின்றன.

மண்டல் குழுப் பரிந்துரைகளுள் ஒன்றான வேலை வாய்ப்பில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 விழுக்காடு இட ஒதுக்கீடு செய்தார் என்பதற்காகத்தானே. அதுவரை வெளியிலிருந்து ஆதரவு கொடுத்து வந்த பி.ஜே.பி. தன் ஆதரவை விலக்கிக் கொண்டு ஒரு சமூகநீதி ஆட்சியைக் கவிழ்த்து மகிழ்ச்சிக் கூத்தாடியது.

ஒரு பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த உமாபாரதி மத்திய பிரதேச முதலமைச்சராக இருந்தார். அவர்மீது தொடுக்கப்பட்ட ஒரு வழக்குக்காக அவர் முதலமைச்சர் பதவியிலிருந்து விலகினார்.

வழக்கில் அவர் குற்றமற்றவர் என்று கூறி விடுதலை செய்யப்பட்டார். நேர்மையான கட்சியாக இருந்தால் பி.ஜே.பி. என்ன செய்திருக்கவேண்டும்? மீண்டும் முதல மைச்சர் பதவியை அவருக்கு அளித்திருக்கவேண்டுமே! செய்யவில்லையே! மாறாக ஆர்.எஸ்.எஸின் தலைவர் கே.எஸ். சுதர்சன் என்ன சொன்னார்? அம்மையாரின் பிறந்த குடியும், பிறப்பு வளர்ப்பும் சரியில்லை என்று கூறினாரே. இதன் பொருள் என்ன? பார்ப்பனரான சுதர்சனின் ஜாதிப் பார்வை இதில் பளிச்சிடவில்லையா? உமாபாரதியேகூட பி.ஜே.பி.யை உயர்ஜாதியின் கட்சி என்று விமர்சித்தது உண்டே.

இத்தகைய ஒரு கட்சி பிளவுபட்டு மேலும் மேலும் பலகீனப்பட்டு அழிவின் விளிம்பிற்குச் செல்லுகிறது என்றால், நேர்மையாக மகிழ்ச்சி அடையவேண்டும்.

இக்கட்சி வளர்ந்தாலோ, ஆட்சிக்கு வந்தாலோ அதனால் மக்களின் அமைதி கெட்டு, ஒவ்வொரு நொடியும், வன்முறையிலும், வெறுப்பிலும், கலகத்திலுமே காலத்தைக் கழிக்கவேண்டிய ஒரு சூழ்நிலை ஏற்படும்.

பதவியைப் பிடிக்க முடியவில்லை என்ற காரணத்துக்காக அக்கட்சிக்குள் ஏற்படும் சர்ச்சைகளும் குடுமிபிடிகளும் எதைக் காட்டுகின்றன? நேர்மையான சித்தாந்தமும், வழிகாட்டுதலும் அங்கு இல்லை என்பதுதான் அதற்கான விடையாகும்.

இனவெறியரான அடால்ஃப் ஹிட்லர் தற்கொலைமூலம் தன் முடிவைத் தேடிக்கொண்டார்.

பாசிஸ்ட், நாஜிகளின் வரலாறு அப்படித்தான் இருக்கிறது. பி.ஜே.பி. மட்டும் அதற்கு விதிவிலக்கா என்ன?

-----------------------"விடுதலை"தலையங்கம் 27-8-2009

3 comments:

கபிலன் said...

ஜனநாயக அடிப்படையில் இயங்கும் கட்சிகளில் கருத்து வேறுபாடும் வாக்குவாதமும் ஏறுபாடுவது இயல்பு. வம்சா வழி கட்சிகளுக்கு இது பற்றி தெரிய வாய்ப்பில்லை. பாஜக வின் ஆட்சி தற்போதைய ஆட்சியை விட சிறப்பாக இருந்தது அமைதியாகவும் இருந்தது. சக்கரை இருப்பு இல்லை, கோதுமை இருப்பு குறைவு, பொருட்களைப் பதுக்குதல், லஞ்ச லாவனியம் திராவிடர் ஆட்சியிலும், காங்கிரஸ் ஆட்சியிலும் கொடி கட்டி பறந்து கொண்டிருக்கிறது.

ஆனந்தன் said...

பாசிஸ்ட், நாஜிகளின் வரலாறு அப்படித்தான் இருக்கிறது. பி.ஜே.பி. மட்டும் அதற்கு விதிவிலக்கா என்ன?

இதைப் பற்றி பேச உங்களுக்கு தகுதி இருக்கிறதா என சிந்தித்துப்பார்த்தது உண்டா?

பாசிஸ்டுகள் என்போரும்,நாஜிக்கள் என்போரும் யார்?

ஒரு இனத்தை,அல்லது மதத்தை,ஒரு மொழியை மையமாக கொண்டு,அதன் காரணமாக ஒரு பிரிவை எதிரியாக பாவித்து,அவர்கள் மேல் எத்தகைய தாக்குதலையும் நடத்துபவர்களே இவர்கள்.

அவர்கள் இந்து மதத்தை அடிப்படையாக கொண்ட பாசிஸ்டுகள் என்றால்,நீங்கள் திராவிடன்,தமிழன்,என்பதை அடிப்படையாக கொண்ட பாசிஸ்டுகள்.
அவர்கள் முஸ்லிம்களை எதிரியாக பாவிக்கும் பாசிஸ்டுகல் என்றால்,நீங்கள் பார்ப்பனர்களை எடிரியாக பார்க்கும் பாசிஸ்டுகள்


முதலில் நீங்கள் பாசிஸ்டு கூட்டத்திலிருந்து வெளியில் வந்து,பிறகு மற்றவரை விமர்சியுங்கள்.
நன்றி

நம்பி said...

Blogger ஆனந்தன் said....

//பாசிஸ்டுகள் என்போரும்,நாஜிக்கள் என்போரும் யார்?

ஒரு இனத்தை,அல்லது மதத்தை,ஒரு மொழியை மையமாக கொண்டு,அதன் காரணமாக ஒரு பிரிவை எதிரியாக பாவித்து,அவர்கள் மேல் எத்தகைய தாக்குதலையும் நடத்துபவர்களே இவர்கள்.//

இதுதான் பாசிசமா...? அப்படி என்றால் இது என்ன?

பாசிசம் (fascism) என்பது ஒரு சமுதாயத்தின் அதிகார வர்க்கத்தால் சர்வாதிகார முறையில் பொருளாதார விஷயங்கள் தீர்மானிக்கப்படுவதையே குறிக்கும். முதலாளிகள் இவ்வதிகார வர்க்கத்திற்குள் அடங்குவர்.


Blogger ஆனந்தன் said....
//அவர்கள் இந்து மதத்தை அடிப்படையாக கொண்ட பாசிஸ்டுகள் என்றால்,நீங்கள் திராவிடன்,தமிழன்,என்பதை அடிப்படையாக கொண்ட பாசிஸ்டுகள்.
அவர்கள் முஸ்லிம்களை எதிரியாக பாவிக்கும் பாசிஸ்டுகல் என்றால்,நீங்கள் பார்ப்பனர்களை எடிரியாக பார்க்கும் பாசிஸ்டுகள்//
August 31, 2009 1:32 AM

அப்படி என்றால் (திராவிடம், தமிழ்) இதையெல்லாம் எதிர்க்கிற நீங்கள் எந்த பாசிஸ்டு...? ஆரிய பாசிஸ்டா...?

திராவிடம், தமிழ் என்பது பாசிசம் என்றால் ஆரியம், பாரப்பனீயம், சமஸ்கிருதம் எல்லாம் பாசிஸ்டுகளின் தீவிரக் கொள்கை தானே...4 சதவீத மக்களின் பாசிசத்தை ஏற்கலாம்..96 சதவீத மக்களின் உரிமையை நிலைநாட்டிக்கொள்ள அவர்கள் போராடிக்கொள்வது பாசிசமா?...

இதை எதிர்ப்பது தான் பாசிசம்....என்ன எதை கொட்டினாலும் திரும்பி நமக்கே திரும்பி வரும் என்பது தெரியாதா?

இதை எல்லாம் கைவிட்டாலே திராவிடராகிவிடுவர்...எனபது தெரியாதா?


இப்போ நீங்கள் கூறிய ''வெளியேவந்து விமர்சியுங்கள்'' என்ற கோரிக்கையெல்லாம் எவனை நோக்கியும் திராவிடம் வைக்காது...பாசிசத்தில் இருந்து வெளியேவரவில்லை என்றால் எல்லோரையும் வெளியேற்றப்படும்.

இந்து மதத்தை வைத்து பலரை இழிவு படுத்தும் வேலையை சட்டம் அனுபதிக்காமல், சட்டவிரோதமாக செய்துகொண்டிருக்கும் வேலையை என்ன சொல்லுவார்கள்.

மதம் என்ற பெயரில் மனிதநேயமற்ற செயலையும், மதத்தீவிரவாதத்தையும், தீண்டாமையை வலியுறுத்துவதையும், வர்க்க பேதத்தை உருவாக்குவதையும், சாத்வீகம், சோசலீசம், பொதுவுடமை என்று சொல்லி சாமரம் வீசுவார்களா...? முதலில் இதையெல்லாம் புரிந்து கொண்டு அப்பறம் விமர்சிக்க வரவும்.